Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 2

yacOtara kAviyam with the
commentary/notes of auvai turaicAmi piLLai - part 2
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
    of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
    Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
    Anbu Jaya, V. Devarajan, S. Karthikeyan, CMC Karthik, R. Navaneethakrishnan,
    P. Thulasimani, V. Ramasami, A. Sezhian, P. Sukumar and SC Thamizharasu.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2015.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

யசோதர காவியம் - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை உரையும் - பாகம் 2


Source:
    யசோதர காவியம் உரையுடன்
    ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்றாய யசோதர காவியம் மூலமும்
    *
    அண்ணமாலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் புலவர்
    வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்
    *
    திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
    கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை
    தாரண - வைகாசி பதிப்புரிமை] [விலை ரூ. 3-0
    கழக வெளியீடு-368.
    [Copy-Right]
    Tirunelveli & Madras, June 1944
    Printed at The Model Press, Godown Street, G.T., Madras.
    ---------------

யசோதர காவியம் - மூன்றாவது சருக்கம்


இப்பகுதிக்கண், அமிர்தமதியால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட யசோதரனும் சந்திரமதியும் விந்தமலைச்சாரலில் மயிலாயும், உஞ்சயினி நகர்ப்புறத்துச் சேரியில் நாயாகியும் முறையே பிறந்து, அரசனாகிய யசோமதிபால் உபாயனமாக வந்து சேர்ந்து வளர்வதும், ஒருநாள் மயில் அட்டபங்கனைக் கண்டு அவன் கண்களைக் குத்திவிட்டுப் போதலும், அமிர்தமதி அதனை ஒரு கல்லாலெறிந்து வீழ்த்தலும், வீழ்ந்த மயிலை நாய் தன் வாயாற் கவ்விச் செல்வுழி அம்மயில் இறப்பதும், அரசன் ஆராயாது நாயைக் கொல்வதும், மயில் பின் முள்ளம் பன்றியாய்ப் பிறந்துழலுங்கால், நாய் ஒரு கருநாகமாய்த் தோன்றி வரக்கண்டு அதனைக் கொன்றேகலும், அப்பன்றியை ஒரு புலி கொன்றதும், பன்றி பின்பு ஒரு மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறந்து அரசனால் கொல்லப் படுவதும், முதலை ஒரு பெண்ணாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்த் தோன்றி அப்பெண்ணாட்டினைக் கூடுவதும், பின்பு அதுவே அவ்யாட்டின் கருவில் தங்கிப் பிறப்பதும், தாயாடு கொல்லப்படுவதும், தகர்க்குட்டி அரண்மனையில் வளர்வதும், தாயாடு, பின்பு, கலிங்கநாட்டில் எருமையாய்ப் பிறப்பதும், தகர்க்குட்டி கொலையுண்பதும், முடிவில் இரண்டும் நகர மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாய்ப் பிறந்திருப்பதும், அரசன் அவ்விரண்டையும் கண்டு விருப்பமுற்றுத் தன் அரண்மனைக்குக் கொண்டு சென்று, சண்டகன்மியிடம் தந்து வளர்க்க எனப் பணிப்பதும், அவனால் கொழி யிரண்டும் இனிது வளர்ந்து வருவதும் பிறவும் கூறப்படுகின்றன.
----------


    மற்ற மன்னன் மதிமதி யென்றிவர்
    நற்ற வத்திறை நல்லறம் புல்லலாம்
    பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
    புற்ற தாகு முரைக்குறு கின்றதே.         161

உரை:-மன்னன்-அரசனாகிய யசோதரன், மதிமதி என்ற இவர் - சந்திரமதி என்ற இவ்விருவரும், நல் தவத்து இறை - நல்ல தவத்துக்கு முதல்வனாகிய அருகபரமேட்டி யுரைத்தருளிய, நல் அறம் புல்லலாம் பற்றினோடு - நல்ல அறத்தைச் சேரும் கருத்துடன், முடிந்தனர் - இறந்தனராயினும், பல்பிறப்பு உற்றது - அவர்கள் பல பிறப்புக்களை எய்திய திறம், உரைக்கு உறுகின்றது - ஈண்டுச் சொல்லுதற்குப் பொருந்தி யிருக்கின்றதாம் எ-று.

மற்று, அ, அசைநிலை. என்ற என்பதன் ஈற்றகரம் விகாரத்தால் கெட்டது. பிறவியை யறக் கெடுக்கும் வீடுபேறு நல்கும் தவமாதலின் "நற்றவம்" என்றும், அதனைக் கடைபோக முயன்று முதன்மை யெய்தினானாதலின் "இறை" யென்றும், தவப்பயனாய்ப் பெற்று மன்னுயிர் அறிந்து ஆற்றி உய்யுமா றுணர்த்திய நன்மை யுடைமையின், அவனருளிய அருளறத்தை "நல்லறம்" என்றும் கூறினார். இறக்குங்காலத்தே அருகனுரைத் தருளிய அறநெறியைக் கைப்பற்ற விழைந்த விழைவின ராயினும், அதற் கேற்ற பிறவி பெறாது விலங்குகதியுட் பிறந்து அலமருதலைக் கூறலுற்றமையின், "பல்பிறப்பு உற்றது உரைக்குறு கின்றது" என்றார். எனவே, பலவாகிய தீவினைப் பயனை முன்னர் நுகர்ந்து முடிவில் நல்வினைப் பயனை நுகர்ப வென்பது பெற்றாம். இந்நல்வினைப் பயன் இவ்விருவர்க்கும் கோழிப் பிறப்பிற் கை கூடுந்திறம் நான்கு ஐந்தாஞ் சருக்கங்களிற் கூறப்படுகின்றது. ஆயினும் என்பது எஞ்சி நின்றது. ஆகும் என்பது பிரித்துக் கூட்டப்பட்டது. உரைக்கு முதனிலைத் தொழிற் பெயர்; ஒருசொல் விழுக்காடாய்க் கோடலு மொன்று.
-----------

யசோதரன் மயிலாய்ப் பிறத்தல்

    விந்த நாம விலங்கலின் மன்னவன்
    வந்தொர் மாமயி லின்வயிற் றண்டமாய்
    நந்து நாளிடை நாயொடு கண்டகன்
    வந்தொர் வாளியி னானது வாட்டினான்.         162

உரை:- மன்னவன்-வேந்தனான யசோதரன், விந்தநாம விலங்கலில்-விந்த மென்ற பெயரை யுடைய மலை யிடத்தே வாழும், ஓர் மாமயிலின் வயிற்று வந்து-ஓர் அழகிய மயிலின் கருவில் வந்து, அண்டமாய் நந்தும் நாள் இடை-முட்டையாய்க் கருமுற்றி வரும் நாளில், கண்டகன்-வேட்டுவனொருவன், நாயொடு வந்து-வேட்டைநாயுடன் போந்து, ஓர் வாளியினான்-ஓர் அம்பினால், அது வாட்டினான்-அம் மயிலைக் கொன்று வீழ்த்தினான் எ-று.

விலங்கல், மலை. விந்த நாம விலங்கல், விந்தமலை. மன்னவன், யசோதரனாகிய உயிர். நந்துதல், பெருகுதல்; ஈண்டுக் கரு முற்றுதல். கருவில் முட்டையாய்த் தோன்றி மண்ணில் பிறத்தற்குரிய காலம் வரு முன்னே தாய் மயில் கொல்லப்பட்ட தென்பார், "நந்து நாளிடை" என்றும், "வாளியினானது வாட்டினா" னென்றும் கூறினார். கருவுற்ற மயிலென்பது கருதாது நாயால் வளைத்து வாளியினால் வாட்டின வேட்டுவனது மனக்கொடுமையைக் குறிப்பால் உணர்த்துவார், "கண்டகன்" என்றார்.
----------

முட்டையை வேட்டுவன் வளர்த்தல்

    அம்பின் வாயுமி ழண்ட* மெடுத்தவன்
    வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
    கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
    நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.         163
    --------
    (பாடம்)*வாய்விழுமண்ட.

உரை:- அம்பின் வாய் உமிழ் அண்டம்-பட்ட மயிலின் வயிற்றில் தைப்புண்டிருந்த அம்பு பட்ட வாய்வழி வெளிப்பட்ட முட்டையை, அவன் எடுத்து - அவ்வேட்டுவன் எடுத்து, நம்பு - தான் விரும்புகின்ற, காமர் புளிஞி கை - அழகிய வேட்டுவச்சியின் கையில், கொம்பனாய் - கொம்புபோல்பவளே, இது கொண்டு - இம்முட்டையைக் கைகொண்டு, வாரண வம்பு முட்டையின் உடன் வைத்து - நம்பால் உள்ள கோழி புதிதாக இட்ட முட்டையோடு வைத்துப் பொறிக்கச் செய்து, வளர்க்க என - வளர்ப்பாயாக என்று சொல்லி, நல்கினான் - கொடுத்தான் எ-று.

அம்பு கிழித்த வாய்வழியாக, மயிலின் வயிற்றிலிருந்து முட்டை வெளிப்பட்டமையின், "அம்பின் வாயுமி ழண்டம்" என்றார். வம்பு, புதுமை. ஈன்ற அணுமைக்கண் கோழி முட்டைக்கும் மயின் முட்டைக்கும் வேறுபாடு காணப்படாமையின், "வம்பு வாரண முட்டையின் வைத்து வளர்க்க" என்று வேட்டுவன் கூறினான். வேட்டுவனைப் போலக் கொலைவினை புரியாது வளர்க்குந்தொழிலைச் செய்தல் பற்றி, அவளை, "காமர் புளிஞி" என்றார்.
---------

சந்திரமதி நாயாய்ப் பிறத்தல்

    சந்தி ரம்மதி யாகிய தாயவள்
    வந்து மாநக ரப்புறச் சேரிவாய்
    முந்து செய்வினை யான்முளை வாளெயிற்
    றந்த மிக்க சுணங்கம தாயினாள்.         164

உரை:- சந்திரம்மதியாகிய தாயவள்-சந்திரமதியாகிய தாய், முந்து செய்வினையால்-முற்பிறப்பிற்செய்த வினையின் பயனாக, மாநகரப் புறச்சேரிவாய் வந்து - பெரிய நகரமாகிய உஞ்சயினியின் புறநகர்ச் சேரிக்கண் வந்து, முளைவாள் எயிற்று - முளை போலும் ஒளி பொருந்திய பற்களை யுடைய, அந்தம் மிக்க - அழகு மிக்க, சுணங்கமது ஆயினாள் - நாயாகப் பிறந்தாள் எ-று.

சந்திரம்மதி, விகாரம். யசோதரனுக்குத் தாயாதலின், "தாயவள்" என்றார். புறஞ்சேரி, புறச்சேரி யென வந்தது. சண்டமாரிக்கு உயிர்ப்பலி கொடுத்தல் வேண்டுமென யசோதரனைவற்புறுத்திய தீவினையை, "முந்து செய்வினை" யென்றார். அரசமாதேவியாயிருந்து நாய்ப்பிறப் பெடுத்தமையின், "அந்த மிக்க சுணங்கம்" என்றார் போலும். சுணங்கன், சுணங்கமெனெ நின்றது.
-----------

மயிலும், நாயும் அரசமாளிகை வருதல்

    மயிலு ஞாயும் வளர்ந்தபின் மன்னனுக்
    கியல் பாயன மென்று கொடுத்தனர்
    வயிரி யாகு மிசோமதி மன்னவன்
    இயலு மாளிகை யெய்தின வென்பவே.         165

உரை:- மயிலும் ஞாயும் வளர்ந்தபின் - மயிலும் நாயும் தத்தம் இடத்தே அழகுற வளர்ந்தபின், மன்னனுக்கு - வேந் தனாகிய யசோமதிக்கு, இயல் உபாயனம் என்று - கையுறையாக அமையும் பொருள் என்று, கொடுத்தனர் - வேட்டுவனும் நாயை வளர்த்தோரும் கொண்டுவந்து கொடுத்தார்களாக, *வயிரியாகும இசோமதி மன்னவன் - வினைப்பயனால் அவற்றின்பால் பகைமை கொண்ட யசோமதி வேந்தன், இயலும் மாளிகை எய்தின - இருக்கும் மாளிகையை அவையிரண்டும் வந்தடைந்தன எ-று.

காட்டிடத்து வாழும் வேட்டுவனும், புறச்சேரியில் வாழ்ந்த வரும் அரசனாகிய யசோமதியைக் காணப் போந்தவழிக் கையுறையாக இம்மயிலையும் நாயையும் கொணர்ந்து தந்தார் என்பார், "இயலுபாயன மென்று கொடுத்தனர்" என்றார். உபாயனம், கையுறை. யசோமதி வேந்தனும் உயிர்க்கொலை புரிந்தொழுகினா னென்றற்கு "வயிரியாகும் இசோமதி மன்னவன்" என்றா ரென்றுமாம். "வயிரியாகும் இசோமதி " யென்றாராதலின், அதற்கு ஏதுவாகிய வினைப் பயன் வருவிக்கப்பட்டது. மகளிர் போகமாகிய காமக்கடலுள் அழுந்திக் கிடக்கின்றா னாதலின், அவன் உறையும் அரண்மனையை "இயலு மாளிகை" யெனப்பட்டது. இனி, யசோமதி வேந்தனே நாயை ஆராயாது புடைத்துக் கொல்கின்றமை பற்றி, "வயிரியாகு மிசோமதி" என்றா ரென்றுமாம். என்ப, அசைநிலை.
----------

மயில் வளருந் திறம் கூறல்

    மன்ன னாகிய மாமயின் மாளிகைத்
    தன்னின் முன்னெழு வார்க்குமுன் றானெழாத்
    தன்னை யஞ்சினர் தங்களைத் தான்வெருண்
    டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே.         166

உரை:- மன்னாகிய மாமயில்-யசோதர வேந்தனாயிருந்த அழகிய மயிலானது, மாளிகை-அரச மாளிகையில், தன்னின் முன் எழுவார்க்கு முன் -தன்னைக் கண்ட மாத்திரையேயெழுந்து நின்று தன்னை வழிபட்ட ஏவலர்எழுமுன், தான் எழா-தான் இப்போது எழுந்திருந்தும், தன்னை யஞ்சினர் தங்களை-முன்பு தன்னைக் கண்டு அஞ்சிய ஏவலரைக் கண்டு, தான் வெருண்டு-தான் அஞ்சியும், இன்ன ஆற்றின் - இம்முறையில், வளர்ந்திடுகின்றது-வளரா நின்றது எ-று.

மக்கட் பிறப்பில் யசோதரனாய்த் தோன்றி வேந்தனாய் அரசு புரிந்த காலத்து, தன்னைப் பிறர் கண்டு அஞ்சி வழிபாடாற்ற, இருந்தவன், அப்பிறப்பு மாறி மயிலாய்ப் பிறந்து, வேந்தனாயிருந்த அம்மாளிகை யிடத்தே வளரா நிற்பவும், அச்சிறப்புப் பெறாது, அப்பிறர்க்குத் தான் அஞ்சி வழிபாடாற்றினான் என்பதாம். எனவே, பிறப்பால் வரும் உயர்வு தாழ்வு கெடுவதும், மாறுவதும் எடுத்துக் கூறி, விலங்குகதியின் புன்மையினை யுணர்த்தினாராயிற்று. எழா, செய்யா வென்னும் வினையெச்சம் வெருண்டென்னும் எச்சவினையோடு தொடர்ந்து வளர்ந்திடுகின்ற தென்ற முற்று வினையோடு முடிந்தது; மயில், எழா, வெருண்டு, வளர்ந்திடுகின்றது என இயையும். வெருளுதல், அஞ்சுதல்.
--------------

மயில் உறங்குந்திறங் கூரல்
    அஞ்சி லோதியர்* தாமடி தைவரப்
    பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
    துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
    டஞ்சி மெல்ல அசைந்தது பூமிமேல்.         167
    ----------
    (பாடம்)* தஞ்ச வோதியர்.

உரை:- அஞ்சில் ஓதியர்-அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர், அடிதைவர-தன் காலடியை மெல்ல வருட, பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்-இலவம் பஞ்சியால் இயன்ற அணை பரப்பிய படுக்கைமேல் கிடந்து, துஞ்சும் மன்னவன் - கண்ணுரங்கும் வேந்தனா யிருந்த, மாமயில் - அழகிய மயிலானது, தோகையோடு -தன் தோகையின் மேல் தலைவைத்து, அஞ்சி - பிறவுயிர்கட்கு அஞ்சி, பூமிமேல் தரைமேல், மெல்ல அசைந்து - மெல்ல உறங்குவதாயிற்று எ-று.

தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. இவ்வடி, செந்தொடை. பஞ்சி மெல்லணை யென்று விசேடித்ததனால், இலவம் பஞ்சி கொள்ளப்பட்டது, "இலவம் பஞ்சிற் றுயில்" என்ப. பரவுதல், பரப்புதல் மயில் உறங்கு மிடத்துத் தன் தலையைத் தோகைமேல் கிடத்தி உறங்கும் இயல்பிற்றாதலின், "தோகையோடு" என்றும், பூனை முதலிய உயிர்களால் உண்டாகும் ஏதமஞ்சி மெல்லிய உறங்கங் கோடலின், "மெல்ல வசைந்தது" என்றும், பஞ்சி மெல்லணையிற் கிடந்துறங்கிய நிலையின் நீங்கித் தரைமீது உறங்கும் சிறுமை கண்டு இரங்கிக் கூறுதலால், "பூமிமேல்" என்றும் கூறினார்.
---------

மயில் உணவு கொள்ளுந் திறங் கூறல்

    சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
    தரைய மேகலை யாரி னமர்ந்துணும்
    அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய்
    இரை அவாவி யிருந்தயில் கின்றதே.         168

உரை:- சுரையபால் சுவை அடிசில் - பசுவினுடையபால் கலந்த சுவை மிக்க சோற்றினை, பொற்கலத்து - பொற்கலத்தில் ஏந்திக் கொண்டு, அரைய மேகலையாரின் - இடையில் மேகலை யணிந்த உரிமை மகளிர் வேண்டி யுண்பிக்க, அமர்ந்து உணும் - விரும்பி யிருந்து உண்ணும், அரையன் - வேந்தனாயிருந்த உயிர், மாமயிலாய் - பெரிய மயிற் பிறப் புற்று, புறம் - வெளியே யமைந்த, பள்ளிவாய் - கூட்டிடத்தே, இரை அவாவி - தனக்கு இடப்படும் இரையை நினைந்து, இருந்து - பசித்திருந்து, அயில்கின்றது - அதனை யிட்டபின் உண்டு வளர்வதாயிற்று எ-று.

சுரை, பசு, ஆகுபெயர். சுரையைப் பசுவின் மடியாக்கி, சுரைய பால் என்பதனை, "சடைய வள்ளல்"1 என்புழிப்போலக் குறிப்புப் பெயரெச்சத் தொடராகக் கோடலு மொன்று. செல்வமிகுதியும் பசியின்மையும் தோன்ற, "பாலடிசிற்சுவை பொற்கலத்து, அரைய மேகலையாரின் அமர்ந்துணும் அரையன்" என்றார். பொற்கலத்து அடிசி லேந்திய மகளிர் தம் இன்சொல்லாலும் மேகலையாலும் பசியின்மையின் வேண்டானாகிய வேந்தனை விரும்பி யுண்பிக்கும் நயம் விளங்க, "அரைய மேகலையாரின் அமர்ந்து உணும்" என்றார்; மயிலாகியது மன்ன னுயிரன்றி மன்னனன்மையின், "அரையன் மயிலாய் அயில்கின்றது" என அஃறினை முடிவு தந்தார். பள்ளி, மயில், புறா முதலியவற்றை விட்டுவளர்க்கும் சிறையகம்; கூடுமாம்.
மயிலின் பசியறிந்து உணவு தருவாரின்மையினாலும், தன் பள்ளியிற் சிறைக்கப்பட் டிருத்தலினாலும், "இரையவாவி யிருந் தயில்கின்றது" எம்றார். பிறர் தாமே வலிதின் உண்பிக்க வுண்ணும் வேந்தன், உணவு வேண்டியிருந்து குரைவாகப் பெற்று உண்கின்றான் என இரங்கிக் கூறியவாறு.
----------
1. சீவக. 600

சந்திரமதியாகிய நாய் வளருந் திறம்

    வந்து குப்பையின் மாசன முண்டபின்
    சிந்து மச்சில்கள் சென்று கவர்ந்துதின்
    றந்து ளும்*மக ழங்கணத் தூடுமாய்ச்
    சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே.         169
    ----------
    (பாடம்) *அந்துணும்.

உரை:- சந்திரம்மதி நாய் - சந்திரமதியாய் இருந்த நாய், குப்பையின் வந்து - குப்பைகளைக்கொட்டி யிருக்குமிடத்தே கிடந்து, மாசனம் உண்டபின் - பெரிய மக்கள் தாம் உணவுண்ட பின்னர், சிந்தும் எச்சில்கள் - புறத்தே யெறியும் எச்சிலுணவை, சென்று கவர்ந்து தின்று - அது விழுந்த இடத்திற்கோடிப் பிற நாய்கள் கொள்ளாவகையிற் குரைத்துத் தானே கொண்டு தின்று, அந்த உளும் - அந்தப்புரத்துப் புறக்கடையிலும், அகழ் அங்கணத்தூடுமாய் - ஆழமாகவுள்ள சலதாரை யிடத்தும், தளர்கின்றது - வீழ்ந்து கிடந்து மெலிகின்றது எ-று.

சந்திரம்மதி, விகாரம். நாயென அஃறிணையால் விசேடிக்கப் பட்டமையின், "தளர்கின்றது" என்று முடித்தார். குப்பை, அழுக்கின் குவியல்; ஈண்டு அஃது அக்குவியல் இருக்கும் இடத்தின் மேற்று. செல்வ மக்களென்றற்கு "மாசனம்" என்றார். உண்ட எச்சிலைக் குப்பை மேட்டி லிடுபவாதலின் நாயும் அவ்விடத்தே எச்சிலை எதிர்நோக்கி யிருப்பதாயிற் றென்க. "சென்று" எனவே, அஃதிருந்த விடத்தே எச்சில் எறியப் படாமை பெற்றாம்.

இதுபோல வேறே சில நாய்களும் அங்கிருந்தமையின், அவை முன்னே சென்று எச்சிலுணவைக் கவர்ந்துண்ணாதபடி வெருட்டி யோட்டி விட்டுத் தானே தனித்திருந்துண்ணாதபடி வெருட்டி யோட்டி விட்டுத் தானே தனித்திருந் துண்ணுமென்பார், "சென்று கவர்ந்து தின்று" என்றும், குளிர்ச்சியும் எச்சில் வீழ்தழும் பிறாண்டு மக்கள் இருக்க விடாமையும் நோக்கி, "அந்துளும் அகழ் அங்கணத் தூடுமாய்" இருந்த தென்றும் கூறினார். சிந்து மெச்சில் பசிக்கு நிரம்பாமையாலும், இருக்குமிடம் உடலின் நோயை யுண்டு பண்ணலாலும் நலமெய்தாது மெலிகின்ற தென்றற்கு, "தளர்கின்றது" என்றார்.
---------

வினைத்திறம் பேசல்

    நல்வ தத்தொட றத்திற நண்ணலார்
    கொல்வ தற்குள முன்செய் கொடுமையான்
    ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
    வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.         170

உரை:- முன் - முற்பிறப்பில், நல்வதத்தொடு - நல்ல விரதங்களுடன், அறத்திறம் நண்ணலார் - அருளறத்திற் செல்லாராய், கொல்வதற்கு - உயிர்களைக் கொல்வதற்கு, உளம் செய் கொடுமையால் - நினைவு கொண்ட தீவினையால், ஒல்வதற்கு அரும் - சுருங்குதல் இல்லாத, மாதுயர் உற்றனர் - மிக்க துன்பத்தை யடைந்தனர், வினையின் பயன் - வினைகள் பயக்கும் துன்பம், வெல்வதற்கு அரிது - எவராலும் வெல்வதற்கு முடியாதாம் எ-று.

வதம், விரதம்; "மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும்"1 என்புழிப்போல. அறத்திறம், உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் பிறவும். உளம், ஆகுபெயர். கொடுமை, கொடுமைப் பண்பினையுடைய தீவினை. ஒல்குதல், சுருங்குதல்; "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்"2 என வருதல் காண்க. அருமை, இரண்டிடத்தும் இன்மை குறித்து நின்றது. பல பிறவியினும் பெருகித் தொடர்ந்து துன்புறுத்தலின், "ஒல்வதற் கருமாதுயர்" என்றார்."வெல்வதற்கரிதால் வினையின் பயன்" என்பது வேற்றுப்பொருள் வைப்பு. "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின்சென் றாடும்"3 என்பதனால், "வெல்வதற் கரிதால் வினையின் பயன்" என்றார்.
    -----------
    1. நீல. 417. 2. குறள். 137. 3. குறள்.207.

பயனால் வினையா மென்பது சமண்சமயக்கொள்கை யாதலின் "வினையின் பயன்" என்று விதந்தோதினார்; "விளைவதனால் வினையாக்கும் என்பார்"1 என்பதன் உரை காண்க.

மயில் அட்டபங்கணைக் காண்டல்


    மற்றொர் நாள்மணி மண்டபத் தின்புடை
    அற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
    முற்று வார்முலை யாண்முயங் குந்திறம்
    மற்ற மாமயில் வந்தது கண்டதே.         171

உரை:- ஓர் நாள் - ஒருநாள். மணிமண்டபத்தின் புடை - மணியிழைத்த மண்டபத்தின் பக்கத்தே, அற்றமா இருந்து - மறைவாக இருந்து, வார்முற்று முலையாள் - கச்சு சூழ்ந்த முலையினை யுடையவளான அமிர்தமதி, அட்டபங்கன் தனை - அட்டபங்க னென்னும் யானைப்பாகனை, முயங்கும் திறம் - புணருஞ்செயலை, மாமயில் - அழகிய யசோதரனாகிய மயில், வந்தது கண்டது - தற்செயலாக வந்து பார்த்தது எ-று.

மற்று, வினைமாற்று. மணிகளால் புனையப்பட்ட மண்டப மென்றற்கு, "மணிமண்டபம்" என்றும், அம்மண்டபத்தில் இனி திருந்து இன்ப நுகர்தற் குரியளான அமிர்தமதி, அதனின் நீங்கிக் கள்ளத்தனமாய் ஓர் புல்லிய புறத்திடத்தே இருந்து இழிகாமப் புணர்ச்சி பெற்றாள் என்பார், "மணிமண்டபத்தின் புடை அற்றமா விருந்து" என்றார். கழிகாமப் பித்தேறி ஒழுகுமாறு தோன்ற, "முற்றுவார் முலையாள்" என்றார். "வந்தது கண்டது" எனவே, முயங்குந் திறத்தை முன்னறிந்து காண்டல் வேண்டி வாராது, மயில் தற்செயலாய் வந்தமை பெற்றாம். அரசனா யிருந்து மயிற்பிறப் பெய்தினமையின், "மாமயில்" என்று சிறப்பித்தார்; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க.
    -----------
    1. நீல.592.

மயில் அட்டபங்கன் கண்களை யழித்தல்

    அப்பி றப்பி லமர்ந்ததன் காதலி
    ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின்
    தப்பி லன்னது* சாரனொண் கண்களைக்
    குப்பு றாமிசைக்+ குத்தி யழித்ததே.$         172
    --------
    (பாடம்) *வல்லது. + மிகை. $ யெழுந்ததே.

உரை:- அப்பிறப்பில் - தான் அரசனாயிருந்த முற்பிறவியில், அமர்ந்து - தன்னால் அப்போது காதலிக்கப்பட்ட, தன் காதலி ஒப்பில் செய்கை - காதலியாகிய அமிர்தமதியின் ஒவ்வாத செயலை, உணர்ந்தது - யசோதரனாகிய மயில் நினைந்தறிந்தது, உணர்ந்தபின் - அவ்வாறறிந்த பின்பு, அன்னது - முன்னைப் பிறவியறிவு அறிந்த அம்மயில், தப்பு இல் - குரி தவறாமல், மிசை - மேலிடத்தே யிருந்து, குப்புறா - பாய்ந்து, சாரன் ஒண் கண்களை - யானைப்பாகனான அட்டபங்கனுடைய ஒள்ளிய கண்களை, குத்தி அழித்தது - தன் கூரிய அலகினால் குத்தி யழித்து விட்டது எ-று.

அமர்தல், விரும்புதல். காதலி, மனைவி. ஒப்பு, உலகநடை; "ஒத் ததறிவான் உலகறிவான்"1 என்புழிப்போல. பிறவி வேறுபட்டதாயி னும், முன்னைப் பிறவியில் நிகழ்ந்த தொடர்பு மறவாது நினைவு கூர்ந்த தென்றற்கு, "ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின்" என்றும், அந்நினைவால் எழுந்த பொறாமை யேதுவாகப் பிறந்த வெகுளியை, முன்போல் மனவுணர்வு தோன்றி மாற்றாமையின், "சாரன் ஒண் கண்களைக் குப்புறாமிசைக் குத்தி யழித்தது" என்றும் கூறினார். மேலிருந்து கீழ் நோக்கித் தலை கீழாய்ப் பாய்ந்தமையின், "குப்புறா" என்றார். புண்ணுறுதலின்றி நலமாகவே யிருந்தன வென்றற்குக் கண்கள் "ஒண்கண்கள்" எனப்பட்டன. நலமுறாவகைக் கெடுத்த தென்பார், "அழித்த" தென்றார்.
    ---------
    1.குறள்.214.

அமிர்தமதி யதனைக் கல்லால் எறிதல்

    முத்த வாள்நகை யாள்முனி வுற்றனள்
    கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
    மத்த கத்தை மடுத்து மறித்தது
    தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.         173

உரை:- முத்தவாள் நகையாள் - முத்துப்போல ஒளி பொருந்திய பற்களை யுடையவளான அமிர்தமதி, முனிவு உற்றனள் - சினம் மிகுந்து, கைத்தலத்து ஒருகல் திரள் வீசலும் - கையில் ஒரு திரண்ட கல்லை யெடுத்து அம்மயின்மேல் எறிதலும், மஞ்ஞை மத்தகத்தை மடுத்து - அக்கல்லானது மயிலின் தலையைப் புடைத்து, மறித்தது - மேலும் செல்லாதவாறு மறிக்கவே, மஞ்ஞை - அம்மயில், தத்தி - தத்திச் சிறிது தொலைசென்று, தரைப்பட வீழ்ந்தது - மாட்டாமையால் தரையில் வீழ்ந்து விட்டது எ-று.

தன்னெதிரே தன் மனக்கினிய காதலனுடைய ஒள்ளிய கண்களை அம்மயில் குத்தியழித்தது கண்டதும், சினம் மிகவுற்றுத் தன் பற்கள் தோன்ற நெறுநெறுவெனக் கடித்தமை தோன்ற, "முத்த வாணகையாள்" என்றும், "முனிவுற்றனள்" என்றும் கூறினார். உற்றனள், மிகுதற் பொருட்டாய உறு வென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை முற்றுவினை யெச்சமாய் நின்றது. திறள் கல் என மாறுக. எறிந்த கல் மயிலின் தலையைத் தாக்கிக் கீழே வீழ்த்து வலியழித்து மேலே சிறிதளவும் இனிது செல்லாவகையில் அதனை மெலிவித்த தென்பார், "மத்தகத்தை மறித்தது" என்றார். தத்திச் சென்ற மயில் சிறிது சென்றதும் மாட்டாமையால் உயிர் சோர்ந்து வீழ்ந்த தென்றற்கு, "தரைப்பட வீழ்ந்த" தென்றார்.
---------

மயில் இறத்தல்

    தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
    நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
    வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
    தீமை செய்வினை செய்திற மின்னதே.         174

உரை:- முன்தாய் ஆகி - முற்பிறப்பில் சந்திரமதியாகிய தாயா யிருந்து, இறந்து பிறந்தவள் நாய் - இறந்து நாய்ப் பிறப்பில் பிறந்தவளாகிய நாய், பின் ஓடி - மயிலின் பின்னே யோடி, நலிந்தது - அதனைத் தன் வாயிற் கவ்வி யுதறியதாக, கவ்விய வாய்முன் - கவ்விய முன்வாயிலேயே, மஞ்ஞை மடிந்து உயிர் போயது - மயில் மடியெவே அதன் உயிர் நீங்கி விட்டது, தீமை செய்வினை - தீய பயனைச் செய்யும் தீவினை, செய்திறம் - தீங்கு விளைக்கும் வகை, இன்னது - இத் தன்மைத்தாம் எ-று.

சேய்மைக்கண் அமிர்தமதி எறிந்த கல்லால் அடியுண்டு மயில் வீழக்கண்ட சந்திரமதியாகிய நாய் அதனிடத்தே விரைந்தோடிச் சென்று தன் வாயிற் கவ்வி உதறவே, குற்றுயிரா யிருந்த மயில் இறந்த தென்பதாம். தான் கவ்வியதனை உதறுதல் நாய்க்கு இயல் பாதலின், "ஓடி நலிந்தது" என்றார். அதனால் மயிற்கு நோய் மிக்க தென்பார், "நலிந்த" தென்பாராயிற்று. மனைவி செய்த கொடுமையின் மேலும் தாயும் தீங்குசெய்ய யசோதரனாகிய மயில் இறந்த கொடுமைக்கு ஏது இஃதென்பார், அமிர்தமதி வாயிலாகப் புகுந்த தீவினை, நாயாகிய சந்திரமதியையும் உயிர் முடித்தற்கு வாயிலாகக்கொண்ட தென்பதுபட, "தீமை செய்வினை செய்திறம் இன்னதே" என்றார். "தீமை செய்வினை" எனக் கிளந் தோதினமையின், "செய்திறம்" என வாலாது கூறினார். செய்திறமும் இப்பாட்டில் விளக்கினாராகலின், "இன்ன" தென் றொழிந்தார். தாய் முன்னாகி யென்பதனை "முன் தாயாகி" என்றும், "வாய்முன்" னென்பதனை முன்வாய் என்றும் மாறிக் கூட்டுக. பிறந்தவளாகிய நாய் என இயைக்க. மடிதல், ஈண்டுத் துவட்சி குறித்து நின்றது.
-----------

நாய் சாதல்

    நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
    போய தின்னுயி ரென்றன ளென்னவும்
    ஆயு மாறறி யாத விசோமதி
    நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.         175

உரை:- நாயின் வாயில் - நாயினுடைய வாயினால், நடுங்கிய மாமயில் - கவ்வி வருத்தப்பட்ட மயில், இன் உயிர் போயது - இனிய உயிரை யிழந்தது, என்றனள் என்னவும் - என்று அமிர்தமதி சொல்லி விடுத்தாளாக, ஆயுமாறு அறியாத இசோமதி - ஆராயும் திறமில்லாதவ னாகிய யசோமதி, நாய் பெய் பலகையால் - அது கேட்டு வெகுண்டு தான் ஆடிக்கொண்டிருந்த நாய் வைக்கும் பலகையால், நாயை எற்றினன் - சந்திரமதி யாகிய நாயைச் சாவப் புடைத்தான் எ-று.

நடுங்குதல், அசைதல்: "வாயிற்கடைமணி நடுநா நடுங்க"1 என்புழிப்போல. மயில் உயிர் போயது என இயையும். தன் செயலை மறைத்தற்கு அமிர்தமதி நாயின்வாயால் மாமயில் உயிர் போயிற்றென்றாள். ஆயுமாறு அறிந்தானாயின், மயில் அடியுண்டு வீழ்தற்குரிய காரணத்தையும், அதுவே வாயிலாக அமிர்தமதியின் கள்ளக் காம வொழுக்கத்தையும் அறிந்திருப்ப னென்பார் "ஆயுமாறறியாத விசோமதி" யென்றார். அமிர்தமதியின் சேடியர் யசோமதிபால் போந்தபோது அவன் சூதாடிக்கொண் டிருந்தானென்றும், அவர்கள் மயில் நாயால் கொல்லப்பட்டது தெரிவித்தவுடனே மிக்க சினங் கொண்டோடி, சூதாடு கருவியாகிய நாயினைப் பெய்தாடும் பலகையினால் அந்நாயினைப் புடைத்துக் கொன்றா னென்றும் கூறுவார்,
    ---------
    (பாடம்) *பொன்றின மன்னவன். 1.சிலப்.20:53.

"நாயை யெற்றினன் நாய்பெய் பலகையால்" என்றார். நாய், சூதாடு கருவி. "நரை மூதாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம் நிறைய"1 என்று சான்றோர் கூறுதல் காண்க. "நாயை யெற்றினனாய்பெய் பலகையால்" என்பதில், நாய், சிலேடை. தான் பேணி வளர்த்த நாயினைத் தானே கொன்ற தீவினை யசோமதிக்கும், மயில் இறத்தற்குரிய காரணமாகிய தன் செயலை மறைத்த பொய்ம்மைத் தீவினை அமிர்தமதிக்கும் உளவாயின.
----------

மயிலாய்ப் பிறந்திருந்து இறந்த யசோதரன் முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்.

    மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
    துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
    இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
    தன்ன தாகு மருவினை யின்பயன்.         176

உரை:- மன்னன் மாமயில் - மன்னனாகிய அழகிய மயிலுடம்பின்வந்து நீங்கிய உயிர், விந்தகிரி துன்னும் சூழலுள் வந்து-விந்தமலையை நெருங்கியுள்ள காட்டிற்கு வந்து, சூழ்மயிர் முள்ளுடை - உடல் முழுவதும் மயிரு முள்ளுமுடைய, இன்னல் செய்யும் - உயிர்கட்குத் தீங்கு செய்யும், ஓர் ஏனம் ஆகியது-ஒரு பன்றியாய்ப் பிறந்தது, அருவினையின் பயன் - தடுத்தற்கரிய வினையின் பயன், அன்னதாகும்- அத்தகைய பயனை விளைவிக்க வல்லதாகும் எ-று.

மயிலுடம்பி லிருந்து நீங்கிய உயிரை, ஒற்றுமை நயம் பற்றி, மயில் என்றே யொழிந்தார். விந்தமலையை நெருங்கி யிருந்த காட்டைச், "சூழல்," என்றார், அம்மலையினை யது சூழ்ந்து மணந்து கிடந் தமையின், உடல் முழுதும் ஒழிவின்றி நெருங்க நிறைந்திருத்தலின், "சூழ்மயிர் என்றும், அவற்றின் இடையிடையே முட்கள் செறிந்திருப்பதனால் சூழ்முள்ளென்றும் சிறப்பித்தார். தன் மெய்வன்மையாலும் முள்ளுடைமையாற் பிறந்த செருக்காலும் ஏனை யுயிர்கட்குத் தீங்கு செய்யும் இயல்பிற்றாதல்பற்றி, "இன்னல் செய்யுமோ ரேனமதாகியது" என்றார். பிறவுயிர்கட்கு அத்துணைத் தீங்குசெய்யாத மயிலாய்ப் பிறந்த உயிர், இப்போது "இன்னல் செய்யுமோர் ஏனமதாய்" பிறத்தற்கு ஏது வினையென்றும் அதனியல்பு இஃதென்றும், கூறுவார், "அன்னதாகும் அருவினையின் பயன்" என்றார். அருமை, விலக்குதற் கருமை.
    ----------
    1. புறம். 52.

சந்திரமதி கருநாகமாய்ப் பிறத்தல்

    சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
    வந்து காரிருள் வண்ணத்த நாகமாய்
    அந்தி லூர்தர வார்த்துரு ளக்*குடர்
    வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.         177
    -----------
    (பாடம்) * வேர்த்துருள. †மன்றென.

உரை:-சந்திரம்மதி நாயும் - சந்திரமதியாகிய நாயும், அச்சாரலின் வந்து - அவ்விந்தமலைச் சாரலையே யடைந்து. கார் இருள் வண்ணத்த நாகமாய் - கரிய இருள்போலும் நிற முடைய கரும் பாம்பாய்ப் பிறந்து, ஊர்தர - ஊர்ந்துசென்று வாழ, பன்றி - யசோதரனாகிய முள்ளம்பன்றி, குடர் வெந்து எழும்பசி - குடரை வெதுப்பி மிகும் பசித்தீயால் ஆர்த்து உருள - சீறி யுயிர்த்துக் கொண்டு அந்நாகம் சாகும்படியாக, விட்டது - துண்டாய்க் கடித்துக் கிழித்துக் கொன்று தின்று விட்டது எ -று.

காரிருள் வண்ணத்த நாகம், கருநாகம். இருளெனவே அமையு மாயினும் கருமைப் பண்பை விசேடித்தது, மிகுதி யுணர்த்தற்கு. அந்தில், அசைநிலை; "அந்தில் ஆங்க அசைநிலை"1 என்பது தொல் காப்பியம். பாம்பு ஊர்ந்து செல்லு மியல்பிற்றாதலின், "ஊர்தர" என்றார். உருளுதல், துண்டுபட்டுப் புரளுதல். நாகம் உயிர்த்தலே அதற்கு ஆர்ப்பு மாதலின், "ஆர்த்துருள" என்றார். நாகத்தைத் துண்டித்து உருண்ட துண்டங்களைத் தின்று அம்முட்பன்றி தன் வெம்பசி தவிர்த்தது என்பதாம். பசிவிட்டது எனவே, அதன் நீக் கத்துக் கேதுவாகிய உண்டல் விளை நிகழ்தல் பெற்றாம்.
    --------
    1. தொல். சொல். இடை.19.

பன்றி சாதல்

    தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தனில்
    சீய மொன்றெனச்† சீறுளி யம்மெதிர்
    பாய நொந்து பதைத்துடல் வீழ்ந்தரோ
    போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.         178

உரை:-தாய் கொல் பன்றி - தாயாகிய கருநாகத்தைக் கொன்ற யசோதரனாகிய பன்றி, தளர்ந்து அயர் போழ்தினில் - பசி தீர வுண்டு களைத்துக் கண்ணுறங்கும் காலத்தில், சிங்கமொன்று என - இஃது ஓர் அரிமா என்று கருதி, சீறு உளியம் - வெகுண்டு போந்த கரடி யொன்று, எதிர்பாய - எதிர்த்துப் பாய, பன்றி - பன்றியானது, நொந்து - எதிர்க்க மாட்டாது உடல் நொந்து, பதைத்து - துடித்து, வீழ்ந்து - நிலத்தில் வீழ்ந்து, உடன் பொன்றுபு - உடனே உயிர்ப் பிழந்து, இன்னுயிர் போயது - உயிர்விட்டிறந்தது எ-று.

தாய் கொல் பன்றி, தடுமாறு தொழில், பிறப்பு வேறுபட்டதாயினும் உயிரொன்றே யாதல்பற்றி, கருநாகமென்னாது, தாயென்றார். உண்ட களைப்பால் பன்றி ஓய்ந்தயர்ந்திருக்கையில், கரடி யொன்று போந்து துணையின்றித் தனித்துக் கிடப்பதோர் அரிமா வென்று கருதி ஞெரேலெனப் பாய்ந்து வலியழித்த தென்பார், "சிங்கமொன்றெனச் சீறுளியம் எதிர்பாய நொந்து பதைத்து" என்றார். வெகுண்டு பாய்ந்தமையின். "சீறுளியம்" என்றார். சீறுதல், வெகுளுதல். சிறிய உளியமெனல் பொருந்தாமை யுணர்க. 'எதிர்பாய நொந்த' தென்றதனால், முகத்திற் பய்ந்து வலியழித்தமை பெற்றாம். பொன்றுதல், உயிர்ப்படங்குதல். அரோ, அசை.
-------------

பன்றி மீனாய் பிறத்தல்

    மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
    இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
    உன்னி லொப்பி* லுலோகித விப்பெயர்
    மன்னு மீனின் வடிவின தாயிற்றே.         179
    ---------
    (பாடம்)* உன்னு மொப்பில்.

உரை:-மன்னன் மாமயில் சூகரம் - மன்னனாகி யிருந்தபின் அழகிய மயிலாகியும் பன்றியாகியும் பிறந்திறந்த யசோதரனுயிர், வார்புனல் - நெடிதோடும் நீர்ப் பெருக்கால், இன்னல் செய்யும் சிருப்பிரையாற்றினுள் - துன்பம் செய்யும் சிருப்பிரை யென்னும் யாற்றில் வாழும், உன்னில் - நினைக்குமிடத்து, ஒப்பில்-நிகரில்லாத, உலோகித இப்பெயர் மன்னும்-உலோகிதம் என்னும் இப்பெயர் பொருந்திய, மீனின் வடிவின தாயிற்று - மீனுடம்பை எடுப்பதா யிற்று எ-று.

வார்தல், நெடிதொழுகுதல், கரைபுரண் டொழிகியும் முதலை முதலிய தீங்குசெய்யும் உயிர் வாழ்தற்கு இடனாகியும் அருகில் வாழ்வார்க்குத் துன்பம் செய்தல் பற்றி, " இன்னல் செய்யும் சிருப்பிரை யாற்றினுள்" என்றார். இவ்யாறு உஞ்சயினி நகர்ப்புறத்தே ஓடுவது. மிக்க நீர்ப்பெருக்கினை யுடைய தாகலின் அதன்கண் வாழும் மீனினம் அழகியதாக இருத்தல் இயல்பாதல் கண்டு, "உன்னில்" என்றும், யசோதரனாகிய மீன் அவற்றுள் எவற்றாலும் ஒப்புயர்வற்ற தென்றற்கு "ஒப்பில்" என்றும் கூறினார். இம்மீன் உலோகிதம் என்ற இப்பெயருடைய தென்றார், ஏனைய பெற்ற பெயர் அத்துணைச் சிறப்பின்மை யுணர்த்தற்கு. வடிவு என்றார், உடம்பினை; அப்பண்பு அதன்கண் இடம் பெறுதலின்.
---------

சந்திரமதி முதலையாய்ப் பிறத்தல்

    சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
    முந்து சென்று முதலைய தாயது
    வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான்
    உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.         180

உரை:-சந்திரம்மதி - சந்திரமதியின் உயிர், நாய் ஆய்- நாயாகப் பிறந்திறந்தும், கருநாகமாய்-கருநாகமாய்ப் பிறந்திறந்தும் அமையாது. முந்து சென்று-பன்றி யிறந்து மீனாய்ப் பிறப்பிதற்கு முன்பே அச்சிருப்பிரை யாற்றினுட் சென்று, முதலைய தாயது-முதலைப்பிறப்பை எய்தி, வெந்து- பசித்தீயால் வெதும்பி, வேர்த்து-ஏனை மீனினைத்தைச் சினந்து, இனமீனை விழுங்குவான்-கூட்டமாகிய மீன்களை யுண்ணல் வேண்டி, உந்தியுந்தி-முந்துறச் சென்று சென்று, உளைந்திடு போழ்தினில்-எளிதிற் கிட்டாமையால் வருந்தி யுறையுங் காலத்தில் எ-று.

பிறப்புப் பல வெடுத்தலின், உயிர்த்தொடர்பு இடையறாமைப் பொருட்டு, அவற்றை யெடுத்து ஓதுகின்றார். பன்றியாற் கொல்லப்பட்ட கருநாகம் முன்பே இவ்யாற்றில் முதலையாய் பிறந்திருப்பது தோன்ற, "முந்துசென்று முதலையதாயது" என்றும், அஃது அவ்விடத்தே, வேண்டும் இரைபெறாது பசித்தீ நின்று வருத்த, தனக்கு அகப்படாது அகன்றோடும் மீனினத்தை வெகுண்டு நோக்கியிருந்தது என்பார். "வெந்து வேர்த்து" என்றும், அவற்றைப் பற்றுதற்காகப் பலவிடத்தும் ஓடியலைந்து நீரை உழப்பிக் கொண்டிருந்த தென்பார், "முந்துறச் சென்று சென்று" என்றும், அவ்வாறு சென்றும் வேண்டுவன பெறாமையின், "உளைந்திடுகின்றது" என்றும் கூறினார். இதனால், முதலைப் பிறப்பெய்திய காலத்தும் சந்திரமதி துன்பமே யுழந்துகொண்டிருந்தா ளென்பது கூறியவாறாம்.
----------

கூனியொருத்தியை அம்முதலை விழுங்கிவிடுதல்

    அந்த ரத்தொரு கூனி நின்றாடுவாள்
    வந்து வாயின் மடுத்தது கொண்டது*
    கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
    தந்து கொல்கென மன்னவன் சாற்றினான்.         181
    ------------
    (பாடம்) *கொன்றது.

உரை:-அந்தரத்து-மேலிடத்தே, ஒருகூனி - அரசன் அந்தரப்புரத்திற் பணிபுரியும் கூனியொருத்தி, நின்றாடுவாள்- சிருப்பிரை யாற்றின் நீரிலே நின்று விளையாடினாளாக, அது- அம்முதலை யானது, வந்து-அவளறியாதபடி வந்து, வாயில் மடுத்துக் கொண்டது-வாயாற் கவ்விக் கொன்று விழுங்கி விட்டது, கொந்து வேய்குழற் கூனியை-பூங்கொத்துக்களை யணிந்த கூந்தலையுடைய அக்கூனியை, கொல்கரா-கொன்ற முதலையை, தந்து கொல்க என- தன் முன்னே கொணர்ந்து கொல்வீராக வென்று, மன்னவன் சாற்றினான் - வேந்தனாகிய யசோமதி மீன்வலைஞர்க்கு ஆணையிட்டான் எ-று.

தரம், இடம். அந்தர மெனவே, மேலிடமாயிற்று, தேவர் கோயிலைக் குறிபதென்றும், ஈண்டு அஃது அரசன் அரண்மனையைக் குறித்து நிற்கின்ற தென்றும் கூறுவாரு முளர். கூனி, அந்தப் புரத்தே குற்றேவல் புரியு மகளிர்; கூனும் குறளும் சிந்தும் அரசர்க்கு அந்தப்புரத்தே யிருந்து அணுக்கத் தொண்டு புரிந்தொழுகுவர்; வனப்பின்மை, அவர்க்குச் சிறப்பாக வேண்டுவதாம். கூனியென்பதை வினையெச்சமாகக் கொண்டு உரைபாரு முளர். அவள் அறிய வரின், அதற்ககப்படாளாதலின், கரந்து வந்தமை பெற்றாம். கொந்து, பூங்கொத்து. "கொந்து வாய்குழற் கூனி"யென்றது சுட்டு மாத்திரையாய் நின்றது. கொல்கரா இறந்த காலந் தொக்க வினைத்தொகை. முதலையைப் பற்றிக் கொணர்ந்து கொல்லற் குரியார் அவராதலின், மீன்வலைஞர்க் கென்பது வருவிக்கப்பட்டது. "வலையின் வாழ்நரின்" (182) என வருதல் காண்க.
---------

முலையைப் பற்றிக் கொல்லுதல்

    வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின்
    சிலர்ச லாகை வெதுப்பிச் செறிந்தனர்
    கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்
    அலைசெய் தார்பலர் யாரவை சொல்லுவார்.         182

உரை:-வலையின் வாழ்நரின்-மீன் வலையே துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பரதவரால், வாரில் பிடித்த பின்-நெடியவர்களால் அமைந்த வலை கொண்டு அம்முதலையைப் பிடித்துக் கொணர்ந்த பின்பு, சிலர்-அரசன் ஆணை பெற்றோருள் சிலர், சலாகை வெதுப்பிச் செறிந்தனர்- இருப்பு நாராசத்தைப் பழுக்கக் காய்ச்சி அதன் உடற்குட் செலுத்தினாராக, கொலைவலாளர் குறைத்தனர்-கொலையாளிகள் வாளால் பிளக்க, பலர் ஈர்ந்தனர்-பலர் போழந்த பகுதிகளைக் கத்தியால் அரிய, அலைசெய்தார்-இவ்வாறு அதனைப் பலரும் துன்புறுத்தினர், அவை-அவர் துன்புறுத்திய வகைகளை, சொல்லுவார் யார்-எடுத்தோதுபவர் யாவர், கொலை வல்லார்க் கன்றிப் பிறர்க்கு ஆகாதென்றவாறு.

மீனினத்தினும் வன்மை மிகவுடைமையின், வாரானமைந்த வலையினைப் பரப்பின ரென வறிக. வலையின் வாழ்நர், பரதவர். வெறிது செலுத்தின் எளிது புகாமையின், "வெதுப்பிச் செறிந்தனர்" என்றார். மரக்கட்டைகளைப் போழ்வதுபோலக் கோடரி கொண்டு பிளக்கவேண்டி யிருத்தலின் அதனைச் செய்வார். "கொலைவலாள" ராயினர். ஈர்தல், அரிதல். உயிர்ப்பொருளாகிய இதனைத்துண்டு துண்டாக இரக்க மின்றிக் கொன்றமையின், "அலை செய்தார்" என்றும், இக்கொலை வகையை வகுத்தும் விரித்தும் ஓதுந்திறம் கொலைத் தொழிலில் வல்லுநர்க் கன்றிப் பிறர்க்கு அருள் நிறைந்து இடையீடு செய்தலின் ஆகாதென்பார், "யாரவை சொல்லுவார்" என்றும் கூறினார்.
----------

சந்திரமதி பெண்ணாடாய்ப் பிறத்தல்

    சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
    வந்து வார்வலைப் பட்ட கராமரித்
    தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
    வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.         183

உரை:- சந்திரமதி-சந்திரமதியின் உயிர், நாய்-நாயாகியும், கருநாகமாய்-கரும் பாம்பாகியும், வந்து-பிறந்திறந்து வந்து, வார் வலைப்பட்ட கரா-வாரால் இயன்ற வலையில் அகப்பட்ட முதலையாகி, மரித்து-இறந்து, அந்தில்- அந்நகரின்கண், வாழ்-வாழும், புலையாளர்தம் சேரிவாய்- புலையர் சேரிக்கண், வந்து-அடைந்து, ஓர் ஆட்டின் மடப் பிணையாயது-ஒரு பெண்ணாடாய்ப் பிறந்து வளர்வதாயிற்று எ-று.

வார்வலை, நீண்ட வலையுமாம். ஆக்கத்தைக் கராவொடும் பெய்துரைக்க. அந்தில், அவ்விடம்; அந்த இல் என்பதன் மரூஉமுடிபு. புலைத்தொழிலை யாளும் இயல்பு பற்றிப் புலையரைப் புலையாள ரென்றார். சேரி, சேர இருக்குமிடம். பிணை, பெண். மடம், இளமை.
---------

யசோமதியால் உலோகித மீன் சிராத்தத்தில் படைக்கப்படுதல்

    மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
    அற்றை யில்வரு மந்தணர்* கண்டனர்
    கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
    குற்ற செய்கைக் குரித்தென ஓதினார்.         184
    -----------
    (பாடம்)*அற்றமில்லரு ளந்தணர்.

உரை:- மற்றை மீனும்-ஏனை உலோகித மென்னும் பெயரை யுடைத்தாகிய மீனும், ஓர் வார் வலைப்பட்டதை- ஒரு நீண்ட வலையில் அகப்பட்டதாக, அற்றையில் வரும்- அந்நாளில் ஆங்குப் போந்த, அந்தணர் கண்டனர்-அந்தணர் சிலர் கண்டு, கொற்ற மன்னவ-வெற்றியை யுடைய வேந்தே, நின்குலத்தார்களுக்கு-நின்குலத்துப் பிறந்த முன்னோர்களுக்கு, உற்ற செய்கைக்கு-பொருந்திய சிராத்தத்துக்கு, உரித்து-இம்மீன் படைத்தற் கமைந்ததாம், என ஓதினார்-என்று சொன்னார்கள் எ-று.

மற்றை யென்பது இனஞ் சுட்டிற்று. உம்மை, எச்சவும்மை. மீன் வலைப்பட்டதைக் கண்டனர் என்க. அற்றை, அந்நாள், "அற்றைத் திங்கள்"1 என் புழிப் போல. அந்தண ரென்ற பெயருக் கேற்ப அருளுடைய ராகற்பாலார் அது சிறிது மின்றிக் கூறலின், "அந்தணர்" என்று குறிப்புமொழியாற் கூறினார். கண்டனர் என்றார், கண்களாற் கண்டும், கண்ணோட்ட மிலராயினார் என்று தாம் கருதிய கருத்தை முடித்தற்கு, குலத்தார்க்கு உற்ற செய்கை, சிராத் தம் செய்தல். அந்நாளில் இம்மீனைக் கொன்று படைத் துண்டல் வேண்டுமென்றலின், அதனைச் சொல்லாற் கூறாது உரித்து என்றனர். மறையோதும் வாயினர், அவ்வாயினால் இம்மீன் கொலையைச் சொல்லுதலின் "ஓதினார்" என்றார்.
    -----------
    1. புறம். 112.

சிராத்தத்தில் படைத்த மீனை யுண்டல்

    அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
    கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர்
    இறப்ப ருந்துறக் கத்தின் இசோதரன்
    சிறக்க வென்றனர் தீவினை யாளரே.         185

உரை:- அறுத்த மீனின்-அறுக்கப்பட்ட மீனினுடைய, அவயவ மொன்றினை-ஓருறுப்பை, கறித்து-மென்று தின்று, இசோமதி இப்புவி காக்க-யசோமதி வேந்தன் இப்பூமியை நெடிது காப்பானாக, இறப்பு அரும் துறக்கத்தில்-அழிவில்லாத துறக்கத்திலுருக்கும், இசோதரன் சிறக்க-யசோதர மன்னன் சிறப்பெய்துவானாக, என்றனர் தீவினையாளர்- என்று தீவினை புரியும் அவ்வந்தணர்கள் கூறினர் எ-று.

அறுத்தமீனின் துண்ட மொவ்வொன்றும் அதன் உறுப்பாதலின் "அவயவம்" என்றார். அவயமெனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய தலைப்பகுதியைக் கோடலு மொன்று. கறித்தல், மென்று தின்றல், கறித்த துண்டத்தை வாயிற்கொண்டே அரசனை வாழ்த்துதலின், "கறித்து" என்றவர் இடையீடின்றி "இசோமதி
இப்புவி காக்க" என்று கூறினார். ஓர், அசைநிலை. துறக்கத்துச் செல்வோர்க்கு இறப்புண்டே யன்றி, துறக்கவுலகிற்கு அழிவின்மையின் "இறப்பரும் துறக்கத்தின்" என்றும், துறக்கம் புக்கவர் மீட்டும் பிறப்பெய்தாது அதனிற் சிறந்த வீடுபே றடைதல்வேண்டி இச் சிராத்தம் செய்யப்படுதலின் "இசோதரன் சிறக்க" என்றும் கூறினர். சிறத்தல், மூவுலகுச்சிக்கண் இன்புற்றிருத்தல். தீவினை, கொலை வினை. தீயோம்பி யுயிர்க்கொலை புரிவது தோன்ற, "தீவினையாளர்" என்ற நயம் காண்க.
--------

மீன் தன் பிறப்புணர்வு பெறுதல்

    நின்ற கண்டத்து நீளுயிர் போயது
    சென்ற தன்பிறப் போர்ந்து தெளிந்தது
    தின்று தின்று துறக்கத் திருத்துதல்
    நன்று நன்றென நைந்திறந் திட்டதே.         186

உரை:-நின்ற கண்டத்து நீளுயிர் - எஞ்சி நின்ற துண்டங்களில் நெடித்திருந்த வுயிர். போயது - முற்றவும் நீங்கியது. சென்ற தன் பிறப்பு ஓர்ந்து - அவ்வுயிர் இதற்கு முன்னெடுத்த பிறப்புக்களை நினைந்து, தெளிந்தது - தெளிவுற்று, தின்றுதின்று - உயிர் நின்ற உடம்பைப் பலகாலும் தின்று, துறக்கத்து இருத்துதல் - அவ்வுயிரைத் துறக்கத்தேயிருந்து இன்பம் துய்க்க என்று சொல்லுதல், நன்று நன்று என - மிகமிக நன்று என்று, நைந்து - வருந்தி, இறந்திட்டது - செத்தது எ-று.

உயிர் தான் நின்ற உடம்புமுழுதும் பரவியிருத்தல்பற்றி "நின்ற‌ கண்டத்து நீளுயிர் போயது" என்றார்; கரும்பில் பரவியிருக்கும்சாறு, கண்டந்தோறும் நிற்றல்போல உயிரும் உடம்பின் கண்ட மொவ் வொன்றிலும் இருக்கு மென்ப. சென்ற தன் பிறப்பு, முன்பெடுத்த‌ பிறவிகளும் அவற்றுள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் குறித்து நின்றது. தான் மீன்வடிவிற் கிடந்து தின்னப்படுவதும், தன்னைத் துறக்கத் திருப்பதாகப் பொய்யுரைப்பதும் அதனால் தீவினை பெருகுவதும் அறிதலின், "தெளிந்தது" என்றார். இருத்துதல், இருக்கவெனச் சொல்லுதல். இருத்துதல் எனவே இல்லாமை நன்கறிந்ததொன்று என்பதாம். அடுக்கு முன்னது பன்மையும், பின்னது இழிவும் குறித்துநின்றது. உடம்புமுழுதும் ஒழிந்ததும் உயிர்தானும் ஒழிந்தமைபற்றி,"நைந்திறந்திட்டது" என்றார்.
----------

மீன் ஆணாடாய்ப் பிறத்தல்

    மன்னன் மாமயில் சூகர மாயமீன்
    முன்னை யாட்டின் வயற்றின் முடிந்ததோர்
    மன்னு மாணுரு வெய்தி வளர்ந்தபின்
    தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.         187

உரை:-மன்னன் மாமயில் சூகரம் ஆய மீன் - யசோதரனாகிய‌ வேந்தனாயிருந்து பின்பு அழகிய மயிலாகவும் முள்ளம் பன்றியாகவும் பிறந்திறந்த மீனாகிய உயிர், முன்னை யாட்டின் - தனக்கு முன்னே தோன்றி வாழ்ந்த சந்திரமதியாகிய‌ பெண்யாட்டின், வயிற்றில் முடிந்தது - வயிற்றில் நிரம்பிய‌தாகிய கருவில், மன்னும் ஆண்உரு எய்தி-பொருந்திய ஆணாடொன்றின் உடம்புற்றுப் பிறந்து, வளர்ந்தபின்-நன்கு வளர்ந்த பிறகு, தன்னை ஈன்ற-தன்னைக் கருவுயிர்த்த, அத்தாய் மிசைத் தாழ்ந்தது-அத்தாய ஆட்டினையே காமப் புணர்ச்சி செய்தது. எ-று.

முதலையா யிருந்து கூனியைக்கொன்ற குற்றத்தால் மன்னனால் கொல்லப்பட்டுப் புலைச்சேரியில் பெண்ணாடாய்த் தோன்றிய சந்திரமதியின் செய்தியை முன்பு "அந்தில்வாழ் புலையாளர்தஞ் சேரிவாய், வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே" (183) என்று கூறினாராதலின், ஈண்டு முன்னையாடு என்றொழிந்தார். நிரம்பிய கருவினை, முடிந்ததென்றார். ஓர், அசை. உருவெய்தல். உருநிரம்பிப்பிறத்தல். விலங்குகட்கு முறைமையும் நெறிமையுமின்மையின், "தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்தது" என்றார். பன்றிப்பிறப்பில் கருநாகமாய்த்தோன்றியிருந்த தன் தாயைக் கொன்ற வினையைச் செய்ததோடமையாது, இவ் யாட்டுப்பிறவியில் தாயைப் புணரும் பெருந்தீவினையைச் செய்தது கூறினார். முன்னை வினையைத் "தாய்கொல் பன்றி"(178) என்றும், ஒருபிறப்பில் தாயும் பிள்ளையுமாய்த் தோன்றிய இயைபை, "தன்னையீன்றவத்தாய்" என்றும் சுட்டுதல் காண்க.
--------

தாயைப் புணர்ந்த அவ்யாடு கொல்லப்படுதல்

    தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்
    ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர்
    பாய வோடிப் பதைத்துயிர் போயபின்
    தாய்வ யிற்றினிற் றாதுவிற் சார்ந்ததே.         188

உரை:- தாயின் நன்னலம்-தாயின்பால் கனியும் காமவின்பத்தை, தான் நுகர் போழ்தினில்-நுகர்தற்குரிமையில்லாத அவ்வாணாடு நுகருங்காலத்தில், ஆயகோபத்து-அதன்பால் உண்டாகிய வெறுப்பினால், ஒரு வன் தகர்-ஒரு வலிய ஆட்டுக்கிடா, அடர்த்துப்பாய-தாக்கி முட்டவே, பதைத்து ஓடி-அவ்வாடு உடல் பதைத்துத் துள்ளி யோடி வீழ்ந்து, உயிர்போயபின்-உயிர் நீங்கிய பின்பு, தாய் வயிற்றினில்- தான் புணர்ந்த தாயின் கருவிலே தங்கிய, தாதுவில்-விந்துவில், சார்ந்தது-கலந்துவிட்டது எ-று.

தாயாட்டின் நலத்தைத் தந்தையாகிய ஆடு நுகர்தற்குரிமை பெற்றிருப்ப, அதன் குட்டியாகிய தான் நுகர்தல் தீது என்பதை யுணராது நுகர்கின்ற தென்பார் "தான் நுகர் போழ்தினில்" என்றும், அச்செயல் கண்ட கிடா ஒன்று பொறாது வெகுண்டு அக்குட்டி சாவப் பாய்ந்தது என்பார் "ஆயகோபத்து அடர்த்து" என்றும், அதனால் இறந்த அக்குட்டியின் உயிர் சென்று, அத்தாய்க்கருவிற் கலந்து கொண்டதென்றும் கூறினார். பதைத்தோடி என மாறுக.
------------

தாயாடு இறத்தல்

    தாய்வ யிற்கரு வுட்டக ராயது
    போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன்
    மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்
    தாயை வாளியிற் றானுயிர்* போக்கினான்.         189
    ------
    (பாடம்) *வாளிற் றன்னுயிர்.

உரை:-தாய்வயின்-தாயிடத்தே, கருவுள்-கருவில் கலந்து, தகராயது-ஆட்டுக் கிடாவாகியது, போய் வளர்ந்துழி, கருமுற்றி வளர்ந்திருக்கையில், பூமுடி மன்னவன்- பூவும் மணிமுடியும் அணிந்த வேந்தனாகிய யசோமதி, மேய வேட்டை விழைந்தவன்-தனக்கமைந்த வேட்டை மேற் கொண்டு சென்று, மீள்பவன்-மீண்டு வருங்கால், தாயை- தாயாட்டினை, வாளியின் உயிர் போக்கினான்-தன் கை யம்பினால் கொன்றான் எ-று.

தகர், ஆடு. "தகராயது போய் வளர்ந்துழி" என்பதனால், தாயாடு கருவுயிர்த்தற்கு வேண்டும் காலம் முற்றியிருந்தமை பெற்றாம். அரசர் வேட்டை மேற்சேறல் இயல்பாதலின் "மேயவேட்டை" யென்றும், அவ்வேட்டைதானும் விலங்கச்சம் போக்கும் குறிப்பிற்ரன்றி விளையாட்டாய் மேற்கொண்டான் என்றற்கு, "வேட்டை விழைந்தவன்" என்றும், மீளுங்கால், தனித்து மேய்ந்துகொண்டிருந்த தாயாட்டினைத் தன் கையம்பு செலுத்திக் கொன்றான் என்பார் "தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்" என்றும் கூறினார். வாளி, அம்பு.
-----------

தகர்க்குட்டியை வளர்த்து வருகென வேந்தன் புலைய னொருவனைப் பணித்தல்

    வாளி யின்விழும் வன்றகர்க் குட்டியை
    நீள நின்ற புலைக்குலத் தோன்றலைத்
    தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
    ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.         190

உரை:-வாளியின் விழும் வன்தகர்க்குட்டியை-வேந்தனது அம்பினால் உயிர் சோர்ந்து விழுந்த ஆட்டின் வயிற்றினின்று நெகிழ்ந்து விழும் வலிய குட்டியை, நீள நின்ற புலைக் குலத்தோன்தலை-தொலைவில் நின்று கண்டு மனம் வருந்தி நின்ற புலையனிடத்தே, தாள் வருத்தம் தவிர்த்து-முயன்று வளர்த்தது காரணமாக அவன் கொண்டு நின்ற வருத்தத்தை போக்கி, வளர்க்க-இக்குட்டியைப் பேணி வளர்ப்பாயாக, என-என்று, ஆளிமொய்ம்பன் அருளினன்-அரியேறு போலும் வன்மை படைத்த யசோமதி குட்டியை யருளிக் கூறினன் எ-று.

வாளியால் ஏறுண்டுவிழும் ஆட்டின் வயிற்றில் கருமுற்றியிருந்த குட்டி அவ்வதிர்ச்சியால் வெளிப்பட்டு வீழ்ந்தமை தோன்ற "வாளியின் விழும் வன் தகர்க்குட்டியை" என்றார். வன்மையைக்குட்டிக் கேற்றுக. அரசன் அம்புபட்டு வீழ்ந்து இறந்ததாயுடன் தான் உயிர் இழக்காமையின் "வன் குட்டியை" என்று சிறப்பித்தாரென வறிக. அவ்யாட்டினை விரும்பி வளர்த்தோனாதலாலும், அதனை வீழ்த்தவன் அரசனாதலாலும், அவலமிகுதியால் புலையன் கையற்று நின்றொழிந் தானாதலின் "நீள நின்ற புலைக்குலத்தோன்" என்றார். தாள் வருத்தமல்லது இயைபு வேறின்மையின் அதனைத்தக்க சொற்களால் தவிர்த்து, குட்டியை நீயே வளர்க்க என வேந்தன் அருளிக் கூறினமையின் "தாள் வருத்தம் தவிர்த்து" என்றும் " அருளினன்" என்றும் கூறினார். குட்டியைக் கொல்லாது வளர்க்க என்றதனால் "அருளினன்" எனல் வேண்டிற்று. ஆளிமொய்ம்பனாயினும் அதனை இடமறிந்து செலுத்தாமையின் அதன் பயப்பாடின்மை தோன்ற, ஆளிமொய்ம்பனென வேண்டாது கூறினார். என்ப, அசை.
------------

யசோமதி சண்டமாரிக்குப் பலியூட்டுதல்

    மற்றொர் நாள்மற மாதிற்கு மன்னவன்
    பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்
    உற்ற பல்லுயிர் கொன்றுவந் தேற்றினான்
    கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.         191

உரை:-மற்று ஓர் நாள் - வேறு ஒருநாள், மன்னவன் - வேந்தனான யசோமதி, மறமாதிற்கு - கெற்றவை யாகிய சண்டமாரிக்கு, பெற்றியால் பரவி - முறைப்படிப் பலியூட்டிச் சிறப்புச் செய்யக்கருதி, பெருவேட்டை போய் - பெரியதொரு வேட்டைமேற் சென்று, உற்ற - காட்டில் வாழ்ந்த, பல் உயிர்கொன்று - பல உயிர்களைக் கொன்று, உவந்து ஏற்றினான் - அவற்றின் ஊனைக் கண்டு மனமகிழ்ந்து தேவிக்குப் பலியூட்டுவித்தானாக, ஒன்று - அவற்றுள் ஒருவகை யூன், கொற்றம் மிகு எருமைப்பலி - வெற்றி மிக்க எருமையூனாகும் எ-று.

மறவர் இடும் களப்பலி யேற்று அவர்கட்கு வெற்றிதரும் அணங் காதலின், கொற்றவையை "மறமாது" என்றார். அம்மறமாதிற்கு யசோமதியும் அவன் முன்னோரும் வழிவழியாகச் சிறப்புச்செய்தவது மரபாதலினாலும், சிறப்பு நிகழுங்காலத்துப் பல உயிர்களைக் கொன்று பலியூட்டுதல் வீரர்க்கு இயல்பாதலினாலும், "பெற்றியால் பரவி" என்றார். பரவி செயவெனெச்சம் திரிந்து நின்றது. இனி, பரவி யென்பதைச் செய்தெனெச்சமாகவே கொண்டு, பரவிவிட்டுப் பெரு வேட்டை போனான் என்று கொள்ளினும் அமையும். "பெரு வேட்டை" யெனவே, சிறப்புச்செய்தற்கு வேண்டிய சீரிய விலங்குகளையும் புட்களையும் நன்கு ஆராய்ந்து பேராரவாரத்துடன் வேட்டம் புரிவது பெறப்படும். தான் கருதியவாறே உயர்ந்த விலங்குகளும் பிறவும் தப்பாமற் கிடைத்தமையின், "உவந்து" என்றும், அவற்றை வீரர் தோள்மேலேற்றிக்கொண்டு போந்து சண்டமாரியின் திருமுன் படைத்தானென்பார், "ஏற்றினான்" என்றும் கூறினார். ஏற்றினான், ஏற்பித்தா னென்னும் பொருட்டு. மிகு எருமை, மிக்கெருமை யென நின்றது; மிக்க என்பது விகாரத்தால் ஈறுகெட்டு முடிந்ததென்றுமாம். எறுமை, காட்டெருமை(Bison) மிக்க மெய் வன்மையுடைமைபற்றி, இதனை, "கொற்றமிக் கெருமை" என்று சிறப்பித்தார். அரோ, அசை.
---------

எருமையூனைச் சிராத்தத்தில் நல்கல் நன்று எனஅந்தணர் வேந்தற்குக் கூறல்

    இன்றெ றிந்த எருமை யிதுதனைத்
    தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
    நன்ற தென்றன ரந்தணர் நல்கினான்*
    நின்று பின்சிலர் நீதிகள்† ஓதினார்.         192
    ----------
    (பாடம்)* நல்கினார். †சில நீதிகள்.

உரை:- இன்று எறிந்த எருமை இதுதனை-இன்று கொன்று வீழ்த்திய இவ்வெருமை யூனை, தின்று தின்று- மிகத் தின்று, சிராத்தம் செயப்பெறின்-குலமுன்னோர்கட்குச் சிராத்தஞ் செய்வோமாயின், நன்றது-நல்லதாம், என்றனர் அந்தணர்-என்று அந்தணர்கள் உரைக்கவே, நல்கினான்-வேந்தனும் அவ்வண்ணமே செய்க என்று அவ்வெருமையூனைக் கொடுத்தான், சிலர் பின் நின்று-அதுகண்ட வேறு சில அந்தணர்கள் அரசனை வழிபட்டு நின்று, நீதிகள் ஓதினார்-சிராத்தத்திற் குரிய முறைகளை எடுத்துச் சொல்ல லுற்றார்கள் எ-று.

எருமையின் கொழுவிய ஊனைக் கண்டதும் அதனைத் தின்றற் கெழுந்த நயப்பினால் "தின்றுதின்று சிராத்தம் செயப்பெறின்" என்றார். வேந்தற்கும் தம்மைப்போல் அதனை யுண்டற்கு விருப்பமிருக்கு மென்ற கருத்தால் "சிராத்தம் செயப்பெறின் நன்றது என்றனர்" என்றார். அடுக்கு மிகுதி குறித்து நின்றது. அதனைக் கேட்டதும் வேந்தற்குச் சிராத்தம் செய்வதில் இருந்த விருப்பமிகுதியால் அவன் "ஆயுமாறறியாதவ னாதலின்"(175) உடனே இசைந்தான் என்றற்கு "நல்கினான்" என்றும், முன்னே பேசிய அந்தணரைச் சிலர், ஒரு மருங்கு மறுத்துப் பிறிதொன்று விதித்துக் கூறுகின்றாராதலின், "நின்று பின் சிலர் நீதிகள் ஓதினார்" என்றார். பின்நின்று எனற்பாலது எதுகை யின்பங் குறித்து முன்பின்னாக மாறி நின்றது. நியதி,நீதி யென மறீஇயிற்று. நியதி, ஒழுக்காறு. வழிபாடாவது, அரசற்கு ஒன்று கூறுவார் முதற்கண் அவனை வாழ்த்திக் கூறுவது. வாழ்த்து மிடத்தும் தமது தாழ்வு தோன்ற நின்று கூறலின் "பின்நின்று" என்றார்.
--------

ஒருமருங்கு மறுத்துக் கூறல்

    ஆத பத்தி லுலர்ந்ததை யாதலால்
    காது காகங் கவர்ந்தன வாமெனின்
    தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
    ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.         193

உரை:- ஆதபத்தில் உலர்ந்ததை யாதலால்-இவ்வொரு மையூன் அறுக்கப்பட்டபின் ஞாயிற்றின் வெயிலில் உலர்ந்த படியாலும், காது காகம் கவர்ந்தனவாம்-எருமை முதலியவற்றை வருத்தும் காக்கைகள் கவர்ந்துண்டு மிச்சிலாயினவாம், எனின்-என்று ஊன்வினைஞர் உரைப்பதனால், சிராத்தம் செயற்கு தீது-சிராத்தம் செய்தற்குரிய தகுதியிலவாயின, என ஓதினர்-என்று எடுத்தோதிய அவர்களே, இனி- இப்பொழுது, ஒன்று உளது-கழுவாய் ஒன்று இருக்கிறது என்றனர்-என்று வேந்தன் உவக்குமாறு கூறினர் எ-று.

ஆதபம், ஞாயிற்றின் வெயில். ஐ, சாரியை. எருமை, எருது முதலியவற்றின் உடலி லிருக்கும் உண்ணி முதலியவற்றைக் கவரு முகத்தால் அவற்றின் உடம்பிற் புண்செய்து அதன் வழியாக அவற்றின் ஊனையும் குத்தித் தின்பது பற்றி, "காது காகம்" என்றார். உலர்கின்ற ஊனைக் கவர வரும் தம்மை வெருட்டுவார்தலையில் சிறகாலடித்து அலகாற் குத்தி வருத்தலும் காக்கைக்கு இயல் பாதலால் அது கண்டு இவ்வாறு கூறினா ரென்றுமாம். கவர்ந்தன, செயப்பாட்டு வினைப் பொருட்டு. எனின், ஏதுப் பொருட்டாய இன்னுரு பேற்ற முதனிலைத் தொழிற்பெயர். தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது.
-------------

பிறிது விதியாகக் கழுவாய் கூறல்

    தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழிச்
    சாத நல்ல தகர்முகத் துப்படின்
    பூத மென்றனர் புண்ணிய நூல்களின்
    நாத னாரத் துராதிகள் நன்றரோ.         194

உரை:- புண்ணிய நூல்களின் நாதனார்-புண்ணிய முரைக்கும் மறைகளில் வல்லுநராதலால் தாமே புண்ணியத் தலைவரெனத் தருக்கியிருக்கும், அத்துராதிகள்-அக்கொடியவர்கள், தீது இது என்ற பிசிதமும்-சிராத்தத்திற் கிது தக்கதன்று என்று சொல்லப்பட்ட எருமையிறைச்சியும், தேர்ந் துழி-நூல்களால் ஆராய்ந்தவிடத்து, சாத நல்ல தகர்முகத்துப் படின்-இளமையால் நல முடைத்தாகிய ஆடொன்றினால் மணம் நுகரப்படுமாயின், பூதம் என்றனர்-தூய்தாம் என்ற மொழிந்தனர் எ-று.

மறைகள் பலவும் புண்ணியப் பயனை யடைதற்குரிய விதிவலக்குகளை எடுத்தோதுலின், அவற்றைப் "புண்ணியநூல்" என்றும், அவற்றை ஓதுதலில் நல்ல தலைமை பெற்றிருப்பது தோன்ற "நாதனார்" என்றும், அப்புண்ணியச் செய்கை யுணர்த்தும் நூலைத்தம் தீயசெயலால் பீடழிப்பது கண்டு, "அத்துராதிகள்" என்றும் கூறினார். "நன்று பெரிதாகும்" என்பது விதி. பன்முறையும் பல்லாற்றானும் உரைத்தமை விளங்க, "நன்று" என்றார். பிசிதம், இறைச்சி. "தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கு"(193) என்று மேலே கூறினமையின், "தீதிதென்ற பிசிதமும்" என்றார்கள். தேர்தற்குக் கொள்ளுங்கருவி அவர்தம் நூலே யாதலின், "நூல்களால்" என்பது வருவிக்கப் பட்டது. *சாதம், இளமை. நன்மை, உருநலம். முகத்துப்படுதல், முகத்திற்காட்டி மணம் நுகர்வித்தல். பூதம், புனிதம். அரோ, அசை.
---------

அரசன் தான் வளர்க்கும் தகரினைக் கொணர்க என்று பணித்தல்

    என்ற லும்மிணர் பெய்ம்முடி மன்னவன்
    நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
    சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின்
    நன்றி தென்று நயந்தன ரந்தணர்.         195

உரை:- என்றலும் - என்று இவ்வாறு அந்தணர்கள் கூறியதும், இணர்பெய் முடி மன்னவன் - பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த வேந்தனாகிய யசோமதி, நன்று - நல்லது, நாம் முன் வளர்க்கவிடுத்தது - நாம் முன்பு புலையனெருவன்பால் வளர்க்க விடப்பட்டதாகிய ஆட்டினை, சென்று தம் என - சென்று கொணர்வீராக என்று ஒற்றர்க்குப் பணிக்க, ஒற்றர் சென்றனர் - அவ்வொற்றர்கள் புலையர் சேரிக்குச் சென்றனர். பின் - அவர் சென்றபின், இது நன்று என்று - இச்செயல் தக்கதென்று சொல்லி, அந்தணர் நயந்தனர் - அந்தணர்கள் மகிழுவுற்றனர் எ-று.

இணர், பூங்கொத்து. மணிமுடியும் பூமாலையும் அணிதலின், "இணர்பெய்ம்முடி மன்னவன்" என்றார்; "பூமுடி மன்னவன்"(189) என்றாற்போல. நாம், தனித் தன்மைப் பன்மை. முன், வேட்டைக்குச்சென்று மீளுமிடத்து ஓர் அட்டினைக் கொன்ற காலத்தைக் குறித்து நின்றது. "வளர்க்க விடுத்தது" என்றார், பண்டு அதனைத் தாள்வருத்தம் தவிர்த்து "வளர்க்க" வென அருளினா னாதலின்; விடுத்தது, கொல்லாது விடுத்தது என்பதுபட நிற்றல் காண்க. தாரும் என்பது தம்மென நின்றது; "இன்னும் தம்மென வெம்மனோரிரப்பின்"1 என்றாற்போல. ஒற்றர்முன் தமது நயப்புத் தோன்ற வுரைப்பின், தமதுரை பொய்யாமென் றஞ்சின ரென்பார், "ஒற்றர்பின் நன்றி தென்று நயந்தன ரந்தண" ரென்றார்.
    ------
    1.புறம். 203.

அந்தணர் சிராத்தஞ் செய்து வாழ்த்துதல்

    சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
    அன்று மன்னன் யசோதர னன்னையோ
    டொன்றி யும்பரு லகினுள் வாழ்கென
    நன்று சொல்லினர் நான்மறை யாளரே.         196

உரை:- நான்மறையாளர்-நான்மறை வல்ல அந்தணர்கள், சென்று-சிராத்த சாலைக்குச் சென்று, நல் அமிர்து உண்டு - நல்ல பாலும் சோறும் உண்டதோடு, அது தின்றனர்-அவ்வெருமையூனையும் தின்றொழிந்தனர், அன்று- அப்போது, மன்னன் யசோதரன்-வேந்தனாகிய யசோதரன், அன்னையோடு-தன் தாயாகிய சந்திரமதியுடனே, ஒன்றி- ஒருங்கிருந்து, தேவர் உலகினுள்-விண்ணுலகத்தில், வாழ்க- இனிது வாழ்வானாக, என நன்று சொல்லினர்-என்று பெரிதும் வாழ்த்துரை பல வழங்கினர் எ-று.

சிராத்தம் செய்யும் அந்தணர் வயிறார இனிய உணவுண்டு ஊனைக் கறித்து மனவமைதியுடன் முன்னோர் உம்பருலகில் இனி துறைக என வாழ்த்தும் இயல்பு கருதி, "மன்னன் யசோதரன் அன்னையொடு ஒன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர்" என்றார். நல்லமிர்து, நல்ல ஆன்பாலொடு சமைத்த சோறு. இனி, நல்லமிர்துண்டது என்றற்கு, நல்ல நீரும் புல்லும் தழையுமே தின்று வாழ்ந்த எருமையினை என்றலு மொன்று. தின்றன ரென்பது அவருண்டதன் இழிவு தோன்றக் குறித்தது. யசோதரனும் சந்திர மதியும் விலங்குகதியுட் பிறந்து இவர்களால் துன்புறுத்தப் படுவதை யறியாது பொய்யே மொழிவது விளங்க, "நன்று சொல்லினர்" என்றும், அவ்வுண்மையினை யுணர்த்தற்கு அவர் வல்ல நன்மறை பயன்படவில்லை யென்றதற்கு "நான்மறையாளர்" என்றும் கூறினார்.
--------

ஆடு தன் பழம்பிறப் புணர்ந்து வருந்துதல்

    அத்த லத்தக ராங்கது கேட்டபின்
    ஒத்த தன்பிறப் புள்ளியு ளைந்துடன்
    இத்த லத்திறை யான விசோமதி
    மத்த யானையின் மன்னவ னென்மகன்.         197

உரை:- அத்தலத் தகர்-அவ்விடத்தே நின்ற ஆடு, ஆங்கு-அப்போது, அது கேட்டபின்-அவ்வந்தணர் கூறியதைக் கேட்டபின்பு, ஒத்த-அமைந்த, தன்பிறப்பு உள்ளி- தன் பிறப்புக்களை நினைந்து, உடன் உளைந்து-அவற்றுள் அவ்வப்போது நிகழ்ந்த துன்பங்களை நினைந்து வருந்தி, இத்தலத்து இறையான இசோமதி-இந்நிலத்துக்கு வேந்தனான யசோமதி, மத்தயானையின் மன்னவன்-பெரிய தலையையுடைய யானைகளையுடைய அரசனும், என் மகன்-எனக்கு மகனுமாவான் எ-று

ஆங்கு, அப்போழ்து, தான் ஈட்டிய வினைக்கேற்பத் தோன்றிய பிறப்புக்க ளாதலின் "ஒத்த தன் பிறப்பு" என்றார்; தான் எடுத்த பிறவிக்கேற்ப உணர்வினால் உணர்ந்துரைப்பது குறித்து இது கூறினாரென்றுமாம். பிறப்புக்களை நினைவு கூர்ந்தவழி, அவ்வப்போது நிகழ்ந்த துன்பமெல்லாம் தோன்றி நெஞ்சினை யுருக்குதலின், "உடன் உளைந்து" என்றார். இது முதல் ஏழு பாட்டுக்களில் அதன் நெஞ்சில் நிகழ்ந்த நினைவுகளைத் தொகுத்துரைக்கின்றா ராதலின், இதன்கண், இவ்வேந்தன் என்மகன் என்று நினைந்த தென்றார் மத்த யானையின் மன்னவன் என்பதனை என் என்பதனோடேற்றெ மன்னனான யசோதரனாகிய என் மகன் என்று உரைப்பினு மமையும்.
------------


    இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி
    இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்
    இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்
    இதுவென் யானிவ ணின்னண மாயதே.         198

உரை:- இது-இந்நகரம், என்மாநகர்-எனது பெரிய அரசநகராகிய, உஞ்சயினிப்பதி-உஞ்சயினிநகரமாகும், இது என் மாளிகை-இஃது யான் இருந்த அரண்மனையாகும், இது எலாம்-இவையாவும், என் உழைக்கலம்-என்னுடைய உழைக்கலப்பொருளாகும், இவர் என் உழையாளராம்- இவர்கள் என் உழைப்பரிசாரகர்க ளாவார்கள், இவண் - இவ்விடத்தே, யான் இன்னணமாயது இது என் - யான் இவ்வாறாகிய இந்நிலை யாதாம் எ - று.

மாநகராகிய உஞ்சயினிப்பதி யென இயைக்க. உழைக்கலம் பொன்னாலும் வெள்ளியாலு மாகிய கலங்கள். இதுவெலாம், ஒருமை பன்மை மயக்கம். உழையாளர், பரிசனத்தார்; பணியாளருமாம். இச் சிராத்த சாலையில் ஆடாய்ப் பிறவி யெடுத்துநிற்பது கண்டு தனக்குள் இனைந்து கூறுதலின், " இதுவென் யான் இவண் இன்னணமாயது" என்றார்.
--------


    யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
    யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
    யானளித்த குலப்பரி யாமிவை
    யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.         199

உரை:-- இவை - இக்குவியல்கள், யான் படைத்தபொருட் குவையாம் - யான் ஈட்டிய செல்வத்தின் திரளாகும். இவை - இக்களிறுகள். யான் வளர்த்த மதக்களிறாம் - யான் பேணி வளர்த்த மதஞ்செறிந்த களிற்றியானைகளாகும், இவை - இக் குதிரைகள், யான் அளித்த குலப்பரியாம் -யான் புறந்தந்த குலத்திற் பிறந்த குதிரைகளாகும், யான் விளைத்த வினைப் பயன் - யான் செய்துகொண்ட வினையின் பயன், இன்னது - இத்தன்மைத்தாயிற்று எ - று.

பொருட்குவை, பொன்னும் மணியும் முத்தும் நிறைந்த குவி யல், களிற்றி யானைகளின் வன்மை தோன்ற, " மதக்களிறாம்" என்றார்." ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்" 1 நன்கமைந்த குதிரையென்றதற்கு, "குலப்பரியாம்" என்றும், இவற்றை யுடையனாயிருந்த தன்மையும் தனது பிறப் பெளிமையும் நினைந்து வருந்திக் கூறலின் " யான் விளைத்த வினைப்பயன் இன்னதே" என்றும் கூறினான்.
    -----------
    1. பு. வெ. மா. 12:13
---------

    இவர்க ளென்கடைக் காவல ராகுவர்
    இவர்க ளென்படை நாயக ராகுவர்
    இவர்க ளென்னிசை பாடுந ராடுநர்
    இவர்க ளும்மின ரென்பரி வாரமே.         200

உரை:- இவர்கள் - இங்கே பணிசெய்கின்ற காவலர், என் கடைக் காவலர் - என் வாயில் காக்கும் காவலராவர், இவர்கள்- இங்கே வாளேந்திவரும் பெருவீரர், என்படை நாயகராகுவர் - என்னுடைய படைத்தலைவராவர், இவர்கள்- இம்மாகதர் சூதர் முதலாயினர், என் இசை பாடுநர் - என் புகழை இருந்தும் நின்றும் ஏற்றிப்பாடுபவராவர், இவர்கள் - இக்கூத்தர், ஆடுநர் - என்புகழைப்பாடிக் கூத்தியற்றுவோராவர், இவர் என் பரிவாரம் - இவர்கள் என் பரிசனத்தாராவர் எ-று.

ஒன்று நின்றே ஏனையது முடிக்கும் என்னும் இயைபு பற்றி "படைநாயகர்" என்றத‌னால் வாளேந்தி நிற்கும் பெருமையும், "இசைபாடுநர்" என்றதனால், மாகதர், சூதர், வேதாளிகர், பாணர், விறலியர், புலவர் முதலாயினார் இருப்பும், "ஆடுநர்" எனவே, கூத்த‌ருண்மையும் பிறவும் கொள்ளப்பட்டன. "இறப்பே எதிர்வே யாயிரு காலமும், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி"1 என்பத‌னால் இவை யமைந்தனவென அறிக, மேலே வந்தவற்றிற்கும் வருவனவற்றிற்கும் இதுவே அமைதியாகக் கொள்க.
-------
1. தொல்.சொல்.வினை. 50.


    என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
    தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
    மன்னு தன்மறை யானொடு வைகுமோ
    என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.         201

உரை :- நஞ்சு பெய்து - யானுண்ணும் உணவில் நஞ்சு கலந்து கொன்று, என்னை இன்னணமாய் இழைத்த - என்னை இவ்வாறு பலபிறவி யெடுத்துத் துன்புறச் செய்த, அன்ன மெல் ந‌டையாள் - அன்னம்போலும் மெத்தென்ற நடையினையுடையவளான, அமிர்தமதி - அமிர்தமதியாகிய என் மனைவி, மன்னும் - எனக்குப் பின்னும் சாவாதிருந்த;மறை யானொடு - கள்ளக்காதலனான அட்டபங்கனுடன், வைகுமோ - கூடியுறைகின்றாளோ, இவண் இல்லையால் - இவ்விடத்தே அவன் காணப்படாமையால். என்னை செய்தனளோ - அவனையும் என்னைக் கொன்றதுபோலக் கொன்றொழித்தாளோ அன்றி வேறு யாது செய்தாளோ, தெரிந்திலதே எ-று.

தன்னை நஞ்சூட்டிக் கொன்றதே ஏதுவாகத் தான் பல்வகைப் பிறப்புக்களை எடுத்துத் துன்புறுவதாகக் கருதுகின்றமையின், "என்னை நஞ்சு பெய்து இன்னமாய் இழைத்த" என்றும், அவள் அக்கொடுமையை யிழைத்த காலத்தும் அவள் மேனி நலமும் நடையழகும் நினைவில் நின்று நிலவுத‌லால், "அன்ன மென்னடையாள‌ மிர்தம்மதி" யென்றும் கருத்துக்கள் எழுந்தன. அமிர்தம்மதி ,விகாரம். தானிறந்த பிறகும் அட்டபங்கன் உயிரோடிருந்து அவளது தீயொழுக்கத்துக்குத் துணைசெய்துவந்தமை மயிற்பிறவியில் கண்டமையால் "மன்னு தன் மறையானோடு" என்றும், அம்மயிற் பிற‌விக்குப் பின் பல்பிறப்பெடுத்து அவனைக் காணாதொழிந்தமையின், மறையானொடு "வைகுமோ" என்றும், அவனை இத்தகர்ப்பிறவிக்கண் காணக்கூடிய நிலையிற் போந்தும் காணாமை தோன்ற, "இவண் இல்லையால்" என்றும், த‌ன்னைக் கொன்று கொலைச்சுவை கண்டதனால் அவனையும் கொன்றொழித்தனளோ என்று கருதுதலின் "என்னை செய்தனளோ" என்றும் கூறினான். மறையான், மறைந்த தீயொழுக்கத்தை யுடையவன். ஓகாரம், ஐயம். ஆல், ஏதுப்பொருட்டு. இழைத்த வென்னும் பெயரெச்சத் தீறு விகாரத்தால் தொக்கது.
---------


    அசைய தாகி யரும்பட ரொன்றிலா
    இசைய‌ லாதன யானுற வித்தலைத்
    தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
    வசையின் மன்னவன் வானுல குய்க்குமோ.         202

உரை;- அசையதாகி - இயங்குவதாகிய திணைக்கண் தோன்றி, அரும்படர் ஒன்று இலா - பொறுத்தற்கரிய‌ துன்பம் பல வுடையனவும், இசையிலாதன - உணர்வுச் சிறப்பில்லாதனவுமாகிய பிறப்புக்களை, யான் உற- யான் அடைய, இத்தலை- இவ்விடத்தே, தசை தினாளர்கள் தங்களின் - ஊனுணவுகொள்ளும் இம்மாக்களால், இவ்வசையின் மன்னன் - இந்தப் பழிப்பினையுடைய வேந்தன், என்னை வானுலகு உய்க்குமோ - என்னைக் கொன்று விண்ணுலகு அடைவிப்பானோ தெரியவில்லையே எ-று.
------


    பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
    மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
    யாது செய்தன னோவினை யேனிடை
    யாது செய்குவ னோவுண ரேனினி.         203

கழிகாமத்தால் அறிவிழந்து தன்னைக் கொண்டவனை நஞ்சூட்டிக் கொன்ற கொலைப்பாவத்தைக் கொண்டு, அவனை வழிபட்டுத் தேவருலகமெய்தும் ஊதியத்தை யிழந்தமையின், அமிர்தமதியைப் "பேதை மாதர்" என்றார். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங் கொண் டூதியம் போகவிடல்"1 என்று சான்றோர் கூறுதல் காண்க, "கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தின் நீங்கிக் கற்ப‌த் துத்தம தேவராவர்"(739) என்று மேருமந்தரபுராணம் கூறுவது காண்க. தான் உயிரோடிருக்கும் போதே தன் மகனுக்கு அரசியலை நல்குதலின்றி, தான் இறந்தபின் அவன்தானே மேற்கொள்ளச் செய்தமையின், "இம் மேதினிப்பதியாதல் விடுத்தபின்" என்றும் அரசனாகித் தான் செய்த வினையின் பயனைத் தான் நுகர்ந்தறிந்து வருந்துதலின், தன் மகனும் அதனையே புரிந்து கெடுகின்றமை கண்டு அஞ்சுகின்றமை தோன்ற "யாது செய்தனனோ" என்றும், தன்னையும் கொன்றுவிடுவன் எனக் கருதுவது தோன்ற, "யாது செய்குவனோ" என்றும் கூறினான். ஓ, இரக்கப் பொருட்டு.
    ------
    1. குறள். 831.

ய‌சோதரனாகிய ஆடு இறந்து வேறோர் ஆடாகப் பிறத்தல்

    இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
    வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
    தனையன் மாளிகை தன்னுள நோக்குமுன்
    சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.         204

உரை:- இனையவாகிய- இவைபோல்வனவாகிய, சிந்தைகள்-எண்ணங்கள், எண்ணிலா வினையின் ஆகிய வெந் துயர்தந்திட- எண்ணற்ற தீவினைகளால் உண்டாகிய கொடிய‌ துன்பத்தை ஒருபால் தந்து வருத்த, தனையன் மாளிகை - மகனாகிய ய‌சோமதியுடைய அர‌ண்மனை நிகழ்ச்சிகள், தன் உளம் நோக - தன் மனத்தை மற்றொருபால் வருத்த, முன் சினை கொண்ட ஆடு - முன்னே சினைகொண்டு நிற்கும் ஆடொன்றின் கருவில், உயிர்- இத்தகரின் உயிர், சென்று பிறந்தது- போய் மீட்டும் ஆடாகப் பிறந்தது. எ-று.

மேற்கூறிய எண்ணங்கள் பழைய நினைவுகளை யெழுப்பி யசோதரன் மனத்தைப் புண்படுத்தின‌மையின், "சிந்தைகள் வெந்துயர் தந்திட" என்றும், எண்ணத்தால் பிறந்த நோயுடன் வினைகளாலுண்டாகும் துன்பமும் உடன் கூடி வருத்தினமையின், அதனையும் சேரக் கூறினார். தன் மகன் வாழும் அரண்மனையில் நிகழும் உயிர்க் கொலையும் கழிகாமச் செயலும் தகருருவில் நின்று காணும் அவனுக்குத் துன்பம் மிக வருத்துதலின், "தனையன் மாளிகை தன்னுளம் நோக" என்றார். சினை - கருப்பம். கொண்ட ஆடு, கொண்டாடு என வந்தது.
---------

சந்திரமதியாகிய ஆடு எருமையாய்ப் பிறத்தல்

    சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
    வந்தி டங்கரு மாகிய வாடது
    நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
    வந்து மாயிட மாகி வளர்ந்ததே.         205

உரை :- சந்திரமதி நாய் கருநாகமாய் வந்து - சந்திரமதியும் நாயும் கரும் பாம்புமாய் பிறந்திருந்து வந்து, இடங்கரும் ஆகிய ஆடது - முதலையும் ஆடுமாகியது, பல் பொருள் நந்தும் நாடு - பல்வகைப் பொருள்களும் மிகுகின்ற நாடாகிய, கலிங்கத்து வந்து - கலிங்க நாட்டிற்கு வந்து, மாயிடமாகி - எருமையாய்ப் பிறந்து, வளர்ந்தது - வளர்ந்து வருவ‌தாயிற்று எ-று.

"பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டால், ஆற்ற‌ விளைவது நாடு"1 என்பவாகலின், "நந்துபல் பொருள் நாடு" என்றார். மயிடம், மாயிட மென நின்றது; இது வடசொற் சிதைவு. ஆடது, ஆடாகிய உயிர். ஆடது, வளர்ந்தது என இயையும்.
    ----------
    1.குறள். 732.

எருமை உஞ்சயினிக்கு வருதல்

    வணிகர் தம்முடன் மாமயி டம்மது
    பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
    அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
    வணிகர் வந்து மகிழ்ந்துவிட் டார்களே.         206

உரை:- மாமயிடம் அது - அந்தப் பெரிய எருமையான‌து, வணிகர்தம்முடன் - அந்நாட்டி னின்றும் போந்த வணி கருடன், பணிவில் பண்டம் - குறைவில்லத விலைப் பண்டங்களை, பரிந்து உழல்கின்ற நாள்-சுமந்து திரியும் நாட்களில், வணிகர்-அவ்வணிக மாக்கள், அணிகொள் உஞ்சயினிப் புறத்து-நாட்டிற்கு அணியானவற்றைக் கொண்டுள்ள உஞ்சயினி நகரின் புறத்தில் ஓடும், ஆற்றயல்-சிருப்பிரை யாற்றின் கரையில், வந்து மகிழ்ந்து-வந்து மகிழ்வுடன், விட்டார்கள்-தங்கினார்கள் எ-று.

பணிவு, குறைவு. பரித்தல், தாங்குதல். நாட்டிற்கு அணியாவன, பிணியின்மை, செல்வம்,விளைவு, இன்பம், காவல் என்ற ஐந்துமாம்; "பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"1 என்ப. உஞ்சயினிப் புறத்தே ஓடும் யாறு சிருப்பிரை யென்பது "இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்" (179) என்பதனால் முன்பே கூறப்பட்டது. விடுதல், தங்குதல்.
    -----------
    1.குறள். 738.

அரசற்குரிய மாவினை அவ்வெருமை கொன்றுவிடுதல்

    தூர பாரஞ் சுமந்த துயரது
    தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
    ஆர மூழ்கிவந் தம்மயி டங்கரை
    சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.         207

உரை:- ஓடும் சிருப்பிரை யாற்றினுள்-மிக்கோடும் நீரையுடைய சிருப்பிரை யாற்றில், தூரம்-நெடுந்தொலைவு, பாரம் சுமந்த துயரது தீர-மிக்க சுமையைச் சுமந்து வந்த வருத்தமானது நீங்க, அம்மயிடம்-அவ்வெருமை, ஆரமூழ்கி- நீரில் நன்றாகக் குளிர மூழ்கி, கரைசேரு மாவினை-கரையிடத்தே மேய்ந்து கொண்டிருந்த குதிரை யொன்றினை, சென்று, எறிந்திட்டது-பாய்ந்து கொன்று விட்டது எ-று.

எருமையினம் தமக்குண்டாம் மெய்வருத்தம் போதற்குச் சேற்றுநீரில் மூழ்கிக்கிடத்தல் இயல்பாதலின், "தூரபாரம் சுமந்த துயரது தீர" என்றும், "ஆரமூழ்கி" என்றும் கூறினார். இவ்வாறு மூழ்கியதால் மெய்வருத்தம் போக்கி, பண்டை வன்மை பெற்றுச் செருக்கித்திரியும் அவ்வெருமை, கரையிடத்தே பசும்புல்லை மேய்ந்து கொண்டிருந்த அரசனது அரசவன்னமெனப்படும் குதிரையைத் தன் கோட்டாற் குத்திப் பாய்ந்து கொன்ற தென்பார் "கரைசேருமா வினைச் சென்றெறிந் திட்டது" என்றார். "கரைசேருமா" எனவே, அஃதொரு குற்றமும் செய்யாதிருக்க, இவ்வெருமை தானே சென்று கொன்று மேலும் தீவினை யீட்டிக்கொண்ட தென்றாராயிற்று. சென்றது மாவினை "எறிந்திட்ட" தென்றதனால், வெகுண்டு சென்றமை பெற்றாம். சுமந்ததுயர், சுமந்துபோந்ததனால் உண்டாகிய துயர். பெயரெச்சம், காரணப்பொருட்டு.
--------

அதனை யரசற்கு உழையவர் கூறல்

    வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
    அரைச வன்ன மெனும்பெய ராகுநம்
    அரைச வாகன மாயது போயதென்
    றுரைசெய் தாரர சர்க்குழை யாளரே.         208

உரை:- வரைசெய்தோள் மன்ன-மலைபோன்ற தோள்களையுடைய வேந்தே, வணிகர் மயிடத்தால்-வணிகருடைய எருமையினால், அரைச வன்னம் எனும் பெயராகும்-அரச வன்னம் என்ற பெயரை யுடையதாகிய, நம் அரைசவாகனமாயது-நம் அரசர் ஊரும் குதிரை யானது, போயது என்று-கொல்லப்பட்டு இறந்து போயிற்று என்று, உழையாளர்-உழையவர், அரசர்க்கு உரை செய்தார்-அரசற் குரைத்தார்கள் எ-று.

செய்தல், உவமப்பொருட்டு. "வணிகர் மயிடத்தால்" என்றனர், சொற்பல்காமைப் பொருட்டு. அரசன்பாலுள்ள குதிரைகள் பலவாதலின், தெரித்துணர்த்தற்கு "அரைசவன்ன மெனும் பெயராகும் அரைசவாரணம்" என்றும், கொல்லப்பட்டு இறந்ததென்று சொல்லுதற்கஞ்சி, "போயது" என்றும் உரைத்தார்கள். அரசன் திருமுன் தடையின்றிச் சென்று உணர்த்துவோரவர்களாதலின், "உழையாளர்" என்றார். உரைத்தார் என்னாது "உரைசெய்தார்" என்றதனால், உழையாளர் செவ்வி யறிந்து அவன் தம்மை வெகுளாவகையில் எடுத்தோதினமை பெற்றாம். பெறவே, அவன் கழிசினத்தனென்று வருஞ் செய்திக்கு ஏது கூறியவாராயிற்று.
---------

வணிகர் பொருளையும் எருமையையும் கவர்ந்து வருக என மன்னன் பணித்தல்

    அணிகொள் மாமுடி மன்ன னழன்றனன்
    வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
    பிணிசெய் தெம்முழை வம்மெனப் பேணினான்
    கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.         209

உரை:- அணிகொள் மாமுடிமன்னன்-அழகுகொண்ட பெரிய முடி சூடிய வேந்தனான யசோமதி, அழன்றனன்- உழையாளர் கூறக் கேட்டு வெகுண்டு, வணிகர் தம் பொருள்வாரி-வணிகர் கொணர்ந்திருந்த பண்டங்களைக் கவர்ந்து, மயிடமும் பிணிசெய்து-எருமையையும் பிணித்துக் கொண்டு, எம் உழைவம் எனப் பேணினான்.-எம்பால் வருக என்று உழையவரைப் பணித்தானாக, கணிதம்இல் பொருள்- கணக்கிட முடியாத அவ்வணிகர் பொருளை,சென்று கவர்ந்தனர்-உழையவர் சென்று கவர்ந்துகொண்டு போந்தனர் எ-று.

அரசர் சென்னிக்கண் முடியாய்க் கவிந்து அழகு செய்தலின் அணிகொள் மாமுடி யாயிற்று, இனி, சீரிய வேலைப்பாட்டால்அழகு கொண்ட முடியென்றும், தோளணி, மார்பணி முதலிய அணிகட்குத் தலைமையான அணியாதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டதென்றுமாம். "ஆயுமாறறியாத" மன்னனாதலின், எருமை செய்த குற்றத்துக்கு அதனையே யன்றி, அதனையுடைய வணிகருடைய பொருளையும் கவர்ந்துவருக என்பான், "வாரி எம்முழை வம்மெனப் பேணினான்" என வறிக. குதிரையின் விலையாதல் வேறு தண்டமாதல் கொள்ளாது, அவர் பொருளனைத்தையும் ஒன்று மொழியாது கவர்ந்தான் என்பதுபட, "கணிதமில் பொருள் சென்று கவர்ந்தனர்" என்றார்.
-----------

எருமையைத் துன்புறுத்தல்

    அரச னாணை யறிந்தரு ளில்லவச்
    சரண நான்கினை யுந்தனை செய்தனர்
    கரண மானவை யாவுங் களைந்தனர்
    அரண மாமற னில்லது தன்னையே.         210

உரை:-அரணமாம்-உயிர்க்குப் பாதுகாப்பாகிய, அறனில்லது தன்னை-அறத்தின் துணையில்லாததாகிய அவ்வெருமையினை, அருள் இல்லவர்-அருள் சிறிதும் இல்லாதவராகிய ஏவலர், அரசன் ஆணை அறிந்து- வேந்தனிட்ட கட்டளையை மேற்கொண்டு, சரணம் நான்கினையும்-நான்கு கால்களையும், தளைசெய்தனர்-இறுகக் கட்டி, கரணமானவை யாவும்-கருவிகளாகிய கண், காது, கொம்பு, வால் முதலிய வற்றை, களைந்தனர்-ஒவ்வொன்றாக அரிந்தெறிந்து துன்புறுத்தினர் எ-று.

*ஏனைப்பொருளும் இன்பமும் போலது உயிரொடுகிடந்து அது வீடுபெறுதற்கு உறுதுணையாதலின், "அரணமாம் அறன்" என்றும், அத்துணையைச் செய்து கொள்ளாது கெட்ட சந்திரமதியின் உயிரை "அறனில்லது" என்றும் கூறினார். அரசன் நேரே ஆணையிடாது தண்டநாயகர் வாயிலாக எருமையைத் துன்புறுத்தப் பணித்தமையின், ஆணையை "அறிந்து" என்றும், அதனை இவ்வேவலர் அருளில் செயலென ஓராது நிறைவேற்றத் தலைப்பட்டமையின் "அருளில்லவர்" என்றும் கூறினார். அவரது செயலில் அருளின்மையை, உறுப்புறுப்பாக அறுத்து வருத்துவதை வகுத்துரைக்கு மாற்றாற் புலப்படுத்தார். கண், காது, கொம்பு, வால் முதலியன புறக்கருவிக ளாதலின், அவற்றைக் "கரணமானவை" என்றார். போலும்,.
----------

எருமையூனைச் சமைத்தல்

    கார நீரினிற் காய்ச்சி யுறுப்பரிந்
    தார வூட்டி யதன்வயி றீர்ந்தவண்
    சார நெய்பெய் சலாகை கடைந்தபின்
    கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.         211

உரை: உறுப்பு அரிந்து-அவ்வெருமையின் உறுப்புக்களைச் சிறிது சிறிதாகத் துண்டித்து, காரநீரினில்-காரச் சுவைமிக்க நீரில் பெய்து, காய்ச்சி-வேகவைத்து, ஆர ஊட்டி-வேண்டும் பொருள்களை நன்கு சேர்த்துச் சுவை யூட்டி, அதன் வயிறு ஈர்ந்து-அதனுடைய வயிற்றைப் போழ்ந்து, அவண்-அவ்விடத்தே, சாரநெய் பெய்-ஆன்பாலின் சாரமாகிய நெய்யைப் பெய்து, சலாகை கடைந்தபின்-இருப்புச் சலாகையை நுழைத்துக் கடைந்த பிறகு, கூர்முள் மத்திகையின்-கூரிய முள்ளையுடைய மத்தினால், கொலை செய்தனர்-கொந்தினர் எ-று

மிளகும் அதற்கினமாகிய பிறவும் கலந்த சாற்றினைக் "காரநீர்" என்றும், காயமும் பிற விரைப்பொருளும் கலந்து புலால் நாற்றத்தைப் போக்குதலின், "ஆரவூட்டி" என்றும் கூறினார். வயிற்றுப் பகுதியுள் இருப்புச் சலாகை நுழைத்துக் குடைந்து தூய்தல்லதனைப் போக்கி, நெய்பெய்து, தூய்மைசெய்து, முள்ளுடைமத்தால் கடைந்து, மிகச் சிறுசிறு துண்டுகளாகச் சமைப்பது தோன்ற, "கொலை செய்தனர்" என்றார். சமைத்தன ரென்னாது "கொலை செய்தன" ரென்றதனால், ஊனை வாங்கிச் சமைத்தலும் கொலையே என்பது உணர்த்தியவாறாயிற்று.

அமிர்தமதி எருமையூனை யுண்டல்

    ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
    மேய மேதித் தசைமிக வெந்ததை
    வாயின் வைத்து வயிற்றை வளர்தனள்
    மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.         212

உரை:- ஆயிடை - அப்போழ்து, கொடியாள் அமிர்தம்மதி - கொடியவளான அமிர்தமதி, மேய மேதித்தசை - சுவைபொருந்திய எருமைக் கறியில், மிகவெந்ததை - குழைய வெந்த கறிகளை, வாயில் வைத்து - வாயில் வைத்துச் சுவைத்துண்டு, வயிற்றை வளர்த்தனள் - வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டாள், மற்றையார் - அவள் செய்கைகளைக் கண்டிருந்த ஏனையோர், மாயை செய்தனள் என்றனர் - இவள் தனது கொலைப் பண்பினை இதுகாறும் நாம் அறியாவாறு மாயம் புரிந்தனள் காண்மின் என்று இகழ்ந்து பேசிக் கொண்டனர் எ-று.

செய்யுளாதலின் சுட்டுநீண்டு யகரமெய் பெற்றது. மேய என்றதற் கேற்ப எழுவாய் வருவிக்கப்பட்டது; தன் மனைக்குப் போந்த எருமையூ னென்றுமாம். "வாயில் வைத்து" என வேண்டாது கூறியது, ஊனுணவின் புன்மை முடித்தற்கு. மனத்தின்கண் நல்லுணர்வும் அருளும் வளராது, பெருந்தீனி கொள்ளும் இயல்பே அவள்பால் பெருகிற்றென்பார், "வயிற்றை வளர்த்தனள்" என்றார். அரசமா தேவியா யிருந்து, உயிர்கள்பால் அருள் செய்யாது பெருந் தீனி தின்னும் பெருவிலங்காகும் இயல்பு பிறர் அறியாவகை மறைத் தொழுகிய துணர்ந்து கூறலின், "மாயை செய்தனள்" என்று இகழ்ந்தனர்.

அமிர்தமதி ஆட்டுக்கறி யுண்ண விழைதல்

    இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
    துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
    தன்னி னாய குறங்கு கடித்து
    தின்னி னாசை சிதைத்திடு மென்றனள்.         213

உரை:- எனக்கு இன்னும் ஆசையுளது-எனக்கு மற்றுமோர் ஆசை யுண்டு, இவ்வழி-இவ்விடத்தே, துன்னி வாழ்தகர் ஒன்று-வந்து இனிது வளர்ந்துவரும் ஆடொன்று, உளது-இருக்கிறது, இன்று-இற்றைப்போல், அது தன்னினாய குறங்கு-அதனுடையதாகிய துடைக் கறியினை, கடித்து-மென்று, அது தின்னின் -அதனைத் தின்பேனாயின், ஆசை சிதைந்திடும்-என் ஆசை நோய் நீக்கும், என்றனள்- என்று அமிர்தமதி தன் உழையோர்க்கு உரைத்தாள் எ-று.

எருமையூனைத் தின்ற ஆசையினால் மேலும் ஊனுண்பதற்கே அமிர்தமதியின் வேட்கை மிகுதியதால், "இன்னுமாசையெனக்குளது" என்றும், அவ்வாசை தீர்தற்கு ஊன்தேடிச் செல்லவேண்டிய துன்பமில்லை, நம்மரண்மனைக்கண்ணே வந்துவளரும் ஆடொன்றுளது; அதன் துடையூனே என் விருப்பத்தை நிறைவுசெய்யு மென்பாள், "அதுதன்னி னாய குறங்கு கடித்தது தின்னினாசை சிதைந்திடும்" என்றும் கூறினாள். இவ்யாடு புலைச்சேரியில் வளராது, அரண்மனைப் புறத்தே வளர்ந்தமையின், "இவ்வழித் துன்னி வாழ்தக ரொன்று"என்றாள்.

அமிர்தமதியின் செயற்கொடுமை கூறல்

    அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
    சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
    கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
    மனங்கொ ளாவொரு மானுட நாயினை.         214

உரை:-அனங்கனான பெருந்தகை யண்ணலை-காமனையொத்த பேரழகு படைத்த பெரியோனான யசோதரனை, சினங்கொளா-வெகுண்டு, நஞ்சினில் உயிர் செற்றனள்-விடம் தந்து உயிர் கொன்றாள், கனம் கொள் காமம் கலக்க- மிகுதியுற்ற காமவேட்கை நெஞ்சினைக் கலக்கவே, மனம் கொளா-மனத்தால் சிறிதும் விரும்பப்படாத, ஒரு மானுட நாயினை-மக்களுடம்பும் நாயியல்புமுடைய இழிந்தோனொருவனை, கலந்தனள்-கள்ளத்தால் காமப் புணர்ச்சி செய்தாள் எ-று.

அனங்கன், உருவமில்லாத காமன். தகை, அழகு. அண்ணல், பெருமை. பிறனொருவன்பாற் சென்ற காமவேட்கையால் இவ்வண்ணல்பால் விருப்பின்மையேயன்றிச் செற்றமும் கொண்டு நஞ்சூட்டிக் கொலை புரிந்தன ளாகலின், "சினங்கொளாவுயிர் செற்றனள் நஞ்சினில்" என்றார். கனம், மிகுதி. கலக்குதல், நன்னினைவு நிகழாவண்ணம் உள்ளத்தை அலைத்தல், "காதலால் கடைகின்றது காமமே*" என்றார் பிறரும். மனம்கொளல், விருப்பம் கொள்ளுதல். உருவத்தால் மக்களையும், இயல்பினால் நாயினையும் ஒத்திருத்தலின், அட்டபங்கனை "மானுடனாய்" என்றார்; பிறிதொன்றால் காமநலம் துய்க்கப்பட்ட‌ நாயினைத் தானும் நச்சி அவ்வின்பம் துய்க்கும் நாய்போலப் பிறனுக்குரியாளைத் தானும் நச்சி யின்பந்துய்த் தொழுகுதலின் நாயுவமம் கூறப்பட்டது.

அமிர்தமதி குட்டநோயடைதல்

    குட்ட மாகிய மேனிக் குலமிலா
    அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
    நட்ட மாகிய நல்லெழின் மேனியன்
    குட்ட நோயிற் குளித்திடு கின்றநாள்.         215

உரை:-- குட்டமாகிய மேனி - குட்டநோய் பொருந்திய‌ மேனியையுடைய, குலமிலா - நற்குடிப் பிறப்பில்லாதானாகிய, அட்டபங்கனோடு - அட்டபங்கனென்னும் யானைப் பாகனுடன், ஆடியமர்ந்தபின் - கழிகாமக் கள்ளாட்டயர்ந்ததன் விளைவாக, நல்லெழில் நட்டமாகிய மேனியள் - நலம் மிக்க தன்னழகு கெட்டழிந்த உடம்பினையுடையளாய், குட்ட‌ நோயில் - குட்டநோயுற்று, குளித்திடுகின்ற நாள் - துன்பக் கடலுள் மூழ்குங் காலத்தில் எ - று.

ஏனை நோய்வகை யெல்லாவற்றினும் போக்குதற்கரிய பெருநோயால் மேனி உருக்குலைந்ததனோடமையாது, நற்குடிப்பிறப்பு இல்லாமையால் நற்குண நற்செய்கையும் இல்லாதவன் அட்டபங்கன் என்றார். அமிர்தமதி தன் மேனிநலம் கெட்டு உருக்குலைந்து துயருறுதற்கு அவன் ஏதுவாதலின். ஆடி யமர்ந்த பின் என்றது, கழிகாமத்தால் அவனோடு இழிந்த காமவின்பத்தைக் கள்ளத்தாற் பெற்று இனிதிருந்த காலம், அவனால் அவட்குண்டாகிய நோய் மிகமிகக், குறைந்து இன்பநுகர்ச்சிக்கு வேண்டும் வன்மையும் கிளர்ச்சியும் இலவாகிய நிலையினைச் சுட்டி நின்றது. பின்னர் நிகழ்வாதலின், விளைவினைப் "பின்" என்றார். நட்டம், இழவு. துன்பக் கடற்கு வாயில் குட்டநோய் செய்தமையின், அதன்கட் கிடந்து மூழ்கித் துயருறுவாளை, "குட்டநோயில் குளித்திடுகின்ற நாள்" என்றார். குளித்திடுகின்ற என நிகழ்காலத்தாற் கூறியது, கரையேறமாட்டாது அதன்கண் கிடந்து அழுந்துவது தோன்றுவதற் கென்க.
    -----------
    * சீவக. 1315.

குட்டநோயால் அமிர்தமதிக்குண்டாகிய அழிவினைக் கூறல்

    அழுகி நைந்துட னஃகு மவயவத்
    தொழுகி புண்ணி னுருவின ளாயினள்
    முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
    தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.         216

உரை:-அழுகி-புண்ணுற்று, நைந்து-தேய்ந்து, உடன் அஃகும் - உடனுக்குடன் இற்று வீழ்ந்து குறையும், அவயவத்து- உறுப்புகளுடன், ஒழுகு புண்ணின் உருவனளாயினள்- அழிநீர் கசிந்தொழுகும் புண் பொருந்திய உடம்பினை யுடையளாய், முழுகுசீயின் - உடல் முழுதும் ஒழுகும் சீயினால், முடைப் பொலி மேனியள் - முடைநாற்றம் நாறும் மேனியை யுடையளாய், தொழு - குட்டநோயின் முதிர்ச்சியால், வல் - நீக்குதற்கரிய, பல் பிணி நோய்களும் – பலவாய் வருத்தும் நோய்களையும், துன்னினாள் - அடைந்தாள் எ-று.

தொழுநோய் பற்றிய உடம்பு புண்ணுற்றவிடத்து, உள்ளேயிருக்கும் தசையும் நரம்பும் எலும்பும் வலியழிந்து நீராயுருகிக் கெடுதலின், உறுப்பக்கள் ஆங்காங்குக் குறைந்து போதலின், "அழுகி நைந்துட னஃகும் அவயவத்து" என்றும், உருகி யிழியும் நீர் இடையறாது ஒழுகுதலின், "ஒழுகு பண்ணின் உருவினள்" என்றும், இயற்கையானன்றிச் செயறகையாற் பெற்றதாகலின், "ஆயின"ளென்றும், புண்ணிடந்தோறும் ஒழுகும்சீ உடல் முழுதும் வார்ந் தொழுதலால் "முழுகுசீ" என்றும், சாக்கடன்றிப் பிறிதொன்றானும் தீராநோய் என்றதற்கு, "வல்பல் பிணிநோய்களும்" என்றும், இவற்றை இவள்தானே தேடிக்கொண்டமையின், "துன்னினாள்" என இவள்மேல் வைத்தும் கூறினார். நோயென்றொழியாது பிணி நோய் என்று சிறப்பித்தது,நோய்க்குக் காரணமான தீவினையின் இயல்பையும், அதனின் நீங்குதற்குரிய நெறியும் முயற்சியும் அறிந்து செய்யவிடாது, தாம் நல்கும் துன்பத்தையே நோக்கி மெலியுமாறு உள்ளத்தைப் பணித்தலாகிய இயல்பு தெரித்தற்கு என்க. "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்*" எனப்பெரியாரும் இந்நோயின் இயல்பு கூறுதல் காண்க.
    --------
    (திருநாவுக். தேவாரம் பதி. 309, செ,10)

அயலார் அமிர்தமதியைப் பழித்துரைத்தல்

    உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
    இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
    எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
    பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.         217

உரை:- உம்மை-முற்பிறவிகளிற் செய்த, வல்வினையால்- வலிய தீவினையால், உணர்வு ஒன்றிலள்-நல்லுணர்வு சிறிதும் இல்லாதொழிந்த இவ்வமிர்தமதி, இம்மை-இப்பிறப்பில், செய்த வினைப்பயனே-செய்த தீவினையின் விளைவுகளே, இவை-இப் பல்பிணி நோய்களாகும், இனி இவ் வினை-இப்போது செய்யுந் தீவினைகள், எம்மையும் நின்றிடும்-எப்பிறப்பிலும் நிலைபெற நின்று இவட்குத் துன்பத்தைச் செய்யும், இவள் பொன்றினும்-இவள் இவ்வுடம் பொழித்து இறந்தாலும், பொன்றல-இவ்வினைகள் ஒழியா, பொய்ம்மை யன்று-இவ்வுரை பொய்யன்று மெய்யாம் எ-று.

முற்பிறவியிற் செய்த வினைப்பயனே இப்பிறப்பில் ஊழாய் நின்று நலந்தீங்குகளைப் பயப்பதாகலின், அமிர்தமதி நல்லுணர்வு இழத்தற்கு "உம்மை வல்வினை" ஏதுவாயிற் றென்றார். "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் னுண்மை யறிவேமிகும்"1 என்று சான்றோரும் கூறினர். உண்மை, ஊழ்வினை. உணர்வின்மைக்கு உம்மை வல்வினை யேதுவாகவே, இம்மையிலெய்தும் துன்பத்துக்கு ஏது இஃதென்பார், "இம்மைச் செய்த வினைப்பயனே யிவை" என்றார். ஏகாரம் பிரிநிலை, உம்மை வினையிற் பிரித்தமையின்.குட்ட நோயுற்ற அட்டபங்கனைக் கூடியமர்ந்த வினையின் விளைவாக இவள் குட்டநோயுறுவதைக் கண்களாற் காண்டலின், "வினைப்பயனே" என்றா ரென்றும், ஏகாரம் தேற்ற மென்றுமாம். நோயுற்றும் அமைந்தொழியாது மேன்மேலும் தீவினை பல செய்தலின், வினையின் பெருமையும் நோயின் சிறுமையும் ஆராய்ந்து "எம்மையும் நின்றிடும்" என்றார். "செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்"2 என்புழிப்போல, "நின்றிடும்" என்றார். இடும் என்பதற் கேற்பச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. செய்பவள் பொன்றினும் செய்யப்பட்ட வினை அவள் உயிரின்கட் கிடந்து விடாது தொடர்ந்து போந்து தன் பயனை யுறுவித்தலின் "பொன்றல" என்றும், அதனால் வினைக்கு உண்மை யென்ற பெயருண்மை வற்புறுத்த "பொய்மை யன்று" என்றும் கூறினார். இவற்றைக் கூறுவோர், அவட்கு அயலே யிருந்து அவள் செய்கை வகைகளைக் கண்டிருந்தவர் என
வுணர்க.
    --------------
    1. குறள் 373 2. குறள் 167

உழையர் தகர் கொணரக் கண்டோர் கூறல்

    நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்
    தீய வல்வினை தேடுத லேகொலோ
    மேய மேதிப் பிணத்தை மிசைத்தனள்
    மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.         218

உரை:- நோயின் ஆசைகொல்-நோய் காரணமாகப் பிறந்த ஆசையாலோ, நுண்ணுணர் வின்மைகொல்-நுண்ணிய அறிவில்லாமையாலோ, தீய வல்வினை தேடுதல்கொல்- கொடிதாகிய வலிய வினையை மேலும் ஈட்டுதற்காகவோ, மேய-நம் நகர்க்குப் போந்த, மேதிப் பிணத்தினை-எருமையின் ஊனை, மிசைந்தனள்-உண்டொழிந்தாள், மற்று- அதுவேயு மன்றி, இது தன்னையும்-இத் தகரினையும், மாய- சாவக் கொன்று, வவ்வும்-இதன் ஊனையும் தின்னக் கருதுகின்றாள் எ-று,

தொழுநோயுற்றார், அதனால் உடல்வலி குன்றுவதுகண்டு அதனைத் தடுக்கும் விருப்பால் உடலைப் பெருக்கும் வளம்படைத்த பொருள்களையே மிகுதியும் தின்ன விழைதலின், "நோயின் ஆசை கொல்" என்றும், ஊனுணவு வேண்டிப் பிறவுயிர்களைக் கொல்லும் தீவினையால் தான் உற்றிருக்கும் நோய் குன்றாது பெருகி, எய்தும் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருத்து மென்பதை நுணுகி யறிந்த வழி, அவ்வாசையினைப் போக்குவரென்றற்கு "நுண்ணுணர் வின்மை கொல்" என்றும், "தீய வல்வினை தேடுதல்கொல்" என்றும் கூறினார். ஏ, ஓ, அசைநிலை. ஊனாகக் கொள்ளுமிடத்து, உயிர் நீங்குதலின், "பிணம்" என்றார். எனவே, அதனைத் தின்பாளைப் "பேய்மகள்" என்று பழித்தாராயிற்று. "இவ்வழித் துன்னி வாழ் தகர் ஒன்றுளது இன்றது, தன்னினாய குறங்கு கடித்தது, தின்னினாசை சிதைந்திடும்" (213) என்றாளாக, உழையர், அவ்வாறே அதனைப் பற்றிக் கொணர்ந்து நிறுத்தக் கண்டோர் தம்முட் கூறிக்கொள்ளுதலின், "இது தன்னையும்" என்றார். உம்மை எச்சப்பொருட்டு; இதனைச் சிறப்பும்மையாகக் கொண்டு, இத் தகர் அரண்மனையிடத்தே பெரிதும் பேணி வளர்க்கப்பட்ட தென்று முரைக்க. அறமில் செயலென்றற்கு "வவ்வும்" என்றன ரென்க.

தகர் அமிர்தமதியைக் காண்டல்

    என்று தன்புறத் திப்படிக் கூறினர்
    சென்று சேடியர் பற்றிய வத்தகர்
    ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
    சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.         219

உரை:- என்று இப்படி-என்று இவ்வாறு, தன்புறத்து- அமிர்தமதியின் பின்னே, கூறினர்-கண்டோர் கூறிக் கொண்டனராக, சேடியர் சென்று-உழையவரான தோழியர் தகர் இருக்குமிடஞ் சென்று, பற்றிய அத்தகர்-பற்றிக் கொண்டு வந்த அவ்யாடு, ஒன்றும்-அவ்விடத்தே கொலை குறித்து நிகழும் (நிகழ்ச்சிகளை), முற்ற உணர்ந்து-முழுதும் கண்டறிந்து, அவள் தன்னையும்-அவ்வமிர்தமதியையும், சென்று-அருகே சென்று, சிந்தையின் நொந்து-மனம் வருந்தி, கண்டது-பார்த்தது எ-று.

முதுகினைப் புற மென்பவாகலின், பின்னே என்றற்குப் "புறத்து" என்றார். முன்னின் றுரைத்தற்கு அஞ்சினர், அரமாதேவியாதலின். பற்றியவழிக் கொணர்தல் தானே பெறப்படுதலின் "பற்றிய" என்றார். தன்னைக் கொல்வதாகிய ஒரு செயல் கருதி நிகழும் நிகழ்ச்சி, முற்றும் நன்கறிதலின் "ஒன்றும் முற்ற வுணர்ந்து" என்றார். தகரொன்றும் என்றுகொண்டு, அரசமாதேவியும் உழையருமாகிய பலர் கூடித் தாம் செய்யும் செயல் கொலைவினை யென்பதை யுணராராக, தகர் தான் ஒன்றாயினும், அவர் குறிப்பையும் அதுகுறித்துச் செய்வனவற்றையும் முற்ற வுணர்ந்து கொண்ட தென்றுமாம். அவ் யாட்டின் உயிர், யசோதரனாகிய உயிராதலின், அவள் மேனியும் குறிப்பும் கண்டதும் வருத்தமுற்றமையின் "சிந்தையின் நொந்து" என்றும், பிறர் செலுத்தச் செல்லாது தகர் தானே அவளருகு சென்ற தென்றற்கு, "சென்று கண்ட" தென்றும் கூறினார். அரோ, அசை. கண்ட தகர் தனக்குள் நினைந்த நினைவுகளை மேல் இரண்டு செய்யுட்களில் விரித்துக் கூறுகின்றார்.

தகர் தனக்குள்ளே நினைந்து கூறல்

    தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
    பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
    பாவி நின்னுரு வின்னண மாயது
    பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.         220

உரை:- தேவி-அரசமாதேவி யாகிய அமிர்தமதியே, என்னை முனிந்தனை-என்னை வெறுத்துக் கொன்றாய், ஒரு பாவிதன்னைச் சென்று மகிழ்ந்த பயன் கொல்-ஏதிலானாகிய ஒரு பாவியைச் சென்று கள்ளத்தாற் கூடி யின்புற்றதனால் உண்டாகிய பயன்போலும், பாவி-ஏடி பாவி, நின் உரு இன்னணமாயது-உன்னுடைய அழகிய மேனி இவ்வாறு குட்டநோயால் பொலிவிழந்து கெட்டது காண், பாவியென்னையும்-பாவியாகிய என்னையும், இன்னணம் பற்றினை-இப்போது பற்றிக்கொலை செய்யக் கருதிவிட்டாய் எ-று

எனக்குத் தேவியாயிருந்தே என்னை வெறுத்துக் கொன்றாய் என்பவன், இதற்கு ஏது நீ ஒரு பாவியகிய அட்டபங்கனைக் கூடி யுறைதற்கு இடையூறாவே னென்ற கருத்தே யென்றான். தலைக் கூட்டத்தேயே அவன் குட்ட நோயுற்று வருந்தும் பாவி யென்று அறிந்தும், அருவராது அவனை விரும்பி யென்னை வெறுத்தனை யென்பான் "என்னை முனிந்தனை" என்று எடுத்தோதி, அதற்கேது வினை "பாவிதன்னை மகிழ்ந்த பயன்கொல்" என்றான் முன்பு செய்த பாவத்தால் குட்டநோயுற்று வருந்தும் தான் மீட்டும் பாவமே செய்தலின் "ஒரு பாவி" என்று அட்டபங்கனை வெகுண்டுரைத் தான் "பாவிதன்னை மகிழ்ந்த பயன்கொல்" என்பது நடுநிலை விளக்காய்நின்று, "பாவி நின்னுரு இன்னணமாயது" என்பதற்கும் ஏதுவாயிற்று. எனக்குத் தாயாகிய சந்திரமதியாகிய எருமையூனைத் தின்றதேயன்றி என்னையும் பற்றித் தின்னக் கருதினை யென்பதுபட நிற்றலின், உம்மை இறந்தது தழீஇயற்று. இன்னணம் பற்றினை யென்பதற்கு இவ்விடத்தே பற்றிக் கொணர்வித்தாய் என்றுரைப்பினுமாம்.


    நஞ்சி லன்னையொ டென்னை நலிந்தனை
    எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
    வஞ்ச னைமட வாய்மயி டம்மது
    துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.         221

உரை:- வஞ்சனை மடவாய்-வஞ்சனையும் மடப்பமும் உடையவளே, அன்னையொடு-என்தாயாகிய சந்திரமதியுடன், என்னை-உனக்குக் கணவனாகிய என்னையும், நஞ்சில்- விடத்தினால், நலிந்தனை-கொன்றொழித்தாய், எஞ்சலில் சினம்-குறைவில்லாத நின் செற்றம், இன்னம் இறந்திலை- இப்போதும் ஒழிந்தாயல்லை, மயிடம் அது துஞ்சும்-எருமையானது இறந்து கிடக்கும், நின்வயிற்று-உன் வயிற்றின் கண், என்னையும் சூழ்தியோ-என்னையும் அவ்வாறு துஞ்சுவிக்கக் கருதுகின்றாய் போலும். எ-று.

"நஞ்சில் அன்னையொடு என்னை நலிந்தனை" என்பது யசோ தரனாகிய பிறப்பில் நிகழ்ந்தது நினைந்து கூறல்.நல்லோர்பால் தோன்றும் சினம் தனக் கேதுவாயது ஒழிந்தவிடத் தொழியுமாதலின், எஞ்சுத லதற்கியல்பாகவும், இழிந்த நின்பால் அஃது இன்னும் ஒழியாதிருக்கின்ற தென்பான் "எஞ்சலில் சினம் இன்னம் இறந்திலை" என்றான்; முற்றவும் கடியுங்குற்றமன்மையின், எஞ்சலின் சினமெனப்பட்ட தெனினு மமையும். சினமாகிய குற்றத்தின் நீங்குதலைச் சின மிறத்தல் என்பது வழக்கு. மனத்தே யுறையும் வஞ்சத்தைப் புறத்தே தன் பெண்மையால் மறைத்து ஒழுகுதல் பற்றி, அமிர்தமதியை "வஞ்சனை மடவாய்" என்றான், "மேயமேதித் தசைமிக வெந்ததை, வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்" (211) என்றாராகலின், ஈண்டு அவ்வயிற்றைக் குறிப்பால் சுடுகாடாக்கிக் "மயிடம்மது துஞ்சும் நின்வயிற்று" என்றும் தன்னையும் கொன்று தின் னக் கருதுவதுணர்ந்து "என்னையும் சூழ்தியோ" என்றும் கூறினான். ஓகாரம், வினா; அறிந்தான் வினா.

தகரும் கொன்று தின்னப்படுதல்

    என்று கண்டு மொறுமொறுத் தென்செயும்
    ஒன்று* நெஞ்சம துள்சுட நின்றது
    அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
    சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.         222
    ----------------
    (பாடம்) *நின்று. † நாலடி 121

உரை:- என்று மொறுமொறுத்து-என்று தனக்குள்ளே மொறுமொறுத்தும், கண்டும்-அமிர்தமதியைப் பார்த்தும் ,என் செயும்-வேறு ஒன்றும் கூறமாட்டாமையின், ஒன்றும் நெஞ்சமது-கொலைக்குடன்படும் நெஞ்சமானது, உள் சுட-துக்கத்தால் உள்ளத்தே வெதுப்ப, நின்றது- நின்ற அவ்யாடு, அன்று தேவி அலைப்ப-அப்போது அமிர்தமதியாகிய தேவி யதனைக் கொல்ல, அழிந்து - இறந்து, அம்மயிடத்தொடு, செல்கதி - அவ்வெருமை சென்றடைந்த‌ பிறப்பை, உயிர் சென்றது - அதனுயிர் சென்றடைந்தது எ-று.

மேலே குறித்த நினைவுகளை, யாடு, வெளியிட்டுச் சொல்லும் வாய்ப் பில்லாமையால், மொறுமொறுத்தமையின், "மொறு மொறுத்து" என்றும், வேறே தன் கருத்துக்களை வெளியிட மாட்டாமையின், "என்செயும்" என்றும் கூறினார். மொறுமொறுத்து என்பது இரட்டைக் கிளவி. உம்மை விரிக்கப்பட்டது. தன் கருத்துக்களைத் தன் கட்பார்வையால் அவ்வ‌மிர்தமதி உணருமாறு பார்த்த‌ போதும், அவள் கண்டறிதலோ அறிந்து மனமிரங்குதலோ செய்யாமையின், "கண்டும்" என்றார். இவ்வாறு தன் பார்வையும் மொறுமொறுப்பும் பயன்படாமையின், அவ் யாடு கொலைக் குடன்பட்டு நின்ற தென்பார், "ஒன்றும் நெஞ்சம்" என்றும், உடன்பாடு பிறந்தபோதும் தன்னைக் கொல்லுவதால் உளதாகும் துன்பம் நினைவிலெழுந்து அலைத்து வருத்தத் தம்பித்து நின்றதென்பார், "உள்சுட நின்றது" என்றும், பின்னர்க் கொலையுண் டிறந்தபின் அதன் உயிர் இன்ன பிறப்பை யடைந்த தென்றற்கு, "அம்மயிடத்தொடு செல்கதி சென்றது" என்றும் கூறினார். ஒடு, அதனோடி யைந்த‌ ஒருவினைக் கிளவி. அலைத்தல் வருத்தல்; ஈண்டுக் கொலை குறித்து நின்றது. அழிதல், உடலழிதலால் உயிர் நீங்குதல். நின்ற அது, நின்றதென விகாரம். "விட்புல‌ம் போயது இறும்பூது போலும்"1 என்புழிப்போல.
    ---------
    1. சிலப். ப‌தி. 8-9.

எருமையும் தகருங் கோழியாய்ப் பிறத்தல்.

    மற்றம் மாநக ரத்து மருங்கினில்
    சிற்றிற் பல்சனஞ் சேர்பறைச் சேரியின்
    உற்று வாரணப் புள்ளுரு வாயின
    வெற்றி வேலவன் காணவி ரும்பினான்.         223

உரை:- அம்மாநகரத்து மருங்கினில் - அந்தப் பெரிய‌ நகரமாகிய உஞ்சயினியின் அருகிலுள்ள, சிற்றில் -சிறு வீடுகளும், பல்சனம் - பலமக்களும், சேர் - வாழ்கின்ற, பறைச் சேரியின் - பறையர் சேரிக்கண், வாரணப்புள் உற்று - கோழி யொன்றின் கருவை யடைந்து, உருவாயின - அவ் விருவர் உயிர்களும் அக்கோழிப் பறவையின் உடம்பெடுத்து வளர்ந்து வந்தனவாக, வெற்றி வேலவன் - வெற்றிதரும் வேலையுடைய வேந்தனாகிய யசோமதி, காண விரும்பினான்.- அவற்றின் மெய்நலத்தைக் கேள்வியுற்றுத் தான் கண்ணிற் காண்பதற்கு விழைந்து தன்பால் வருவித்தான். எ-று.

அம் மாநகரம் என்*புழிச் சுட்டு உஞ்சயினியைக் குறித்து நின்றது. சேரி யென்றமையின் அதற் கியைய நகரத்து "மருங்கினில்" என்றார். ஆங்கு வாழும் பறையர் எளிய வாழ்க்கையினர் என்றற்கு "சிற்றில்" என்றும், நிறைந்த மக்களாற் பொலிகின்றமை விளங்க, "பல்சனம்" என்றும், அவ ரனைவரும் ஒருங்கு திரண்டு செய்வன‌ செய்து வாழும் சேரி யென்பார், "சேர்பறைச்சேரி" என்றும் கூறினார். சேர், திரட்சி, "சேரே திரட்சி"1 என்பது தொல்காப்பியம். வாரணப்புள் ளென்றார், வாரணம் என்பது யானைக்குஞ் சேறலின். உருவாயின வென்றதனால், பிறந்து நன்கு வளர்ந்து சிறந்தமை பெற்றாம். காண விரும்புதற்குரிய *ஏதுவும், பயனும் பெய்துரைக்கப்பட்டன.
    ---------------
    1.தொல்.சொல்.உரி.65

கோழி யிரண்டனையும் அரசன் கூட்டிலிட்டு வளர்த்தல்

    கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
    சண்ட கன்மியைத் தந்து வளர்க்கெனக்
    கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
    மண்டு போர்வினை வல்லவு மாயவே.         224

உரை:- மன்னவன்- வேந்தனாகிய ய‌சோமதி, கண்டு - அக்கோழிகளின் மேனி நலத்தைக் கண்டு, கண்களி கொண்டனன் - மிக்க மகிழ்ச்சி யடைந்து, சண்டகன்மியை- யானைத்தலைவனைப் பார்த்து, தந்து வளர்க்க என - இவற்றை நம் அரண்மனைக்குக் கொணர்ந்து வளர்ப்பாயாக என்று பணிக்க, அவன் கொண்டு போய் - அவன் அவற்றை யெடுத்துச் சென்று, கூட்டுள் வளர்த்தனன் - கூட்டிலிட்டு வளர்த்து வரலானான்.மண்டு போர்வினையும் - நெருங்கிச் செய்யும் போர்த்தொழிலும், வல்ல ஆய -. அக்கோழிகள் வன்மையுடைய வாயின எ-று.

கண்களாற் கண்டு பெருமகிழ்ச்சி யெய்தினான் என்பது "கண்களி கொண்டனன்" என வந்தது.; "கண்களி பெறூஉங் கவின் பெறு காலை"2 எனச் சான்றோருங் கூறுதல் காண்க. சண்டகன்மி, தண்டத்தலைவனுமாவன். சேரிக்கண் மீளச் சேறற் குரியவற்றைத் தான் கூட்டிலிட்டுப் பேணி வளர்க்க விரும்பினமையின், "தந்து வளர்க்க" என்றும், அவற்றைத் தன் பார்வையில் வைத்து நன்கு வளர்தற்குரிய இடத்திற் கெடுத்தேகிக் கூடொன்றில் வைத்து வளர்த்தா னென்பார், "கூட்டுள் வளர்த்தனன்" என்றும், வளருமவை, மேனி வனப்பு மிக்குத் தோன்ற வளர்ச்சிபெற்றதனோடு, போர்த்தொழிலும் சிறப்பு மிக்கன என்பார், "மண்டு போர்வினையும் வல்ல வாயவே" என்றும் கூறினார். எச்சவும்மை பிரித்துக் கூட்டப் பட்டது.
    --------
    2. நற். 61.

கோழிகளின் மேனிநலம் கூறல்

    தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சிகியென்ன*
    மருளு மாக‌ன சிகழிகைச்+ சுடர்க்கண‌ மணிமுடி தனையொத்த
    ஒளிரு பொன்னன சரணங்கள் வயிரமுள் ளொப்பில போரின்கண்
    தளர்வில் வீரியந் தகைபெற வளர்ந்தன தமக்கிணை யவைதாமே.         225
    --------------
    (பாடம்) *சவியன்ன. +மாசனம் வளர்விழிச்.

உரை:-தரளமாகிய நயனத்தொடு - முத்துப் போலும் கண்களும்,சாபம்போல் அஞ்சிறை- இந்திரவில் போலும் அழகிய சிறைகளும், சிகி என்ன மருளும்- காண்பார்க்கு மயிற்கொண்டையோ என மருட்கை விளைவிக்கும், சுடர்க்கண‌ மணிமுடி தனையொத்த - ஒளிவிடும் கூட்டமாகிய‌ மாணிக்கமணிகள் இழைத்த முடியை யொக்கும், மாக‌ன சிகழிகை- மிக்க பெருமை பொருந்திய கொண்டையும், ஒளிரு பொன்னன‌ சரணங்கள் - ஒளிதிகழும் பொன் போலும் கால்களும், வயிரம் முள் – வயிரமுட்போலும் கூரிய நகங்களும் உடையவாய், போரின்கண் ஒப்பில - போர்த்தொழிலில் நிகரில்லாதனவாய், தளர்வில் வீரியம்- குன்றாத வீரத்தால், தகைபெற - அழகுமிக, வளர்ந்தன - அக்கோழிகள் இரண்டும் வளர்ந்தன, அவை தமக்கு - அவற்றிற்கு, இணை - ஒப்பாவன, அவைதாமே – அவையே யன்றிப் பிற இல்லை எ-று.

சிகியென்ன மருளும், சுடர்க்கண முடிதனை யொத்த‌மாகன சிகழிகை என மாறிக் கூட்டுக. ஆக்கம், ஒப்புப் பொருட்டு. சாபம் எனப் பொதுப்படக் கூறினமையின் பல்வகை வண்ணத்தாற் பொலியும் சிறப்புடைய இந்திரவில் கொள்ளப்பட்டது. கோழியின் கொண்டை சிவந்து ஒளிவிட்டுத் திகழ்வது குறித்து "மணிமுடி தனையொத்த சிகழிகை" யென்றார். மணி, மாணிக்கமணி, உயர்ச்சியும் வனப்பும் காண்பார்க்கு அவை மயிற் கொண்டை போறலின் "சிகி யென்ன மருளுக" என்றார். மருளும்-மருட்கை விளைவிக்கும்; எனவே, இது "வேறுபடவந்த உவமத்தோற்ற" மாயிற்று. இனி, சிகியுவமம் மெய்யுவம மென்றும், மணிமுடி நிறவுவமமென்றும் கொள்க. "போரின்கண் ஒப்பில" என்றவர், பிறவற்றால் ஒப்பக் கூறலாம் போலும் எனும் ஐயமறுத்தற்குத் "தமக்கிணை யவைதாமே" என்றார். ஏகாரம், தேற்றம். தாம், கட்டுரைச் சுவைபட நின்றது.

மூன்றாவது சருக்கம் முடிந்தது.
----------------

நான்காவது சருக்கம்

இப்பகுதிக்கண், வேனிற்பருவம் வந்ததும் இன்பநுகர்ச்சி குறித்து யசோமதி வேந்தன் உரிமை மகளிரும் அரசமாதேவியாகிய புட்பாவலியும் உடன்வரச் சென்று, வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து நாடகமகளிரின் ஆடலும் பாடலும் கண்டு இனிதிருந்ததும், அரசனுடன் வந்திருந்த சண்டகருமன் வனத்தின் ஒரு புடையில் யோகம் புரிந்து கொண்டிருந்த அகம்பன ரென்ற முனிவரைக் கண்டதும், அவரை யவன் வணங்கி நின்று யோகத்தின் முடிபொருள் கேட்தும், அவர் நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கமென்ற மூன்றையும் ஓதியதும், அணுவிரதம் ஐந்தனையும் விரித்துக் கூறியதும், அவற்றைக் கேட்ட சண்டகருமன், கொலை யொழிந்த ஏனையவற்றை மேற்கொள்வதாகக் கூறியதும் அவர் உயிர்க்கொலையால் உளவாகும் துன்பங்களைக்கூறி யசோதரனும் சந்திரமதியும் உற்ற துன்பங்களை யுரைத்ததும், சண்டகருமன் கேட்டுச் சைனதருமத்தை முற்றவும் மேற்கொண்டு திரும்பியதும், அக்காலை அவன்பால் இருந்த கூட்டின்கண் வளர்ந்து வந்த கோழிகள் அகம்பனர் உரைத்த அறம் கேட்டுப் பழம்பிறப் புணர்ந்து மகிழ்ச்சி மிகுந்து கூவியதும், அக்குரல் கேட்ட வேந்தனான யசோமதி வெகுண்டு தன் வில்லை வளைத்து அக்கோழிகளை அம்பெய்து கொன்றதும், அவை புட்பாவலியின் வயிற்றிற்குள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்ததும், அவர்கட்கு அபயருசி, அபயமதி என்று பெயரிட்டதும், அவர்கட்குப் பின் வேறொரு மகன் புட்பாவலிக்குப் பிறந்ததும் அவனுக்கு யசோதர னென்று பெயரிட்டதும், அவ்வரச குமரன் அரசர்க்குரிய கலை பலவும் தொழில் பலவும் முற்றக் கற்றுத் தேர்ச்சி பெற்றதும் பிறவும் கூறப்படுகின்றன.

வேனில் வரவு

    செந்தளிர் புனைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
    கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச்
    செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
    வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர் மதுப் பருவ மாதோ.         226

உரை:- செந்தளிர் புனைந்த சோலை-செவ்விய தளிர்கள் நிறைந்த சோலையிடத்தே, திருமணிவண்டும் தேனும்- அழகிய நீலமணி போலும் வண்டினமும் தேனினமும், கொந்துகள் குடைந்து கூவும் குயிலொடு குழுமி யார்ப்ப- பூங்கொத்துக்களைக் கோதிக் குடைந்து கூவுகின்ற குயிற்பறவையுடன் கூட்டமாய்க்கூடி ஒலிக்க, செந்துணர் அளைந்து- செவ்விய பூங்கொத்துக்களிலுள்ள தாது படிந்து, தென்றல்- தென்றற் காற்றானது, திசைதிசை சென்று வீச-திசை தோறும் சென்று வீச, வளர்மதுப்பருவம்-பெருகுகின்ற இன்பத்தைச் செய்யும் இளவேனிற் பருவம், எங்கும் வந்து- எவ்விடத்தும் போந்து, உளம் மகிழ்ந்தது-உயிர்களை மகிழ்வித்தது எ-று.

புதுத்தளிர் செந்நிறத்த தாதலின் "செந்தளிர்" என்றும் அதன் செறிவு சோலையை அழகு செய்தலின் "புனைந்த சோலை"யென்றும் கூறினார். நீலமணி யென்றற்குத் "திருமணி" யென்றார்; "திருமணி...புரையுமாமெய்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. கொந்து, கொத்து. வண்டுந் தேனும் தனித்திருந்து ஒலித்தலின்மையின், "குழுமியார்ப்ப" எனல்வேண்டிற்று. துணர் ஈண்டு ஆகுபெயராய் மலரகத்துள்ள தாதினைக் குறித்து நின்றது. எவ்விடத்தும் சென்று பரவிய தென்பார் "திசைதிசை சென்று வீச" என்றார். உளம், உயிர். மகிழ்ந்தது, பிறவினைப் பொருட்டு. வளர்பபருவ மெனவே இளவேனில் என்பது பெற்றாம். பூக்கள் நிறைந்து நறுமணங் கமழும் பருவ மாதலினாலும், இன்பக் களியாட் டிற் கேற்ற காலமாதலினாலும், இளவேனிலை "மதுப்பருவம்" என்றார். மாது, ஓ, அசை.
    ------
    1. பரிபா. 4.

யசோமதி வசந்தமண்டபத் திருத்தல்

    இணர்தகைப்* பொழிலி னுள்ளா விசோமதி யென்னு மன்னன்
    வணர்தகைக் குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
    புணர்தகை† வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டர்
    இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.         227
    ------------------
    (பாடம்) *தழை. †தலை.

உரை:- இணர்தகைப் பொழிலின் உள்ளான்-பூங்கொத்துக்கள் செறிந்த சோலையின் உள்ளே, வணர் தகைக் குழலி-நெறித்த அழகினையுடைய கூந்தலை யுடையவளான, புட்பாவலி எனும் துணைவியோடு-புட்பாவலி யென்னும் தன் வாழ்க்கைத்துணைவியுடன், புணர்தகை வல்லி புல்லி வளர்-கூடற் கமைந்த கொடி தழுவி யோங்கிய, இளம் பிண்டி-இளமையான அசோகமரத்தின் கீழமைந்த வயந்த மண்டபத்தில், வண்டர் இணர்தகை தவிசின் ஏறி-வண்டு மொய்க்கும் பூங்கொத்துகள் நிறைந்த ஆசனத்தில் ஏறி, இனிதினின்-இன்பத்தோடு, அமர்ந்திருந்தான்-வீற்றிருந்தான் எ-று.

இணர், பூங்கொத்து. வணர், நெறிப்பு. அரசமாதேவியாதலின், புட்பாவலியைத் "துணைவி" யென்றார். பூங்கொடிகள் பிறிதொரு கொம்பினையாதல் மரத்தையாதல் பற்றிப் படர்ந்து வளர்வவாகலின், "புணர்தகை வல்லி" என்றும், அது தன்னைத் தழுவிப் படர்ந்து வளரத் தான் தன் இளமைச்செவ்வி குன்றாது வளரும் நலந்தோன்ற "வல்லி புல்லி வளர் இளம் பிண்டி" என்றும் கூறினார். பிண்டியின் கீழ் புதிது சமைந்த பூம்பந்தர் வசந்தமண்டபமாகும். பிண்டி, ஆகு பெயர்; அவ்வாறு கொள்ளாது, பிண்டியின் கீழ் அமைந்த தவி சென்றே கோடலு மொன்று. வண்டு, வண்டர் என நின்றது. கொம்பு, கொம்பர் என வருதல்போல. பூக்கள் பரப்பிய இருக்கை யாதலின், "வண்டர் இணர்ததை தவிசு" என்றார். ததைதல், நெருங்குதல். இனிதினின் என்புழி, இன் சாரியை. உரிமை மகளிரும் உழையரும் அரசியற் சுற்றமும் தானைத்தலைவரும் சூழ விருந்து இன்புற்றமை தோன்ற"அமர்ந்திருந்தான்" என்றார்.
----------
இசைநாடக வின்பந் துய்த்தல்

    பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பரவை யல்குற்*
    சூடக மணிமென் தோளின் தொழுதனர் துளங்கத் தோன்றி
    நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
    பாடலி லமி்ர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.         228
    --------------
    (பாடம்)* பைம்பொற்.

உரை:- பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி-பாடகம் கிடந்து விளங்கும் சிவந்த நிறம் பொருந்திய சிறிய அடிகளையும், பரவை அல்குல்-பரந்த அல்குலையு முடைய, நாடக மகளிர்- நாடகப் பெண்கள், துளங்கத் தோன்றி- கண்டோர் நெஞ்சு கலங்க வந்து நின்று, சூடக மணி மெல் தோளின்-வளையணிந்த அழகிய மெல்லிய கைகளால், தொழுதனர்-அரசனைத் தொழுது, ஆடும் நாடகம் நயந்தும்- ஆடுகின்ற நாடகத்தை விரும்பிப் பார்த்தும், நல்லார் பாடலில்-பாடல் மகளிர் பாடும் பாட்டிசையின்கண், ஊறல் அமிர்தம்-சுரக்கும் இசை யமுதத்தை, பருகினன்- செவியார வுண்டும், மகிழ்ந்திருந்தான்-இன்புற்றிருந்தான் எ-று.

பாடகம், காலிலணியும் அணிவகை. கெழு வென்பது கேழ் என வந்தது. சீறடியும் அல்குலு முடைய மகளிர் தோன்றிக் தொழுதனர் ஆடும் நாடகம் நயந்தும் என இயையும். ஆடல் பாடல் அழகு என்ற மூன்றாலும் நலம் நிரம்பிக் காண்போர் மனத்துள் காம வேட்கை யெழுப்பி மெலிவித்தலின் "துளங்கத் தோன்றி" என்றார்."தோற்றினான் முகஞ்செய் கோலம் துளக்கினாண் மனத்தை யெல்லாம்"1 என்றும், "வெண்ணெய் தீ யுற்றவண்ணம் ஆடவர் மெலிகின்றாரே"2 என்றும் பிறரும் கூறுதல் காண்க. நாடகம், கூத்து. "அந்தரமகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்"3 என்பது காண்க. பாட்டிசையில் சுரக்கும் இசையின்பத்தை "பாடலில் அமிர்த வூறல்" என்றார். "செவிச் சுவையமுதம் இசைத்தலின் மயங்கி" என்றார் பிறரும். அமிர்தமாகிய வூறல் என இயைத்தலு மொன்று.
    ------
    1.சீவக. 679. 2. சீவக. 1262. 3. சீவக. 1260.

இசையமுதம் பருகியவழிப் பிறக்கும் இன்பத்தால் தன்னை மறந்து கிடத்தலின் "மகிழ்ந்திருந்தான்" என்றார். இசையும் நாடகமும் காமத் தீயைக் கிளர்விக்கு1 மென்பது
சமண்சமயக் கோளா தலின் "மகிழ்ந்திருந்தான் என்றா ரென்றுமாம்.
    ---------
    1. சீவக. 2607.

சண்டகருமன் அகம்பனமுனிவரைக் காண்டல்

    வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
    தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன் போகி
    வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
    களைபவன் கடவுள் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்.         229

உரை:- மன்னன்-வேந்தனாகிய யசோமதி, வளையவர் சூழலுள்ளால்-வளையணிந்த மகளிர் கூட்டத்திடையில், மனம் மகிழ்ந் திருப்ப,- மனங்களித் திருக்கையில், தளை யவிழ் தொடையல் மார்பன்-மலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த மார்பினையுடையவனான, சண்டமுன் கருமன்- சண்டகருமன் என்பான்; வளமலர் வனத்துள்-வளவிய பூக்கள் நிறைந்த கானகத்துள், போகி-சென்று, தீய மனிதரோடு-தீவினை புரியும் கள்வரோடு, அனைய சாதி-அவரையொத்த தீமை புரியும் உயிரினங்களை, களைபவன்-வேட்டையாடி யழித்து வருபவன், கடவுள்-முனிவனாகிய அகம்பனனை, கண்ணில் கண்டு-தன் இருகண்களாலும் நன்கு கண்டு, கைதொழுது நின்றான்- கைகூப்பி வணங்கி நின்றான் எ-று.

வளை, மகளிர் கையிலணியும் வளையல், மகளிர் கூட்டத்தில் அவர் தம் இசை நாடகங்களாலும் மெய்யெழிலாலும் காமவேட்கையைக் கிளர்வித்து மன்னன் மனத்தை மயக்கினமை தோன்ற, "மன்னன் மனமகிழ்ந் திருப்ப" என்றார், மகிழ்தல், மயங்குதல்; "மகிழ்ந்தன்றலையும் நறவுண்டாங்கு"2 என்றாற்போல. தளை, அரும்பு, சண்டமுற்கருமன், அபயமுன்மதியென்பதுபோல நின்றது. தீமை புரிவோரைக் கடிதல் "களைகட்டதனொடு நேர்"3 என்றலின், "களைபவன்" என்றார். தீயோர் ஐயறிவுபடைத்த மாக்களேயாதலின், ஏனை விலங்கு முதலியவற்றை "தீயமனிதரோடனையசாதி" என்றார். தீமை களைந்து போக்குவார் நலம் பெறுதல்போல, சண்ட கருமன், களைபவன்,"கடவுள், கண்ணிற்கண்டு கைதொழுது நின்றான்" என்றார்.
    ---------
    2. குறுந். 165. 3. குறள். 550.

கடவுள், முனிவர்; "தென்னவற்பெயரிய தொன்முது கடவுள்"1 என்று சான்றோர் கூறுப. கண்டு பயிலாமை தோன்ற, "கண்ணிற்கண்டு" என்றார்.
    -----------
    1. மதுரை. 40-41.

அகம்பனர் சண்டகருமனைக் காண்டல்

    அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னும் நாமத்
    தொருமுனி தனியனாகி யொருசிறை யிருந்தோர் பிண்டித்*
    தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்தான் முன்னர்+
    மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.         230
    ------
    (பாடம்) *யிருந்து முன்னர். +விறந்த பின்னர்.

உரை:- அருவினை முனைகொல் ஆற்றல்-வெல்லுதற்கரிய வினையாகிய பகையை யழிக்கும் ஆற்றல் படைத்த, அகம்பனன் என்னும் நாமத்து ஒரு முனி-அகம்பனனென்னும் பெயரையுடைய ஒரு முனிவன், தனியனாகி-தனித்து ஒரு சிறை இருந்த-வனத்தின் ஒரு புடையில் இருந்த, ஓர் பிண்டித்தருமுதல்-ஓர் அசோகமரத்தின் அடியில், யோகு கொண்டு-யோகத்தை மேற்கொண்டு, தன் அளவு இறந்தான்-தன் அறிவெல்லையைக் கடந்து நின்றவன், மருவிய நினைப்பு மாற்றி-தான் யோகத்திற் கொண்டிருந்த நினைவை மாற்றி, முன்னர்-தனக்கு முன்னாக, வந்தது-சண்டகருமன் வந்ததை, கண்டிருந்தான்-பார்த்துக்கொண்டிருந்தான். எ-று.

வினைகள் உயிர்கட்குப் பகையாய் பிறவித்துன்பத்துள் ஆழ்வித்தலின், அவற்றை, "அருவினை முனை" யென்றார். இருந்த என்ற பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. பிண்டித் தரு முதல், அசோகமரத்தின் அடிநீழல். இயற்கையறிவும் கல்வி கேள்வியா லாகிய செயற்கையறிவும் கூடிய உண்மையறிவாலும் இனிது தேறமுடியாத நுண்பொருள் யோகத்தால் அறிந்துணரப் படுதலின், "யோகுகொண்டு தன்னள விறந்தான்" என்றார். உண்மையறிவின் எல்லைக்குட்பட்டது தன்னளவாதலின், அதற்குமேற்பட்டது காண்டலால் "தன்னள விறந்தான்" எனல் வேண்டிற்று. நினைப்பு, துவாதசானுப்பிரேட்சையென்ப. அவை, அநித்தியம், அசரணம் முதலாகப் பன்னிரண்டாம். இவற்றை "ஏற்ற நினப்பு"2 என்று நீலகேசி கூறுதல் காண்க. இனி ஆப்தன் முதலாகக் கூறும் எட்டென்றும் கூறுவர். தன்பால் வரும் சண்டகருமன் அறம் கேட்டு நன்னெறி சேரவிருத்தலை முன் உணர்ந்தமையின், "கண்டிருந்தான்" என்றார்.
    -------
    2. நீலகேசி. 125.

சண்டகருமன் முனிவனை வணங்கி வினாதல்

    வடிநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
    அடீகணி ரடங்கி மெய்யி லருள்புரி மனத்தீ* ராகி
    நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
    முடிபொருள் தானு மென்கொல் மொழிந்தருள் செய்க என்றான்.         231

உரை:- வடி நுனைப் பகழியானும்-வடித்த கூரிய அம்பினையுடைய சண்ட கருமனும், மலரடி வணங்கி வாழ்த்தி- முனிவனுடைய தாமரைபோலும் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வாயார வாழ்த்தி, அடிகள் நீர்-அடிகளாகிய நீவிர், மெய்யில் அடங்கி-மெய்ம் மொழிகளால் அடக்கமுற்று, அருள்புரி மனத்தராகி- அருளறத்தை விரும்பும் மனத்தையுடையீராய், நெடிதுடன் இருந்து-நெடுங்காலம் தவத்தை மேற்கொண்டிருந்து, நெஞ்சில் நினைவதோர் நினைவுதன்னால்- நெஞ்சின்கண் நினைக்கத் தகுவதொரு நினைவு கொண்டு ஆராயும், முடிபொருள் தானும்-முடிவுகாணும் பொருள், என்கொல்-யாதாகும், மொழிந்தருள்செய்க-சொல்லியருள்வீராக, என்றான்-என்று வேண்டினான் எ-று.

சண்டகருமனை, வடிநுனைப் பகழியான் என்றார். அதனைக் கையி லேந்தி அம்முனிவன் திருமுன், வந்திருத்தலின். மெய்யால் வணங்கி வாயால் வாழ்த்தினமையின், "வணங்கி வாழ்த்தி" என்றார். மனத்தே அம் முனிவர்பால் நன்மதிப்பும் தன்னால் வணங்கப் படத்தக்க பெருமையும் நினைத்தமை இச்செயல்களால் விளங்குதலின், அது கூறாராயினார். அடிகள், உயர்ந்தோரை யழைக்கும் உயர் சொற்கிளவி. தவம் புரியுமிடத்தும், மெய்யும் மொழியும் அடங்கி மனத்தில் ஒடுங்க, மனம் குறித்த பொருட்கண் ஒன்றி நிற்றலின், "மெய்யில் அடங்கி்"யென்றான். உயர்ந்தோர் பாலுள்ள பெருஞ் செல்லமாதலின், அதனை விதந்து "அருள்புரி மனத்திராகி" யென்றும், நெடிதிருந்து நெஞ்சால் ஆராயத்தக்க அந்நுண் பொருள் யாதென அறியும் ஆர்வ மிகுதியால் "நெஞ்சில் நினைவதோர் நினைவுதன்னால் முடிபொருள் தானும் என்கொல்" என்றும் வினவினான். தான், அசைநிலை.

அகம்பனன் அருள் நினைவு கோடல்

    ஆரருள் புரிந்த நிஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
    சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலு மென்றே
    பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
    கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.         232

உரை:- கூரறிவுடைய நீரார்-கூர்த்த அறிவினையுடைய பெரியோர், பேரறிவாகி-மிக்க அருள் நிறைந்த அறிவினை யுடையராய், தம்மில் பிறழ்வு இலா உயிரை-தம்மின் வேறுபடாத ஏனை உயிர்களை, மனத்தினால் குறிப்பது-தமது திருவுள்ளத்தில் அருள் செய்யக் கருதுவது இயல்பாதலால், அம் முனி-அவ்வகம்பன முனிவனும்,அவனை நோக்கி-அச்சண்ட கருமனைப் பார்த்து, ஆர் அருள் புரிந்த நெஞ்சின்-நிறைந்த அருளே நினையும் தன்நெஞ்சின்கண், சீர் அருள் பெருகும் பான்மைத் திறத்தன்போலும்-(இவன்) சிறப்புப்பொருந்திய அருளறத்தை மேற்கொண்டோங்கும் முறைமை யுடையன் போலும், என்று- என்று நினைத்து எ-று.

இது குளகச்செய்யுள்,.அறிவிற்குப்பெருமை, அதனால் ஏனை மன்னுயிரைத் தன்னுயிராகக் கருதிச் செய்வன செய்தலாதலின் "பேரறிவாகி" யென்றும், உடம்பாலும் அதற்கியைந்த செயலாலும் வேறுபட்டனவாயினும், உயிர்த்தன்மையில் வேறுபாடின்மை யுணர்த்துவார் "தம்மிற் பிறழ்விலா உயிரை" என்றும், கூரிய அறிவுடையார்க்கன்றி, இந்நினைவு பிறவாமையின், "கூரறிவுடைய நீரார்" என்றும் கூறினார். குறிப்பது அவர்க்கியல் பாதல் தோன்ற, குறிப்பதென்றே யொழிந்தார். அகம்பன முனிகள் இவ்வியல்பினராதலின், இதனை விரித்தோதினார். சண்ட கருமனைக் கண்டபோதே அவன்பால் அருட் பார்வை செலுத்தின ரென்றற்கு, "அவனை நோக்கி" என்றும், அதன் பயனாக அவர் மனத்தில் அருள் மிகச் சுரந்தமை விளங்க "ஆரருள் புரிந்த நெஞ்சின்" என்றும், அருளறத்தைச் சீரருள் என்றும், அதனை மேற்கொண்டொழுகும் ஊழ்வயத்த னாதலைத் தன் கூரறிவால் உணர்தலின், "சீரருள் பெருகும் பான்மைத் திறத்தன் போலும்" என்றும் நினைத்தார். ஏகாரம், அசைநிலை. போலும், உரை யசை. பெரியோர் ஏனை உயிர்கட் கருளைச் செய்யு மியல்பின ரென்பதனை "விலங்கு வெந் நரகாதிகள் தம்முள் விளிந்தொன்றி விழுநோயொடு முற்றுக், கலங்கி யெங்குங் கண்ணிலவாகிக் கவலை வெள்ளக்கடலிற் குளித் தாழும், நலங்களில்லாவுயிர் தங்களுக்கெல்லாம் நடுக்க நீக்கியுயர் நன்னிலியீயுஞ், சலங்களில்லாப் பெரியோன்"1 என வருதலால் அறியலாம்.
    --------------
    1. நீல கே. 417

பொருட்டன்மை கூறல்

    அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி
    நினைந்தவெண் குணங்க ளோடு திருமல நித்த மாகிச்
    சினஞக்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி
    அனத்தகா லத்து நிற்ற லப்பொருட் டன்மை யென்றான்.         233

உரை:- அனந்தமாம் அறிவு காட்சி அருவலி போகம் ஆதி- கடையிலா அறிவு கடையிலாக் காட்சி கடையிலா ஆற்றல் கடையிலா இன்பம் முதலாக, நினைத்த-எண்ணப்பட்ட, எண் குணங்களோடு-எண்வகைக் குணங்களுடன், நிருமலமாகி-நின்மலமாய், நித்தமாகி-நித்தியமாய், சினம் செறு ஆதி இன்றி- வெகுளியும் செற்றமும் முதலிய குற்றங்களில்லாததாய், திரிவித உலகத்து உச்சி-மூவகை யுலகங்கட்கும் உச்சிக்கண், அனந்த காலத்து நிற்றல்-அழிவின்றி நிற்பதாயுள்ளது, அப்பொருள் தன்மை-யோகத்தால் நினைந்து கொண்டிருந்த அம் முடிபொருளாகிய கேவலத்தின் இயல்பு, என்றான்-என்று முனிவன் கூறினான் எ-று

கடையிலா அறிவு முதலாக வரும் குணமெட்டனுள், கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கையும் எடுத்தோதியது இந்த நான்கும் அனந்த சதுட்டயம் எனப்படும் சிறப்பு நோக்கி யென்க. ஞானவரணீயம் தரிசனா வரணீயம் அந்தராயம் என்ற காதி கருமம் கெட்டவிடத்து இந் நாற்குணமும் தோன்றி, ஏனைத் தொடர்வுகளைக் கெடுத்துத் தூய்மையும் நிலைபேறும் எய்துவித்தலின், "நிருமல நித்தமாகி" என்றும், சினமும் செற்றமு முதலாகிய ஏனைத் தொடர்வுகளான் அகாதி கன்மங்கள் கெட்டாலன்றி "நிருமல நித்தியம்" கை கூடாமைபற்றி "சினம் செறு வாதியின்றி" என்றும், இந்நிலை மூவுலத்தின் உச்சிக்கண்ண தாகலின் "திரிவித வுலகத்துச்சி" யென்றும், அவ்விடத்தே திரிபின்றி எஞ்ஞான்றும் நிலைபெறுதலின் "அனந்த காலத்து நிற்றல்" என்றும் கூறினார். "கடையிலாக் காதிகெடக் காட்சி வலியறி வின்பங் கண்ணே தோன்றி, தொடர்வெலா மறவறிந்து தோன்றிநாற் குணத்திலுநற் சுயம்புவனார்"1 என வருதலாலறிக. இவற்றின் விரிவை மேருமந்தர புராணம், அட்டபதார்த்த சாரம் முதலிய நூல்ளுட் காண்க. செறு-செற்றம்.; ஈற்று அம்முக் கெட்டது. கேவல ஞானத்தைப் பெண்ணாக்கிச் சீவகற்கு மணஞ் செய்வித்த திருத்தக்க தேவரும் அதனை "பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்புமில்லா, அரிவையைப்பருகி"2 என்றல் காண்க. சினம் முதலியன, கேவல ஞானந் தலைப் பட்டோராலும் அனந்த சதுட்டயங்களை யெய்திய பின்னன்றி முற்றவும் கெடுக்கப்படாத வன்மையுடையனவாம். வெகுளி முதலாயின முற்றவும் கடியுங் குற்றமல்லவெனப் பரிமேலழகியார் முதலிய சான்றோர் கூறுவது இக்கருத்துக்கு இயைந்திருக்கிறது.
    -----------
    1. மேரு. 1399. 2. சீவக. 3127.

சண்டகருமன் கூறல்

    கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்கள் தம்மை
    இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே
    ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை
    பெரியதோர் சோர மென்றான்* பின்னமாச் சேதித் திட்டும்.         234
    -----
    (பாடம்) * சோரன்றன்னை.

உரை:- இறைவ- இறைவனே, கேளாய்-அடியேன் கூறுமிதனைக் கேட்பாயாக, எம் அரசு அருளினாலே-எங்கள் அரசனது ஆணையால், களவு செய்தோர்கள் தம்மை-களவு முதலிய பெருங் குற்றத்தைச் செய்பவர்களை, இருபிளவாகச் செய்வன்-இரண்டு பிளவுபடுமாறு வெட்டி வீழ்த்துவேன், பின்னமாச் சேதித் திட்டும்-சிறு சிறு துண்டுகளாக செத்தினாலும், ஒரு வழியாலும்-ஒருவகையிலும், சீவன் உண்டு எனக் கண்டது இல்லை,-சீவன் என்பது உளது என்பதைக் கண்டதே இல்லை. பெரியது ஓர் சோரம் என்றான்-அதனை உண்டென்பது பெரியதொரு கள்ளச் செயலாக இருக்கிறது என்று சொன்னான் எ-று.

நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் முதலியவற்றால் இறைமைக் குணமெய்திய முனிவனாதலின் "இறைவ" என்றான். தண்டத் தலைவனாதலின், சண்டகருமன் தான் களவு முதலிய குற்றஞ் செய்தோரை வாளால் உறுப் பரிந்தும் உடலைப் போழ்ந்தும் பயின்றுள்ளானாதலின் அச்செயல்களால் உயிர்ப் பொருளைத் தான் காணாமையால், உயிரென்பதொன்று உண்டென்பது மாயமாக வுளதென்பான், "பெரியதோர் சோரம்" என்றான். எம் அரசு அருளினால், களவு செய்தோர்கள் தம்மை, செய்வன்; சேதித்திட்டும், ஒரு வழியாலும் கண்டதில்லை, சோரம் என்றான் இயையும். அரசன் ஆணையிட்டாலன்றி, குற்றமுடையராயினும் அவரைக் கோறல் அவற்குக் கடமையன்யின், "எம்மர சருளினாலே" என்றும், போழ்தல் பெரும்பான்மையும் உறுப்பரிதல் சிறுபான்மையு மாதல் தோன்ற, "இருபிளவாகச் செய்வன்" என்றும், "பின்னமாச் சேதித் திட்டும்" என்றும் கூறினான். களவு செய்தோர்கள் என்று விதந்தமையால், ஏனைக் கொலை முதலிய குற்றம் செய்தோரையும் கொள்ளல் வேண்டிற்று. கள்வர் முதலியோர் கூறும் பொய்க் கூற்றினைக் கேட்டுப் பயின்ற பயிற்சி மிகுதியால், சீவன் உண்டென்பார் கூற்று அவற்குப் பெரும் பொய்யாய்த் தோற்றியதென அறிக. சோரம், களவு.
-------

    மற்றொரு கள்வன் தன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
    இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
    உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்து
    மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.         235

உரை:- இறைவனே-, மற்றொரு கள்வன் தன்னை - வேறொரு கள்வனை, வதை செய்யு முன்னும் பின்னும் - கொலை செய்வதற்கு முன்பும் கொலை செய்த பின்பும், இற்று என் நிறை செய்திட்டும் - அவன் உடல்நிறை இவ்வளவிற்றென்று நிறுத்துக் கண்டபோதும், பேதம் காணேன் - வேறுபாடு கண்டேனில்லை, ஒருவனை - ஒரு கள்வனை, உற்றது ஓர் குழியின் - தக்கதொரு குழியின்கண் இருத்தி, சிலநாள் மூடி வைத்து - சில நாள் மூடி வைத்திருந்து கண்டபோது, அவன் உயிர்போயிட்ட - அவனது உயிர் சென்ற, வழியொன்றும் - வழி சிறிதும், கண்டிலேன் - பார்த்தது கிடையாது எ-று.

வதை, கொல்லுதல். கொலைக்கு முன்னும் பின்னும் நிறை செய்து கண்டபோது நிறையில் சிறிதும் வேறுபாடு தோன்றிற்றன்று என்பான், "பேதம் காணேன்" என்றான். பேதம், நிறையில் வேறுபாடு. கள்வனது உடம்பு இருத்தற் கேற்ப அளவிட்டமைத்த குழியென்பான் "உற்றதோர் குழியின்" என்றும், காற்று நுழைதற்கும் இடமில்லாதவாறு நன்கு மூடினமை தோன்ற "மூடி" என்றும் கூறினான். "உயிர்போயிட்டவழி ஒன்றும் கண்டிலேன்" என்றதனால், மறுபடியும் அகழ்ந்து கண்டமை பெற்றாம். சிலநாள் என்புழிச் சின்மை, இரண்டொரு நாளைக் கழிவு எனக் கொள்க.
-----------
அகம்பன முனிவர் கூறல்

    பையவே காட்டத் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
    வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விறகை யூன்ற
    ஐயனே யங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
    திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணர்தல் வேண்டும்.         236

உரை:- ஐயனே-தண்டத்தலைவனே, காட்டம் தன்னை- விறகினை, பல பின்னம் செய்திட்ட அன்று-பல சிறு துண்டுகளாகச் செய்து கண்டபோது, வெய்எரி-அதனைக் கடையப் பிறக்கும் வெய்ய நெருப்பினை, கண்டது உண்டோ-அவ் விறகின் கண் எவரேனும் பார்த்ததுண்டோ, விறகொடு விறகையூன்ற-அவ்விறகை வேறொரு விறகு கொண்டு கடைந்த வழி, அங்கி தோன்றி-நெருப்புப் பிறந்து, அதனையும் எரிக்கலுற்றது-அவ் விறகிரண்டையும் எரித்து விடுகிறது, இவ்வகை-இவ் வண்ணமே, காணலாகும்- உயிருண்மையினையும் அறியலாம். என்று நீ உணர்தல் வேண்டும்-என்று நீ அறிக என ஆகமங்கள் உரைக்கின்றன எ-று.

காட்டம், விறகு. ஈண்டுத் தீக்கடையும் விறகின்மேற்று. விறகொடு விறகைக் கூட்டிக் கடைந்தபோது அதனிடைத் தீப் பிறந்தாற்போல, உடலிடத்தே அதனின் வேறாய உயிர் தோன்றும் என்பதாம். இவ்வுயிர் அனாதியென்றும் ஒருவராற் படைக்கப் பட்டதன்று என்றும் சமண் சான்றோர் கூறுப. "வெய்யெரி" எனவே வெம்மைப் பண்பினையுடைய தீ அஃதில்லாத விறகிடத்தே காணப் படுவதால் அதனை விறகின் காரியமென்னாது, தீயின் காரணப் பொருள் நிற்றற்குச்சார்பாமென்பதும் கூறியவாறாயிற்று, சிவஞான சித்தி பரபக்கத்து நிகண்ட வாதத்துட் காணப்படும் "அந்த வாய்மொழியினால்," என்ற திருவிருத்த வுரையில், ஆசிரியர் ஞானப் பிரகாசர் "கிராஹ்ய சரீர பரிணாமப்ரமாணாதி நின்ற பஞ்சேந்திரிய மனோவாக் காய ஸ்வாசமாகியவற்றால் ஜீவியா நிற்பன சீவனாகும்" என்று உரைப்பர். வேண்டுமென்பதற்கேற்ப ஆகமங்களென்பது வருவிக்கப்பட்டது. படவே, இஃது ஆகமத்துக் கூறப்பட்ட தென்பதாம்.
-----------

    சிக்கென வாயு வேற்றித் தித்திவாய்ச் செம்மித் தூக்கிப்
    புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் னிறைசெய் தானும்
    ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளி கைக்கே
    திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.         237

உரை:- தித்திவாய்-துருத்தி யொன்றின் வாயை, செம்மி- நன்றாய் மூடி, தூக்கி-நிறுத்து நோக்கி, சிக்கென வாயு ஏற்றி-பின்பு அதன்கண் காற்றை மிக அடைத்து, புக்க அவ்வாயு நீங்கிப் போயபின்-அடைக்கப் புகுந்த காற்று நீங்கிவிட்ட பின்னர், நிறை செய்தாலும்-நிறுத்துப் பார்த்தாலும், ஒக்கும்-இருவழி நிறை யொத்திருக்கும், ஒருநிலம்- ஒரு பரந்த நிலத்தேயிருந்து, ஒருவன்--, சங்கொடு-சங்கினால்,திக்கெனத் தொனி செய்திட்டது-திகதிகவென முழக்கஞ் செய்தது, மாளிகைக்கு-ஒரு பெரு மாளிகைக்குள்ளிருந்தே கேட்க, வந்தது-வந்தடைந்தது, எவ்வழியாகும்-எவ்வாறு வந்ததாம் எ-று.

சீவனுண்மை காண்டற்குச் சண்டகருமன் கள்வனொருவனை வதை செய்யும் முன்னும் பின்னும் நிறைசெய்து பார்த்துக் காண மாட்டாமை கூறினா னாதலின், அவன் கூற்றிற்கு மறுமொழி கூறுதலுற்றாராய், தித்தியுவமம் கூறினார். தித்தி காற்றடைத்த முன்னும் அடைத்த காற்று நீங்கிய பின்னும் நிறையொத் திருப்பது சீவனுண்மை காண்டற்குச் சண்டகருமன் செய்த செயலை விளக்கி நின்றது. இனி, இவ்வுடற்குள் சீவன் புகுந்து நிலவுந் திறத்தை விளக்குவார் சங்கினோசை மாளிகைக்கண் இருப்போர் செவியிற் கேட்கப் புகுந் திறத்தால் உவமித்தார். சிக்கென என்றது, அடைக்கப்படும் காற்றின் மிகுதி குறித்த குறிப்புச் சொல்; "சிக்கயாத்த"1 என்புழிப்போல இறுகி மிகுதல் மேற்று. செம்முதல், மூடுதல், தூக்கில் வைத்து நிறுப்பதைத் தூக்குதல் என்றார். ஒக்குமே, ஏகாரம் தேற்றம். சங்கொடு, ஒடு ஆனுருபின் பொருட்டு. மாளிகைக்கு, உருபு மயக்கம். திகதிகவென என்பது திக்கென என வந்தது.
    ----------------
    1. சீவக. 16


    இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
    வெய்ய தீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
    மையலுற் றழுங்கி* நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வ†
    தையமில் காட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.         238
    ---------------------
    (பாடம்) *றழுந்தி. † செல்வ.

உரை:- சீவன் இயல்புதான் இவ்வகையாகும்-சீவனது தன்மையும் இத்திறமாகும், இயல்பு வேறாம்-இச் சீவனது இயல்பு வேறாதலால் உண்டாவனவாகிய, வெய்ய தீவினைகளால்-கொடிய தீவினைக் கூட்டத்தால், வெருவுறு துயரின் மூழ்கி- அச்சந் தருகின்ற துன்பத்தில் அழுந்தி, மையல் உற்று அழுங்கி-மன மயக்கத்தால் வருந்தி, நான்கு கதிகளுள் கெழுமிச் செல்வது-நால்வகைப் பிறப்புக்களிலும் பிறந் திறந்து பிறந்துழல்வது, ஐயமில் காட்சி ஞானத்து ஒழுக்கத்தோர்-நற்காட்சி, நன் ஞானம், நல்லொழுக்க மென்ற மூன்றையுமுடைய சான்றோர், அறிவதாகும்-தெளியவறியும் செய்தியாகும் எ-று.

பரந்த நிலவெளியில் பிறந்த சங்கோசை மாளிகையின்கண்ணுள்ள சுவர், கதவு முதலியவற்றைக் கடந்து அதனுள்ளே இனிது சென்றடைவதுபோலச் சீவனும் ஞானவரணாதி கன்மத் தடைகளைக் கடந்து வீட்டினை யினிதடையும் என்றற்கு, "இவ்வகையாகும் சீவன் இயல்புதான்" என்றார். இவ்வாறு செல்லும் சீவன்களைச் சுபாவ ஞானக் காட்சிகளைப் பெற்ற சீவன்கள் என்ப. இவ்வியல்பு வேறுபட்டவழி, உலக வாழ்விற் சென்று உழலுமாற்றால் பிறப்பிறப்புக்கட் கேதுவாகிய வினைகளைச் செய்து கோடலின் "இயல்பு வேறாம் வெய்யதீ வினைகளாலேவெருவுறு துயரின் மூழ்கி" என்றார். வேறாம் என்புழி, காரணப்பொருட்டாய பெயரெஞ்சு கிளவி ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டு நின்றது. இந்தச் சீவன்களைச் சம்சாரசீவன் என்ப. உலகவாழ்வு, வீட்டு வாழ்வின் மாறுபட்டதாகலின் மாற்றெனப்படும்,"மாற்றினின்றது வையக மூன்றினும், ஆற்றவும் பரியட்டமோ ரைந்தினால், தோற்றம் வீதல் தொடர்ந்திடையில் வினைக், காற்றினாற் கதிநான்கிற் சுழலுமே"1 என்று பிறரும் கூறுதல் காண்க. நாற்கதியுலும் பற்பல யாக்கையினை யெடுத்து வினைகள் பயக்கும் துன்பத்தால் அறிவு மயங்குதலின் "மையலுற்றழுங்கி" என்றார். நான்கு கதிகளுள் என்புழி முற்றும்மை விகாரத்தால் தொக்கது.

ஐயமில் காட்சியெனவே, நற்காட்சியாதல் பெற்றாம். இம்மூன்றுமுடைமை உயர்ந்த வொழுக்கமாகும். "நன்றாய காட்சியுடனாய ஞானந்தன்னோ, டொன்றாகி யுள்ளத் தொழியாமை ஒழுக்க மென்ப"2 என்று சான்றோர் கூறுதல் காண்க. அறிவது எனவே, அறிந்து தீவினைக்கஞ்சி உயிர்கட்குத் தீங்கு செய்தல் முதலிய தீவினையாவும் துறந்து ஒழுகுவது பெற்றாம்.
    ---------------
    1. மேருமந். 71. 2. நீலகே. 124.

சண்ட கருமன் கூறல்

    ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
    ஏகசித் தத்த ராய விறைவர்கட் கெளிது போலும்
    போகசித் தத்தோ டொன்றிப் பொழிவழிப் படரு நீரார்க்
    காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள என்றான்.         239

உரை:- ஆகமத்து அடிகள்-அருக பருமன் அருளிய பரமாகமத்தின் மெய்ப்பொருளை யுணர்ந்த அடிகளே, அது- நற்காட்சி முதலிய மூன்றும் கொண்டு ஒழுகுவது, எங்கட்கு- எளியவர்களாகிய எங்களுக்கு, பெரிது அரிது-மிகவும் அரிய செயலாகும். ஏக சித்தத்தராய இறைவர்கட்கு-எல்லாப் பொருளையும் ஒருங்குணரும் ஞானவான்களான தங்கள் போலும் முனிவர்கட்கு, பெரிது எளிது-மிகவும் எளிதாகும், போக சித்தத்தோடு-உலக போகந்துய்க்கும் விருப்புற்ற- மனத்துடன், ஒன்றி-அதன்கண் ஊன்றிநின்று, பொறி வழிப் படரும் நீரார்க்கு-ஐம்பொறிகளின் வழியாக ஓடியுழலும் இயல்புடைய எங்கட்கு, ஆகும்-இயைந்த, உறுதிக்கு ஏது-உறுதிப்பொருளை யடைதற்கு ஏதுவாகியவற்றை, தெருள அருளுக-விளங்க உரைத்தருள்வீராக, என்றான்- என்று சண்டமருகன் வேண்டினான்.

ஆகமத்தை முனிவர்க்கு உடைமையாக வுரைக்கும் இயைபு பற்றி "ஆகமத்தடிகள்" என்றான்; "மெய்யுரை முனைவர்தம் ஆகமம்"1 என்று பிறரும் கூறுப. அடிகள், அண்மை விளி. நற் காட்சி முதலிய மூன்றையும் "திரியோகமருந்து" என்றும், "இரத்தினத்திரயம்" என்றும் ஒருமை வாய்பாட்டாற் கூறும் மரபு பற்றி "அது" என்றார். பெரிதரிது என்பது ஆகாததொன் றென்பதுபட நின்றது. தானும் பிறிதுமாகிய பொருள் குணம் தோற்றங்களை ஒருங்கே தெளிய வுணரும் கேவல ஞானமுடையோ என்றற்கு, "ஏக சித்தத்தராய இறைவர்கட்கு" என்றான். ஏனை முனைவர்களையும் உளப்படுத்தி யுரைக்கும் முன்னிலைப்புறம். போக சித்தம், போகத்தின்கண் மூழ்கி அதனையே நச்சிநிற்கும் மனம் ஏக சித்தத்தரைப் போலப் போகசித்தத்தாரும் உண்மை நெறியுணர்ந்து கடைத்தேறுதற்கு வேண்டும் எளிய நெறியொன்று அருளல் வேண்டுமென்பான் "உறுதிக்கு ஏது அருளுக தெருள" வென்றான்.
    ---------
    1. நீல. 119.

நன்ஞானம் முதலிய மூன்றாலு மெய்தும் பயனைத் தொகுத்து அகம்பனர் பொதுவகையில் வைத்துரைத்தல்

    அற்றமி லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
    பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு நீரார்க்
    குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
    முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமை யென்றான்.         240

உரை:- அற்றம் இன் அறிவு-குற்றமில்லாத நன் ஞானமும், காட்சி-நற் காட்சியும், அருந்தகை ஒழுக்கம் மூன்றும்- பெறுதற்கரிய தகுதியைக் கொடுக்கும் நல்லொழுக்கமும் என்ற மூன்றும், பெற்றனர்-மேற்கொண்டு, புரிந்து பேணி- மிக விரும்பி, பெருங்குணத்து ஒழுகும் நீரார்க்கு-சிரத்தை முதலிய பெருங் குணங்களுடன் ஒழுகும் இயல்புடை யோருக்கு, உம்பர் இன்பம் உற்றிடும்-மறுமைக்கண் தேவருலக வின்பம் உண்டாகும், உலகு இதற்கு-இம்மைக்கண் இவ்வுலகிற்கு, இறைமைதானும்-இறைவனாந்தன்மையும், முன்னுரைத்த பேறு முற்றவும் முறைமை வந்துறும்-முன்னே உரைத்த பேறுகள் முழுதும் முறைப்படி வந்தெய்தும், என்றான்-என்று அகம்பன முனிவன் உரைத்தான் எ-று.

அற்றமில் என்பதனைக் காட்சிக்கும் கூட்டுக. தகுதி, விழுப்பம். ஒழுக்கமுடையார்க்கு விழுப்ப மெய்துதல் தகுதியாதலின் "தகை" யென்றார்; அஃது அவ் வொழுக்கத்தானன்றி யெய்துதலரிதாகலின், அருந்தகை யென்றார். குணங்களாவன "சிரத்தை, பத்தி, அலோ பத்துவம், தயை, சத்தி, க்ஷமை, விஞ்ஞானம்" என்ப. இறைமை அரசனாந்தன்மை. "கொலையின் திண்மை"1 "தெருளுடை மனத்தின்;"2 என்று தொடங்கும் செய்யுட்களில் "குவலயத் திறைமை" முதலிய பல பேறுகளை யுரைத்தலின் "முன்னுரைத்த பேறு" என்றார். முற்றும்மை பிரித்துக் கூட்டப்பட்டது. இஃது ஆத்தனுரைத்த ஆகம முடிபென்பார் "முறைமை" யென்றார்.
    -----------------
    1. யசோ. 243. 2. யசோ. 244.

முன்னே தொகுத்துச்சொன்ன பயனை விரித்துரைத்தல்

    உறுபொருள் நிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
    அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தெளிவு காட்சி
    நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்பால்
    இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவு மென்றான்.         241

உரை: உறுபொருள் நிலைமைதன்னை-அறிதற்கமைந்த பொருள்களின் நிலைமையினை, உற்று உணர்வது-தூலசூக்குமமென்ற இருவழியும் பொருந்தி யறிவது, அறிவதாகும்-நன் ஞானமாகும், அறிபொரு ளதனின் தூய்மை-அறியப்பட்ட பொருளின் உண்மையியல்பினை, அகத்தெழு தெளிவு-ஐயம் திரிபு முதலாக மனத்தின்கண் எழும் விகற்ப மின்றித் தெளிவது, காட்சி-நற்காட்சியாகும், நறுமலர்ப் பிண்டி நாதன்-நறிய பூக்களையுடைய அசோகமரத்தின் நீழலில் வீற்றிருக்கும் அருகபரமன் அருளிய, நல்லறப் பெருமைதன்பால்-வினையைக் கெடுத்து வீடுபேற்றினைப் பயக்கும் நல்லறங்களின்பால், இறுகிய மகிழ்ச்சி-மிக்குற்ற அன்புபூண் டொழுகுவது, இதனது பிரிவும் என்றான்- இக்காட்சியின்பாற் பட்டதேயாகும் எ-று.

அவதிஞான மனப்பரியய ஞானங்களைப்போலாது, கேவல ஞானம் பொருள்களின் தூல சூக்கும நிலைமைகளை ஒப்ப அறிவதாகலின், அதனையே விதந்து "உறுபொருள் நிலைமைதன்னை யுற்றுணர் வறிவதாகும்" என்றார். "விதியிவை விகலந் தூலம் சகல நிச்சயமுமாமே"1 என்று பிறரும் கூறினர், இறைவன், ஆசிரியன் முதலாயினார் தன்மையும் ஆகமம் பொருள் என்ற இவற்றின் உண்மையினையும் ஐயந்திரிபு முதலிய குற்றமின்றித் தெளிவது சம்மியதரிசனம் என்பவாகலின், அதனை "அறிபொருளதனில் தூய்மை யகத்தெழு தெளிவு காட்சி" யென்றார். "இறைவனு முனியு நாலு மியாதுமோர் குற்றமில்லா, நெறியினைத் தெளிதல் காட்சியாம்"2 என்பது காண்க. எத்துணை இடையீடுக ளுண்டாயினும் மேற்கொண்ட நல்லறத்தின்கண் ஊன்றிய அன்புடையராய்ச் சலியாதொழுகுதல் அக்காட்சியின் பயனென்றற்கு "நல்லறப்பெருமை தன்பால் இறுகிய மகிழ்ச்சி" என்றார். கண்டாய், முன்னிலையசை. தெளிந்த காட்சியின் பயன் அறத்தின்கண் மிக்க காதலுண்டாதலாதலின், அக்காதலை. "இதனது பிரிவு" என்றார். உம்மை, ஆக்கப்பொருட்டு.
    -----------
    1. மேருமந். 1320. 2. மேரு. 355.

நல்லொழுக்கத்தின் இயல்பு கூறல்

    பெருகிய கொலையும் பொய்யுங் களவொடு பிறன்ம னைக்கண்
    தெரிவிலாச் செலவு சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
    மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
    ஒருவின புலைசு தேன்கள் ஒருவுத லொழுக்க மென்றான்.         242
    --------
    (பாடம்) * துனிவிலன்; தொல்லை.

உரை:- பெருகிய கொலையும்-மிக்க பாவமாகிய உயிர்க் கொலையும், பொய்யும்-பொய்யுரைத்தலும், களவொடு- பிறர் பொருளை அவர் அறியாமல் களவாடுதலும், பிறன் மனைக்கண் தெரிவிலாச் செலவும்-பிறற் குரியாளை நயந்து வரும் பழிபாவத்தை ஆராய்தல் இன்றிச் சென்றொழுகுதலும், சிந்தை பொருள்வயின் திருகு பற்றும்-மனம் பொருள்மேற் சென்று இவறி நிற்கும் கடும் பற்றும், மருவிய மனத்து மீட்சி-பொருந்திய மனத்தை அவற்றினின்று மீட்டலாகிய, வதம் இவை ஐந்தோடு ஒன்றி-இவ்வணு விரதம் ஐந்தனோடு பொருந்தி, ஒருவின-ஆகாவெனச் சான்றோரால் விலக்கப்பட்ட, புலைசு-புலாலுணவும், தேன் - மதுவுண்டலும், கள்-கட்குடித்தலும் ஆகிய இவற்றை, ஒருவுதல்-நீக்கியொழுகுவது, ஒழுக்கம் என்றான் - நல்லொழுக்கம் என்று அகம்பன முனிவன் கூறினான் எ-று.

எல்லாப் பாவத்தினும் கொலைப்பாவம் மிகப் பெரிதாதலின் "பெருகிய கொலையும்" என்றான். ஒடு, எண்ணொடு. பிறனுக் குரியாள் ஒருத்தியின் பெண்ணலத்தைக் காதலித்தொழுகுதல் ஆராயுமிடத்து அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினுள் ஒன்றினையும் பயவாது இம்மைக்கட் பழியும் மறுமைக்கண் பாவமும் நரகமும் பயத்தலின், "பிறன்மனைக்கண் தெரிவில்லாச் செலவு" என்றார். பொருள்மேற்சென்ற பற்றுள்ளத்தால் தன்பாலுள்ள பொருளை நன்னெறிக்கட் செல விடாமையேயன்றிப் பிறர் பொருளையும் தீ நெறியால் வெஃகி யொழுகும் குற்றமும் அகப்பட, "சிந்தை பொருள்வயின் திருகுபற்றும்" என்றார். இவ்வகைக் குற்றத்தின் பாலும் செல்லும் உள்ளத்தை மீட்டலைப் பஞ்சாணுவிரதம் என்றும், புலைசுதேன்கள் முதலியவற்றை ஒருவுதலைநிவிர்த்தி யென்றும் கூறுப. பஞ்சாணுவதமும் புலைசு முதலிய நிவிர்த்தியும் அறம் பலவற்றிற்கும் மூலமாதலின் மூலகுணமென்றும் வழங்கும். "பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல், பொருள்வரைதல் மத்தமது புலைசுணலி னீங்கல்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. மீட்சி, மீட்டல்; "நெறிவழி யெங்குஞ் செல்லும்மீட்சி"2 என்புழிப் போல.
    ---------
    1. மேரு.356. 2.மேரு.785.

இவற்றின் பயன் கூறல்

    கொலையின தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்
    மலைதலில் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை யாக்கும்
    விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
    உலைதலில் பெருமை திட்ப முருவலி யொழிந்ந* தீயும்.         243

உரை:- கூறின் - கொலை முதலியவற்றை ஒருவுதலால் உண்டாகும் பயனைக் கூறுமிடத்து, கொலையினது இன்மை- கொல்லாமையாகிய அரம், குவலயத்து இறைமை செய்யும்- இவ்வுலகத்தில் இறைவனாந் தன்மையை நல்கும், யார்க்கும்- எத்திறத்தார்க்கும், மலைதலில் வாய்மை-மாறுபாடில்லாத மெய்மையானது, வாய்மொழி மதிப்பை ஆக்கும்- வாயாற் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் நன்மதிப்பை யுண்டு பண்ணும், களவின் மீட்சி-களவின்கண் செல்லாத மனமுடைமை, விலையில்-மதிக்க முடியாத, பேரருளின் மாட்சி விளைப்பது-மிக்க அருளுடைமையாற் பிறக்கும் மாண்பினை யுண்டுபண்ணும், உலைதலில் பெருமை- கெடாத பெருமையினையும், திட்பம் உறு - மனத்திட்பம் பொருந்திய, வலி-பேராண்மை-யினையும், ஒழிந்தது ஈயும்-ஏனைய பிறன்மனை நயவாமை கொடுக்கும் எ-று.

இறைமை, எவ்வுயிரும் கைகூப்பித் தொழத்தக்க தலைமை. கொல்லாவறமுடையோன் மறுமைக்கண் இறைவனாய் யாவரும் வணங்கும் சிறப்பெய்துவது குறித்து "கொலையினது இன்மை கூறின் குவலயத் திறைமை செய்யும்" என்றார். "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும்"1 என்று சான்றோர் கூறுவது காண்க. மனத்தோடு மாறுபாடில்லாத மெய்ம்மை யென்றற்கு "மலைதலில் வாய்மை" யென்றார். வாய்மை, யாதொன்றும் தீமையிலாதவற்றையே சொல்வதாகலின், அதனையாவரும் விரும்பியேற்றுச் செய்வன செய்து சிறப்பிப்ப ரென்பார் "வாய்மொழி மதிப்பை யாக்கும்" என்றார்; "உலகத்தார் உள்ளத்துள் எல்லா முளன்"2 என்று சான்றோர்கூறுதல் காண்க. அருளும் செல்வமாகப் போற்றப்படுதலின் "விலையில் பேரருள்" என்றார். சிறுமைக்கு மறுதலையாதல்பற்றி பெருமையை "உலைதலில் பெருமை" யென்றும், மனத்திட்பம் செய்வினையால் விளங்குதலின், செயற்கரிய செய்யும் பெருமையை யடுத்தும், கூறினார். பிறன்மனையை நோக்காமை பேராண்மை யெனப்படுதலின் "திட்ப முறுவலி" யென்றார். "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு, அறனொன்றோ ஆன்ற வொழுக்கு"3 என்ப. புறப்பகையை வேறலினும் அகப்பகையாய காமத்தை யடக்கும்திறலுடைமை விளங்க "திட்பமுறுவலி" யென்று சிறப்பித்தா ரென்றுமாம். ஏனையது "பிறன்மனைக்கண் தெரிவிலாச் செலவு" (242)
    -----------------
    1. குறள் 260 2. குறள் 294 3. குறள் 148
---------

    தெருளுடை மனத்திற் சென்ற தெளிந்துணர் வாய செல்வம்
    பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்
    ஒருவிய பயனு மற்றே* யொளியினோ டழகு வென்றி
    பொருள்மிகு குலனோ டின்பம் புணர்தலு மாகு மாதோ.         244
    ---------
    (பாடம்) *மஃதே.

உரை:- பொருள்வயின் இறுக்கம் இன்மை-பொருட் செல்வத்தின்பால் இவறுதல் இல்லாமை, தெருளுடை மனத்தின் சென்ற-தெருண்ட மனத்தாற்கொண்ட, தெளிந்த உணர்வாய செல்வம் புணர்ந்திடம்-தெளி்த உணர்ச்சியாகிய செல்வத்தைத் தரும். புலைசு-புலாலுண்டலையும், தேன்கள்-தேனையும் கள்ளையும், ஒருவிய பயனும் அற்றே- நீங்குதலாலுண்டாகும் பயனும் அவ்வண்ணமே, ஒளியினோடு -புகழுடன்,அழகு-வனப்பையும், வென்றி- வெற்றியையும், மிகுபொருள்-மிக்கபொருளையும், மிகு குலனொடு-குடிச்சிறப்புடன், இன்பம் புணர்தலும்-இன்ப நுகர்ச்சியையும், ஆகும்-தரும் எ-று;

மனத்தில் தெருளுடைமையாற் பிறக்கும் பயன் தெளிந்த உணர்வாதல் தோன்றத் "தெருளுடை மனத்திற் சென்ற தெளிந் துணர்வு" என்றார். தெளிந்த உணர்வு, தெளிந்துணர்வென நின்றது. உணர்வு கேடில் விழுச்செல்வமாதல் பற்றி "தெளிந் துணர்வாய செல்வம்" என்றாரென்க. "இறுகிய பற்று இறுக்கமாயிற்று; அஃதாவது கடும்பற்றுள்ளம் காரணமாகப் பிறக்கும் இவறன்மை. உலோபமின்மை அறத்தாற்றிற் பொருளைச் செலுத்தி நல்லுணர்வு முதலிய நலங்களைப் பயக்கும் துணிவுபற்றி இறுக்கமின்மை செல்வம் புணர்த்திடும் என்றார். அணுவிரதம் போலப் புலாலுணவு தேன் கள் முதலியனவும் நற்பயனையே எய்துவிக்கு மென்பார் "அற்றே" யென்றும், "ஒளியினோடழகு வென்றி, பொருள்மிகு குலனோடின்பம் புணர்தலும்" என்றும் கூறினார். மிகுதலைப் பொருட்கு மேற்றுக. மாறு, ஓ, அசை.
---------
சண்டகருமன் கூறல்

    சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
    உலைதலின் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்க என்னக்
    கொலையினி லொருவ லின்றிக் கொண்டனென் அருளிற் றெல்லாம்
    அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிக வென்றான்.         245

உரை:- சிலைபயில் வயிரத் தோளாய்-வில்லேந்திய வலிய தோள்களை யுடைய சண்டகருமனே, செப்பிய பொருள் இது எல்லாம்-இதுகாறும் சொல்லிய பொருள்க ளெல்லாவற்றையும், உலைதலில் மகிழ்வொடு-கெடாத வூக்கத்துடன், உள்ளத்து உணர்ந்தனை கொள்க-மனத்தே உணர்ந்து கைக்கொள்வாயாக, என்ன-என்று அகம்பனன் சொல்லவே, அடிகள் -அடிகளே, அருளிற்றெல்லாம் - தாங்கள் உரைத்ததெல்லாவற்றையும், கொலையினில் ஒருவல் இன்றி - கொலைத்தொழிலை விடுவதையின்றி, கொண்டனென் - ஏனைக் குற்றங்களைக் கைவிடுதலை மேற் கொண்டேன், அலைசெய்வது ஒழியின் - உயிர்களைக் கொல்லும் கொலைத்தொழிலைக் கைவிடுவேனாயின், வாழ்க்கை யழியும்- அடியேனது வாழ்க்கை முற்றும் கெட்டழியும், என்றான் - என்று சண்டகருமன் சொன்னான் எ - று.

அணுவிரத மைந்தும் புலாலுணவு முதலிய நிவிர்த்தியும் மூல குணமென ஒன்றாயடங்குதலின், " செப்பிய பொருள் இது" என்றார். எல்லாம் என்றது, அதன் உட்பகுதி யனைத்தும் எஞ்சாமல் தழுவி நின்றது. இனி, ஒருமை பன்மை மயக்கமென்றுமாம். "அருளிற்றெல்லாம்" என்புழியும் ஈதொக்கும். மகிழ்வு, காரணமாகிய ஊக்கத்தின்மேல் நின்றது. ஊக்கத்துடன் இப்பொருள்களை ஆய்ந் துணர்வதன் பயன் அகத்துட் கோடலாதலின், உள்ளத்து உணர்ந் தனை கொள்க" என்றார். அணுவிரத மைந்தனுள் கொல்லாமை யொன்றொழிய ஏனை நான்கையும் விடுவதாகக் கூறிய சண்டகருமன் கொலையை விடாமைக்கு ஏது இஃதென்பான், " அலைசெய்வதொழியின் வாழ்க்கை யழியும்" என்றான். மற்று, அசைநிலை.
----------
அகம்பனர் கூறல்

    என்றடி பணிந்து சண்ட விசைத்தது கடவுள் கேட்டு
    நன்றினித் தெளிந்தா யல்லை நவிலிசை யமுத நல்யாழ்
    ஒன்றிய செவிடு மூமும் ஒருவனாற் பெறுத லுண்டோ
    இன்றுநீ யுரைத்த தற்றே யியம்புவ துளது கேண்மோ.         246

உரை:-- என்று - என்பதாக, சண்டன் - சண்டகருமன், அடிபணிந்து இசைத்தது - முனிவன் அடிகளை வணங்கிச் சொன்னதை, கடவுள் கேட்டு - அவ்வகம்பன் முனிவன் கேட்டு, இனி - இப்போது, நன்று தெளிந்தாயல்லை - நல்லறதத்தைத் தெரிந்து கொண்டாயில்லை, செவிடும் ஊமும் ஒன்றிய ஒருவனால் - செவிடும் ஊமையுமாகிய இருதன்மையும் ஒருங்கு பொருந்திய ஒருவனாலே, நல்யாழ் நவில் இசையமுதம் - நல்ல யாழிடத்தே பிறக்கும் இசையாகிய அமுதத்தை, பெறுதல் உண்டோ - நுகர்தல் முடியாதாம். இன்று - இப்போது, நீ உரைத்தது அற்று - நீ சொன்ன‌தும் அத்தன்மைத்தாதலின், இயம்புவது உளது - நீ அறிய‌ உரைக்கத் தகுவதொன்று உண்டு, கேண்மோ - கேட்பாயாக எ-று.

கடவுள், முனிவன். கொல்லாவிரதம் தலையாய அறமாதலின் அதனை தெளியாதுரைத்த சண்டகருமனுக்கு, "நல்லது தெளிந்தா யல்லை" என்றான். நீரின் வருதல், நீரின் நின்றிளகல், வாட்புண்ணுறுதல், உருமேறுண்டல் முதலிய குற்றமில்லாத யாழ் என்றற்கு "நல்யாழ்" என்றும், தன்பாற் பிறக்கும் இசை அமுதம்போல் இன்பஞ்செய்தலின், "நவிலிசையமுதம்" என்றும், கூர்த்த செவியறிவும், இனித்த மிடற்றோசையு மொருங்குடையார்க்கே இசை இன்பம் செய்தலின், இரண்டுமில்லா ரென்றற்கு, "ஒன்றிய‌ செவிடு மூமும் ஒருவனால் பெறுதலுண்டோ" என்றும் கூறினான். அருளினமையும் மட‌மையு மொருங்குடைய நினக்கு யாமுரைத்த‌ நல்லற வமிர்தம் செல்லாதாயிற் றென்றா னாயிற்று. ஆயினும் அச் சண்டகருமனைத் தெருட்டுவதே கருத்தாதலின், "இயம்புவதுளது கேண்மோ" என்றான்.
---------

    ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகு கண்ணால்
    ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந் துய்ய நிற்றல்
    வாரியின் வதங்கட் கெல்லா மரசநல் வதம‌ தற்கே
    சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.         247

உரை :- ஆர் உயிர் வருத்தம் கண்டால் - நிறைந்த உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் காணின், அருள் பெரிது ஒழுகு கண்ணால் - அருள் மிகப்பெருகும் கண்களோடு, ஓர் உயிர் போல - அதனுயிரைத் தன்னுயிரேபோலக் கருதி, நெஞ் சத்து நைந்து உருகி- மனம் கரைந்து உருகி, உய்ய நிற்றல் - அது தன் வருத்தத்தின் நீங்கி உய்யுமாறு உதவி செய்து நிற்பது, வாரியின் வதங்கட்கெல்லாம் - அறப்பயனுக்கு வருவாயாக‌வுள்ள விரதங்கள் எல்லாவற்றிற்கும், அரச நல் வதம் - நல்ல தலையாய விரதமாம், அதற்கு - அவ்விரதத்துக்கு, தகவும் - செப்பமுடைமையினையும், அத்தயவும் - அதன் பயனாகிய அருளையும், சார்துணை யாகக் கொள்க - பொருந்திய துணையாகக் கொள்வாயாக எ-று.

ஆருயிர், பெறுதற்கரிய உயிர் என்றுமாம். உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டால், அவற்றின்பால் மனமிரங்கி வேண்டும் உதவியினைப் புரிந்து அத்துன்பத்தினின்றும் அவற்றை உய்வித்தலே கொலைவினையை ஒருவுதற்குரிய எளிய நெறியென்பார் "நெஞ்சத் துருகி நைந்துய்ய நிற்றல்" என்றார். இரக்கமுளதாதற்கு வாயில் இது வென்றற்கு "ஓருயிர்போல" நெஞ்சில் கருதுக என்றார். வாரி, வருவாய். "புயலென்னும் வாரி"1 என்புழிப்போல. தலையாய விரதமென்றற்கு "அரசநல்வதம்" என்றார். அணுவிரதம் குணவிரதம் சிட்சாவிரதம் எனப் பலவுண்மையின், "வதங்கட் கெல்லாம்" என்றார். தகுதியை வலியுறுத்தினார். தமக்குண்டாகும் துன்பத்துக்கு ஏது தம்வினையே யன்றிப் பிற உயிர்களல்ல என்பதை யுணர்ந்து நடுநிலை வழுவாது நலம் செய்தற்கு. அந்நலம் செய்தற்கு இரக்கம் நெறியாதலின் "தயவும்" சார்துணையாகக் கொள்க" என்றார். தகவும் தயவும் துணையாகக்கொண்டு உயிர்கட்கு அருளைச் செய்க என விதித்தவாறு.
    ------------
    1 குறள் 14
--------

    இறந்தநா ளென்னு* முள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
    கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
    பிறந்துநீ பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
    சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுணரி னுண்டோ.†         248
    -------
    (பாடம்) *ளென்று † றுளது முண்டோ.

உரை:- இறந்த நாள்-இறந்த காலத்தில், உள்ளத்து- நின் மனத்தின்கண், என்னும் இரங்குதலின்றி-சிறிதும் இரக்கமுறாது,வெய்தாய்-அச்சத்தைச்செய்து, உயிர் கறந்து உண்டு-உயிரை வருத்திக்கொன்று, கன்றி-அக் கொலை வினையில் அடிப்பட்டுநின்று, கருவினை பெருகச் செய்தாய்-தீவினையை மிகுதியாகச் செய்தாய், நீ பிறந்து- நீ பல பிறப்பும் பிறந்து, பிறவி தோறும்-அப்பிறப்புக்கள் தோறும், பெருநவை உறுவதெல்லாம்-மிக்க துன்ப மெய்துவதெல்லாம், சிறந்த நல் அறத்தின் அன்றி-சிறந்த அறங்களாலன்றி, உணரின்-ஆராயுமிடத்து, தீருமாறு உண்டோ-நீங்கும் வாயில் வேறுளதோ இல்லையன்றோ எ-று.

மீட்டற்கருமை குறித்து, "இறந்தநாள்" என்றார்; "இறந்த‌ நாள் யாவர் மீட்பார் இற்றெனப் பெயர்க்கலாமோ"1 என்று தேவரும் கூறினர். என்னும், சிறிதும். வெய்து, அச்சம். ஆக்கம் செய்தன்மேனின்றது. எளிதில் கவரலாகாமை தோன்ற, "கறந்துயிருண்டு" என்றார்; "கறந்து கூற்றுண்ணும் ஞான்று"2 என்று பிறரும் கூறுதல் காண்க. க‌ரந்தென்பது எதுகை நோக்கிக் கறந்தென நின்றதென்றலு மொன்று. கருவினை யென்புழிக் கருமை கொடுமை மேற்று. கருவைப் பிறப்பாக்கி, அதற் கேதுவாகிய வினை யென்றுமாம். "இருளுடை ந‌ரகத் துய்க்கும் இருவினை" யென்றும், "இருள் சேர் இருவினை" யென்றும் சான்றோர் வழங்குவது பற்றிக் கருவினை யென்றா ரென்றலு மொன்று. அறவினை துன்பம் கெடுத்து இன்பம் நுகர்வித்தலின், "சிறந்த ந‌ல்லறத்தி னன்றித் தீருமா றுணரி னுண்டோ" என்றார்; "திருந்திய நல்லறச் செம் பொற் கற்பகம், பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால், வருந்தினும் அறத்தினை மறத்த லோம்புமின்"3 என்று தேவரும் கூறினர்.
    ---------
    1. சீவக.2625. 2.சீவக.2625. 3.சீவக.2944.
----------

    நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ லென்றிக்
    கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
    சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
    அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.         249

உரை:-நிலையிலா உடம்பின் வாழ்க்கை- நிலையில்லாத‌ உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையை, நெடிதுடன் நிறுவல்- நெடிதிருக்குமாறு செய்வேன், என்று - என்று நினைத்து, இக்கொலையினால் முயன்று - சான்றோரால் வெறுக்கப்பட்ட இவ்வுயிர்க் கொலையினைச் செய்து, வாழும் கொற்றவரேனும்- வாழ்கின்ற வெற்றி வேந்தர் யாவராயினும், இவண் - இந்நிலவுலகத்தே, சிலபகல் நின்றார் அன்றி- சில‌ நாட்கள் வாழ்ந்தனரே யன்றி, சிலர் முற்ற இல்லை - பல‌ நாட்கள் வாழ்ந்தவர் பல‌ரிலராயினும் ஒருசிலர் தாமும் கருத்துமுற்ற உளரானார் இல்லை, அலைதரு பிறவி முந்நீர் - வருத்துகின்ற பிறவியாகிய கடலில், அனந்தம் காலம்.- நெடுங்காலம், அழுந்துவர் - கரையேற மாட்டாது மூழ்கி வருந்துவர் எ-று.

நிலையாமையே இயல்பாகவுடைய உடம்பை நிலைபெறச்செய்து கொள்ளக் கருதுதல் பேதைமையென்பார் "நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுடன் நிறுவல்" என்றும், ஊனுணவால் உடம்பை உரம் மிகுவிப்பின் நெடிது வாழலாம் என்ற கருத்தால் கொலை வினையைச் செய்து வாழ்கின்றாரென்றற்கு "கொலையினால் முயன்று வாழும் கொற்றவர்" எ்றும் கூறினார். உயிர்க்கொலையே தமக்குக் கொற்றமாகக் கருதுவ ரென்றற்குக் "கொற்றவர்" என்றார். நெடிது வாழவேண்டி முயன்றவர் தம் முயற்சி முற்றாமையின் ஒருசில நாட்களேனும் நெடிது இருந்தார் இல்லை யென்பது விளங்க "சில பகலன்றி நின்றார் சிலரிவண் இல்லை" என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்டாய், முன்னிலையசை. பிறப்பிறப்புக்களால் டையறாது துன்புறுதலின், "அலைதரு பிறவி முந்நீர்" என்றும், முந்நீர் என்றதற் கேற்ப, "அழுந்துவர்" என்றும் கூறினார். ந+அந்தம் அநந்தம்; அனந்தமென வந்தது; முடிவில்லாமை என்பது பொருள். நெடுங்காலம் பிறவிக்கடலைக் கடந்து கரையேற மாட்டாது மூழ்குவ ரென்பதாம்.
-----------

    இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய
    மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்
    கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்
    பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.         250

உரை:- ஐய-ஐயனே, இன்னும் ஈது கேட்க-மேலும் இதனைக் கேட்பாயாக, யசோமதி தந்தையாய மன்னவன்- வேந்தனான யசோமதிக்குத் தந்தையாகிய யசோதர மன்னவன், அன்னையோடு-தன் அன்னையாகிய சந்திரமதியுடன் சென்று, மாவின் நல்கோழிதன்னை-மாவால் செய்யப்பட்ட கோழி யொன்றை, கொன்நவில் வாளில் கொன்ற-உயிர்கட்கு அச்சத்தைத் தருகின்ற வாளினால் கொன்றதனாலுண்டாகிய, கொடுமையின் கடிய துன்பம்-கொடுமை பொருந்திய மிக்க துன்பம், பின்-தாம் இறந்த பின்னர், அவர் பிறவி தோறும் பெற்றன-அவர் எடுத்த பிறப்புக்கள் தோறும் அடைந்தவற்றை, பேசல் ஆமோ-சொல்ல முடியுமோ முடியாது எ-று.

துன்பம் பெற்றன பேசலாமோ என இயையும். யசோதரனாகிய மன்னவ னென்னாது "யசோமதிக்குத் தந்தையாய மன்னவன்" என்றார், இப்போது சண்டகருமனுக்கு அரசனாக இருப்பவன் அவ் யசோமதி யாதலின். "அன்னையோடு" என்றது, அவ் யசோரத ரற்குத் தாயாகிய சந்திரமதியே மாக்கோழியைக் கொன்ற கொலை வினைக்கு ஏவும் வினைமுதலுமாதல் பற்றி, மாவால் செய்யப்பட்ட தாயினும், உயிருடையது போலத் தோன்றும் தொழில் நலமுடைமை தோன்ற, "மாவின் நல் கோழி" என்றார். கொன்ற, காரணப் பொருட்டாய பெயரெச்சம். இன், அல்வழிக்கண் வந்தது. கடி, மிகுதி. ஓகாரம், எதிர்மறை. பேசின், அது கூறியது கூறலாய் வேறுபயனொன்றும் விளைவியாமையின், "பேசலாமோ" என்றார்.
----------

    வீங்கிய வினைகள் தம்மால் வெருவரத் தக்க துன்பம்
    தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
    ஆங்கவர் தாங்கள் கண்டா யருவினை துரப்ப வந்தார்
    ஈங்குநின் னயல கூட்டி லிருந்தகோ ழிகளா யென்றான்.         251

உரை:-- வீங்கிய வினைகள் தம்மால் -மிக்குற்ற வினைகளால், வெருவரத்தக்க துன்பம் - அஞ்சத்தக்க துன்பங்களை, தாங்கினர் - தாங்கி, பிறந்து இறந்து தளர்ந்தனர் - பிறந்தும் இறந்தும் மிகத்தளர்ந்து, விலங்கின் செல்வார் - விலங்குகதியுள் அவ்யசோதரனும் சந்திரமதியும் பிறந்துழல்வாராக, ஆங்கு - அவ் விடத்தும், அவர்தாங்கள் - அவர்கள், இருவினை துரப்ப -போக்குதற்கரிய வினைகள் செலுத்த, ஈங்கு- இவ்விடத்தே, நின் அயல - நின் பக்கத்தேயுள்ள, கூட்டில் இருந்த - கூட்டில் இடப்பட்டு வளர்க்கப் படுகின்ற, கோழிகளாய் வந்தார் - கோழியாய்ப் பிறந்து வந்துள்ளார்கள் எ - று.

கண்டாய், முன்னிலையசை. பலவாய்ப் பெருகிய பெருக்கம் தோன்ற, "வீங்கிய வினைகள்" என்றார். வெறுக்கப்படுவதோடு எவ்வுயிராலும் அஞ்சப்படுவதுபற்றி, துன்பத்தை, "வெருவரத்தக்க துன்பம்" என்றார். பிறப்பிறப்புக்களால் உயிர்கள் இளைத்து மெலிதல் இயல்பாதலின், "பிறந்திறந்து தளர்ந்தனர்" என்றார். "எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்று மாணிக்கவாசகப் பெருமானும் கூறியிருத்தலைக் காண்க. விலங்குகதியுட் பிறந்திறந்து துன்புற்ற அவர்களே இங்கேயுள்ள கோழிகளாய்ப் பிறந்துள்ளார்கள் என்றதற்கு, " ஈங்கு நின்னயல கூட்டில் இருந்த கோழிகளாய் வந்தார்" என்றும், அப்பிறப்பின்கண்ணும் அவர்கள் ஈட்டிய வினைகள் அவனை விட்டில என்பார், "அருவினை துரப்ப வந்தார்" என்றும் கூறினார்.
---------

    உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
    மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
    உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
    செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.         252

உரை:- அவண் உயிர் இல்லை யேனும்- மாவாற் செய்த‌ கோழியிடத்தே உயிர் இல்லையாயினும், உயிர்க்கொலை நினைப்பினால் - உயிரொன்றைக் கொல்லுவதாகக் கருதிச் செய்த தீ நினைவால், இம்மயரிகள் - இம்மயக்கமுடைய‌ வுயிர்கள், பிறவிதோறும் வருந்திய வருத்தம்- எடுத்த‌ பிறப்புக்கள்தோறும் எய்திய துன்பத்தை, கண்டால் - ஆராயுமிடத்து, உயிரினில் - உயிர்களிடத்தே, அருள் ஒன்று இன்றி- இரக்கம் சிறிதுமில்லாமல், உவந்தனர் கொன்று தின்றார் - விருப்பத்துடன் கொன்று வாழ்ந்தவர், செல் இடம் - இற‌ந்தால் புகுமிடம், செயிர்தரு நரகின் அல்லால் இல்லை - துன்பந் தரும் நரகமல்லது வேறில்லை, என்றான் - என்று முனிவன் கூறினான். எ-று.

"மாவின் நல்கோழி" 1 யின்பால் கோழியின் வடிவ‌ முண்டேயன்றி உயிரில்லை யாதலின், அதனை வாளால் கொன்ற‌ வழிக் கொலைவினை யில்லை யென வெழும் ஐயக் கூற்றினை மறுத்தலின், "உயிரவண் இல்லையேனும்" என மேற்கொண்டு, உயிரில்ல‌தாயினும் உயிருடையதெனக் கருதிக் கொலைசெய்தலின் கொலையே யென்பார், கொலைப்பயன்மேல் வைத்து, "உயிர்க்கொலை நினைப்பினால் இம்மயரிகள் பிறவிதோறும் வருந்திய வருத்தம் கண்டால்" என்றார். ஒன்று, சிறிதென்னும் பொருள்பட நின்றது. கொலைப் பாவம் செய்தவர்க்கு மறுமைக்கண் நரகமே புகலிடம் என்று வற் புறுத்தவே, "செயிர்தருநரகின் அல்லால் செல்லிடமில்லை" என்றார். நர‌கின், இன் அல்வழிக்கண் வந்தது.
    -----------------
    1.யசோ. 250

சண்டகருமன் கூறல்

    மற்றவன் இனைய கூற மனநனி கலங்கி வாடிச்
    செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தெளிவு காதல்
    பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு
    பெற்றன னடிகள் நும்பாற்* பெரும்பய னென்று போந்தான்.         253

உரை:- அவன் இனைய கூற-அகம்பனன் இவ்வாறு கூற, மனம் நனி கலங்கி வாடி-சண்டகருமன் மன அமைதி மிகக்குலைந்து வாட்ட மெய்தி, செற்றமும் சினமும் நீக்கி-தன் மனத்தின்கண் குடிகொண்டிருந்த பகைமையும் வெகுளியும் போக்கி, திரு அறத்தெளிவு காதல் பற்றினன்- சைன தருமத்தின் தெளிந்த நிலையின்கண் அன்புகொண்டு, முன்னம் பகர்ந்தன-முன்னே கூறப்பட்டனவாகிய, வதங்கள் அனைத்தும் கொண்டு-விரத மெல்லாவற்றையும் விடாது மேற்கொண்டு, அடிகள்-அடிகளே, நும்பால்- தேவரிடத்தே, பெரும் பயன் பெற்றனன்-பெரிதாகிய ஞானப்பயனைப் பெற்றேன், என்று-என்று சொல்லி வணங்கி விடைபெற்றுக்கொண்டு, போந்தான்-தான் முன்னிருந்த இடத்திற்கு வரலானான் எ-று

எண்ணிறந்த உயிர்களைக்கொன்று வாழ்பவனாதலின்,சண்ட கருமன், கொலைப்பாவப்பயனை அகம்பனன் கூற்க்கேட்டலும் பேரச்சமெய்தி வருந்தத் தொடங்கினானென்பார் "மனம் நனி கலங்கிவாடி" என்றார்.மனத்தினது கலக்கம் மெய் வாட்டத் தாற் புலனாதலின், "வாடி" யென்றார். சினத்தின் காரியமாய்த் தீவினை நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்கும் மனநிலை செற்றமாகும். சினமில்வழிச் செற்றம் நிகழாமையின், "செற்றமும் சினமும்" இணைத்துக் கூறினார். வதங்கனை முன்ப "பெருகிய கொலையும்" (242) என்று தொடங்கும் செய்யுள் முதலாயவற்றுள் கூறினாராதலின், "முன்னம் பகர்ந்தான்" என்றார். பிறவாநெறியருளும் பேரறப்பொருளை மேற்கொண்ட மகிழ்ச்சியாற் கூறுவது தோன்ற "பெற்றன னடிக ணும்பாற் பெரும்பயன்" என்று கூறினான்.

கோழிகள் தம்முள் நினைத்தல்

    கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிகள் தம்மைக்
    கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
    டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட
    பாட்டருந் தன்மைத் தன்றே பான்மையிற் பரிசு தானும்         254
    -----------------
    (பாடம்) *நும்மால்

உரை:- அடிகள்வாயில் கெழுமிய மொழிகள் தம்மை- அகம்பனமுனிவர் தமது வாயாற் சொல்லிய சொற்களை. கூட்டினுள் இருந்த-சண்டகருமன் அமைத்திருந்த கூட்டுக்குள் இருந்த, அக் கோழிகள்-அக்கோழிகள் இரண்டும், கேட்டலும்-கேட்டவுடனே, பிறப்பு உணர்ந்திட்டு-தம்முடைய பிறப்பு வரலாற்றை நினைந்தறிந்து, ஓட்டிய சினத்தவாகி-தன்மனத்தின்கட் கொண்டிருந்த சின முதலிய குற்றங்களை அறக்கடிந்து, உறுவதம்-மிக்கனவாகிய பஞ்சாணுவிரதம் முதலியவற்றை, கொண்டு உய்ந்த- விடாதுமேற்கொண்டு பிறவிக்கேதுவாய நெறியினின்றும் நீங்கி உய்திபெற்றன, பான்மையின் பரிசுதானும்-ஊழ் வினையின் தன்மையும், பாடு அரும் தன்மைத்து-பாடுதற்கு அரிய தன்மையினையுடைத்து எ-று

கோழிகள் மொழிகள் தம்மைக்கேட்டலும் பிறப்புணர்ந்திட்டு சினத்தவாகி, கொண்டுய்ந்த எனக்கூட்டி முடிக்க. உய்ந்து கொண்ட என்பதேகெ கொண்டுய்ந்த என்ப்பிரித்துக் கூட்டுக. உய்ந்தன எனற்பாலது உய்ந்த என நின்றது. ஒட்டிய சினத்தவாகி என்றது "சென்று சேர்கல்லாப்புள்ள வியன்குளம்" என்பதுபோல நின்றது. அணுவிரதம் பிறவியற முயல்வார்க்கு இன்றியமையாதன வாதலின் "உறுவதம்" என்றார். திருவறம் கேட்கும் இயைபு சிறிதுமின்றிக் கூட்டினுட்கிடந்து, அவ்வறமறியான்பால் வளர்ந்த கோழிகட்கும் அதனைக்கேட்டற் கமைந்த வாய்ப்பினை ஊழ்வினை கூட்டியதுகண்டு வியந்து கூறலின், "பாட்டருந் தன்மைத்தன்றே பான்மையிற் பரிசுதானும்" என்றார். அன்றே என்புழி ஏகாரம் எதிர்மறை யாதலின், ஆம் என்னும் உடன்பாட்டுப் பொருண்மை தோன்ற நிற்பதாயிற்று. தான், கட்டுரைச்சுவை குறித்து நின்றது. உம்மை, சிறப்பு.
----------

    பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்
    மறவியின் மயங்கி மாற்றின் மறுகின மருகு சென்றே
    அறவிறை யடிகள் தம்மா லறவுமிர் தாரப் பெற்றேம்
    பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்றவாறே.         255

உரை:- பெயர்ந்தன பிறவிகள் அனைத்தும்-கழிந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும், நெஞ்சில் நினைத்து- தம் நெஞ்சிலே நினைந்து, மறவியின் மயங்கி-மறதியால் மயக்கமுற்று, முன்னர் - முன்பெல்லாம், மாற்றில் மறுகினம் - உடல் வாழ்க்கையில் இச்சையுற்று அறிவிழந்துழன்றோம், அற இறை அடிகள் தம்மால் - சைன தருமத்தின் தலைவராகிய இவ்வகம்பன முனிகளால், அருகுசென்று - அவர் அருகேயிருந்து, அறவமிர்து ஆரப்பெற்றேம் - அறமாகிய அமுதத்தை நிரம்பப்பெற்றோம், பிறவியின் மறுகு வெந்நோய் - பிறவியால் எய்தும் மயக்கத்தின் பயனாக வுளதாகும் வெவ்விய துன்பத்தினின்றும், பிழைத்தனம் - நீங்கினோம், என்றவாறு - என்றபொருள் தோன்றுமாறு கூவின1 எ-று.

மனவுணர் வில்லாத பிறவி யெடுத்துள்ளனவாயினும் நினைத்தலைச்செய்தன எனத் தாம் வேண்டிய கருத்தை முடித்தற்கு, "நெஞ்சில் நினைத்து" என்று கூறினார். நினைக்கப்பட்டன இவையென்பார், "பெயர்ந்தன பிறவிகளனைத்தும்" என்றார். வீடுபேற்றிற்குரிய நெறிக்கட் செலுத்தாது, மேலும் பிறத்தற் கேதுவாய‌ நெறிகளிலேயே உயிர்களைச் செலுத்துதலின், உலக வாழ்க்கையை "மாற்று" என்றும், அதனால் விளைவது, மயக்கமும் அதன் பயனாகப் பிறப்புமே என்றற்கு, "மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம்" என்றும் நினைத்தன. "அறியின் வீட்டதும் மாற்றதும் ஆகுமே"2 என்றும், "மாற்றில் நின்றது வையக மூன்றினும், ஆற்றவும் பரியட்ட மொரைந்தினால, தோற்றம் வீதல் தொடர்ந்திடையில் வினைக், காற்றி னாற்கதி நான்கிற் சுழலுமே"3 என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. அறம் கேட்ட பயன் இதுவென்றற்குப் "பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தனம்" என்று கூவின.
    -----------
    1. யசோ. 256. 2. மேரு. 69. 3. மேரு. 71.

கோழியின் கூக்குரலை யரசன் கேட்டல்

    அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்
    குறைவிலா வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்
    செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்
    முறுவல்கொண் முகத்து நல்லார் முகத்தொரு சிலைவ ளைத்தான்.         256

உரை:-- அறிவரண் சரணம் மூழ்கி - அறிவனாகிய அகம்பன‌ முனிகளின் திருவடியை வணங்கி, அறத்தெழு விருப்பம் உள்ளா - சைன தருமத்தின்பால் எழுந்த விருப்பமானது உள்ளத்தே கிளர்ந்தெழுவதால், குறைவிலா அமுதம்கொண்டு - பெருகுகின்ற அவ்வற வமிரதத்தையுட் கொண்டு, அகம் குளிர்ந்து மகிழ்ந்து கூவ - மனம் குளிர்ப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கெய்தவே அக் கோழிகள் கூவினவாக, செறி பொழிலதனுள்சென்று - மரஞ்செடிகள் செறிந்திருந்த சோலைக்குள்சென்று, மன்னன் செவியினுள் இசைப்ப - அங்கேயிருந்த யசோமதி வேந்தனுடைய செவியில் அக் கூக்குரல் ஒலிக்க, முறுவல் கொள் முகத்து நல்லார் - அவனைக்கண்டு முறுவலித்த முகத்தை யுடையராகிய உரிமை மகளிர் காண, முகத்து - அவர் முகத்திலுள்ள புருவத்தையொத்த, ஒரு சிலை வளைத்தான் - தன் தனிவில்லை வளித்து அக் கூக்குரல் வந்த திசைநோக்கி அம்பு தொடுத்து விட்டான் எ-று.

முனிவரன் என்பதுபோல அறிஞருள் உயர்ந்தோன் என்பது பட அறிவான் என்பது நின்றது. அடிவணங்கி வழிபடுவதை அடி மூழ்குதலென்பது பெரும்பாலும் சைன நூல் வழக்கு, "அறிவன சரண மூழ்கி" 1 "அருகனைச் சரணமூழ்கி" 2 என்று மேருமந்திர புராணமும் இவ்வாறே சீவகசிந்தாமணி முதலியனவும் வழங்குதலைக் கண்டு கொள்க. பிறவித் துன்பத்தால் வெந்து வருந்திய வருத்தம் நீங்குதலால். "அகம் குளிர்ந்து" கூவின எனவறிக. இருள் படப் பொதுளிய பொழில் என்றற்குச் "சொற்பொழில்" என்றும், அன்னதாயினும் அதனுள்ளிருந்த வேந்தன் செவிக்குள் அக்கோழிகளில் கூக்கரல் சென்று ஒலிக்காதவாறு தடுக்கும் மதுகையுடைத் தன் றென்பதற்குச் "செறிபொழிலதனுள் சென்று" என்றும் விசேடித்தார். அறத்தின்பாற் செனற வேட்டையாற் பிறக்கும் ஞானம் அமுத்தம்போல் இன்பம் செய்வதுபற்றி, அதனை அமுதம் என்றும், அது மேன்மேலும் பெருகுவது பற்றி, "குறைவிலாவமுதம்" என்றும் கூறினார் போலும். பிறவிக்கேதுவாய நினைவு செயல்களால் மயங்கிக்கெடுவது நெறியன்றென்பதுபோல அக் கூக்குரல் மன்னன் செவிமத லிசைத்த தென்பார், "செவியினுள் இசைப்ப" என்றும், அப்பொருண்மை தேர்ந்து நன்னெறிக்கட் செல்லும் ஊழிலனாதலின், வெகுண்டான் என்றும், அதற்கு அவனைச் சூழ விருந்த மகளிர் கூக்குரல் கேட்டுத் திடுக்கிட்டு மருண்டு நடுங்கியதே காரணமென்றும், ஆதலால் அவன் அம்மகளிருடைய முரிந்த புருவம்போன்ற வில்லைவளைத்து அம்பு தொடுத்து அக்குரல் போந்த திசைநோக்கி விட்டான் என்றும் கூறினார். முகம், ஆகுபெயர். தன்பால் வைத்து விடுத்த அம்பினை யுதைத்து ஓசையிட்ட கோழிகளைத் தாக்கிக்கொன்ற சிறப்புக்குறித்து "ஒருசிலை" என்றார். வளைத்தல் விடுத்தற்காதலின், காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.
    --------
    1. மேரு. 970. 2. மேரு. 739.

கோழிகள் இறந்து மனிதவுடம் பெடுத்தல்

    சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்த லோடும்
    நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
    சில்லறி வினைக ளேனுந் திருவறப் பெருமை யாலே
    வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே         257

உரை:- அவன்-அவ் யசோதமதி வேந்தன், சொல் அறி கணையை-சொல்போல விரைந்தேகும் அம்பினை, வாங்கி- எடுத்து, தொடுத்து-வில்லில் தொடுத்து, விடுத்தலோடு- எய்ததும், நல் இறைப் பறவை தம்மை அடுத்து-நல்ல சிறகுகளையுடைய கோழிகளை யடுத்துத் தாக்கி, நடுக்கியது வீழ-கொன்று வீழ்த்தவே, சில் அறி வினைகளேனும்-சிலவாகிய பொருளை யறிதலாகிய வினைகளாயினும், திரு அறப்பெருமையால்-சைன தருமங்களாகிய பெருமையுடையன வாகையால் வல்லிதின்-விரைவாக, மறைந்து போகி-அக் கோழிகளின் உயிர் உடலின் நீங்கிச்சென்று, மானுடம்பாய-மக்களுடம்பைப் பொருந்தின எ-று.

ஒருவரைக்குறித்து ஒரு சொல்லைச் சொல்லியவழி, அச்சொல் அவரைத் தப்பாமற் சென்று சார்தல்போல, ஒன்றைக்குறித்து எய்த வழி, அதனைத் தப்பாமற் சென்று தாக்கும் சிறப்புக்குறித்து, "சொல்லறிகணை" என்றார். இந்திரவில்போலும் சிறகு என முன்னர்ச்1 சிறப்பித்தமையின் "ஈண்டு நல்லிறைப்பறவை" யென்றார். வீழ, பிறவினைப்பொருட்டு. சின்மை, கேட்கப்படும் பொருள்மேனின்றது. உடலினின்றும் உயிர் நீங்குவது எவர்க்கும் புலனாகாமயின், "மறைந்துபோகி" என்றார். மானுடம்பு, மக்களுடம்பு.
    -----------
    1.யசோ. 225.

அரசன் தன் கோயிலை யடைதல்

    விரைசெறி பொழிலி னுள்ளால் வேனலின் விளைந்த எல்லாம்
    அரசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி
    முரசொலி கழுமப் புக்கு மொய்ம்மலி குழலி னாரோ
    டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.         258

உரை:- விரைசெறி பொழிலினுள்ளால்-மணம் நிறைந்த சோலைக்குள்ளே, வேனலில் விளைந்த எல்லாம்-வேனிற் பருவத்து விளையும் இன்பங்களெல்லாம், அரசனும் அமர்ந்து-வேந்தனாகிய யசோமதியும் விரும்பி நுகர்ந்து, போகி-அதனின் நீங்கிச்சென்று, அகநகர்க் கோயில் எய்தி- அகநகர்க்கண்ணுள்ள தன்னரண்மனையை யடைந்து, முர சொலி கழும-முரசொலி முழங்க, புக்கு-உட்சென்;று, மொய்ம்மலர்க் குழலினாரோடு-நெருங்கிய பூவணிந்த கூந்தலையுடைய மகளிருடன், உரைசெயல் அரிய வண்ணம்- உரைத்தற்கு ஒண்ணாத வகையில், உவகையில் மூழ்கினான்- இன்பக்கடலுள் மூழ்கிக் கரைகாணாது திளைத்தான் எ-று.

பூக்கள் நிறைந்த சோலையென்பார், "விரைசெறி பொழில்" என்றார்,. வேனலில் விளைந்த எல்லாம் என்றது வேனிற் காலத்தயரும் விளையாட்டு வகைகள். அரசன் கோயிலின் நீங்கிச்செல்லும் போதும், திரும்பப் போதரும் போதும், முரசு முழறங்குதலுண்மையின் "முரசொலி கழும" என்றும், மகளிரோடுகூட அவன் இன்புற்ற வகைகளைக்கூறல் நீர்மையன்மையின், "உரை செயலரிய வண்ணம் உவகையின் மூழ்கினான்" என்றும் கூறினார்.

புட்பாவலி இரட்டையரைப் பெறுதல்

    இன்னண மரச செல்வத் திசோமதி செல்லு நாளுள்
    பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்கை
    இன்னிய லிரட்டை யாகு மிளையரை யீன்று சின்னாள்
    பின்னுமோர் சிறுவன் தன்னைப் பெற்றனள் பேதை தானே.         259

உரை:- இன்னணம்-இவ் வண்ணம், அரச செல்வத்து-அரச போகத்தில், இசோமதி செல்லு நாளுள்- யசோமதி வாழ்ந்துவருங் காலத்தில், பொன்இயல் அணி கொள் புட்பாவலி யெனும்-பொன்னானியன்ற அணிகளையணிந்த புட்பாவலி யென்னும் பொங்கு கொங்கை- பெருத்த முலைகளையுடைய அரசமாதேவி, இன்னியல் இரட்டையாகும் இளையரை-இனிய இயல்பினை யுடைய இரட்டைப் பிள்ளைகளை, ஈன்று-பெற்று, சில் நாள் பின்னும்-சில ஆண்டுகட்குப் பின்னரும், ஓர் சிறுவன் தன்னை- ஒருமகனை, பேதை-பேதையாகிய அவள், பெற்றனள்- பெற்றெடுத்தாள் எ-று.

நிலையில்லதாகிய அரச போகத்தை நிலையுள்ளதாகக் கருதி அதன்கண் தோய்ந்து, பிறவுயர் நினைவுக ளின்றி ஒழுகினானென்பார், "அரச செல்வத்து இசோமதி செல்லு நாளுள்" என்றார். "பொன்னியலணிகொள்" என்றும், "பொங்கு கொங்கை" என்றும் விசேடித்தார், புட்பாவலியின் செயற்கையும் இயற்கையுமாகிய அழகுதோன்ற. முதற்கண் ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றமைதோன்ற, "இன்னியல் இரட்டையாகும் இளையரையீன்று" என்றும், அவ்விருவர்க்குப்பின்னே வேறொரு மகனைப் பெற்றாளென்றும் கூறினவர் "பேதை"யென அவளை விசேடித்தார், அவளுடைய குணத்தைச் சிறப்பித்தற்கு. தான் என்பது கட்டுரைச்சுவை குறித்து நின்றது. ஏகாரம், ஈற்றசை.

மக்களின் பெயர்நலம் கூறல்

    அன்னவர் தம்முள் மன்னோ னபயமுன் னுருசி தங்கை
    அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
    பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
    இன்னிளங் குமர னாம மிசோதர னென்ப தாகும்.         260

உரை:- அன்னவர் தம்முள் முன்னோன்-அம்மக்களுள் முன்பிறந்தவன், அபயமுன் உருசி-அபயமென்ற பெயர்க்குமுன் ருசியென்பது கூடவரும் அபயருசி என்னும் பெயரினனாகும், தங்கை-அவனுக்குத் தங்கையாகிய,அன்னம் மெல்நடையினாளும்-அன்னம்போலும் மெல்லிய நடையினையுடையவள், அபயமுன்மதி யென்பாளாம்-அபய மதியென்னும் பெயருடையளாவாள், அவர் வளரும் நாளுள்- அவ்விருவரும் பிறந்து வளர்ந்து வரும் நாட்களில், பின் பிறந்தவன்-அவர்கட்குப் பின்னே பிறந்தவனும், நிறங்கொள் பைந்தார் இன்னிளங்குமரன்-மார்பிடத்தே யணிந்த பசியமாலையினையுடையவனும் இனிய இளமைப் பண்புடையவனுகாகிய குமரனுடைய, நாமம்-பெயர், இசோதரன் என்பதாகும்-யசோதரன் என்பதாம். எ-று.

அபயருசியே இக்கூற்றினை நிகழ்த்துகின்றானாதலின், தன் தங்கையை "அன்னமென்னடையினாள்" என்றும், யசோதரனை, "நிறங்கொள் பைந்தார் இன்னிளங்குமரன்" என்றும் சிறப்பிக்கின்றான். நிறம், மார்பு. அவர் வளரும் நாளுள் பின் பிறந்தவன் என இயைக்க.

அரசகுமரன் வளர்ந்த திறம் கூறல்

    பரிமிசைப் படைப பியின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
    வரிசையிற் கரிமேற் கொண்டு வாட்டோழில் பயின்று மன்னர்க்
    குரியஅத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
    அரசிளங் குமரன் சென்றா னடுத்தது கூற லுற்றேன்.         261

உரை:-பரிமிசைப்படை பயின்றும்-குதிரை மேலிருந்து செய்யும் போர்வினைக்குரிய படைத்தொழில் கற்றும், பார்மிசைத் தேர்கடாயும் - தரைமேல் தேர் செலுத்தியும், வரிசையின் - முறைப்படி, கரிமேற்கொண்டு - யானைமேலேறி, வாள் தொழில் பயின்றும் - வாள் வினைக்குரியவற்றைக் கற்றும், மன்னர்க்கு உரிய அத்தொழில்களோடு- அரசர்குரிய அப்பயிற்சிகளோடு, கலைகளின் செலவை ஓர்ந்து - பலவகைக் கலைகளையும் கற்று, அரசிளங்குமரன் சென்றான் - அரசகுமரனான யசோதரன் வளர்தலுற்றான், அடுத்தது கூறலுற்றேன் - இனி அவ்வரசகுமரற் குற்றத்தைக் கூறத்தொடங்குகின்றேன் எ-று.

யானையேற்றம் குதிரையேற்றம் தேரேறுதல் முதலியன அரசகுமரர் பயிறற்குரிய பயிற்சிகள். இவற்றை நெறியறிந்து செலுத்துதலும் இவற்றின்மேலிருந்து படை வழங்குதலும் போர் வினைக்கு இன்றியமையாதன. படைக்கலம் பயிறலுடன் பல் வகைக் கலைகளின் அறிவு காவற் சாகா டுகைப்போற்குக் கண்போல் வேண்டப்படுதலின் "கலைகளின் செலவை யோர்ந்தும்" என்றார்.

நான்காவது சருக்கம் முடிந்தது.
---------------------------------------------

ஐந்தாவது சருக்கம்

இதன்கண், வேந்தனான யசோமதி வீரர் புடைசூழ வேட்டைமேற் செல்வதும், காட்டகத்தே சுதத்த முனிகளைக் காண்பதும், அம் முனிவனைக் கொல்லக் கருதி வாளை யுருவுவதும், அவன் செயலைக்கண்ட கலியாணமித்திரனென்னும் உயிர்த்தோழன் அவனைத் தடுப்பதும், அவன் யசோமதிக்கு முனிவனுடைய சிறப்பும் வரலாறும் கூறுவதும், வேந்தன் மருண்டு தன் தலையைத் துணித்து முனிவன் திருவடியிலிடக் கருதுவதும், கலியாணமித்திரன் தடுத்துச் செய்வகை கூறுவதும், அதுகேட்ட வேந்தன் முனிவனை வணங்குவதும், முனிவன் வேந்தற்கு அசோகன் எய்திய பிறப்பு நலம் கூறுவதும், அவன் தாயாகிய அமிர்தமதி நரகத்தில் துயருறும் திறம் கூறுவதும், யசோதரனும் சந்திரமதியும் மாக்கோழிசெய்து அதனைக் கொலைசெய்த தீவினை குறித்துப் பல்வகைப் பிறப்புற்று வருந்தியது கூறுவதும், அவர்கள் இருவரும் அவ் வேந்தனுடைய இரட்டைமக்களென்பதும், அரசன் அவர்களை முனிவன்பால் வருவித்தலும், மக்கள் போந்து பழம்பிறப் புணர்ந்து வருந்துவதும், யசோமதி தனக்கு உய்தியருளவேண்டுமென முனிவனையிரப்பதும், முனிவன் அறங்கூறக்கேட்டுத் துறவு பூண்பதும், பின்பு அபயருசி தான் ஏற்ற அரசுரிமையைத் தம்பி யசோதரற் களித்துத் தங்கையான அபயமதியுடன் துறவுமேற்கொண்டு சுதத்த முனிகளையடைந்து அவரைச்சூழவரும் உபாசகர் குழுவி லுறைவதும், அம் முனிவனுடன் இராசபுரத்துக்குப் புறத்துள்ள பொழிலிற்றங்கிச் சரிதை வந்தவாறு கூறுவதும், இவற்றைக் கேட்டிருந்த மாரிதத்தன் துறவு மேற்கொள் வதும், பின்பு அவன் முனிவனாதலும்,அபயருசியும் அபய மதியும் தவநெறிக்கண்ணே நின்று முற்றிச் சாசாரகற்பத்துத் தேவரா யின்புறுதலும், இந்நூலைக் கேட்பதால் வரும் பயன் கூறுவதும், பயன்கொள்வார் செய்யத்தகுவன இவை யென்பதும் பிறவும் கூறப்படுகின்றன.

யசோமதி வேட்டைமேற் சேறல்

    நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
    டேற்றுடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
    நாற்படை நடுக்கடல் நடுச்செய்நம னேபோல்
    வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.         262

உரை:-நூற்படு வலைப்பொறி முதல் - நூலாற் பின்னப்பட்ட வலையாகிய பொறி முதலாகவுள்ள, கருவி நூற்றேடு- கருவிகள் பலவற்றுடன், ஏற்றுடை எயிற்று ஞமலிக்குலம் - எற்றமிக்க பற்களையுடைய நாய்க்கூட்டம், இரைப்ப - குரைப்ப, நாற்படை கடல்நடு - நால் வகைப் படைகளாகிய கடலின் நடுவே, நடுச்செய் நமனேபோல் - உயிர்க்கும் நமனைப்போல, அரசன் - அரசனாகிய யசோமதி, வேற்படை பிடித்து - வேற்படையைக் கையிலேந்திக் கொண்டு, வேட்டையின் விரைந்தான் – வேட்டைக்கு விரைந்து செல்வானாயினான் எ-று.

பொறிபோல உயிர்களை யகப்படுத்தலின், வலையைப் பொறி யென்றார்; இருபெயரொட்டு. நூறு, பலவென்னும் பொருட்டு; "நூற்றிதழ்த்தாமரை" 1 போல. ஏற்றுடை யென்புழி, ஏற்றம் என்பது அம்முக் குறைந்து நின்றது. ஏற்றம், நீட்சி. படை நடுவிருந்து நமன் பொருதழியும் உயிர்களையுண்பதுபோல, வீரர் நடுவணிருந்து கானத்துயிர்களைக் கொன்று கழித்தல்பற்றி யசோமதியை "நமனே போல்" என்றார். "படைக்கடல் நடுவண், இருந்து கூற்றுயிருணச்செயு மிருஞ்சமர்" என்று பிறரும் கூறுதல் காண்க. வேந்தற்குச் சிறப்புடைய படையாதலின், வேற்படையை யெடுத்து மொழிந்தார். விரைந்தான் என்றது, உயிர்களைக் கோறற்கண் யசோமதிக் கிருந்த வேட்கை மிகுதியை யுணர்த்தி நின்றது.
    -------
    1. புறம். 27.

சுதத்த முனிவன் தவம் செய்திருத்தல்

    இதத்தினை யுயிர்க்கினி தவித்திடு மியற்கைச்
    சுதத்தமுனி தொத்திரு விளைத்துகள் துடைக்கும் *
    மதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்
    கதத்தின னிழித்தடு+ சுடத்திடை மடுத்தான்.         263
    ---------
    (பாடம்) *(ளுடைக்கும்.) +கதத்துடனிழித்தடு.

உரை:- உயிர்க்கு-எல்லாவுயிர்கட்கும், இதத்தினை இனிது அளித்திடும், இயற்கை-நலத்தை மிகச்செய்யும் இயல்பினையுடைய, சுதத்தமுனி-சுதத்தன் என்னும் முனிவனாகிய, தொத்து இருவினைத்தகள்-உயிரைப்பற்றி நிற்கும் இருவினைகளாகிய மாசினை, துடைக்கும்-போக்கும், பதத்துஅயன்-திருவடியையுடைய மேலோனுடைய, படிமம்-திருவுருவம், மதக்களிறு என நிற்ப-மதம் பட்ட களிற்றினைப்போலச் சலிப்புணராது நிற்கக்கண்டு, கதத்தினன்-கோபத்தை யுடையனாகிய அரசன், இழித்து- இகழ்ந்து நோக்கி, அவனிருந்த, அடுகடத்திடை-தான் உயிர்களைக் கொல்லக் கருதி வந்த காட்டிடத்தை, மடுத்தான்- வந்தடைந்தான்எ-று.

அரசன் உயிர்களைக் கொல்லும் கருத்தினனாய் வந்தானென்பதை முடித்தற்கு, முனிவனது உயிர்க்கருளும் இயற்கையை எடுத்து விதந்தார். தொத்துதல்-பற்றிநிற்றல். நல்வினையும் துன்ப முடிவிற் றாதல்பற்றி "இருவினைத்துகள்" என்றார்; "இருள் சேர் இருவினையும் சேரா"1 என்றார்போல. துகளெனவே, துடைத்தல் வினை கூறினார். ஐயன் என்பது அயன் என விகாரம். தவத்தால் பொறிபுலன்களை யடக்கியிருத்தல் பற்றி, முனிவன் திருவுருவைப் படிமம் என்றார். சலிப்பின்மைக்கு மதக்களிறு உவமமாயிற்று. இனி அதனை அரசன்மே லேற்றலு மொன்று. கடம், காடு. வெள்ளம்போலத் தானை புடைதிரண்டு வருதலின், மடுத்தான் என்றார்.
    -----------------
    1 குறள் 5

வேந்தன் சுதத்த முனிவனை வெகுளுதல்

    கூற்றமென அடவிபுடை தடவியுயிர் கோறற்
    கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
    பாற்றியவ னின்னுயிர் பறிப்பலென வந்தான்
    மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.         264

உரை:- அடவி-இக்காட்டில், புடைதடவி-இடமெங்கும் சுற்றியும், கூற்றமெனக் கோறற்கு ஏற்றபடி-நமன் போலக் கொல்லுதற் கேற்றவகையில், பெற்றது இலன்- உயிரொன்றும் பெற்றேனில்லை. இற்றை வினை முற்றும் பாற்றியவன்-இன்று எனது வேட்டை வினை முழுதும் பயனின்றிக் கெடச்செய்த இம் முனிவனுடைய, இன்னுயிர் பறிப்பல்-இனிய உயிரைப் போக்குவேன், என-என்று கூறிக்கொண்டு, மாற்றரிய சீற்றமொடு-நீக்க முடியாத கோபத்துடனே, மாதவனின் மேலே-சுதத்த முனிவன்மேல், வந்தான்-மண்டிவரலானான் எ-று

மேலேயும் "படைக்கடல் நடுச்செல் நமனே போல்"(262) என்றாராகலின், ஈண்டும் அவ்வியல்பு திரியாமையின் "கூற்ற மென" என்றார். ஓரிடமும் விடாது தேடினமை தோன்ற, "அடவிபுடை தடவி" யென்றார். ஏற்றபடியாவது, பல்வகை உயிர்களையும் கொன்று குவிப்பேனெனக் கருத்துட்கொண்டு போந்த மேற்கோள். ஓருயிரும் தனக்கு அகப்படாதொழிந்ததற்குக் காரணம் அம்முனிவனது இருப்பென்று நினைத்தலின், முனிவனை, "இற்றை வினை முற்றும் பாற்றியவன்" என்றும், அது தான் மேற் கொண்ட வினைக்கு இடையூறாவது நினைந்து வெகுளி மிகக் கோடலின் "இன்னுயிர் பறிப்பல்" என்றும் கூறலானான். முனிவனது தவமும் தன் செயலினது அவமும் சிறிது எண்ணிய வழியும், உண்டாகிய சினம் தணிந்து பணிவிக்கும் என்பார், "மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே" என வற்புறுத்தினார்.

ஐஞ்ஞூறு நாய்களை அம்முனிவன் மேலேவுதல்

    கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்
    ஐந்தினொடு பொருததொகை யைம்பதி னிரட்டி
    செந்தசைகள் சென்றுகவர் கின்றென* விடுத்தான்
    நந்தியருள் மழைபொழியும் நாதனவன் மேலே.         265
    --------------
    (பாடம்)* கென்றென; கின்னென

உரை:- கொந்து எரி உமிழ்ந்து-கொத்தாகத் தீயினைக் கக்கி, எதிர் குரைத்து-எதிரே குரைத்துக்கொண்டு, அதிர்வ-ஏனையுயிர்கட்கு நடுக்கத்தைப் பண்ணுவனவாகிய, கோள் நாய்-கொலைபுரியும் நாய்க்கூட்டம். ஐந்தினொடு பொருததொகை ஐம்பதின் இரட்டி-ஐந்தாற் பெருக்கிய நூறாகவரும் ஐஞ்ஞூறும், இன்று-இப்பொழுதே, சென்று முனிவனை யணுகிப்பற்றி, செந்தசைகள் கவர்க என-(அவனுடைய) செவ்விய தசைகளைக் கவர்க என்று, அருள் மழை நந்தி-அருளை மழைபோல மிகுத்து, பொழியும் நாதன் அவன்மேல்-பொழியும் தவமாகிய செல்வத்தையுடைய அம்முனிவன்மேல், விடுத்தான்-செலுத்தினான் எ-று.

வேட்டை நாய்களின் இயல்பு கூறுவார், தீப்பறக்கும் கண்ணும், ஏனையுயிர்களை நடுங்குவிக்கும் குரைப்பும், கொலை வன்மையும் உடையவென்றார். அதிர்தல், நடுக்கம்; ஈண்டுப் பிறவினைப் பொருட்டு. ஐம்பதின் இரட்டி தொகை-ஐம்பதின் இரட்டிப்பாகிய தொகை, நூறென்பதாம். அஃது ஐந்தோடு உறழ்ந்தவழி ஐஞ்ஞூறாயிற்று. தவத்தால் முனிவன்மேனி பொன்போல் ஒளிவிட்டுத் திகழ்வது கண்டு "செந்தசைகள்" என்றும்,நாய்களை ஏவுதல் தோன்ற, இன்று கவர்க என்றும் கூறினான், அதனைக் கண்டுவைத்தும் சுதத்த முனிவன் வெறுப்போ விருப்போ கொள்ளாது அருண் மணங் கமழ விருந்தமை விளங்க "நந்தி யருண் மழை பொழியும் நாதனவன் மேலே" என்று விதந்தார். நாதன் என்னும் வடசொற் சிதைவு செல்வமுடையோன் என்னும் பொருட்டு. மகாமகோபாத்தியாய பண்டிதமணியவர்கள் "நாதன்றாள் வாழ்க" என்பதற் கெழுதிய உரைகாண்க.

நாய்க்கணம் மேற்செல்லாமைகண்டு அரசன் வாளுருவுதல்

    அறப்பெருமை செய்தருள் தவப்பெருமை தன்னால்
    உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
    கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
    மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.         266

உரை:- அறப்பெருமை தன்னால்-மேற் கொண்டிருக்கும் சைன தருமத்தின் பெருமையாலும், செய்து அருள் தவப்பெருமை தன்னால்-உயிர்கட்கு நலம் செய்தருளும் தவத்தின் பெருமையாலும், உறப்புணர்தல் அஞ்சி-முனிவனுடைய மெய்யுற அணுகுவதற் கஞ்சி, ஒருவிற்கண்-ஒரு வில்லளவு தொலைவிலேயயே, அவை நிற்ப-அந்த நாய்க் கூட்டம் நின்றொழியவே, கறுப்புடை மனத்து-எப்போதும் வெகுளியே குடிகொண்டிருக்கும் மனத்தின்கண், எழுகதத்து அரசன்-எழுந்த சினமிகுதியையுடைய அரசனாகிய யசோமதி, மறப்படை விடக் கருதி-கொலைவினைக்குரிய படையைச் செலுத்த நினைந்து, வாள் உருவுகின்றான்-உறையிலிருக்கும் வாளையுருவுவானாயினான், ஐயோ - இவன் செய‌லிருந்தவாறு என்னோ எ-று.

தன்னால் என்பதை அறப்பெருமைக்கும் கூட்டுக. அரசனுண‌ரானாயினும், அவன் விடுத்த நாய்க்கூட்டம் முனிவனுடைய அறப் பெருமை தவப் பெருமைகளைத் தெளிய வுணர்ந்து கொண்டன என்பார், "உறப்புணர்தல் அஞ்சி" யென்றும், அவ்வுணர்வின் பயன் ஓரளவு விலகிநின்று வழிபடுவதாகலின், "ஒருவிற் கண் அவை நிற்ப" என்றும் கூறினார். அவனுணராமைக்கு ஏது அவன் மனவியல்பு என்பார், "கறுப்புடை மனத்து" என்றும், அதன் பயனாக, அவன் சினம் மிகுந்து வாளையுருவலுற்றான் என்பார், "எழுகத‌த்தரசன் மறப்படை விடக்கருதி வாளுருவுகின்றான்" என்றும் கூறினாரெனவுணர்க. கொலைக்குரித்தாத‌லின்,வாள், "மறப்படை" யெனப்பட்டது. ஐயோ, நூலாசிரியர் இரங்கிக் கூறியது.

கலியாணமித்திரன் அரசனைத் தடுத்தல்

    காளைதகு கலியாண மித்திர னெனும்பேர்
    ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
    கேளொருவன் வந்திடைபு குந்தரச கெட்டேன்
    வாளுருவு கின்றதெனை மாதவன்மு னென்றான்.         267

உரை:-காளைதகு- காளைப்பருவம் தக்கிருக்கின்ற,கலியாணமித்திரன் எனும் பேர்- கலியாணமித்திரன் என்னும் பெயரையுடைய, ஆளி அடுதிறல்வணிகன்- சிங்கத்தை வெல்லும் மெய்வலியினையுடைய வணிககுமரனும், அரசன் - வேந்தனாகிய யசோமதிக்கு, உயிர் அனைய கேள் ஒருவன் - உயிரொத்த நண்பனுமாகிய ஒருவன், வந் து - அவ்விடத்திற்கு வ‌ந்து, இடைபு குந்து - வாளுருவி வீசக்கருதும் அரனைத் தடுத்து, அரச- வேந்தே, மாதவன்முன்- இம்மாமுனிகளின் திருமுன்னே, வாள் உருவுகின்றது எனை - தீங்கு குறித்து வாட்படை யெடுப்பது என்னையோ எ-று.

கெட்டேன், இரக்கக்குறிப்பு. கலியாணமித்திரனுடைய மதி நுட்பமும், மெய் வன்மையும், அரசன்பால் அவற்குள்ள தொடர்பும் விளக்குதற்கு, "காளை" யென்றும், "ஆளியடுதிறல் வணிகன்" என்றும், "அரசன் உயிரனைய கேள்" என்றும் கூறினார். ஒப்பற்ற துணைவன் என்பார் "ஒருவன்" என்றார்; மிகச்சிறந் தான் என்பது கருத்து; இன்றேல், இடைபுகுந்து விலக்குதல் இயலாதெனவுணர்க. அச்செயலால் விளையும் கேட்டினை அறிந்து போந்து விலக்குகின்றானாதலின், இடை புகுந்து "கெட்டேன்" என்று சொல்லெடுத்து, "வாளுருவுகின்ற தெனை மாதவன் முன்" என்று கூறுகின்றான். மாதவன் என்றது, நீ கருதியவாறு முடிக்க‌ வொண்ணாது தடுக்கும் பெருமையும், நீ கருதும் கருத்து நின்னையே யடைவிக்கும் தவவன்மையும் உடையன் என்பது விளங்கக் கூறியவாறாம்.

கலியாணமித்திரன் முனிவன் சிறப்பெடுத் துரைத்தல்

    வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
    அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
    சிறப்பினை யியற்ற‌லை* சினத்தெரி மனத்தான்
    மறப்படை யெடுப்பதெவென்+ மாலைமற வேலோய்.         268
    --------
    (பாடம்) * யியற்றிலை +யெடுப்பது மென்.

உரை:- மாலை மறவேலோய்- மாலை யணிந்த மறம் பொருந்திய வேலை ஏந்திய வேந்தே, அரசினை - அரச‌ போகத்தை, துகள் என வெறுத்து- அற்பப் பொருளாகக் கருதிப் பற்றறவெறுத்து, உடன் விடுத்து- அவ்வெறுப்புத் தோன்றியவுடனே ஒழித்துவிட்டு, பேர் அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவன் - துறவறமாகிய பெரிய மலையை எடுத்துத் தாங்கியிருக்கின்ற முனிவனுடைய திருவடிக் கண்ணே, சிறப்பினை இயற்றலை- சிறப்பாகிய வழிபாட்டைச் செய்யாமல், சினத்து எரி மனத்தால்- சினத்தால் வெதும்புகின்ற மனத்தோடு, மறப்படை- வாட்படையை, எடுப்பது எவ‌ன் - கையில் எடுப்பது எற்றுக்கு, உரைப்பாயாக எ-று.

வேலுக்கு மாலை யணிவதும் மரபாதலின், "மாலை மற‌ வேலோய்" என்று கூறப்பட்டது; இதனை, "இவ்வே (இவ்வேற் படைகள்). பீலியணிந்து மாலைசூட்டிக் கண்டிரணோன் காழ்திருத்தி நெய்யணிந்து கடியுடை வியணகரவ்வே"1 என்பதனாலு மறிக. விழுமிது தெரிந்த விழுமியோர்க்கு, "நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை, முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே"2 என்று சான்றோரும் கூறுதல் காண்க.
    ------
    1.புற. 95. 2.புறம். 75.

துறவறத்தின் பெருமையும் பொறுத்தற் கருமையும் தோன்ற, "பேரறப்பெருமலை" யென்றும், அதனை மேற்கொண் டொழுகும் ஆண்மை ந‌லம் விளங்கப் "பொறை யெடுத்தவன்" என்றும், அத் தகையோரைக் கண்டவிடத்து அரசராயினும் வழிபடுவதே உடன் செயற்பால தென்பான், "சிறப்பினை யியற்ற‌லை" யென்றும், நீ செய்வது தீது பயப்பதாம் என்ற‌ குறிப்பால், "மறப்படை யெடுப்ப‌ தெவன்" என்றும் வணிகன் கூறினான்.


    ஆகவெனின் ஆகுமிவர் அழிகவெனின் அழியும்*
    மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
    ஏகமன ராம்முனிவர் பெருமையிது வாகும்
    மாகமழை வண்கைமத யானை மணிமார்போய்+         269
    --------
    (பாடம்) *னாகவிவரழியவெனிலழிக +முடியோய்.

உரை:- மாக மழை வண்கை- வானத்தில் உலாவும் மழை மேகம் போலும் வள்ளன்மை பொருந்திய கையினையும், மதயானை- மதம் பொருந்திய யானைகளையும், மணி மார்போய்- மணியிழைத்த மார்பணியு முடைய வேந்தே, இவர்- இம்முனிவர், ஆக எனின் ஆகும்- ஒருபொருள் ஆக்கம் பெறுக என்பாராயின் அவ்வாறே சிறிதும் பிழையின்றி ஆக்கமெய்தும், அழிக எனின் அழியும்- கேடெய்துக என்றால் அவ்வாறே அக்கணமே அப்பொருள் கெடும், இவண் மேகம் வருக எனின் - இப்பொழுது இவ்விடத்தே மழை பெய்க‌ என்றால், விதியின் - அவர் விதிக்குமாறே, அதுவும் வரும் - அம்மேகமும் வந்து மழை பொழியும், ஏகம் மனராம் முனிவர் பெருமை இதுவாகும் - ஒரு நெறியில் பிறழ்வின்றி நிற்கும் மனமுடையராகிய இம் முனிவரது பெருமை இத் தன்மைத்தாகும். இதனை நீ நினையா தொழுகுவது கூடாது எ-று.

இதனை நீ என்பது முதலியன குறிப்பெச்சம். "யானையுடைய‌ படை காண்டல் இனி" தென்பவாகலின், நாற்படையினும் மத‌ யானைப்படையை விதந்தோதினான். மழை வண்கை பொருட் பெருமையும், மதயானை படைப்பெருமையும் சுட்டி நின்றன. இப் பெருமைகள் ஆதற்கும் அழிதற்கு முரியவாவன; அவ்வாக்க வழிவுகள் இரண்டனையும் நினைத்த பொழுதே செய்யவல்லரென்பான், "ஆகவெனின்....வருமதுவும் விதியின்" என்றான். பொறிவழி யோடிப்பஃறலைப் பட்டலைதலின்றி ஒரு நெறியே நிற்கும் சிறப்புக் குறித்து, "ஏகமனராமினிவர்" என்றான். முனிவர் பெருமை இது வெனவே, அரசர் பெருமை பொருள் படை யென்ற இரண்டாய் வகுத்துரைக்கப்பட்ட்டது. அரசர்க்குரிய மூவகையாற்றலுள், பெருமை, பொருள் படை என்ற இரண்டின்மேல் நிற்குமென்பது அரசியல் நெறி.
----------

    அடைந்தவர்கள் காதலினொ டமரரர சாவர்*
    கடந்தவர்கள் தமதிகழ்வின் கடைநரகின் வீழ்வர்
    அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
    கடந்ததிவ ணுலகியல்பு கடவுளர் செயலே.         270
    -------
    (பாடம்) * காதலி னமரரச ராவர்

உரை :- அடிகள் - அரசே, காதலினொடு அடைந்தவர்கள் - உள்ளன்புடன் இம்முனிவர் திருவடி யடைந்தவர்கள், அமரர் அரசு ஆவர் - தேவர்கரசராகிய இந்திரராகுவர், தமது இகழ்வின் கடந்தவர் - தமது மயக்கவுணர்வால் அறத்தின் வரம்பு கடந்த செயலை இவர்பாற் செய்பவர், கடை நரகின் வீழ்வர் - எல்லா நரகினும் கீழ்ப்பட்ட நரகத்தை யடைவர், அடைந்த நிழல்போல் - தன்னை யடைந்தவர்க்குத் தட்பம் பயந்து விகாரமின்றியிருக்கும் நிழல்போல, அருளும் முனிவும் இலர் - யாவர்பாலும் விருப்பும் வெறுப்பும் இலராவர், கடந்தது இவண் உலகியல்பு - இவர்கள் துறந்தது இம்மைக்கண் இவ்வுலக போகத்திற் செல்லும் விருப்பேயாகும், கடவுளர் செயல் – மேற்கொண்டது முனிவர்க்குரிய ஒன்றனை வேண்டலும் வேண்டாமையும் இல்லாத செயலே. எ - று.

தம்மை யடைந்தார்க்கு அறமுணர்த்தி அவரை நன்னெறிக் கண் உய்த்தலின், அவர் அந்நெறியில் அமரர் பரவும் சிறப்பெய்து வது குறித்து, "அடைந்தவர்கள்....அமரரரசாவர்" என்றும் இவர்பால் மிக்க செயல் செய்து பிழைப்போர் நரகில் வீழ்வது கூறி, அரசனுள்ளத்தை நெறிப்படுத்தக் கருதி "கடந்தவர்கள்....நரகின் வீழ்வர்" என்றும் கூறினான், கடத்தல், முன்னது அறவரம்பு கடந்து மிக்கசெயல் செய்தல்; பின்னது துறத்தல். இகழ்தற்குக் காரணமாகிய செருக்கும் அறியாமையும் மயக்குணர்வும் எல்லாமெய்த இகழ்வின் எனக் காரியத்தாற் கூறினான். அடைந்தார் அமரரரசாதற்கும், கடந்தார் நரகில் வீழ்தற்கும் காரணராதலின், இவர் விருப்பு வெறுப்புக்கள் உளபோலும் என்னும் ஐயமறுத்தற்கு, "அருளும்முனிவும் இலர்" என்றும், அவை உலகியலாய்ப் பிறவிக்கேதுவாதல் பற்றித் துறக்கப்பட்டன என்பான். "கடந்ததிவண் உலகியல்பு" என்றும், மேற்கொண்டது விருப்பு வெறுப்பற்ற மனப்பான்மை யென்றற்குக் "கடவுளவர் செயலே" யென்றும் கூறினான். வேண்டுதலும் வேண்டாமையும் இன்மை கடவுட்டன்மையாதலின், "கடவுளவர் செய"லாயிற்று.
--------

    இந்திரர்கள் வந்தடிப ணிந்தருளு கெனினும்
    சிந்தையிலர் வெந்துயர்க ளெண்ணிலகள் செயினும்*
    தத்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்
    அந்தரமி கந்தருள்த வத்தரசர் தாரோய்.         271
    ---------
    (பாடம்.) * சிந்தையிலர் வெந்துயர்கணின்னனர்கள் செயினும்.

உரை:-- தாரோய் - மாலை யணிந்த அரசே. இந்திரர்கள் வந்து - தேவருலக வேந்தர்களாகிய இந்திரர் தாமே போந்து, அடிபணிந்து - தம் திருவடியில் வீழ்ந்து வணங்கி, அருளுக‌ எனினும் - அருள் செய்க என்று வேண்டிப் பரவினாலும், சிந்தையிலர் - தம் செயலின் விளைவையோராமல், வெந்துயர்கள் எண்ணிலகள் செயினும் - கொடிய தீவினைகள் அளவிறந்தன செய்தாலும், தந்தம் வினையென்றும் - இருவகையாலும் வரும் இன்பத்துன்பங்கட்குக் காரணம் தாம்தாம் செய்த வினையே என்று நினைத்தும், நமர் பிறர் எனவும் - இன்பம் செய்தாரை நமக்குரியார் என்று உவத்தலும் துன்பஞ்செய்தாரைப் பகைவரென வெறுத்தலும், நினையார் - நினையாமலும், அந்தரம் இகந்து - விண்ணுலகத்தே பெறும் இன்பத்தை வெறுத்து, அருள் தவத்தரசர் - அருளும் தவமும் நல்கும் ஞானவின்பத்தை நுகர்ந்தொழுகும் தவவேந்தராவர் எ - று.

மேலே "அருளும் முனிவுமிலர்" என்று கூறியதனை விளக்குமுக‌த்தால் இந்திரர் பராவலும், ஏனையோர் தீமையும் எடுத்துக் காட்டி அவ்விருவினைகளையும் இம்முனிவர் கருதும் திறம் இது வென்பான் "தந்தம் வினையென்று" நினைப்பர் என்றும், "நமர் பிறர் என நினையார்" என்றும் கூறினான். இது "செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ் சோர்ந்து நாடா நிலைமை" என்பது. சிந்தித்தவழித் தாம் செய்யும் செயலின் விளைவு புலனாமாதலின், "சிந்தையிலர்" என்றான். அந்தரம், ஆகுபெயர். தவத்துக்கு அருள் உருவாதலின், "அருள் தவத்தரசர்" என்ப. இவர் "அந்தரமிகந்தருள் தவத்தரசர்" என்றது தம்மடி பணிவார் பெறும் அவ்விண்ணின்பத்தைத் தாம் பொருளாக மதியாமை யுணரநின்றது.

முனிவனைப் பணிக என வணிகன் கூறல்

    இவ்வலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
    றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்கும்
    விமையின் நின்றவர்தி ருந்தடி படிந்துன்
    வினைக்க டந்தனைவி ளங்கு*விறல் வேலோய்.         272
    ----------
    (பாடம்.) * கடந்துயிர் விளங்கும்

உரை:-விறல் வேலோய் - விறல் பொருந்திய வேலையுடையாய், இவ்வுலகில் - இவ் வுலகத்தில், எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று - எத்தகையவுயிரும் எம்முடைய உயிரையே நிகர்க்கும் என்று கருதி, அவ்வியம் அகன்று - அவற்றை புறக்கணிக்கும் மயக்கமின்றி, அருள் சுரந்து - அருள் புரிந்து, உயிர் வளர்க்கும் செவ்விமையின் - அவ்வுயிர்களைப் புரக்கும் செம்மை நெறியின்கண், நின்றவர் - நிற்கின்ற இம்மேலோருடைய, திருந்தடி படிந்து - அழகிய சரணங்களிலே மூழ்கி, உன் வெவ்வினை கடந்தனை - உன்னுடைய தீவினையாகிய அழுக்கினைப் போக்கி, விளங்கு - சீவசுத்தியினை எய்துவாயாக எ-று.

விரிந்தது தொகுத்தல் என்னும் உத்திபற்றி, மேலே விரியக் கூறிவந்தவற்றைத் தொகுத்து, மன்னுயிரைத் தன்னுயிரெனக் கருதலும், அவற்றிற்கு உறுகண் செய்யாது அருள் புரிவதும், அவற்றிற்கு அறமுணர்த்திச் செம்மை நெறிக்கண் நின்றொழுகுவித்தலும் இம்முனிவரர் கடன் என்றானாயிற்று. இத்தகைய பெரியோர் திருவடியில் மனமொன்றி வழிபாடாற்றியவழி நினைக்கும் அவ் வியல்பே யுண்டாமென்றும், அதுவே வாயிலாக நீ உயிர்க்கொலை தவிர்ந்து அவற்றை வளர்க்கும் உயர் செயலை மேற்கொண்டு, பேரின்பத்துக்குரிய உயிர்த்தூய்மை (சீவசுத்தி) எய்துவாய் என்றும் மொழிவான், "திருந்தடி படிந்து உன் வெவ்வினை கடந்தனை விளங்கு" என்றான். திருவடி அருட்கடலாதலின், அதனை வணங்குதலைப் படிதலென்றான். பிறாண்டும் "வென்றவர் சரணமூழ்கி" என்றவாறு காண்க. வினைமாசு நீங்கியவழி உயிர் தூய்மை பெறுவது குறித்து, "கடந்தனை விளங்கு" என்றான். கடந்தனை, முற்றெச்சம்.

மன்னன் முனிவனை யாவனென அறிதல்

    என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
    கன்றுசின முங்கரத லப்படையு மாற்றி
    இன்றிவனை யென்னைதொழு மாறளிய னியாவன்
    கன்றுதுகள் துன்றுகரு மேனியின னென்றான்.         273

உரை:-- என்று - எனபதாக. வணிகன் இனிது கூறும் சொல் - கலியாணமித்திரனாகிய வணிகன் இனிதாகக் கூறிய‌ சொல்லை, இகழாது - நெகிழாது மேற்கொண்டு, கன்று சினமும் - மிக்குநின்ற வெகுளியினையும், கரதலப்படையும் - கையில் உருவிப்பிடித்திருந்த வாட்படையினையும், மாற்றி - முறையே தணித்தும் உறையிற் செருகியும், இன்று இவனை தொழுமாறு என்னை - இப்போது இவனைத் தொழும் வகையாது, கன்றுதுகள் துன்று கருமேனியினன் - மிக்க புழுதி படிந்து கருத்தமேனியினை யுடையனாகிய, அளியன் - அளிக்கத்தக்க இவன், யாவன் - யாவனாகும், என்றான் – என்று யசோமதி அவ்வணிகனை வினவினான் எ - று.

கன்று சினமும் க‌ரதலத்திற் படையுமேந்தித் தீது குறித்த‌ சிந்தையனாயிருந்த வேந்தன் மனத்தில் அன்பும் முனிவன்பால் நன்மதிப்பும் உண்டாமாறு பேசியது குறித்து, "இனிது கூறும் வணிகன்சொல்" என்றும், முனிவன்பால் அறங்கேட்டற்குரிய‌ நல்லூழ் பின்னேயிருந்து ஊக்குதலால், "இகழாது" என்றும், கூறினார். சினத்தை மாற்றுதலாவது தணிவித்தல்; வாட்படையை மாற்றுதல், மறுவலும் உறையிற் செருகிக்கோடல். சுதத்த முனிவனது மேனியினைக் கண்டு அருவருத்து நின்றமை தோன்ற, "கன்று துகள் துன்று கருமேனியன்" என்றும், "அளியன்" என்றும் கூறினான். மேனியின் தோற்றத்தால் தொழுதற்குத் தன் உள்ளம் செல்லாமையைக் குறிப்பாற் காட்டுவானாய், "இன்றிவனை என்னை தொழுமாறு" என்கின்றான். கன்றல், மிகுதல்.

வணிகன் முனிவனது வரலாறு கூறல்

    இங்கலகு தொழுமுனியை யாவெனெனி னிதுகேள்
    கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
    பொங்குபுய வலியில்பொது வின்றிமுழு தாண்ட
    சிங்கமிவ னென்றுதெளி தேந்துணரின் வேந்தே.*         274
    ------------
    (பாடம்.) * தேர்ந்துணர் வின் வேந்தே; தேர்ந்துணரின் வேந்தே.

உரை:-தேந்துணரின் வேந்தே - தேன் பொருந்திய பூங் கொத்துக்களாலியன்ற மாலை யணிந்த அரசசே, இங்கே - இங்கே எழுந்தருளி யிருக்கின்ற, உலகு தொழு முனியை - அறிவுடையோர் பரவும் இச் சுதத்தமுனிவனை, யாவன் எனின் - யாவன் என்று கேடகின்றாயாயின், இதுகேள் - யான் கூறப்போகு மிதனைக் கேட்பாயாக. இவன் கங்கை குலதிலகன் - இவன் கங்கை குலத்திற்பிறந்த மேன்மையுடையன், கலிங்கபதி - கலிங்க நாட்டிற்கு அரசன், அதனை - அக் கலிங்க நாட்டினை, பொங்கு புயவலியில் - உயர்ந்த தன் தோள் வன்மையால், இவன் பொதுவின்றி முழுது ஆண்ட சிங்கம் - இவன் பொதுச்சொற் பொறாது நாடு முழுதும் தானே யாட்சி புரிந்த சிங்கம்போலும் ஆற்றலுடையனாவான், என்று தெளி - என்று தெளிவாய் அறிவாயாக எ-று.

துணர் பூங்கொத்து; ஆகுபெயர். உலகு, உயர்ந்தோர் மேற்றாதலின், உயர்ந்தோரால் தொழப்படும் முனிவனை, "உலகு தொழு முனியை" என்றான். திலகன், மேலானவன். நிலவுலகு அரசரெல்லார்க்கும் பொது வென்னுஞ் சொல்லைக் கேட்கப்பொறா துவலியுடைய தனக்கே உரியது என்னும் ஊக்கமும் உட்கோளும் உடையனாதல் தோன்ற, "பொது வின்றி முழுதாண்ட" என்றும், பகையரசர்க்கு அச்சத்தை விளைத்தலால் "சிங்கம்" என்றும் கூறினான். மேனியின் நிறமும் தவக்கோலமும் பிறவும் கண்டு கன்றிய சினமும் கையில் வாட்படையும் ஏந்தி மனம் மருண்டு நின்ற யசோதமதிக்கு அறிவுறத்துகின்றா னாதலின், "சிங்கமிவன் என்று தெளி" என்று வணிகன் செப்பினான். அரசன்பால் வியப்பு மெய்ப்படவே, கண்ட வணிகன் மேலும் சில கூறுகின்றான்.


    மேகமென மின்னுமென * வில்லுமென வல்லே
    போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
    ஆகதுற வருள்பெருகு மறெனெடத னியலே +
    போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.         275
    ------------
    (பாடம்.) * மின்னினெடு. + னயலே.

உரை:-மேகமென மின்னுமென வில்லுமென - மேகமும் மின்னும் இந்திரவில் லும்போல, போகமொடு பொருள் இளமை - முறையே போகமும் பொருளும் இளமையும், வல்லே நனி பொன்றும் என்று. விரைய மிகக்கெடும் என்று, ஆக - தெளிய வுணர்ந்தானாக, துறவு-துறவு மேற்கொண்டு, அருள் பெருகும் அறனோடு - அருள் மிகுதற்குரிய நல்லறத்தோடு, அதன் இயல் - அதனால் இயலும் பயனாகிய, போக மிகு பொன்னுலகு - இன்பம் மிகுவிக்கும் துறக்க வுலகை, புகுவன் என நினைவான்-அடைவேன் என்று அக்கலிங்கபதி நினைவானாயினன் எ-று.

மேகம் முதலிய மூன்றும் முறையே போகம் முதிலிய மூன்றற்கும் உவமை. ஆமிடத்து விரையவாகாது மெனமெலச் சிறிது சிறிதாய் ஆதலும் கெடுமிடத்து மிக விரைவில் இறப்பவும் மிகுதியாகக் கெடுதலும் இப்போகம் முதலிய மூன்றற்கும் இயல்பாதலின், "வல்லே நனி பொன்றும்" என்று கண்டான். அவ்வாறு கண்டாற்குத் துறவே துணிபொருளாய்த் தோன்றிய தென்பார், "என்றேயாக" என்றும் "துறவு நினைவான்" என்றும் கூறினார். அருளை வளர்க்கும் நல்லறம் சைன தருமமென் றுணர்ந்து அதனைக் கடைப்பிடித்தமை தோன்ற, "அருள் பெருகு மறனெடு" என்றும், அதனை மேற்கொண்டொழுகியவழி யெய்தும் பயன் துறக்கவின்பம் என்றற்கு, "அதன் இயலே போகமிகு பொன்னுலகு" என்றும் நினைத்தான். இயலும் பயனை இயலென்றே யொழிந்தார்; வழக்கின் பயனை "அன்புற் றமர்ந்த வழக்கென்ப" 1 என்றாற்போல. பொன்னுலகு நினைதற் கேது ஈதென்பார், "போகமிகு பொன்னுலகு" என்றாரென்க.
    -------------
    1. குறள். 75. (பாடம்.) * யணிதேர்.


    நாடுநக ரங்களு நலங்கொள்மட வாரும்
    ஆடுகொடி யானை அதிர் தேர்* புரவி காலாள்
    சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
    ஆடைமுத லாயினவொ டகல்கஎன விட்டான்.         276

உரை:-- நாடு நகரங்களும் - நாடு நகரங்களையும், நலம் கொள் ம‌டவாரும் - அழகுகொண்ட மகளிர்களையும், ஆடுகொடி யானையொடு - அசைகின்ற கொடியேந்திய யானைப் படையினையும், அதிர் - பகைவர்க்கு நடுக்கத்தைச்செய்யும், தேர் புரவி காலாளொடு - தேர்ப்படை குதிரைப்படை காலாட்படைகளையும், சூடு முடி மாலையொடு - தான் அணிகின்ற முடியையும் மாலையையும், குழை தொள்வளையொடு ஆரம் - காதிலணியும் குழையினையும் தோளிலணியும் வளைகளையும் மார்பிலணியும் முத்துமாலையினையும், ஆடை முதலாயினவொடு - பட்டினும் பருத்தியினுமியன்ற உயரிய உடை முதலியவற்றையும், அகல்க என விட்டான் – நீக்குமின் எனத் துறந்தொழித்தான் எ-று.

நாடு நகரங்களும் என்பதை உம்மைத்தொகையாக்காது வினைத்தொகையாக்கி உலகமுழுதும் திரண்டு ஒருங்குவரினும் வழங்கத் தவா வளமுடைமையின் ஏனை நாட்டவரும் நகரத்தவரும் விரும்பும் நகரங்களும் என்றுரைத்தலுமொன்று. நலம், இன்ப நுகர்ச்சிக்கு வேண்டும் பெண்மை நலம். மடவார், இளையமகளிர். தோள்வளை, வாகுவலயம் என்றும் கூறப்படும். ஒடுவும் உம்மையும் எண்ணுப் பொருட்டு. ஒடுவென்பது ஏனையிடத்தும் கூட்டப்பட்டது, "என்றும் எனவும் ஒடுவும் தோன்றி, ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே" என்பது தொல்காப்பியம். துறவுள்ளம் முறுகி நிற்றலின், மாலை முதலியவற்றைக் கொணர்ந்தாரை வேண்டாவென‌ விலக்கினான் என்க. விடுதல், பற்று விடுதல், முதலாயின என்புழி எய்துதற்குரிய சாரியை விகாரத்தால் நிலையாதாயிற்று.
---------

    வானவரு மண்ணின்மிசை யரசர்களு மலைமேல்
    தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
    ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுன்னிக்*
    கானமலை நாடுகள்க லந்துதிரி தின்றான்.         277
    ----------
    (பாடம்) * யுள்ளி.

உரை:-- வானவரும் - விண்ணுலகத்துத் தேவர்களும், மண்ணின் மிசை யரசர்களும் - மண்ணுலகத்து வேந்தர்களும் மலைமேல் தானவரும்-சேடி முதலிய மலைகளில்வாழும் வித்தியாதரர்களும், வந்து-தன்பால் வந்து, தொழுதவவுருவு கொண்டான்-தொழுது வணங்கும் தவவொழுக்கத்தை மேற்கொண்ட இச்சுதத்தன், மனம் ஊனம் இன்றி- மனத்திடத்தே குற்றமான நினைவு சிறிது மின்றி, உயிர்கட்கு உறுதி யுன்னி-உயிர்கட்கு உறுதியானவற்றையே நினைந்து, கானம் மலை நாடுகள்-காடும் மலையும் நாடும் முதலிய எல்லா விடங்கட்கும் சென்று, கலந்து திரிகின்றான்- ஓரிடத்தும் நிலைபேரின்றித் திரிந்தொழுகுவானாயினான் எ-று.

சுதத்தன் மேற்கொண்டிருந்த தவக்கோலத்தின் சிறப்பும் ஒழுக்கத்தின் விழுப்பமும் கூறுவான், வானவரும் தானவரும் மண்ணிடத்து வேந்தரும் வந்து தொழும் சிறப்பினை யெடுத்துக்கூறினான். நன்னினைவே நினையும் மனமுடையனாயினும், பண்டைப் பயிற்சி வாசனையால் நெஞ்சில் நினைவுவாயிலாகக் குற்றம் சிறிது முண்டாகாவாறு தன்னைக் காத்துக்கொண் டொழுகுமாறு தோன்ற, "ஊனம் மனம் இன்றி உயிர்கட் குறுதி யுன்னி" என்றும், கானம் மலை நாடு முதலியவற்றுள் ஏதேனுமோரிடத்தே நிலைத்திருப்பின் அதுவாயிலாக விருப்பு வெறுப்புக்கள் பிறந்துவிடு மாதலின், "கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான்" என்று வணிகன் கூறினான். கலந்தெனவே, ஓரிடத்தும் தங்காமை பெற்றாம்.
---------

    யானுமல தெனதுமல திதமுமல தென்னும்*
    மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
    ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே†
    ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.         278
    --------------
    (பாடம்) *னியலாதே.

உரை:- இன்மேனி-தனக்கு இனிதாய் அமைந்த மேனியானது, யானு மலது எனது மலது- யானும் அன்று எனக்கேயுரியது மன்று, இதமும் அலது-நலம் செய்வது மன்று, என்னும்-என்று கருதும், மானமுடை மாதவன்- அறிவுப்பெருமையினை யுடைய மாதவன், மகிழானாய்-அதன்பால் பற்றுச் சிறிதும் இலனாய், தனது உருவின்-தனது மேனியில், ஏனைவினைமாசு-ஏனைவினைகளாகிய குற்றத்தாலுண்டாகும் வசையினை, நிறுவாது-மேற்கொள்ளாது, ஞானவொளி நகை செய்குணம்-ஞானவொளி விளங்கச் செய்யும் நற்குணத்தாலுண்டாகும் இசையாகிய அணிகலன்களை, நாளும் அணிகின்றான்-எப்போதும் மேற்கொண்டிருப் பானாயினான் எ-று.

"உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலுமரிதே"1 என்ப வாகலின், "இன்மேனி" யென்றார். உடற்குண்டாகும் ஆக்கக் கேடுகளால் உயிர்க்கு இன்பமும் துன்பமும் உண்டாதலின், "எனது" என்றும், உயிர் நீங்குங்காறும் உடனிருந்து பின்பு பிரிதலின் "எனது" என்றும், உடலோடு கூடியிருக்குமளவும் உயிரைத் தன்னைப் பிரியவொண்ணாதபடி பற்றுச்செய்வித்தலின், "இதம்" என்றும், உடம்பு மக்களாற் கருதப்படினும் அக்கருத்தனைத்தும் பிறப்பிற் கேதுவாய்த் துன்பம் பயத்தல்பற்றி "யானுமலது எனத மலது இதமும் அலது என்னும் மானமுடை மாதவன்" என்றும் கூறினான். உடலை நிலையில் பொருளென்றறிந்து, அதுகொண்டு நிலைத்த பயனைச் செய்து கொள்ளுதலின் பெருமை பிறிதில்லை யாதலின், "மானமுடையமாதவன்" என்றார். ஏனைத் தீவினை முற்றும் பழியும் தீராவசையும் பயத்தலின், "வினைமாசு" என்றும், நல்வினை புகழும் ஞானமும் பயத்தலின், அதனை அழகு தரும் அணியாக்கி, "நாளும் அணிகின்றான்" என்றும் கூறினான். வசை என்றும் நிலைத் திருப்பது பற்றி "நிறுவாது" என்றார்.
    ---------------
    1 சீவக. 2752


    ஈடின்முனி யோகினது பெருமை யிஃதிறைவ*
    காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
    கூடுவதொ ழிந்ததுகொள்† இன்றுகொலை வேலோய்
    நாடுவதென் ஞமலி யிவை நணுகலகண் காணாய்‡         279
    ---------
    (பாடம்) *யெனிலிறைவ † தொழிந்தது கொல்
    ‡ யிவனல்லுறவு காணாய்; யிவை நணுகலர்கள் காணாய்.

உரை:- இறைவ-அரசே, ஈடுஇல் முனி-ஒப்பற்ற இச்சுதத்த முனிவனது, யோகினது பெருமை-யோகத்தின் பெருமை, இஃது-இத்தன்மையாகும், கொலைவேலோய்- உயிர்களைக்கொல்லும் வேலையுடைய வேந்தே, காடுபடு கொலையினொடு-காட்டிடத்தே செய்த உயிர்க்கொலையால் உண்டாகிய, கடிய வினை-துன்பம் தரும் தீவினையானது, இன்று கூடுவதொழிந்தது கொள்-இப்போது நீ இம்முனிவனைக் கண்டதனால் நின்னை வந்தடையாது ஒழிந்ததென்று கொள்வாயாக, நாடுவது என்-இனி வேறு பல நினைவது வேண்டா, ஞமலி இவை நணுகல-நீ ஏவிய நாய்கள் இம் முனிவனை நண்ணாவாயின, கண்காண்-அவற்றை நின் கண்களாலே நன்கு காண்பாயாக எ-று

இம்முனிவன்பால் யசோமதியை ஆற்றுப்படுத்து அவன் கூறும் அறத்தால் நன்னெறிப்படுத்தும் கருத்தின னாதலின், கலி யாண மித்திரன் "ஈடின்முனி யோகினது பெருமை இஃது" என்று முன்மொழிந்து கொண்டு, அவனைக் கண்ட காட்சியால் வரும் பயன் இது வென்பான் "காடுபடு கொலையினொடு கடிய வினை நின்னைக் கூடுவ தொழிந்தது கொள்" என்றான். ஒடு, ஆனுருபின் பொருட்டு. தன் கூற்றினை யசோமதி இனிது ஏற்றுக் கோடற்கு, யான் கூறுவதைத் துணிதற்குச் சான்று வேறு விரும்ப வேண்டா என்பான் "நாடுவதென்" என்றும், தீங்கு செய்யப் போந்த நாய்க்கூட்டம் அதுசெய்ய நணுகமாட்டாது சேய்மைக்கண் நின்றொழிந்தமையே போதிய சான்றாம் என்றும் அதனை நீ நின்கண் ணெதிரே காண்கின்றாய் என்றும் கூறுவான் "ஞமலியிவை நணுகல" என்றும் "கண்காணாய்" என்றும் கூறினான், கண்காண் என்றது காட்சியளவை காட்டியவாறு,

யசோமதி முனிவன் திருவடியில் தன் தலையையரிந்து பலியிடக் கருதுதல்

    என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்*
    சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
    இன்றெனது பிழைதணிய என்றலை யரிந்தே
    நின்றமுனி சரணிடுவ‡ லென்றுநினை கின்றான்.         280
    ---------------
    (பாடம்) *வியப்ப. † சரணினிட.

உரை:- என்று-என்பதாக, அவன் உளம் கொள- யசோமதியின் மனம் ஏற்குமாறு, இயம்பினன்-சொல்லிய கலியாண மித்திரன், இயம்ப-முனிவனை வணங்குமாறு உரைக்க, சென்று-அருகே சென்று, திருவடிமலர்கள் சென்னிமிசை யணியா-முனிவனுடைய அழகிய பாதமாகிய தாமரைப்பூவை வணங்கித் தன் தலையில் சூடிக்கொண்டு, இன்று-இப்போது, எனது பிழை தணிய-என் குற்றமெல் லாம் நீங்க, என்தலை அரிந்து- என்னுடைய தலையை யறுத்து, நின்றமுனி-தவநெறியில் சலியாது நின்ற சுதத்த முனிவனுடைய சரண் இடுவல்-திருவடியில் வைப்பேன், என்று நினைகின்றான்-என்று யசோமதி நினைப்பானாயினன். எ-று

இயம்பினன், வினைமுதல்மே னின்ற வினைப்பெயர். இயம்பக் கேட்டதும் யசோமதி முனிவனடிகளை வணங்க நினைத்தலின், வணங்குமா றுரைத்தானென்று உரைக்கப்பட்டது. திருவடியை மலராக உருவகம் செய்தமையின், வணக்கத்தைச் சென்னிமிசை யணிதலென்றார். உயிர்க்கொலையே செய்து கன்றிய உள்ளமுடைய மறவேந்தனாதலின், தலையரிந்து வழிபடும் மறவர் போலவே நினைப்பான் "என்தலை யரிந்து நின்றமுனி சரணிடுவல்" என்று நினைக்கின்றான். "நின்றமுனி" யெனவே, தவயோகத்தில் சுதத்தன் சலிப்பின்றி நிற்குமாறு பெற்றாம். இவ்வாறு நினைத்த வேந்தன் தன் உடைவாளை யுருவத் தொடங்குதலின், அவன் கருத்து வணிகன் நன்கு அறிந்துகொள்ளத்தக்க நிலையில் மெய்ப்பட்டமை கண்டு, அவன் மேலும் சிலகூறி அரசன் கருத்தை மாற்றுகின்றான்; அதுவரும் செய்யுளிற் கூறப்படுகிறது.

கலியாணமித்திரன் தடுத்துரைத்தல்

    இன்னது நினைந்ததிவ னின்றுகை யெடுத்தே
    மன்னநின் மனத்தது விடுந்திடு மனத்தில்
    தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக வானால்
    நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.         281

உரை:- இவன் நினைந்தது இன்னது-இவ் யசோமதி நினைத்தது இத்தன்மைத்தாகும், என்று-என்று வணிகனான கலியாணமித்திரன் உணர்ந்து, கையெடுத்து-கையெடுத்துத் தொழுது தடுத்து, மன்ன-வேந்தே, நின்மனத்தது விடுத்திடு-நின்மனதில் நினைத்த எண்ணத்தை விட்டொழிப்பாயாக, மன்னுயிர்-உலகில் நிலைபெறும் உயிர்களை, மனத்தில் தன் உயிரின் வளர்க்கை-மனதில் தன்னுடை உயிர் போலக் கருதிப்பேணி வளர்ப்பது, தகவு-தகுதியாகும். ஆனால்-அவ்வாறாயின், நீ நின் உயிரைக் களையின்-நீ நின்னுடைய உயிரைப் போக்குவாயாயின், இன்னருள் அது என்னாம்-பின்பு நீ செய்தற்குரிய இனிய அருட்செய்கையானது எவ்வாறு இயலுவதாம் எ-று

யசோமதி தன் தலையை யரிந்து முனிவன் திருவடியி லிடக் கருதிய கருத்தைத் தெளிய வுணர்ந்துகொண்டமையின் "இன்னது நினைந்த திவன்" என்றும், அச்செயலைத் தடுத்தலினால் "கையெடுத்து நின் மனத்தது விடுத்திடு" என்றும் கூறினான். தான் செய்த குற்றமெல்லாம் கெடவேண்டினன், அரசன் அருளறம் மேற்கொள்வதே தக்கதென்கின்றா னாகலின் "மனத்தில் தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கை தகவு" என்றும், அதனைச் செய்யும் வினைமுதல் நீ யாதலின், நீ நின்னுயிரைப் போக்கிவிடின், அருள்வினை யின்றாகி, நின்கருத்தும் நிறைவெய்தா தென்பான் "இன்னருள தென்னாம்" என்றும் கூறினான். இரட்டுற மொழிதலால் நின்னருளது என்று கொண்டு நினக்குரிய அருட்செய்கை இன்றாதலின், அதனால் ஒருபயனும் இன்றாம் என்று உரைத்துக்கொள்க.

வணிகன் மேலும் சில கூறல்

    முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
    பின்னுமிகை பிறவுமுள* பேசுதிற நினைவுந்
    துன்னுவயின்† முன்னிது துணிந்துபிழை தூராய்
    பின்னுநினை கின்றவிது பீழைபெரி தென்றான்.         282
    -----------
    (பாடம்) *பிறவுமுரை. † துன்னுயிரின்.

உரை:- முன்னம் உரைசெய்த பொருள் முடிந்திலது.- முன்னே யான் சொல்லிய பொருள் இன்னும் முடியவில்லை. முடிய-சொல்லிமுடித்தற்கு, பின்னும் மிகை பிறவும் உள- சொல்லிய அப்பொருட்கும் மிகுதியாக வேறு பலவும் உள்ளன, பேசுதிறம் நினைவும் துன்னுவயின் முன்-வாயாற் பேசும் சொல்லும் மனத்தால் நினையும் நினைவும் ஒன்றுசேரு முன்னே, இது துணிந்து-இவ்வுயிர்க்கொலையைச் செய்யக் கருதி, பிழை தூராய்-பண்டைப்பாவத்தைப் போக்காயாயினை, பின்னும் நினைகின்ற இது-பின்னரும் நீ நின் தலையையரியக் கருதும் இக்கருத்து, பீழை பெரிது என்றான்-மிகவும் துன்பம் பயக்கும் தீவினையாகும் என்று சொன்னான் எ-று முன்பு, முனிவனது தவப்பெருமை யீது என்றும், அவனுடைய காட்சிச்சிறப்பால் அரசனுடைய தீவினை நீங்கின என்றும் அதற்கு அவனேவிய நாய்கள் முனிவனை நணுகாமை தக்க காட்சியளவை யாமென்றும் கூறி இனிச் செய்யத்தகுவனவும் பிறவும் கூறிமுடிக்கு முன்னே அரசற்குச் சூழ்ச்சி பிறந்தது மெய்ப்பட்டமை கண்டு தன் பேச்சு நெறிமாறியது கூறுவான், "முன்ன முரை...பிறவுமுள" என்றும், இப்பேச்சு முடிவில் அரசன் தான் செய்யத்தக்கதனை வாய்விட்டுச் சொல்லிச் செயல்வகை யாராய்ந்து துணிவதுவேண்டு மென்றற்கு, "பேசுதிறம் நினைவும் துன்னுவையின் முன் இது துணிந்து" என்றும் கூறினான். எண்ணும்மை விகாரத்தால் தொக்கது. இத்துணிவு, மேலும் உயிர்க்கொலையாய்ப் பண்டு செய் திருந்த பாவத்தை மிகுதிப்படுத்துதலின், "பிழைதூராய்" என்றான்.பாவம் உயிரைக் கீழ் நோக்கித் தள்ளுதலின், "தூராய்" என்றான். தூர்தல், அடைத்தல். "பின்னும் நினைகின்ற இது" என்றது கூறியதுகூற லாயினும், "பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்" டாதல்பற்றி, நியமித்தவாறு. பீழை, துன்பம்.

மன்னன் தெளிந்து முனிவனைப் பரவுதல்

    மன்னவன் மனத்தை விடுத்தருள்* வளர்க்குஞ்
    சொன்னவில் சுதத்தமுனி துணைமல+ ரடிக்கண்
    சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
    பன்னியரு விறைவவெமர் பவமுழுது மென்றான்.         283
    ----------
    (பாடம்,) * விரித்தருள் + தொன்மலர், துணைமலர்.

உரை:- மன்னவன் - வேந்தனாகிய யசோமதி, மனத்ததை விடுத்து - தன் மனத்தில் நினைத்த எண்ணத்தை விட்டொழித்து, அருள் வளர்க்கும் சொல் நவில் சுதத்தமுனி - அருளாகிய அறத்தை மிகுவிக்கும் சொற்களையே சொல்லும் இயற்கையுடையனாகிய சுதத்த முனிவனுடைய, துணைமலர் அடிக்கண் - தாமரைபோலும் இரண்டு திருவடியிலும், சென்னி முடி துன்னுமலர் சென்று உற வணங்கி - தலையில் சூடிய முடியிற்கொண்ட பூவானது முனிவன் திருவடியிற் சென்று பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, இறைவ - பெருமானே, எமர் பவம் முழுதும் - எம்முன்னோ ரடைந்த பிறப்பு வகை முற்றும், பன்னியருள் என்றான்-உரைத்தருள்க என்று வேண்டிநின்றான். எ-று.

வணிகன் கூறியவற்றை உளங்கொளக் கேட்டுத் தெளிவெய் தினமையின், "மனத்தை விடுத்தான்" என்றார். எவ்வுயிர்க்கும் அருளே நினைதலும் செய்தலும் உடையனாதலின், முனிவனை, "அருள் வளர்க்கும் சொல் நவில் சுதத்த முனி" என்றார். சொல் மேல் வைத் தோதினாராயினும் ஏனை நினைவு செயல்களும் கொள்ளப்படும் என்க. தன் தன்மையின்றி அம்முனிவன் செய்யும் அருள் வயத்த னானமை தோன்ற "துணைமலரடிக்கண்........வணங்கி"னான் என வுணர்க. அறங்கேட்கின்றமையின், "இறைவ" என்றும், தன் முன்னோர் செய்த செய்வினைப்பயனை யறிதல் வேட்கையுடையனாதலின் "எமர் பவம் முழுதும் பன்னியருள்" என்றும் வேண்டினான். பன்னியருள், ஒரு சொல்லாய் உரைக்க என்னும் பொருள் பட நின்றது. இஃது உயர்சொல்.

முனிவன் அசோகன் எய்திய பிறப்பினைக் கூறுதல்

    ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை
    வாங்கியவ னுணரும்வகை வைத்தருள்செய் கின்றான்
    ஈங்குமு னியற்றிய தவத்தினி னசோகன்
    ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.         284

உரை:-ஆங்கு-அப்பொழுது, முனி-சுதத்த முனிவன், அவதியின் அறிந்த பொருளதனை வாங்கி-அவதி ஞானத்தாலே அறியப்படுவதாயிருந்த முற்பவப்பொருளையுணர்ந்து, அவன் உணரும் வகை வைத்து-யசோமதி நன்கு உணர்ந்து கொள்ளும் முறையில் வகுத்தமைத்து, அருள் செய்கின்றான்- உரைப்பானாயினான், ஈங்கு-இவ்வுலகத்தே, முன் இயற்றிய தவத்தினின்-முன்னே செய்த தவத்தின் பயனாக, ஓங்கு புகழ் அமருலகம் ஒன்றினுள்-முதற்கண் உயர்ந்த புகழையுடைய தேவருலகங்கள் ஒன்றினுள்ளே, அசோகன் உவந்தான்-அசோகனாகிய மன்னன், இன்புற்றிருந்தான் எ-று.

அவதி, சம்மியஞானவகை ஐந்தனுள் ஒன்று. அவை மதி ஞானம், சுதஞானம், அவதிஞானம், மனப்பரியயஞானம், கேவல ஞானம் என்பனவாகும். விகலம், தூலம், சகல நிச்சயம் எனவரும் வகை மூன்றனுள், இந்த அவதி ஞானம் விகலத்தின் பாற்படும் என்பர். இந்த ஞானத்தால் இறப்பில் நிகழ்ந்தனவும், எதிர்வில் நிகழ்வனவும் அறியப்படுதலால், இதனைக் காட்சியறி வென்றும் கூறுவர். பண்டை நிகழ்ச்சிகளை நிரலே எடுத்துக்கேட்கும் வேந்தன் மனம் தெருண்டு அருளறம் மேற்கொள்ளத்தக்க நெறியின்கண் வைத்து ஓதுகின்றா னென்பார் "பொருளதனை வாங்கி அவனுணரும் வகை வைத்தருள் செய்கின்றான்" என்றார். அறிந்த, அறியப்படுவதாயிருந்த வென்பது. அமருலகத்தை இந்திரபடலமென்றும், அஃது அறுபத்து மூன்று வகைப்படுமென்றும் கூறுபவாதலின், அவற்றுள் ஒன்றி லெய்திய அசோகனை "ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்" என்றார்,. "அந்தரத் தறுபத்து மூன்றதாகிய இந்திரப் படலமும்"1 என்று சான்றோர் கூறுவது காண்க. நல்வினை யாற்றிப் புகழெய்தினோ ருலக மென்றற்கு "ஓங்கு புகழமருலகம்" என்றாரென வுணர்க. உவந்தான் என இறந்த காலத்தாற் கூறியதனால் முதற்கண் என்பது வருவிக்கப்பட்டது.
    ---------------
    1. மேரு 91.

அசோகன் பின்பு பிரமகற்பத்தில் இனிதிருத்தல்

    அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்
    பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்தும்
    திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோ
    டருமையில னகமகிழ்வி னமருமவன்* மாதோ.         285
    ---------
    (பாடம்) *மகிழ்வின் மருவுமன்

உரை:- அவன்-அசோகன், அருமணியின் ஒளி திகழும் அமரனவன் ஆகி-கிடைத்தற்கரிய மாணிக்க மணியினது ஒளி வீசும் தேவனாகி, பிரமன் உலகதனுள்-பின்பு பிரமகற்பத்தில், மிகைபெறு கடல்கள் பத்தும்-மிகுதியாகப்பெற்ற வாழ் நாட்கள் பத்துக்கடற்காலம், திருமணிய துணை முலைய தெய்வ மடவாரோடு-அழகிய மணிமாலை யணிந்த இரண்டாகிய முலையினையுடைய தெய்வமகளிருடன், அருமையிலன்-போக நுகர்ச்சிக்கண் அருமை சிறிது மின்றி மிக்க, அகமகிழ்வின் அமரும்-மனமகிழ்ச்சியோடு விரும்பியுறைவானாயினான் எ-று.

தேவர்கள் செம்மணிபோலும் நிறமுடைய மேனியராகலின், "அருமணியின் ஒளி திகழும் அமரனவனாகி" என்றார். "ஒளியுமிழ்ந் திலங்கு மேனி பரிதியி னியன்ற தொக்கும்"2 என்று தேவரும் கூறுவர். தேவருலகத்துச் சௌதர்ம கற்பமுதலாகக் கூறப்படுவனவற்றுள், நான்கு லட்சம் விமானங்களையுடைய பிரமகற்பத்தில் அசோகன் இருந்தான் என்க.
    ----------
    2 சீவக 2800

மூவகை யோகங்களும் முற்றி நால்வகை ஆராதனை தியானத்தால் உடம்பு நீங்கி அமரருலகு புகுவோர் பிரமகற்பம் புகுவரென்பது [1] சைன நூன் முடிபு. பிரம பிரமோத்தர கற்ப தேவர்களுக்கு ஆயுள் பத்துக்கடலாகும். கடலென்பது சைன நூல்களிற் காணும் கால அளவு. "அயனம் ஆண்டு, பணையுகம் பூவம் பல்ல பவ்வமே யனந்த மீறாக், கண்முதற் காலபேதம்" [2] என வருவது காண்க. மகளி ரின்பத்தில் திளைத்துக்கொண்டிருத்தலை, "முன்செய்நல் வினையினால் முகிலின் மின்னனார், இன்செய்வாயவரேந்து கொங்கையர், வந்திடைச் சூழ்ந்திட வணங்க வானவர், அந்தமி லின்பத்து ளமரன் மேவினான்" [3] என்று மேருமந்தர புராணம் கூறுமாறு காண்க. திருமணிய, துணைமுலைய என்பன குறிப்புப் பெயரெச்சங்கள். மகளிரின்பம் எளிதிற் பெறுவதன்றாகலின், அதனை இனிது எளிதிற் பெறும் அசோகனை "அருமையிலன்" என்றார்; "அஞ்சொல் மடவார்தம் மார்வக் களிபொங்க, நெஞ்சத் தயிலேற்றும் நீள்வெங் கழுவூர்ந்தும், குஞ்சிக் களியானைக் கோட்டழ லுட்பட்டும், துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே" [4] எனச் சான்றோர் கூறுவது காண்க. மாதும் ஒவும் அசை.
    ------------
    1. மேருமந். 375. 2. மேரு. 94.
    3. மேரு. 511. 4. சீவக. 2792.

அமிர்தமதியின் பிறப்புநெறி கூறுதல்

    வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சின்*
    துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
    அஞ்சின்மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்
    நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.         286
    ----------
    (பாடம்.)* யெஞ்ச

உரை:- நாம நகை வேலோய் - அச்சம் பொருந்திய ஒளி வீசும் வேலையுடைய வேந்தே, வஞ்சனையில் - வஞ்சனையாக, மன்னவன் - வேந்தனாகிய யசோதரனை, அன்னையுடன் - அவன் தாயாகிய சந்திரமதியுடனே, நஞ்சில் துஞ்சும் வகை சூழ்ந்து - விடத்தால் இறக்குமாறு உண்பித்து, தொழு நோய் முழுதுமாகி - உடல் முழுதும் குட்டநோ யுற்று, அருநரகில் - நீக்குதற்கரிய நரகத்திலே, நஞ்சனைய வினை நலிய - தான் உண்பித்த விடத்தைப்போலும் தீவினையானது வருத்த, அம் சில் மொழி யமிர்தமதி - அழகிய சிலவாய சொற்களையுடையளான அமிர்தமதியானவாள், வீழ்ந்தாள் - வீழ்ந்து வருந்தவாளாயினாள் எ-று.

வஞ்சனையாக நஞ்சூட்டித் தன் கணவனான யசோதரனையும் அவன்தாய் சந்திரமதியையும் கொன்றதைக் குறித்து, "நஞ்சில் துஞ்சும் வகை சூழ்ந்து" என்றார். காரணம் காரியமாக உபசரிக்கப் பட்டது. அச்செயலின் விளைவு தொழு நோயாய் இம்மையில் வருத்திற் றென்றற்கு, "தொழுநோய் முழுதுமாகி" என்றும், மறுமையில் நரகடைந்தா ளென்றற்கு, "நஞ்சனைய வினைநலிய" "அருநரகின் விழ்ந்தாள்" என்றும் கூறினார்."அஞ்சின்மொழி யமிர்தமதி" யென்றது குறிப்பால் சொல்லிற் சின்னமையுறினும் தீய நினைவு செயல்களிற் பன்மையுண்மை தோற்றுவித்து இகழ்வு புலப்படுத்திற்று.

நரகவகைகளை முனிவன் வேந்தற்குக் கூறுதல்

    இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்
    மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே
    வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசைப்பத்*
    தெருளியெழு+ வகைநரக குழிகளிவை தாரோய்.         287
    ------------------
    (பாடம்) *மிசையத். + தெருளினெழு.

உரை:-தாரோய் - மாலையை யணிந்த வேந்தே, வெருள் செய்வினை தருதுயரம் - மயக்கத்தைச்செய்யும் திவினைகள் பயக்கும் துன்பம், விளையும் நிலம் இசைப்பத் தெருளி - வந்து வருத்தும் இடங்களை யாம் சொல்லக்கேட்டுத் தெளிந்து கொள்வாயாக, நரக குழிகள் இவை - நரகக்குழிகளாகிய இவை, எழுவகை - ஏழுவகைப்படும், இருளின் இருள் - தமத் தமப்பிரபை, இருள் - தமப்பிரபை,புகை- தூமப்பிரபை, அளறு -பங்கப் பிரபை மணல் - வாலுலப் பிரபை, பரலின் - பரற்கற்களாகிய சர்க்கராப் பிரபை மருள்செய் உருவின் பொருளின்-கண்டார்க்கு மயக்கத்தைச் செய்யம் இரத்தினங்கள் நிறைந்த அரதனப்பிரபையென வருபெயரும் அவை - வரும் பெயரும் அவற்றிற்கு அவையே யாம் எ-று.

ஒளியாலும் வன்மையாலும் பன்மையாலும் தன்பாலடைந்தார்க்கு அரதனம் போலப் பெருமயக்கத்தைச் செய்தலின், அரதனப் பிரபையை, "மருள்செ யுருவின பொருளின்" என்றார். உருவின என்பதையே அரதனப்பிரபைக்கு ஏற்றி, பொருளின் என்பதற்கு இருளின் இருள் முதலியன தமத்தமப்பிரபை முதலியவற்றில் உள்ளபொருள் இப்பொருள்களே என்று உரைத்தலுமாம். பிரபை, வட்டம். ஓடு, எண்ணோடு. இன், சாரியை. வெருள், மயக்கம்; "வெருளி மாந்தர்" 1என்றாற்போல. தெருளி, முன்னிலைக்கண் வந்தது. இகரம், விகுதி.பிறாண்டும் "தின்னி" (293) என்றதற்கும் இதுவே கூறிக்கொள்க; இவை தெருடி, தின்றியென நிற்றற்பாலன. இங்கே கூறிய நரகவகைகளை, "ஏழுள நரகம் நாம மிரதனஞ் சர்க்கவாலு, வாழிய பங்கந் தூமந் தமந்தமத் தமத்தமாகும்" 2 என்பதனாலுமுணர்க.இவற்றின் இயல்பை யறிந்தால் யசோமதி தீவினை செய்ய நினையான் என்பதுகொண்டு, "இசைப்பத்தெருளி" யென்றார்; பிறசான்றோரும், "மாற்றுதற்கரிய துன்பம் பெரி தென்று மயங்கவேண்டா, மாற்றுதற் கெளிது கீழ்கீழ் நரகத்தவ்வியல் பறிந்தால்" 3 என்று கூறுதல் காண்க.
    ------------
    1. சீவக. 73. 2. மேரு. 936. 3.மேரு.935.

அமிர்தமதி தூமப்பிரபையில் வீழ்ந்து வருந்துந்திறத்தை முனிவன் கூறல்.

    மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்ப
    நீரெனவு ருக்கிடுநி லப்புரைய* வைந்தாம்
    ஒரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தாள்
    ஆருமில ளறனுமில ளமிர்தமதி யவளே. ++         288
    --------------
    (பாடம்.) * நிவப்புடைய ++ யன்றே.

உரை:- அமிர்தமதியவள் - அமிர்தமதி யாகிய அத்தீவினையாட்டி, ஒரின் - ஆராயுமிடத்து, ஆரும் இலள் - அந்நரகில் தனக்கு ஒப்பாவார் ஒருத்தருமின்றி, அறனும் இலள் - அறத்தின் துணைதானும் இன்றி, மேருகிரி யுய்த்திடினும் - மேருமலையைக் கொணர்ந்து தன்கண் இட்டாலும், வெப்பமொடு - வெப்பத்தால், தட்ப நீரென உருக்கிடும் - குளிர்ச்சியை யுடைய நீர்போல உருக்கிவிடத்தக்க, நிலப்புரைய - நிலங்களாகிய புரைகளையுடைய, ஐந்தாம் புகையுறு நரகின் - ஐந்தாவதாகிய புகைமிக்க தூமப்பிரபை யென்னும் நரகில், உருகியுடன் வீழ்ந்தாள் - வீழ்ந்து வேகலானாள் எ-று.

பனிமூடிக் குளிர்ச்சி மிகுந்து உறைப்புண்டு சலிப்பின்றித் திண்ணிதாயிருக்கும் மலைகட்குத் தலையாய மலையாயினும், மேருமலை நிலைபெயர்ந்து தன்கண் வீழ்ந்தால், தன் வெப்பத்தால் அதனை நீராய் உருக்கிவிடும் என்றது, தூமப்பிரபையின் வெப்பமிகுதி யுணர்த்தியவாறு, நரகமொவ்வொன்றிற்கும் பலபுரைக ளுண்மையின், "புரைய" என்றார். இதனியல்பை, "மேருநே ரிருப்பு வட்டை யிட்ட வக்கணத்தி னுள்ளே, நீரென வுருக்குஞ் சீதவெப்பங் கணின்றகீழ்மேல், ஆர்வமி லறிவன் தந்த நூலின்ஐந் தாவதன்னிற், கார்முகில் வண்ண‌ சீத வெப்பங்க ணின்ற கண்டாய்"1 என்பதனால் உணர்ந்து கொள்க. அமிர்தமதிக்கு நிகராக மிக்க தீவினை செய்தார் பிறர் இலர் என்பதற்கு "ஆருமிலள்" என்றும், அறம் சிறிதேனும் இருந்திருப்பினும் அக்கொடிய நரகு புகுதற்கு ஏது இராது என்பார், "அறனுமிலள்" என்றும் கூறினார். அமிர்தமதியாகிய அவள் என்புழிச் சுட்டு,அவள் செய்த தீவினையைச் சுட்டி நின்றது.
    -------------
    1. மேரு. 945.

அவளெய்திய நரகவேதனையைக் கூறுதல்

    ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்
    சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்
    போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்
    மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.         289

உரை:-- ஆழ்ந்த குழி வீழ்ந்தபொழுது - ஆழமான அந்நரகக்குழியில் அவள் வீழ்ந்தபோது, அருநரகர் - விலக்கற்கரிய‌ நரகவீரர், ஓடி - ஓடிப்போய் அவளைப் பிடித்து, சூழ்ந்து - பலராய்க்கூடி, துகையா - உதைத்துமிதித்து, எரியுள் இட்டனர்கள் சுட்டார் - நெருப்பினிட்டுத் சுட்டார்கள், புண்பெருக‌ போழ்ந்தனர்கள் - அவளுடலிற் புண்ணுண்டாமாறு வாளாற் பிளந்தார்கள், வன்தறி புடைத்தார் - வலிய கம்பத்தால் அவளை யடித்தார்கள், மூழ்ந்த வினை - தாம் செய்துமுற்றிய‌ வினை, முனியுமெனின் - தம்மை வெறுத்துப் பகைக்குமாயின், முனியலரும் உளரோ - வெறாதவரும் உண்டோ, இல்லை, எ - று.

ஐந்தாம் நரகமாதலின், ஆழ்ந்தகுழி யெனப்பட்டது. நரகத் துன்பம் கழியுங்காலத் தன்றிப் பிறாண்டு எவ்வழியும் விலக்குறாது ஒறுக்கும் இயல்பினராதல் தோன்ற "அருநரகர்" என்றார். தீயிட்டுக் கொளுத்தலும், வாளாற் போழ்தலும், தறியாற்புடைத்தலும் நிரலே கூறியது, அவளுற்ற துன்பம் கூறுமாற்றால் யசோமதியை நன் னெறிப்படுத்தற்கு; அவன் மனத்தை வருத்துதற் கன்று; "அருள் வளர்க்கும் சொன்னவில் சுதத்தமுனி" அது செய்யாரெனவுணர்க. தம்முயிர்க்கு இன்பந் தருமெனச் செய்த தீவினை அது தாராது துன்பந்தருதலின், "மூழ்ந்த வினை முனியின்" என்றும், ஒருவற்கு அவன் செய்வினைபோலப் பயன் விளைப்பதில் ஒருவரும் நிகராதல் முடியாமையின் அதனிற் சுற்றம் சீரியது பிறிதில்லை யென்றும், அச்சுற்றமில்லார்க்குச் சுற்றமென்பதே இல்லையென்றும் கூறுவார். "முனியலரும் உளரோ" என்றும் கூறினார். முழுதென்னும் சொல் மூழ்த்தென வினையாகி, எதுகைநோக்கி மெலிந்து நின்றது. உம்மை, சிறப்பு. ஓகாரம், எதிர்மறை.
-------

    செந்தசைகள் வெந்தனகன் தின்றனைமு னென்றே
    கொந்தழலில் வெந்துகொது கொதுவெனகொ திக்கும்
    செந்தழலி னிந்திரர்கள் செம்புகள் திணிப்ப
    வெந்தழலி னைந்துருகி* விண்டொழுகு முகனே.         290
    -------------
    (பாடம்)*(துருகும்)

உரை:-முன் - இறப்பதற்கு முன்னே, செந்தசைகள் வெந்தனகள் தின்றனையே என்று - செவ்விய வூன்களை வேகவைத்துத் தின்றா யன்றே என்று சொல்லி யிகழ்ந்து, செந்தழலின் இந்திரர்கள் - சிவந்த நெருப்பைப்போலும் தலைவர்கள், கொரந்தழலில் வெந்து - கொத்தாக மிக்கெழும் நெருப்பில் வெந்து, கொது கொது வெனக் கொதிக்கும் - கொது கொது வென்று கொதிக்கின்ற, செம்புகள் திணிப்ப - செப்புத் துண்டங்ளையெடுத்து அவள் வாயிலிட்டுத் திணித்தார்களாக, வெந்தழலின் - அவற்றின் மிக்குற்ற வெப்பத்தால், நைந்து உருகி விண்டு முகன் ஒழுகும் - அவளுடைய முகம் வெந்து நீராயுருகித் தலையினின்றும் ஒழுகுவதாயிற்று எ-று.

நரகவீரர்கட்குத் தலைவர் நெருப்புப்போலும் நிறமும் வெம்மைப்பண்பும் உடையாராதல் தோன்ற, "செந்தழலின் இந்திரர்கள்" என்றார். இந்திரர், தலைவர்; இவர்கள் நரகலோகத்தே வாழும் நரகவீரர்கட்குத் தலைவர்போலும். செப்புத்தடிகள் ஊன்தடிபோல இருத்தலின் அவட்கு ஊனுணவாக இவர்கள் அவற்றைக் கொதிக்கக் கொதிக்க வேகவைத்து வாயில் திணித்தார்கள் என்க. அவ்வெப்ப மிகுதியை யாற்றாமையால் முகம் உருகி நைந்தாள் என்பார், "வெந் தழலின் நைந்துருகி விண்டொழுகும் முகனே" என்றார். என்றே யென்புழி ஏகாரம் பிரித்து கூட்டப்பட்டது. முகனே என்புழியஃது ஈற்றசை.
-------

    கருககருக ரிந்தனள் கவின்கொளொரு* பாவை
    பெருகெரியி னிட்டுருக விதுபெரிது மினிதென்+
    றருகணைய நுதந்துதலு மலறியது தழுவிப்
    பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.         291
    ------------
    (பாடம்)*ளுருவினெரு; கவினுரு; கருவினெரு.
    +பெரிதுமினிதே யென்று, மிதுவுமினிதே யென்று

உரை:-கருகரு கரிந்தனள் - நரகத்தீயால் மிகக் கரு கருத்துத் தீய்ந்தவளான அமிர்தமதியை, கவின்கொள் ஒரு பாவை-அழுகுகொள்ளச்செய்த ஒரு ஆண் பாவையைக்காட்டி, பெருகு எரியின் இட்டு - அதனை மிக்கெழுந்தெரிந்த தீயிலிட்டுக் காயவைத்து, உருக - உருகி நெகிழும் பதத்தில், இது பெரிதும் இனிது என்று - இது தழுவுதற்கு உனக்கு இனிதாயிருக்குமாகலின் தழுவுக என்று சொல்லி, அருகு அணைய நுந்துதலும் - அதனருகேசென்று தழுவுமாறு நரகவீரர் அவளைத்தள்ளவும், அலறி - ஓலமிட்டழுது, அது தழுவி- அதனை யவர் சொல்லியபடி தழுவி, உடலம் எல்லாம் - அவள் உடம்பெல்லாம், பொரு பொரு பொரிந்து - பொருபொரு வெனப் பொரிந்து, பொடியாம் - பொடியாய் விழுகின்றாள் எ-று.

முன்பே, "எரியுள் இட்டனர் சுட்டார்"(289) களாதலின் வெந்து கரிநதுகிடந்த அவள் நிலையினை, "கருகரு கரிந்தனள்" என்றார். பிறனை விழைந்து அறம் பிழைத்தாளாதலின், அப்பாவங் குறித்து ஒறுப்பார், அழகிய ஆடவனொருவனைப்போல உருவமைத்து நெருப்பிலிட்டுச் சிவக்கக் காய்ச்சி அதனைத் தழுவுக என்று நரக வீரர் உரைத்தபொது, அவள் அஞ்சிநின்றாளாக அதுகண்டு வெகுண்டு அதனை அவளைத் தழுவுமாறு வற்புறுத்தியது தோன்ற, "இது பெரிதும் இனிதென்று அருகணைய நுந்துதலும்" என்றார். அட்டபங்கனது கூட்டத்தை விரும்பி யொழுகிய நினக்கு இது மிக இனிதாமென்பார், "இது பெரிதும் இனிது" என்று நரகவீரர் சொல்லிப் பழித்தார் என்றார். அதனைத் தழுவியதன் பயனாக, அவளுடலம் முழுவதும் வெந்து பொடியாயிற் றென்பார், இத்துணை யொறுத்தலுக்கும் அவளுடல் உயிரின் நீங்காது ஒன்றியிருத்தலின், அவ்வொற்றுமை குறித்து "பொடியாம்" என்றார். கருகரு, பொரு பொரு என்பன இரட்டைக்கிளவிகள்; முன்னே கொது கொது வென்றது மது.

அவளை நஞ்சுண்பித்தமை கூறல்

    நாவழுகி வீழமுழு* நஞ்சுண மடுத்தார்
    ஆவலறி யதுவுருகி யலமரினு மன்னோ
    சாவவரி திவணரசி தகவில்வினை தருநோய்
    யாவும்விளை நிலமதனி லினியவுள வாமோ.         292
    -----------
    (பாடம்.)*வீழ்முழுது

உரை:- நா அழுகி வீழ-நா முதலிய உறுப்புக்கள் அழுகி வீழ, முழுநஞ்சு உண-அவற்றை கலப்பில்லாத கொடிய நஞ்சு கலந்து உண்பிப்பாராய், அது உருகி அலறி அலமரினும்-அதனைக்கண்டு மனங்கலங்கிக் கதறி யழுது நாற் புறமும் சுழன்றோடினும், மடுத்தார்-அவளைவிடாது பற்றி உண்பித்தார்கள், அன்னோ-ஐயோ, இவண் அரசி-இந் நரகத்தே பண்டு இந்நிலத்தே அரசியாயிருந்த அமிர்தமதி, சாவ அரிது-சாதல் இன்றி நஞ்சினால் விளையும் துன்பத்தை நுகர்ந்துறையலானாள், தகவில் வினை தரும் நோய் யாவும் விளைநிலம்-தகுதியில்லாத தீவினைகள் யாவும் பயக்கும் துன்பமெல்லாம் வந்து வருத்தும் இடமாகிய இதன்கண், இனிய உளவாமோ-இனிய இடங்கள் உண்டோ, இல்லை யன்றோ எ-று.

எனவே அவள் நாற்புறமும் ஒடி அலமருவது எற்றுக்கு என இரங்கியவாறு. ஆ, இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல். அவளுடலினின்று அழுகி வீழ்ந்தவற்றை அவளையே உண்ணச்செய்யும் கொடுமையுடன், அவற்றைத் தூய நஞ்சிற் கலந் துண்பிக்கும் கொடுமைகண்டு, அவள் வருந்தும் திறத்தை, " ஆ அலறியது வுருகி யலமரினும்" என்றார். தீயிலிட்டும், வாளாற் போழ்ந்தும், நஞ்சுண் பித்தும் வருத்திய காலத்தும் அவள் உயிர் துறவாமைக்கு ஏது கூறுவார், "சாவவரிது" என்றும், இவ்வுலகில் அரசியியிருந்தாளாயினும், நரகில் பெருந்துன்பம் உறுவது ஒருதலை யென்றற்கு "இவணரசி" என்றும் கூறினார். "எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்"1 என்று சான்றோர் கூறுதலால் சாதல் அரிதாதல் காண்க. தான் செய்த வினைப்பயனை நுகருமிடமாதலின், "இனிய வுளவாமோ" என்றார்; "வினையே துயரத்தை விளைப்ப தலால், நினைவார் செயல் மற்றிலை"2 என்று கூறப்படுவதும் ஈண்டு அறியத்தக்கது.

அவளுற்ற துன்பங்களை மேலும் கூறல்.

    முன்னைநுமர் தந்தசை முனிந்திலை நுகர்த்தாய்க்
    கின்றுமினி துன்னவய வங்கள்தின லென்றே
    தன்னவய வம்பலத டிந்துழல வைத்து
    தின்னியென நொந்தவைகள் தின்னுமிகை திறலோய்.         293

உரை :- மிகை திறலோய் - மிகத்திறலுடைய அரசே, முன்னை நுமர்தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு -முன்னே நின் கணவனும் மாமியுமாகியோருடைய ஊனை வெறாதுண்ட உனக்கு, உன் அவயங்கள் தினல் - உன்னுடைய உறுப் புக்களையே நீ தின்பது, இன்னும் இனிது - இப்பொழுதும் இனிதாகவே யிருக்கும், என்று - என்று சொல்லி, தன் அவயவம் பல உழலத் தடிந்து வைத்து - அவளுடைய உறுப்புக்களை அவள் துடிதுடிக்க அறுத்து எதிரே வைத்து, தின்னி என - தின்பாயாக என்று ஒறுக்கவே, நொந்து - மனம் வருந்தி, அவைகள் தின்னும் - அவற்றைத் தின்பாளாயினாள். எ-று.

யசோதரனும் சந்திரமதியும் மீனாகவும் மகராகவும் பிறவாகவும், பிறந்துழன்றபோது அவற்றைக்கொன்று அவற்றின் ஊனைத் தின்றாளாதலின், அதனைசு சுட்டி, "முன்னை நுமர்தம் தசை முனிந்திலை தின்றாய்க்கு" என்றும், அவரூனும் நின் உடலூனும் ஒன்றேயாதலின், அப்போது அதனையுண்ட நினக்கு இப்போதும் இவை இனியவாகவே யிருக்குமாதலின் உண்க என்பார், "இன்னும் இனிது உன்னவயவங்கள் தினல்" என்றும் கூறினார். அவயவங்களைத் துண்டு துண்டாக அறுத்தெடுத்த காலத்து ஆற்றாமையால் அவள் வருந்தினமை தோன்ற, "உழலத்தடிந்து" என்றும், அவற்றைக் கண்டு அருவருப்பு மிகக்கொள்ளுமாறு, "வைத்து" என்றும், அவர் கூறுமாறு உண்டற்கு அவட்கு உள்ளம் செல்லாமைதோன்ற, "தின்னியென" என்றும், "நொந்தவைகள் தின்னும்" என்றும் கூறினார்.
    -------------
    1. மேரு. 942. 2. மேரு. 943.


    திலப்பொறியி லிட்டனர் திரிப்புவு நெருப்பின்
    உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
    கொலைக்கழுவி லிட்டனர் குலைப்பவு முழக்கும்
    உலைப்பருவ ருத்தம துரைப்பரிது கண்டாய்.         294

உரை:-- திலப்பொறியில் இட்டனர் திரிப்பவும் - எள்ளையாட்டும் எந்திரமாகிய செக்கிலிட்டு அவ் வமிர்தமதியைத் துன்புறுத்தியும், நெருப்பின் உலை - நெருப்பில் வைக்கும் உலைப்பானையில் ஏற்றி, பெருகு அழல்தலை உருக்கவும் - மிக்கெழும் நெருப்பினிடத்தே வைத்து உருக்கியும், உருத்து - வெகுண்டு, கொலைக்கழுவி லிட்டனர் குலைப்பவும் - கொலை புரியும் கழுமரத்திலேற்றி அவளுருவை யழித்தும் வருத்த, உழக்கும் - வருந்தும், உலைப்பரு வருத்தமது - போக்குதற்கரிய‌ அவளுடைய துன்பமானது, உரைப்பரிது - சொல்லவொண்ணாத‌தாம் எ-று.

எள்ளைப்பெய்து ஆட்டி எண்ணெய் எடுக்கும் பொறி, செக்கு. நெருப்பில் வைத்து உருக்குதற்கென்றே சமைந்துள்ள உருக்குப் பானைகளை, "நெருப்பின் உலை" என்றார். கொலைத்தொழிற் கென்றமைந்தமையின் கழுவைக் "கொலைக்கழு" என்பாராயிற்று; அதனால் உருச்சிதைந்து போதலின், "குலைப்பவும்" எனல் வேண்டிற்று. உலைப்பு - கெடுத்தல், நீக்குதல், கண்டாய், அசை.
-------

    ஒருபதினொ டொருபதினை யுந்தியத னும்பர்
    இருபதினொ டைந்தினி லுயர்ந்தபுகை யென்னும்
    பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
    ஒருபதினொ டெழுகடல்க ளளவுமொளி தாரோய்.         295

உரை:-ஒளி தாரோய்.- ஒளி பொருந்திய மாலையினையுடைய வேந்தே, ஒருபதினோடு ஒருபதினை யுந்தி- ஒருபத்தோடு ஒரு பத்தினைப் பெய்து பெருக்கி, அதன் உம்பர் இரு பதினொடு ஐந்தினில்- வரும் நூறுடன் அதன்மேல் இருபத்தைந்துகூட உண்டாகிய நூற்றிருபத்தைந்தாக, உயர்ந்த புகையென்னும் அளவு - உயரிய புகையென்று சொல்லப் படுகின்ற அளவில், பொருவரிய துயரினவை- ஒப்பில்லாத‌ துன்பவுடம்புகளைப் பெற்று, ஒருபதினொடு எழுகடல்கள் அளவும்- பதினேழுகடல்கள் காலம், பொங்கி உடன்வீழும் - உய‌ர்ந்து வளர்ந்து வீழ்வானாயினாள் எ-று.

என்றது, இவ்வைந்தாம் நரகத்தில் புரைதோறும் தான்பெற்ற‌ நரகவுடம்பு உயர்ந்து முடிவில் நூற்றிருபத்தைந்து புகை யென்னும் அளவுகொண்ட உயரம் உயர்ந்து மடிவாள் என்றும், அதன்கால‌ எல்லை பதினேழு கடல்கள் என்றும் கூறியவாறாம். புகை யென்பது நீட்டலளவையில் ஒன்று; புகை யோசனையுமாம். கடல், கால‌ அளவைகளுள் ஒன்று. முதலாம் நரகத்தில் நரகரது உடம்பு ஏழே முக்காலே வீசம் புகை யென்றும், அஃது நரகந்தோறும் இரட்டித் துயர்ந்து ஐந்தாம் நரகத்திறுதியில் நூற்றிருபத்தைந்து புகையுமாம் உயரமென்றும் கூறுப. "ஒன்று மூன்றைந்து மேழு மொன்ப‌தும் பத்தோ டொன்றும், நின்றமூன் றோடு பத்து நிர‌யத்துப் புரைகள் மேன்மேல். ஒன்றுமூன் றேழு பத்தும் ஒருபத்தேழ் இருபத்தீரின், நின்றமூன்றோடு முப்பானாழிகீழ் புரைதோறாயு"1 என்பத‌னால், ஐந்தா நரகில் வாழ்நா ளளவு பதினேழு கடல்களாத லுணர்க.
    ---------
    1.மேரு. 937.


    தொல்லைவினை நின்றுசுடு கின்றநர கத்துள்
    அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவள்
    எல்லையில யிதுவிதென வெண்ணியொரு நாவிற்
    சொல்லவுல வாவொழிக சுடருநெடு முடியோய்.         296

உரை:- சுடரும் நெடு முடியோய்- ஒளிர்கின்ற நெடிய‌ முடியையுடைய அரசனே, தொல்லைவினைநின்று சுடுகின்ற நரகத்துள் அல்லல் இவை- பண்டைவினையானது விடாது பற்றி வருத்தும் நரகத்தில் துன்பங்கள் இவைகளாகும், அல்லனவும் அமிழ்தமதியுறுவள் - அமிழ்தமதி யிவையேயன்றி இவையல்லாத வேறுபிற துன்பங்களையும் அடைவாள், எல்லையில -அவை எல்லையில்லாதனவாகிய அவற்றை, இது இது என எண்ணி- ஒவ்வொன்றாக இஃது இத்தன்மைத்து என்று எண்ணி, ஒருநாவில் சொல்ல உலவா - ஒரு நாவாற் சொல்வதற்கு இல்லை, ஒழிக - இனி அவற்றைக்கேட்டலை யொழிக எ-று.

முன்னைப் பிறப்பிற் செய்த தீவினைப் பயனை நரகத்திடத்தே யிருந்து நுகர்வது குறித்து, "தொல்லைவினை நின்று சுடுகின்ற நர‌கத்துள் " என்றார். சுடுகின்ற தென்றது, துன்பம் செய்வதுபற்றி; "தீயவை தீயினு மஞ்சப்படும்? என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறியது காண்க. மக்கட் பிறப்பில் வினைப்பயன் கணந்தோறும் மாறி வருதல் போலாது நரககதியில் மாறுதலின்றி ஒருபடித்தாய் நின்று வருத்துவது பற்றி, "நின்று சுடுகின்ற நரகம்" என்றாரென வுணர்க. இதுகாறும் கூறிய துன்பங்களேயன்றி, இவற்றின் வேறாப் பல துன் பங்க ளுண்டெற்கு "அல்லனவும் அமிழ்தமதி யுறுவள்" என்றார். அவை ஓரல்லைக் குட்படுவன வ‌ல்லவாதலின், "எல்லையில‌" எனப்பட்டன' அதனல் அவற்றை வகுத்தும் விரித்தும் ஓதுவது எளிதன்றென்றும், பயனில் செயலென்றும் கூறுவார், "இதுவிது வென்று ஒருநாவிற் சொல்லவுலவா" என்றும், "ஒழிக" என்றும் கூறினார்.

யசோதரனும் சந்திரமதியும் பிறந்து வருந்திய திறத்தைக் கூறுதல்

    எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
    கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
    நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
    வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.         297

உரை:- வளர் ஒளிய பூணோய் - பெருகுகின்ற ஒளியினையுடைய அணிகளையணிந்த வேந்தே, எண்ணம் இல் இசோதரனோடு அன்னையிவர் - பின் விளைவு நினையாத யசோதரனும் தாயாகிய சந்திரமதியுமாகிய இவ்விருவரும், முன்னாள் கண்ணிய உயிர்க்கொலை வினைக்கொடுமையால் - முன்னை நாளில் உயிர்ப்பலி யீடாகக் கருதிச் செய்த உயிரைக் கொல்வதாகிய தீவினையின் தீமையால், நண்ணிய விலங்கிடை- உண்டாகிய விலங்குகதிக்கண்ணே, நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம் இது- ந‌டுங்கத்தக்க துன்பம் வந்து பற்றி வருத்திய வகை யிதுவாகும், வடிவம் இவை - எடுத்த‌ உடம்புகளும் இவையாகும் எ-று.

"அயிர்ப்பதென் னற‌த்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்" (144) என்று முன்பு கூறியிருத்தலின், ஈண்டு, "எண்ண‌ மில் இசோதரன்" என்றார். சந்திரமதியையும் இவ்வாறே "திருவிலி" (142) என்றும், "அவ்வையாய பாவி" (145) என்றும் இகழ்ந்தமையின், ஈங்கு வாளா "அன்னை" யென்றொழிந்தார். உயிர்க்கொலையாகிய வினையைச் செய்தற்கண், யசோதரன் இயற்றும் வினை முதலாயினமையின், அம்மிகுதி குறித்து, ஒடுவினை யவன்மேல் வைத்துரைத்தார். ஒடு, எண்ணுப்பொருட்டு. "முன்னே துஞ்சா விலங்கிடைத் துன்னினார்" (153) என்றமையின், இங்கே, "வினைக்கொடுமையாலே ந‌ண்ணிய விலங்கிடை" யென்றும், அக்கதி, "துயரம் துஞ்சா விலங்கு" (153) என்றதற்கேற்ப, "நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம்" என்றும், அதன் வகையும் பிறவும் இனிக் கூறலுறுதலின், "வண்ணமிது வடிவமிவை" என்றும் கூறினார். இது தொகுத்துச் சுட்டல்.

யசோதரனுற்ற‌ பிறப்பு வகையைக் கூறுதல்

    மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
    பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
    மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
    மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.         298

உரை:-மன்னவ-வேந்தே, மன்னன் - அரசனான‌ யசோதரன், மயில் - மயில் பறவையாகவும், மயிரி முள் எயினம்- மயிர் மிக்க முள்ளம் பன்றியாகவும், மீனாய் - மீனாகவும், பின் இருமுறைத் தகருமாகியவன்- பின்னர் இரண்டுமுறை ஆடாகவும் பிறந்து வருந்தினவனாய், ஏகி - புள்வகையுட்சென்று, மன்னுசிறை வாரணமதாகி - பெரிய‌ சிறகுகளையுடைய கோழியாகி, வதம் மருவி - பன்னிருவகை விரதங்களையும் கேட்டு, நின் மகன் அபயனாகி வளர்கின்றான்.- நின்மகனாகிய அப‌யருசியாகப் பிறந்து வளர்ந்து வருகின்றான் எ-று.

மயிற்பிறப்புக்குப் பின் "சூழ்மயிர் முள்ளுடை யின்னல் செய்யுமோர் ஏனம தாகி " (176)ப் பிறந்தமையின், "மயிரி முள்ளெயினம்" என்றார். மயிருடையது, மயிரி. ஏனமென்பது எயினமென நின்றது. மீன் பிறப்புக்குப் பின் னொரு முறையும்,அப் பிறப்பிற் கூடிய மறியாட்டின் வயிற்றிலே கருவாய் மறுமுறையும் ஆடாய்ப் பிறந்தமையின் "பின்னிரு முறைத் தகரு மாகி" என்றார். மன், பெருமை. வதம், விரதம்; பன்னிருவகையுமாவன, குணவிரதம் மூன்று, அணுவிரதம் ஐந்து. சிக்கைவிரதம் நான்கு; "வதங்கள் பன்னிரண்டு மேவி"1 என்று ஏனைச் சான்றோரும் கூறுதல் காண்க. கோழியாய்ச் சண்டகருமன் கூட்டில் வளர்ந்து வருங்கால், அகம்பன முனிவன் அச்சண்டனுக்கு அவ்வதங்களைக் கூறக்கேட்ட செய்தியை, "வதம் மருவி" யென்றார்.
    --------------
    1 மேரு. 346

சந்திரமதியின் பிறப்பு வகையைக் கூறல்

    சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
    வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி
    முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
    வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.         299

உரை:- சந்திர முன் மதி-சந்திரமதி, ஞமலியொடு- நாயாகவும், நாகமொடு-பாம்பாகவும், இடங்கரொடு- முதலையாகவும், வந்து-பிறந்து, மறியுடன் மயிடமுடன்- பின்பு ஆடாகவும் எருமையாகவும் பிறந்து, வாரணமுமாகி- பின்னர்க் கோழியுமாய்ப் பிறந்து, முந்தை வினை நெகிழ- முன்னைவினைகள் நீங்குமாறு, முனிமொழியும் வதம்மருவி- அகம்பன முனிவன் உரைத்த விரதங்களைக்கேட்டு, வந்து- மக்கட்கதியில் வந்து பிறந்து, உன்மகள் அபயமதியாகி வளர்கின்றாள்-உனக்கு மகளான அபயமதியாய் வளர்ந்து வருகின்றாள் எ-று,.

சந்திரமுன்மதி, சந்திரமதி. அபயமதியை "அபயமுன்மதி" (21) என்றாற்போல. எண்ணொடு ஏனெயவற்றோடும் கூட்டப்பட்டது. உடன், ஒடுவின் பொருட்டு. முனிமொழிந்த மொழியின் பயனால், முன்னைவினையின் தொடர்பு நீங்குதலின், "முந்தை வினை நெகிழ" என்றார்.

யசோமதி மனம் மருளுதல்

    இதுநுமர்கள் பவவினைதன் விளைவுமியல்* பிதுவென்
    றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
    விதுவிதுவி திர்த்தகநெ கிழ்ந்து மிகச்† சோரா
    மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.         300
    --------------
    (பாடம்) *வினைகள் விளையுமியல்பு †மிகை

உரை:- நுமர்கள் பவம் இது-உன்னுடைய முன்னோர்களின் பிறப்புவகை இதுவாகும், வினைதன் விளைவும் இது- அப்பிறப்புக்கு ஏதுவாகிய வினையின் பயனும் இதுவாகும், இயல்பும் இது-அவ்வினைப்பயனாகவரும் கதியின் இயல்பும் இதுவாகும்; என்று-என்பதாக, முனி எதுவின் அருளும்- முனிவன் ஏதுவோடு உரைத்த, மொழி அவையவைகள் நினையா-மொழிகளின் பொருளை அவ்வவ்வகையில் எண்ணி, விது விது விதிர்த்து-மெய் மிகவும் நடுங்க, அகம் நெகிழ்ந்து- மனம்கரைந்து, மிகச்சோரா-மிகவும் சோர்வுற்று, மது மலர்கொள் மணிமுடிய மன்னவன்-தேன்பொருந்திய பூமாலையணிந்த மணிமுடியினையுடைய யசோமதி, மருண்டான்-செய்வகை தெரியாது மருளுவானாயினன் எ-று.

இதுவென்பதனை விளைவுக்கும் கூட்டுக. இயல்பு, ஆகுபெயர். ஏது, எதுவெனக் குறுகி நின்றது. ஏது கூறவே, அதனோடியை புடைய எடுத்துக்காட்டும் கொள்க. சொற்பல்குதல் பற்றி அவற்றைக் கூறாராயினார். வினைவகையும் அவை காரணமாகவரும் கதிவகையும், கதிதோறும் உளவாகும் துன்பவகையும், "அவை யவைகள் நினையா" என்றும், நினைந்தவழி, தான்செய்த வினைகளும், அவற்றால் விளையக்கடவ துன்பங்களும் தோன்றவே, யசோமதிக்குப் பேரச்சம் தோன்றி, அவன் மனத்திண்மையை யழித்தமையின், உடல் நடுங்கி உளம் கரைந்து நினை விழந்து மயங்கலுற்றான் என்பார், விது விது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகச்சோரா... மருண்டான்" என்றார். "விது விது விதிர்த்து" என்ற இரட்டைக்கிளவி அவனது நடுக்கத்தின் மிகுதியுணர்த்தி நின்றது. விதிர்ப்பு, நடுக்கம். முடிய, குறிப்புப் பெயரெச்சம். மருண்டதனாற் பயன், முனிவன் திருவடி வணங்கி அவனருளும் வதம் மருவித் தெருளுவானாவது.

மக்கள் இருவரும் முனிவன்பால் வருதல்

    இன்னவகை மன்னன்முனி யியம்பியது கேளாத்
    தன்னருகு நின்றவொரு சண்டனை விடுப்ப
    மன்னபய வுருசியொடு மதியவளும் வந்தே
    சொன்னவி லருட்குரவன் துணையடி பணிந்தார்.         301

உரை:- முனி இன்னவகை இயம்பியது-சுதத்த முனிவன் இவ்வாறு சொல்லியதை, மன்னன் கேளா-வேந்தனான யசோமதி கேட்டு, தன் அருகு நின்ற ஒரு சண்டனை-தனக்கு அண்மையில் ஒருவனாய் நின்ற சண்டகருமனை, விடுப்ப-தன் மக்களைக் கொணருமாறு விடுத்தானாக, அபய உருசியொடு மதியவளும் வந்து-அபயருசியும் அபயமதியாகிய அப்பெண் மகளும் அவ்விடத்திற்கு வந்து, சொல் நவில் அருள் குரவன்- அறவுரைகளையே சொல்லும் அருளுடையவனான சுதத்த முனிவனுடைய, துணையடி பணிந்தார்-இரண்டு திருவடிகளையும் வணங்கினார்கள் எ-று

மனமருண்டு நின்ற வேந்தன் தெளிவெய்திய காலத்து முனிவன் உரைத்தவற்றை ஐயவினாக்கள் பல தொடுத்து மறுபடியும் நன்கு உளம் தெளியக் கேட்டமை தோன்ற"இன்னவகை மன்னன் முனி யியம்பியது கேளா" என்று பெயர்த்தும் கூறினார் போலும். கேட்டவன், யசோதரனும் சந்திரமதியும் தனக்கு மக்களாய்ப் பிறந்திருப்பது தெளிந்ததோடமையாது அவர்களும் அச்செய்தியை முனிவன்பால் கேட்டல்வேண்டுமென்ற விருப்பால் அவர்களை யழைத்துவருமாறு சண்டகருமனை விடுத்தானென்க.மன், அசை. அபயருசி மூத்தோனாதலின், ஒருவினையொடு உயர்பின் வழித்தாய் வந்தது. வந்து என்னும் சிறப்புவினை பணிந்தாரென்னும் பொதுவினையொடு முடிந்தது; "இவளும் இவனும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப" என்றாற்போல. சொல்லெனப் பொதுப்படக் கூறினமையின், புகழும் புண்ணியமும் பயக்கும் அறவுரையென்பது வருவிக்கப்பட்டது.

மக்களிருவரும் முற்பிறப் புணர்தல்

    ஆங்கபய வுருசியுட னபயமதி தானும்
    தாங்கலர்கள் நின்று*தவ அரசனரு ளாலே
    நீங்கியப வங்களை நினைந்தன ருணர்ந்தார்
    ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.         302
    --------------------
    (பாடம்) *சென்று.

உரை:- ஆங்கு-அவ்விடத்தே, அபயவுருசியுடன் அபயமதி தானும்-அபயருசியும் அபயமதியுமாகிய இருவரும், தாங்கலர்கள் நின்று-மிக்கெழும் அன்பினைத் தாங்கமாட்டாது தொழுது நின்று, தவ அரசன் அருளால்-தவவேந்தனான சுதத்த முனிவன் அருளிய அருண் மொழியால், நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்-கழிந்த பிறப்புக்களை நினைந்து அவற்றிற் கேதுவாகிய தம் வினையையும் உணர்ந்து, அவர்கள் உறு கவலை-அவ்வுணர்வால் அவர்கள் உற்ற வருத்தத்தை, ஆங்கு-அப்பொழுது, பிறர் யாவர் அறிவார்- அவரை யன்றிப் பிறர் எவரும் அறிய மாட்டார் எ-று.

முனிவனைக்கண்ட மாத்திரையே அவர்தம் உள்ளத்தெழுந்த அன்பு அவரால் தாங்கமாட்டாவகையிற் பெருகியது தோன்ற, "தாங்கலர்கள்" என்றும், அவர் பின்பு அன்பின் ஆராமையால் மறுபடியும் கைதொழுது நின்றாராக, முனிவனருளால் முன்னைப் பிறப்புணரும் ஞானம் பிறக்க அதன் துணையால் அவற்றை நினைந் தறிந்த நீர்மையினை "நின்று தவ வரசனருளாலே நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்" என்றார். தவமுடையோர் எல்லோர்க்கும் தலைமைநிலைமை யுடைமை பற்றிச் சுதத்தனை "தவவரசன்" என்றார். இனி, வேந்தனாயிருந்து தவமேற்கொண்டு மாமுனிவனானது பற்றித் தவவரசன் என்றாரென்றும் கூறுவர்; பொருளன்றெனத் துறந்த அரசினைத் துறவாது அந்நிலைமையும் தோன்றக் கூறுவதிற் பயனின்மையின் அது பொருளன்மை யுணர்க, தாங்கலர்கள் நினைந்தனர் என்பன முற்றெச்சம்.

இருவரும் வருந்துதல்

    *மக்களு ளிரட்டை யாக மாறினம் பிறந்த யாமுன்
    மிக்கதீ வினையா லுற்ற விளைவினை யுணர்ந்தே மைய
    துக்கமே தொடர நோற்றுத் துணையறந் துறந்த பெற்றி
    இக்கதி துன்னிக் கண்டே மினிக்கதிக் கென்செய் வோமே.         303
    --------------
    *இவ்வடி நன்னூலுரையில் சங்கர நமச்சிவாயரால் மேற்கோளாகக் காட்டப்பட்டது. சூ. 351.

உரை:- ஐய-ஐயனே, மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்தயாம்-மக்களிலே இரட்டையராக மாறிப் பிறந்துள்ளயாங்கள், மிக்க தீவினையால் உற்ற விளைவினை-மிகுதியாய்ச் செய்த தீவினையால் உண்டாகிய துன்பங்களை, உணரந்தேம்- இப்போது தெளிய அறிந்தோம், துக்கம் தொடர நோற்று - துன்பம் பிறவிதோறும் தொடரந்து வந்து வருத்துமாறு தீவினை செய்து, துணையறம் துறந்து பெற்றி - உயிர்க்குத் துணையாய் இன்பம் பயக்கும் அறவினையைச் செய்யா தொழிந்த குற்றத்தை, இக்கதி துன்னிக் கண்டோம்- இப்பிறப்பை யெய்தி யறிந்துகொண்டோம், இனிக் கதிக்கு- இனி வரக்கடவ பிறப்புக்கு, என் செய்வோம் - யாது செய்வோம் அருளுக எ-று.

புள்ளும் விலங்கமாய்ப் பல பிறவிகளிலும் பலவாறு மாறிப் பிறந்த இருவரும் இப்போது அபயருசியும் அபயமதியுமென்ற இரட்டையராய்ப் பிறந்திருப்பதை யுணர்ந்து கூறலின், "மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம்" என்றும், தவமுனிவன் அருளால் இறந்த பிறப்பின் துன்பங்களை யுணர்ந்து வருந்துவார், "முன்மிக்க தீவினையால் உற்ற விளைவினை யுணர்ந்தோம்" என்றும் கூறினார். விளைவு, துன்பம்; தீவினையின் விளைவு அதுவே யாதலின். துக்கத்துக் கேதுவாகிய தீவினையே கன்றிச்செய்த திறத்தைப் பழித்துரைத்தலின், "துக்கமே தொடர நோற்று" என்றார். "மிக்க நல்லறம் விழுத்துணையாவது"(மணி. 22:138) என்பவாகலின், அது துணையறம் எனப்பட்டது. பெற்றி, ஈண்டுக் குற்றத்தின்மேல் நின்றது. தமக்கு அறமுணரத்தி நன்னெறிப்படுத்துமாறு வேண்டும் குறிப்பினராதலின், "இனிக்கதிக் கென் செயவோமே" என்றார்.
    -----------------
    1.மணி. 22:138.


    தந்தையுந் தந்த தாயு மாகிய தழுவு காதல்
    மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
    சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
    கொந்தெரி யழலுள் வீழ்ந்த கொள்கைய னானான் மன்னன்.         304

உரை:-தந்தையும் - தந்தை யாகியும், தந்த தாயுமாகிய - தன்னைப் பெற்றுத்தந்த தாயாகியும், தழுவு காதல் - பிறத்தற் கேதுவாயிருந்த உழுவலன்புடைய, மைந்தனும் மடந்தைதானும் - அபயருசியும் அபயமதியும், மாற்றிடைச் சுழன்ற பெற்றி - பிறப்பு வகையில் பிறந்து வருந்திய திறத்தை, சிந்தையில் நினைந்து நொந்து - தம்மனத்தே யெண்ணி வருந்தி, தேம்பினர் புலம்ப - தேம்பியழவே, மன்னன் கண்டு-வேந்தனாகிய யசோமதி பார்த்து, கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையனானான்-கொத்தாக மிக்கெழுகின்ற தீயிடை வீழ்ந்து வருந்தும் வருத்தத்தை எய்தினான் எ-று

யாடாய்ப் பிறந்த காலத்தில் சந்திரமதியும் ஆடாய்ப் பிறந்து உழலுவாளைக் கூடியதனால், அபயருசியைத் "தந்தையாய்" என்றும், அக்கூட்டத்தா லுண்டாகிய கருவின்கண் தானே கலந்து அதன் குட்டியாய்ப் பிறந்ததனால் அவனுக்குத் தாயாயினமையின் அபயமதியைத் "தந்த தாயும்" என்றும் கூறினார். "தன்னையீன்ற வத்தாய்மிசைத் தாழ்ந்ததே" (187) என்றும், "தாய் வயிற் கருவுட் டகராயது" (189) என்றும் வருதல் காண்க. இருவரும் இரட்டையராய்ப் பிறத்தற்குக் காரணம் இருவர்பாலும் இருந்த காதலன் பென்பார் "தழுவு காதல் மைந்தனும் மடந்தைதானும்" என்றார். மடந்தை, பெண்பாற்பெயர்; பருவப்பெயரன்று. மாற்று; பிறவிநெறி. முத்தி நெறியை நோக்க, இது மாறு படுதலின், மாற்று எனப்பட்டது. பெற்றி, தன்மை. முன்னைப் பிறவிகளில் தாமுற்ற துன்பங்களையும், செய்த வினைகளையும் நினைந்து வருந்தியழுதன ரென்றற்கு "தேம்பினர் புலம்ப" என்றும், சிந்தையில் நினைந்தவழி முன்னைப் பிறவி வரலாறு தோன்றி ஆண்டு நிகழ்ந்தவற்றை மனக்கண்ணில் காட்டி அதனை நெகிழ்வித்தலால், "சிந்தையில் நினைந்து நொந்து" என்றும் கூறினார். தன் மக்களிருவரும் மனம் சோர்ந்து தேம்பிப்புலம்பக் கண்ட யசோமதியின் கருத்தில் அவன்செய்த தீவினைகளும் பிறவும் தோன்றி யச்சுறுத்தவே அவன் பெரிதும் வருந்தலுற்றா னென்பார். "கொந்தெரி யழலுள் வீழ்ந்த கொள்கையனானான்" என்றார்.

யசோமதி புலம்புதல்

    எந்தையும் எந்தை தாயும் எய்திய பிறவி தோறும்
    வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
    அந்தமி லுயிர்கண் மாய வலைபல செய்து நாளும்
    வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய் கேனோ.         305

உரை:- எந்தையும்-என் தந்தையாகிய யசோதரனும், எந்தை தாயும்-அவன் தாயாகிய சந்திரமதியும், எய்திய பிறவிதோறும்-அடைந்த பிறப்புக்களிலெல்லாம், வெந்துயர் விளைவு செய்த வினையினேன் என் செய்கேன் - வெவ்விய துன்பமுண்டாக்கும் தீவினைகளைச் செய்தேனாதலின் யான் இனி செய்வேன், அந்தம் இல் உயிர்கள் மாய - அள வில்லாத உயிரினங்கள் இறக்குமாறு, அலைபல நாளும் செய்து - துன்பங்கள் பலவற்றையும் நாடோறும் செய்து, வெந்து உயா நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன் - தீயில் வெந்து நீங்கியுய்ய முடியாத நரகத்திற் செலுத்தும் தீவினை செய்தேனாதலின், என் செய்கேன் - இவ்வினைகளினால் வரக்கடவ துன்பத்தின் பொருட்டு யான் என் செய்வேன் எ - று.

யசோதரன் ஆடாய்ப்பிறந்து வளர்ந்து வருகையில் வேட்டை மேற் சென்ற யசோமதி கொன்றதும், சந்திரமதி எருமையாய்ப் பிறந்த காலத்தில் தன் குதிரையைக் கொன்றது குறித்துக் கொலை செய்ததும் பிறவும் நினைந்து வருந்துதலின், " பிறவிதோறும் வெந்துயர் விளைவுசெய்த வினையினேன்" என்றும், இவ்வாறே தான் பலவுயிர்களை வேட்டையாடிக் கொன்றதை நினைந்து "அந்தமில் உயிர்கள் மாய அலைபல செய்து" என்றும், இத்தகைய தீவினைகளால் தனக்கு மீளா நரகமே கிடைக்குமென்று அஞ்சி, வெந்து உயர் நரகின் வீழ்க்கும் வினை செய்தேன்" என்றும் கூறிப்புலம்பினான். இவ்வினை மிகுதியால் விளையும் நரகத்துன்பத்தினின்றும் தன்னைக் காத்துக் கொள்வது கருதி இதுபோது எண்ணத் தொடங்கினமை தோன்ற "என்செய்கேனோ" என்றா னென்கின்றார். உய்யா நரகம், மீளாநரகம். துன்பத்தை யுண்டுபண்ணுதலின், வினையையே வினை முதலாக்கிக் கூறினார்.


    அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
    பொருளொடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ
    அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
    தெருளலன் நினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.         306

உரை:-- அருளொடு படர்தல் செய்யாது - உயிர்கள் மாட்டு அருள் செய்ய நினையாது, ஆர் உயிர்க்கு - பெறுதற்கரிய அவ்வுயிர்கட்கு, அழிவு செய்து - கேட்டினை விளைவித்து, பொருளொடு போகம் மேவி - பொருளும் அது வாயிலாகப் பெறும் போகமுமே விரும்பி, பொறியிலேன் - நல்வினைப் பேற்றுக்குரிய அறிவின்றி யொழிந்த யான், அருளினது உருவமாய - அருளறமே உருவாகவுடைய, அடிகள் நும் அடிகட்கேயும் - சான்றோராகிய தங்கட்கும், தீமை நினைந்த - தீங்கு செய்ய நினைந்த, தெருளலன் - தெருண்ட அறிவிலேனாய், சிறியேன்-சிறுமையுற்றேனாதலின்,என் செய்கேன்- இக்குற்றங்கட்கெல்லாம் பரிகாரம் யாது செய்ய வல்லேன் எ-று.

பொறுள்மேலும் போகத்தின்மேலும் சென்ற எண்ணமிகுதியால் எவ்வுயிர்க்கும் தீங்கே செய்தொழிகினே னென்பான், "அருளொடு படர்தல் செய்யாது" என்றும், "பொருளொடு போகம் மேவி" யென்றும் கூறினான். "யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுல்ல, அருளும் அன்பும் அறனும்" 1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. படர்தல், நினைந்தொழுகல். ஆருயிர் என்றான், உயிர்களின் அருமையினை முன்னர் உணராதிருந்து இப்போது உணர்ந்து கூறுமாறு தோன்ற. தன்பால் அருளில்லாமையின் மிகுதிக்கு எல்லை யிதுவென்றற்கு, "அருளுருவாய அடிக்கட்கும் தீங்கு நினைந்தேன்" என்றான். யான் அருளா தொழியினும் அருளுருவாய தங்கட்கேனும் தீமை நினையாதிருக்கும் சிற்றறிவும் பெற்றிலே னென்பான், "தெருளலன் தீமை நனைந்த சிறியனேன்" என்றான். அடிகளாய நுங்கட்கு என்றற்கு, "அடிகள் நும் அடிகட்கு" என்றது நற்சீலம். சால்புடைமையாற் பெரிய ராயினாரை முன்னிலைப்படுத்தி நீவிர் முதலிய சொற்களால் சொல்வது சீலமன்று என்பர். இது வழக்கினாகிய உயர்சொல். எனசெய்கேனே எனப் பன்முறையும் கூறியது, அவனது கையறவினைப் புலப்படுத்தி நின்றது.
    --------------
    1. பரி.5.

முனிவனை வேண்டல்

    மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதேல்
    ஆவினி* யளிய னேதும் அஞ்சிலே னவதி யென்கொல்
    காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
    மாவல அஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.         307
    --------
    (பாடம்.) * ஆவிநீ.

உரை:-காவல-உயிர்கட்கு அருளைச்செய்து அறத்தைக் காக்கும் தவவேந்தே, மா இயல் வடிவு தன்னை வதை செய்தார் வண்ணம் - மாவாற் செய்யப்பட்டதொரு கோழி வடிவினைக் கொன்றவர் அடைந்த துன்பம், ஈதேல்-இத் தன்மைத் தாகுமாயின், அளியன்-அளிக்கத்தக்க யான், ஏதும் அஞ்சி லேன்-சிறிதும் அஞ்சாது தீமை புரிந்தேனாதலின், இனி அவதி என்கொல்-இப்போது எனக்கு எய்தவிருக்கும் துன்பத்துக்கு எல்லை யாதோ அறியேன். அருளுக- அடியேனுக்கு அருள் செய்யவேண்டும், என்ன-என்று, அரசன் கலங்கினன் வீழ-அரசனாகிய யசோமதி உணர்வு கலங்கி முனிவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினானாக. அம் மாதவன்-அதனைக்கண்ட அம்முனிவன், மாவல-குதிரை செலுத்தவல்ல வேந்தே, அஞ்சல்-இனி நீ அஞ்சற்க, என்று உரை வளர்த்தான்-என்று சொல்லலுற்றான் எ-று.

மா இயல்வடிவு-மாவால் செய்யப்பட்ட கோழியின் உருவம். "மாவினால் வனைந்த கோழி வடிவு"(145) என்றே முன்பும் கூறினர். மாக்கோழியை யசோதரன் தன் கைவாளால் அரிந்த போது, அதன் தலை கூவிக்கொண்டு சென்று வீழ்ந்தமையினாலும், அவ்வாறு செய்யுமாறு செய்வித்தவள் சந்திரமதி யாதலாலும் இருவரையும் முறையே செய்தோரும் செய்வித்தாருமாகிய வினை முதலாக்கி "வதை செய்தார்" என்றார். உயிர்க்கோழி போலக் கூவி வீழ்ந்தமையால் அதன் கொலையினை "வதை" யென்றார். அக் கொலைவினை காரணமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து இரு வரும் துன்புற்ற செய்தியைச் சுதத்த முனிவன் கூறக் கேட்டானாதலின் "வண்ணம் ஈதேல்" என்றான். உயிரில் பொருளொன்றனை உயிருடையதாகக் கருதிச்செய்த கொலைவினையே இத்துணைத் துன் பத்தைப் பயக்குமாயின், உயிருள் பொருள்களையே கொலை புரிந்த தன்னுடைய தீவினைகளை நினைந்து வருந்தும் யசோமதி, உயிர்க் கொலையைத் தவிர்த்தல் கருதி மாவால் கோழிசெய்து கொன்ற அவரினும், கொலை வினையின் தீமையை நினையாதே செய்த தனக்கு எத்துணைத் துன்ப மெய்துமோவென அஞ்சி நடுங்கி "ஆ இனி அளியன் ஏதும் அஞ்சிலேன் அவதி யென்கொல்" என்றான். ஆ, இரக்கக்குறிப்பு. உயிர்கட்குச் செய்தற்குரி அருளற மேற்கொண்டொழுகுவது கருதி, சுதத்தனை "காவல" என்றும், தனக்கு அக் கொலைவினையைப் போக்குதற்குக் கழுவாய் அருளுமாறு வேண்டும் கருத்தினால் "அருளுக" என்றும் கூறினான். மாவலன், குதிரை, யானை முதலிய படைகளைச் செலுத்தும் வன்மையுடையன்.

"மாவலோன்" (19) எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. இனி, இவையிரண்டற்கும் மிக்க வெற்றியையுடையவன் என்றலுமொன்று. உரைவளர்த்தா னென்பது வாளா உரைத்தானென்பதுபட நின்றது.

சுதத்தன் வேந்தனைத் தெருட்டுதல்


    அறிவில ராய காலத் தறிவில செய்த எல்லாம்
    நெறியினி லறிவ தூற நின்றனர்* விலகி நிற்பர்
    அறியலர் வினைக ளாலே யருநவை படுநர் கையாற்†
    சிறியநல் வதங்கள் செய்தே தீவினை யகல்வர் காணாய்‡         308
    ----------------
    (பாடம்) *நின்றவை. † படுநர்க்கையா. ‡ செய்த திருவினை நுமர்கள் காணாய்.

உரை:- அறிவிலராய காலத்து-நல்லறிவு பிறவாத இளமைக் காலத்தில், அறிவில செய்த எல்லாம்-அறியாமையாற் செய்த தீமைகளெல்லாம், அறிவது நெறியினில் ஊற நின்றனர்-நல்லறிவானது நெறிப்படி உண்டாகப் பெற்றவர், விலகி நிற்பர்-அத் தீமையினின்றும் விலகி நன்னெறிக் கண்ணே நிற்பார்கள்.அறியலர்வினைகளாலே அரு நவை படுநர்-நலந்தீங்கு அறியாராய்ச்செய்த வினைகளால் நீங்குதற்கரிய துன்பப்படுவர், கையால் -தம் செய்கைகளால், சிறிய நல் வதங்கள் செய்து-எளிய விரதங்கள் பலவற்றை மேற்கொண்டொழுகி, தீவினை அகல்வர்-தீவினியினின்றும் நீங்குவார்கள் எ-று

அறிவில்லாக் காலத்தே செய்யும் தீவினை பலவும் அறிவில் செய்கைகளாகவும், நல்வினையும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடென நல்லோரால் கொள்ளப்படாமையாலும் இருவகையும் சேர. "அறிவிலசெய்த வெல்லாம்" என்றார். நெறி, கல்வி கேள்வி நெறி. நல்லறிவு பிறத்தற்கு இவையிரண்டும் நெறியாதலின், "நெறி" யென்றார். அறிவது, அது, பகுதிப்பொருள் விகுதி. ஊறுதல், உண்டாதல். "கற்றனைத் தூறு மறிவு"1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. நல்லறிவு பிறந்தவழித் தீவினை தவிர்த்து நல்வினையே நாடிச் செய்யப்படுதலின், "விலகி நிற்பர்" என்றார்,. இனி அறிவு பிறவாக்காலத்தே செய்த வினைப்பயன் தீர்தற்குக் கழுவாய் கூறுவார் , நல்லொழுக்கமும் எளிய விரதமும் மேற்கொள்வ தென்பார் "சிறியநல் வதங்கள் கையால் செய்தே தீவினை யகல்வர்" என்றார். சிறுமை, எளிமை மேற்று. அறியாமையாற் செய்தன வாயினும் தீவினைப்பயனாய் வரும் துன்பம் நீக்குதற்கரிது என்பார் "அருநவை" என்றும், எனவே, வினைப்பயனை எவ்வாற்றானும் நுகர்ந்தே கழித்தல்வேண்டும் என்றும் கூறினாரென வறிக. அறிவிலாக் காலத்துச் செய்த குற்றம் அறிவறியும்போது அறிவுடையோரால் விலக்கப்படுமென்பதும், அக்காலத்துச்செய்த வினைப்பயன்கள் அறிவறிவார் மேற்கொள்ளும் வதங்களால் வெல்லப்படும் என்பதும் கூறியவாறாம்.
    ------
    1. குறள் 396

இறைவன் அறத்தின் ஏற்றத்தைக் கூறுதல்

    அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்
    பொருள்கொலை களவு காமம் பொய்யிவை புறக்க ணித்திட்
    டிருள்புரி வினைகள் சேரா திறைவன தறத்தை யெய்தின்
    மருள்செய வருவதுண்டோ வானவ ரின்ப மல்லால்.         309

உரை:- அருள்புரி மனத்தராகி-அருளே நினையும் மனமுடையவராய், ஆர் உயிர்க்கு-நிறைந்த உயிர்கட்கெல்லாம், அபயம் நல்கி-ஆதரவு செய்து, பொருள் கொலை களவு காமம் பொய் இவை புறக்கணித்திட்டு-பிறன் பொருளை விரும்புதலும் கொலையும் களவும் காமமும் பொய் கூறலும் என்ற இவையிற்றைச் செய்யாராய், இருள்புரி வினைகள் சேராது-அறியாமையாற் பிறக்கும் வினைகளைச் செய்வதின்றி, இறைவனது அறத்தை எய்தின்-அருகபரமன் அருளிய அறத்தை மேற்கொண் டொழுகுவாராயின், வானவர் இன்பமல்லால்-தேவருலக வின்பமன்றி, மருள் செய வருவது -ஒருவர்க்கு மயக்கமும் அது காரணமாக வரும் நரகத் துன்பமும் செய்ய வருவதொன்று இல்லையாம் எ-று

அருகன் அருளிய அறங்களுள் தலையாயது அருளாதலின், அதனை விதந்து "அருள்புரி மனத்தராகி" யென்றும் அதற்குரிய செயலாதலின், "ஆருயிர்க் கபயம் நல்கி" யென்றும், அவ்வறத்தைக் கெடுப்பனவாதலின் பொருள்வெஃகல் முதலியவற்றைப் "புறக்கணித்திட்டு" என்றும் கூறினார். "இருள்சேர் இரு வினை"1 என்றாராகலின், அஃது இச் சமண் சமயத்துக்கும் ஒத்த கருத்தாதல்பற்றி, "இருள்புரி வினைகள் சேராது" என்றும், வினைப்பகை வீயாது பின்சென் றடுவதுபற்றி அதற்கு அரண் இஃது என்பார், இறைவன தறத்தை அரணாகவும் கூறினார். "எய்தின்" என்றது எய்தினா லெய்தும் பயன் கூறுதற்கு அவாய்நிலை பயப்பித்தது. மருள், பிறவிக்கேதுவாய மயக்கம்.
    -------------
    1 குறள். 5.

யசோமதி திருவறம் மேற்கோடல்

    என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்
    கன்றிய வினைகள் தீரக் கருணையி னுருகி நெஞ்சிற்
    சென்றன னறிவு காட்சித் திருவறத் தொருவ னானான்
    வென்றவர் சரண டைந்தார் விளைப்பது வென்றி யன்றோ.         310

உரை:- என்றலும்-என்று சுதத்தமுனிவன் சொன்னதும், அடிகள் பாதத்து-அவருடைய திருவடியின்கண், எழில்முடி மலர்கள் சிந்த-அழகிய தன் முடியிற் சூடிய பூக்கள் விழுமாறு வீழ்ந்து வணங்கி, கன்றிய வினைகள் தீர- மிகச்செய்த தன் தீவினைகள் நீங்குமாறு, கருணையின் உருகி- உயிர்கண்மேற் சென்ற அன்பினால் உருகி, நெஞ்சிற் சென்றனன்-நெஞ்சினால் நல்லொழுக்கம் மேற்கொண்ட யசோமதி, அறிவு காட்சி-ஏனை நன்ஞானமும் நற்காட்சியும்பெற்று, திருவறத்து-அருகன் அருளிய சைன தருமத்தவருள், ஒருவனானான்-நிகரற்றவனானான். வென்றவர் சரண் அடைந்தார்- வினைப்பகையை வென்ற முனிவரருடைய திருவடியே புகலாக அடைந்தவர், விளைப்பது-அடைந்து பெறுவது, வென்றியன்றோ-வினையை வெல்வதே யாகும் எ-று.

என்றலும், விரைவுப்பொருட்டாய வினையெச்சம். முனிவர் திருவடியில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கியது தோன்ற, "அடிகள் பாதத்து எழில்முடி மலர்கள் சிந்த" என்றார். வினைப் பகை நீங்குதற்குரிய மனப்பக்குவம் பிறந்துவிட்ட தென்பார், "கன்றிய வினைகள் தீரக் கருணையி னுருகி" என்றும், சைனதருமத்தில் வேந்தன் உளஞ்சேர்ந்து அதற்குரிய நல்லொழுக்கத்தை மேற் கொண்டமை தோன்ற, "நெஞ்சிற் சென்றனன்" என்றும், அதற்குரிய நன்ஞானம் நற்காட்சிகளை யறிந்தமை உய்த் துணரவைத்து, இம்மூன்றாலும் அநவன் ஒப்பற்ற அறவோனானது கூறுவார், "திருவறத்தொருவ னானான்" என்றும் கூறினார். இதுகாறும் தீவினையேகன்றி நின்ற அவன் இத்துணை விரைவில் நல்லறம் மேற்கொண்டு சிறந்தமைக்கு ஏது கூறுவாராய், "வென்றவர் சரணடைந்தார் விளைப்பது வென்றியன்றோ" என்றார்.

யசோமதி மக்கட்குக் கூறுதல்

    வெருள்செயும் வினைகள் தம்மை வெருவிய மனத்த னாகி
    மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
    அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
    தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான்.         311

உரை:- வெருள் செயும் வினைகள் தம்மை வெருவிய மனத்தனாகி - மயக்கத்தைச் செய்யும் வினைகட்கு அஞ்சிய மனமுடையவனாய், மருள் செயும் உருவமாட்சி மகனொடு மங்கை தன்னை - கண்டார்க்கு வியப்பினை யுண்டாக்கும் அழகு மாட்சிமைப்பட்ட மகனையும் மகளையும் பார்த்து, அருள் பெருகு உவகை தன்னால் - அன்பு மிகுதியாற் பெருகிய மகிழ்ச்சியினால், அமைவிலன் - அமையானாகிய யசோமதி, அளியன் - அளிக்கத்தக்க யான், உம்மைத் தெருளலன் - உங்களை இன்னாரென்று அறியாது, முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க - முற்பிறப்புக்களிற் செய்த தீமைகளைப் பொறுத்தருள்வீர்களாக, என்றான் - என்று வேண்டினான் எ - று.

வினைகளால் மயக்கமும் துன்பமும் உண்டாதலின், "வெருள் செயும் வினைகள்" என்றார்; "வெருள் செய்வினை தருதுயரம்" (287) என்று முன்பும் கூறியது காண்க. வினைக்கு அஞ்சும் செயல் அறிவறிந்தார்கண்ண தாகலின், "வெருவிய மனத்தனாகி" என்றார். மருள், மருட்கை; இது பிறர்கட் டோன்றிய ஆக்கம் பொருளாகப் பிறப்பது. தொடர்புடைமை கருதாது எல்லா வுயிர்கண் மேலும் செல்லும் பேரன்பு அருளெனப்படுதலின், அருள் பெருகு வகை யென்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. உவகை மேன்மேலும் மிகுவதால் அமைவிலனானா னென வுணர்க. தீமை யென்னாது "சிறுமை" யென்றது தன்னைப் பொறுத்தல் வேண்டும் என்றற்கு.

கலியாணமித்திரற்குக் கூறுதல்

    ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகன் றன்னை
    ஆருயிர்க் கரண மாய* அடிகளோ டைய நீயும்
    நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
    பாரியற் பொறையை நெஞ்சிற் பரிந்தனன் மன்னன் மன்னோ.+         312
    -----------
    (பாடம்.) *சரணமாய +மன்னே; மன்னனானான்.

உரை:-.ஓருயிர்த் தோழனாகி - உயிரால் ஒருவனே என்று கூறத்தக்க நண்பனாய், உறுதிசூழ் வணிகன் த‌ன்னை - மன்னனாகிய தனக்கு உறுதியானவற்றை நினைந்துசெய்த‌ வணிகனான கலியாணமித்திரனைப் பார்த்து, ஐய- ஐயனே, ஆருயிர்க்கு அரணமாய அடிகளோடு- எனது அரிய உயிருக்கு அரணாகிய அறம் உரைத்த இச் சுதத்த முனிகளோடு, நீயும் எனக்கு இறைவனாக நேர் என நினைவல் என்று - நீயும் எனக்கு ஞானாசிரியனாதற்கண் ஒப்பாவாய் என நினைக்கின்றே னென்று, இனிய கூறி- இனிய சொற்கள் பல சொல்லி, மன்னன்- வேந்த‌னாகிய யசோமதி, பார் இயற் பொறையை - நிலத்தையாளும் அரசபாரத்தை, நெஞ்சில் பரிந்தான் - மனத்தின்கண் பற்றின்றித் துறந்தான் எ-று.

உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரே யென்பார், "ஓருயிர்த் தோழனாகி" யென்றார். "எனக்குயி ரென்னப்பட்டான் என்னலாற் பிறரையில்லான்"1 என்று தேவரும் கூறுவர். செய்கையில்வழிச் சூழ்ச்சி பயன்படாமையின், சூழ் வணிகன் என்பதற்கு இவ்வா றுரைக்கப்பட்டது. அற‌ முரைக்குமுகத்தால் முனிவன் அரசனுயிர் நரகு புகாவகையிற் காத்தமையின், அவனை, "ஆருயிர்க் கரணமாய அடிகள்" என்றான். வணிகன் காட்டித் தெருட்டத் தெருண்டு அறம் நல்கப்பெற்றமையின், "நீயும் நேர் எனக்கிறைவ‌னாக நினைவல்" என்றும், அறக் கேள்வியால் ஞானம் பெற்று அரசிய லின்பத்தையும் பெரும் பொறையாகக் கருதி உள்ளத்தே அதனை வெறுத்துத் துறத்தலின், "பாரியற் பொறையை நெஞ்சிற் பரிந்தனன்" என்றும் கூறினான். மன்னும் ஓவும் அசை.
    ---------
    1.சீவக. 205.


    மணிமுடி மகனுக் கீந்த‌ மன்னவன் த‌ன்னோ டேனை
    அணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னான‌
    வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
    துணிவினர் துறந்து மூவார் தொழுதெழு முருவு கொண்டார்.         313

உரை:- மகனுக்கு மணிமுடி ஈந்த - மகனாகிய அபயருசிக்குத் தன் மணியுடன் யிழைத்த முடியை கொடுத்து நீங்கிய‌ மன்னவன் த‌ன்னோடு- வேந்தனாகிய யசோமதியுடன், ஏனை அணிமுடி யரசர் தாமும்- ஏனை அழ‌கிய முடிசூடிய வேந்தர்களும், அவன் உயிர்த் துணைவனான‌ வணிகனும் - அவனுடைய‌ உயிர்த்தோழனான கலியாணமித்திரனும், மற்றுளாரும்- மற்றைய நண்பர்களும் சுற்றத்தாரும், மாதவத்திறையை வாழ்த்தி - பெரிய தவத்தையுடைய முனிகளாகிய சுதத்தனை வணங்கி வாழ்த்தி, துணிவினர் துறந்து - உலகியற் போகத்தின் தன்மையை யுணர்ந்து துறந்து, மூவார் தொழுதெழும் உருவு கொண்டார்- மூத்துக் கெடுதலில்லாத தேவரும் முனிவரும் தொழும் ஞான நிலையினை யடைந்தார்கள் எ-று.

அரசியற் போகத்தைப் பொறையாகக் கருதி மனத்தே துறந்தமையின், அதனைத் தன் மகன்பால் வைத்தற்கண் நிகழும் இன்ப நிகழ்ச்சிகளை பொருளாக நினையாமை தோன்ற. "மணிமுடி மகனுக் கீந்த மன்னவன்" என்றொழிந்தார். ய‌சோமதிக்குத் துணையாய வேந்தரும் பிறரும் அவன் துறவுக்காலத்தே யுடன்வந்தாராக‌, அவனுக்கு அத்துறவுநிலை வருவதற்குக் காரணனாயிருந்த கலியாண‌ மித்திரன், "ஓருயிர்த்தோழனாகி யுறுதி சூழ்" (213) பவனாத‌லின், அவனும் உடனே துறவு மேற்கொண்டு வேந்தனைச் சூழ‌ வந்ததை விதந்து, "அவனுயிர்த் துணைவனான வணிகனும்" என்றார். துறவுக்குத் துணிவு இன்றியமையாமையின், "துணிவினர் துறந்து" என்றும், பிறப்பிறப்புக்கட் கேதுவாகிய வினையை வென்ற ஞானிகள் என்றற்கு "மூவார்" என்றும் கூறினார். முனிவரர், கணதராதி மாமுனிவரென வுணர்க; "இமையவரு மாதவரு மிறைஞ்சியேத்தப் பணிவரிய சிவகதியி னமர்ந்திருந்தா ரற வமிர்த‌ முண்டா ரன்றே" 1 என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க.
    -----------
    1. மேருமந். 1400.

அபயருசி துறவு

    தாதைதன் துறவு முற்றத்* தானுடன் பட்ட தல்லால்
    ஓதநீர் வட்டந் தன்னை யொருதுகள் போல வுள்ளத்
    தாதரம் பண்ணல் செல்லா ன‌பயனு மரசு தன்னைக்
    காதலன் குமரன் த‌ம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.         314

உரை:-அபயனும் - அபயருசியும், தந்தைதன் துறவு முற்ற- தன் தந்தையாகிய யசோமதிக்குத் துறவு நெறிமுற்றிப் பயன்தருதல் வேண்டி, ஓத நீர்வட்டம் அரசுதன்னை- கடல் சூழ்ந்த நிலவுலக அரசியற்போகத்தை, தான் உடன் பட்டது அல்லால் - தான் மேற்கொள்ள இசைந்தானே யன்றி, ஒருதுகள் போல - மேற்கொண்ட அதைப் பயனில் பொருளாகக் கருதி, உள்ளத்து ஆதரம் பண்ணல் செல்லான் - மனத்தில் சிறிதும் விரும்பானாய், தன்னை - அவ்வரசியற் போகத்தை, காதலன் குமரன் த‌ம்பி - அன்பும் இளமையுமுடைய தம்பியாகிய யசோதரன் பால், கைப்படுத்தனன் விடுத்தான்- வைத்துவிட்டுத் தானும் துறவு பூண்டான் எ-று.

யசோமதியின் துறவு முற்றுங்காறும் அரசபோகத்தை மேற்கொண்டிருந்த அபயருசி, அவன் அது முற்றியதும் துற‌த்தலின், மேற்கொண்டிருந்ததற்கு ஏது இஃதென்பார், "தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்டதல்லால்" என்றும், அவ்வாறிருந்த காலத்தும் அவ்வரசியற் போகத்தை விரும்பாதிருந்தமை தோன்ற, "ஒருதுகள்போல வுள்ளத் தாதரம் பண்ணல் செல்லான்" என்றும், தான் இளையனாயினும் தன்னினும் இளையனான யசோதரற்கு அரசியலைத் தந்த செயலைக் கூறுவார், "காதலன் குமரன் தம்பி கைப்படுத்த‌னன் விடுத்தான்" என்றும் கூறினார். தன்னையென்பது சுட்டு மாத்திரையாய் நின்றது.
--------

    மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
    பேதைய‌ம் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்
    ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சின் எஞ்சா
    மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.         315
    -----------
    (பாடம்) *முந்த‌

உரை- மைந்தனும் - அபயருசியும், மங்கையாய பேதை அம் பிணையனாளும் - மங்கையாகிய இளமையான மான்பிணையை யொத்த அபயமதியும், மாதவன் மலர்ந்த சொல்லால் - பெரிய தவத்தையுடையவனான சுதத்தமுனிகள் உரைத்த அறவுரையால், பிறப்பு இனிது உணர்ந்த பின்னர்- தங்கள் பழம்பிறப்பை யுணர்ந்த பிறகு, போகத்து நெஞ்சின் ஆதரம் பண்ணல் அஞ்சி - உலகியல் இன்பத்தை நெஞ்சால் விரும்புதற்கு அஞ்சி, எஞ்சா மாதவன் சரணமாக - குன்றாத பெரிய தவத்தையுடைய சுதத்தன் திருவடிகளையே துணையாகக்கொண்டு, வனமது துன்னினார் – முனிவனுடன் வனத்தை யடைந்து தவம்செய்யக் கருதினார்கள் எ-று.

மாதவனாதலின் உரைத்தானென்றல் சீல மன்மை நோக்கி, "மலர்ந்த" என்றார். அவனுரைப்பன யாவும் அறமாதலின், "சொல்லால்" என்றார். நூல் வாயிலாக வுணர்த்துதலினும் சொல்லா லுபதேசித்த சிறப்புக்குறித்து இவ்வாறு கூறனாரென்றுமாம். மங்கையென்பது பெண்பாற் பொதுப்பெயர்; பருவப்பெயரன்று. பேதை, இளமை. பிணை, மான். பழம்பிறப் புணர்ந்து, போகத்தில் வேட்கை செய்தால் வரக்கடவ துன்பத்துக்கு அஞ்சுதலின், "ஆதரம் பண்ணல் போகத்தஞ்சினர்" என்றார். பண்ணல் என்புழி நான்கனுருபு விகாரத்தாற் றொக்கது. போக வேட்கையா லெய்தும் பிறவித்துன்பத்தை நினைந்து நெஞ்சில் மிக்க அச்சம் உறுதல் தோன்ற, "நெஞ்சின் அஞ்சினர்" என்றார். எத்துணையும் தான் மேற்கொண்ட தவத்தின்கண் குன்றாது ஒழுகுதல்கண்டு, "எஞ்சாமாதவன்" என்றும், அவன் திருவருடித்தணையால் எவ்வகை யிடையூறும் எய்தாதென்னும் துணிபுபற்றி அவனுடன் சென்றனரென்பார் "மாதவன் சரணமாக வனமது துன்னினார்" என்றும் கூறினார். வனமது, அது பகுதிப்பொருட்டு.

வனமடைந்த இருவரும் முனிவன்பால் அறங்கேட்டல்

    வினைக்கும் வினைகள் தம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
    தனசர ணணைந்து ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
    வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
    சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.         316

உரை:-வினைக்கும்-ஞானாவரணம் முதலிய வினைகளின் உணர்வும், வினைகள்தம்மால் விளை பயன் வெறுப்பும் - அவற்றாலுண்டகும் இன்பத் துன்பங்களில் வெறுப்பும் மேவி - பொருந்தி, தனசரண் - தன் திருவடிகளே புகலாக, அணைந்துளார்க்கு - அடைந்துள்ள அனைவருக்கும், தவ வரசு அம்முனிவன் அருள - தவத்துக்குரிய அறத்தையுரைக்கும் குறிப்பினனாக அதுகண்டு, அடிகள்-அடிகளே, வினையின விளைவு தம்மை-வினைகளால் உண்டாகும் பயனை, வெருவினம் - அஞ்சினேமாதலின், சினவரன் சரணம் மூழ்கி - சினேந்திரனாகிய அருகபரமன் திருவடியை யடைந்து, செறிதவம் படர்தும் -கேவல ஞானவின்பம் செறிதற் கேதுவாகிய தவத்தைச் செய்யக் கருதுகின்றோம், என்றார் - என்று தெரிவித்தார்கள்.

ஞானாவரணீய முதலிய வினைகளான ஞானாவரணீயம் தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம் என்பனவும், வேதனீயம், நாமிகம், கோத்திரிகம், ஆயுட்கம் என்பனவுமாகிய இருவகைகளாகும்; இவற்றுள் ஞானாவரணீய முதலிய நான்கும் காதி கருமம் என்றும், ஏனை நான்கும் அகாதி கருமமென்றும் வழங்கும். காதி கருமத்தால் துன்பமும் அகாதிகளால் இன்பமும் விளைபயனாகும். இவற்றின் இயல்பும் விளைபயனும் உணர்ந்தாலன்றி இவற்றின்பால் வெறுப்பு உண்டாகாமையாலும், வெறுப்புளதாயினல்லது வீடுபேற்று நெறி வாயாமையாலும், "வினைகளும் வெறுப்பும் மேவி"யென்றார். புவியரசு துறந்து தன் திருவடியடைந்து அறத்தின்வழி நிற்பார்க்குத் தான் அருளக்கருதுவது தவமாதலின், அதனைத் "தவவரசு அருள" என்றும், அக்குறிப்புத் தோன்றக் கண்டதும் இருவரும் வணங்கினமையின், "தாழ்ந்து" என்றும் கூறினார். வினைக் கஞ்சும் அச்சமே ஞானப்பேற்றுக்கு வேண்டும் மனப்பக்குவத்தைப் பயத்தலின், "வினையின விளைவு தம்மை வெருவினம்" என்றும், எமக்குப் புகலளிப்பது சினவரன் சரணமாதலின் அதனை யடைதற்கு வேண்டும் தவ நெறியை அருளவேண்டும் என்பார், "செறிதவம் படர்தும்" என்றும் கூறினார். கேவலஞான வின்பத்துச் செறிவிக்கும் சிறப்புடைமையின் தவத்தைச் "செறிதவம்" என்று சிறப்பித்தார்.

சுதத்த முனிகள் கூறல்

    ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்ம்மின்
    சாற்றிய வகையின் மேன்மேற் சையமா சைய மத்திற்
    கேற்றிநின் றின்மை * தன்னை யிதுபொழு துய்ம்மி னென்றான்
    ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.         317
    ----------
    (பாடம்.) * கேற்றவனின்மை.

உரை:-- ஆற்றலது அமையப் பெற்றால் - உங்கள் பால் தவத்துக்குவேண்டும் ஆற்றல் அமைந்திருக்குமாயின், அருந்தவம் அமர்ந்து செய்ம்மின் - சோறும் நீரும் சுருக்கிச்செய்யும் அந்த அரிய தவத்தை அவ்வாற்றலுக் கேற்றவாறு பொருந்தச் செய்வீர்களாக, சாற்றிய வகையின் - பரமாகமம் சொல்லும் முறைப்படியே, மேல் மேல் - உணவு முதலியவற்றைக் குறைத்துப் பல்வகை ஆராதனைகளை மேற்கொண்டு, சையம் - சம்மியங்களில், மா சையமத்திற்கு தன்னை ஏற்றி நின்று - மேலான சம்மியத்திற்குத் தன்னை ஏற்றுவித்துப் பிராணி சம்மியமம் விடய சம்மியமங்கள் நிறைந்து நின்று, இது பொழுது - இந்நிலையிலேயே, இன்மையுய்ம்மின் - இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பு இல்லாமையாகிய நல்லறத்தைக் கடைபோகச் செய்வீர்களாக, என்றான் - என்று சுதத்த முனிவன் உரைத்தான், ஆற்றலுக்கு ஏற்ற வாற்றால் - அவர்களும் தங்களுடைய‌ ஆற்றலுக்கு கேற்றவாறு, அவ்வழி ஒழுகுகின்றார் - அம்முனிவன் கூறிய நெறியிலேயே ஒழுகலானார்கள் எ - று.

ஆற்றல், மனவலியும் மெய் வலியுமாம். ஆற்றல் அமையாவிடத்து உண்டிசுருக்கிச் செய்யும் இத்தவம் வெற்றி தருதல் அரிது என்றற்கு "அருந்தவம்" என்றும், அதனால் உண்டாகும் விளைவு பேரின்பமாதலின் "அமர்ந்து செய்ம்மின்" என்றும், உண்டி சுருக்கத்தை மேன்மேல் படிப்படியாகச் செய்யுமாற்றால் "ஆத்ம பாவனையாகிய‌ ஞானாராதனை, தரிசனாராரனை, சாரித்திராராதனை என்னும் இக்குணங்களில்" நிலைபேறுண்டாக அது வாயிலாகச் "சுத்தாத்மதியான" முண்டாகுமென்று பரமாகமம் கூறுதலின், "சாற்றியவகையின்" என்றும் கூறினார். சையம், சம்மியமம், முதன் மூன்று குண நிலையில் சம்மியத்துவமில்லை யெனவும் நாலாங்குண நிலையிலும் அதன்மேலும் மேலும் சம்மியத்துவங்கள் உண்டாமென்றும், எல்லாவற்றிற்கும் மேலான சம்மியமத்தில் பிராணி சம்மியமம் விடயசம்மியங்கள் தோன்றி நிறைவு செய்யுமென்றும் மேருமந்தரம், பதார்த்தசாரம் முதலிய நூலகள் கூறுகின்றன. இன்மை, இன்பத்துன்பங்களில் விருப்பு வெறுப்பில்லாமை. இவ்வாறியலும் இத்தவ நெறியின் இயல்பினை, "ஈற்றிலா ராதனை விதியி லேந்தல்தான், ஆற்றலுக்கேற்ற‌ வாறன்ன பானமும், சாற்றிய வகையினாற் சுருக்கிச் சையமேல், ஏற்றினான் தன்னைநின் றிலங்குஞ் சிந்தையான், " "சித்தமெய் மொழிகளிற் செறிந்து யிர்க்கெல்லாம், மித்திர னாயபின் வேத னாதியின், ஒத்தெழு மனத்தனா யுவகை யுள்ளுலாய்த், தத்துவத் தவத்தினாற் றவனுவை வாட்டினான்" 1 என வருவனவற்றா லறிக.

சுதத்த முனிகள் இருக்குமிடத்தை மாரிதத்தனுக்கு கூறுதல்

    அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
    பெருங்கழு வொருங்கு சூழப் பெறற்கருங் கணங்கள் தம்மாற்
    சுருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னின்னுட்
    டருங்கடி கமழுஞ் சோலை யதுனுள்வந் தினிதி ருந்தான்.         318

உரை:- அருங்கலம் மும்மை தம்மால் - நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கமகிய மூவகை யரிய மணிகளையுடையனாதலிலும், பெறற்கு அருங்குணங்கள் தம்மால் - பெறுதற்கு அரியவாகிய உயர்குணங்களை யுடையனாதலிலும், சுருங்கல் இல் - குன்றாத, சுதத்தனென்னும் துறவினுக்கு அரசன் - சுதத்தனென்னும் பெயரையுடைய துறவியர் தலைவன், அதிசயமுடைய நோன்மைப் பெருங்குழு - காண் போர்க்கு மனத்தே வியப்பை விளைவிக்கும் இயல்புடைய தவ விரதங்களையுடைய பெரிய துறவியர் கூட்டம், சூழ- தன்னைச் சூழ்ந்துவர, நின் நாட்டு - நின்னுடைய நாட்டிலுள்ள, அருங்கடி கமழும் சோலையதனுள் வந்து – அரிய மணம் கமழும் சோலைக்கு வந்து, இனிதிருந்தான் – இனிது எழுந்தருளியிருந்தான் எ-று.

நற்காட்சி முதலிய மூன்றும் சம்மிய தரிசனம், சம்மிய ஞானம், சம்மிய சாரித்திரம் என்று பெயர் கூறப்பட்டு இரத்தினத்திரயம் என்று வழங்குதலின், "அருங்கல மும்மை" யென்றார். "இதற்குபாயம் இரதனத் திரவியம்" 2 என்று சான்றோர் ஒதுதல் காண்க. குணங்களென்பதற்குக் குணவிரதங்களென்றலுமாம். நற்காட்சி முதலியவற்றை யுடைமையாலும் குணங்களின் மிகுதியாலும் காண்போர்க்கு வியப்புண்டாதலின், "அதிசயமுடைய நோன்மைப் பெருங்குழு" என்றார். தவவிரதங்களைக் கடைபோகச் செய்தற்கு ஆற்ற லின்றியமையாமையின், "நோன்மைப் பெருங்குழு" என்று சிறப்பித்தார்; பெருமை, மிகுதி மேற்று. முனிவன் வந்து இனிதிருத்தற்கு ஏது கூறுவான், "அருங்கடி கமழும் சோலை" யென்றான்.
    ---------
    1. மேருமந். 544,545. 2. மேரு. 790.

தாம் இன்னாரென அபயருசி மாரிதத்தற்குக் கூறுதல்

    அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோம திக்குத்
    தனயர்கள் தம்மை நோக்கித் தரியலீர் சரிதை போமின்
    எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
    அனையவ ராக எம்மை யறிகமற் றரச என்றான்.         319

உரை:- அனசனம் அமர்ந்த சிந்தை யருந்தவன்-உண்ணா நோன்பை விருபபத்துடன் மேற்கொண்ட மனமுடைய அரிய தவத்தோனாகிய சுதத்த முனிவன், இசோமதிக்குத் தனயர்கள் தம்மை நோக்கி-யசோமதிக்கு மக்களாகிய அபயருசி அபயமதி யிருவரையும் பார்த்து, தரியலீர்- அனசன நோன்பை நீவிர் தாங்கவல்லீரல்லீராதலின், சரிதை போமின்-தெருவிற்சென்று உணவேற்று உண்டு வருக என-என்று பணிக்கவே, அவர்-அவ்விருவரும், மெல்ல இறைஞ்சி-மெதுவாக அவரை வணங்கி விடைபெற்று இந் நகரத்து வந்தார்-இந்த இராசபுர நகரத்துக்குள்ளே வந்தார்கள், அரச-அரசனே, எம்மை அனையவராக அறிக- எங்களை அவ் விருவருமாக அறிவாயாக, என்றான்-என்று அபயருசி கூறினான் எ-று

"அந்தில் ஆசனங்கொண் டண்ணல் அனசனத் தவமமர்ந்தான்"(24) என்று முன்னே கூறியது கடைப்பிடித்து ஈண்டு அபயருசியின் கூற்றில் வைத்து "அனசன மமர்ந்த சிந்தை யருந்தவன்" என்றார். "தன்னைப் பிறன்போற் கூறும்"1 முறையிற் கூறுதலின் "இசோமதிக்குத் தனயர்கள்தம்மை" யென்றான். "பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர், எம்முட னுண்டி மாற்றாது இன்றுநீர் சரிதைபோகி நம்மிடை வருக"(26) என்று முன்னே முனிவர் கூறியதனை ஈண்டு அபயருசி கொண்டு கூறுதலால் "தரியலீர் சரிதை போமின் என" என்றான். அனையவர் என்றது அவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. மற்று, அசை. மெல்ல என்பதனை வந்தார் என்பதனோ டியைத் துரைப்பினு மமையும்.
    --------------
    1. தொல்.சொல். நூ. 448.

அபயருசி மேலும் அரசற்குக் கூறுதல்

    இனையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
    இனையது வினைகள் பின்னா னிடர்செய்த முறைமை தானும்
    இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
    இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.         320

உரை:- எமரது பிறவி மாலை இனையது-எம்மைச் சேர்ந்தோருடைய பிறவித் தொடர்ச்சி இத்தன்மைத்தாகும், எமதும் எண்ணின் இனையது-எம்முடைய பிறப்பு வரலாறும் ஆராயுமிடத்து இத்தன்மைத்தௌ, பின்நாள் வினைகள் இடர்செய்த முறைமைதானும் இனையது-பிற்காலத்தே வினைகள் துன்பம் விளைவித்த இயல்பும் இத்தன்மைத்தே. வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் இனையது-சினம் காமம் முதலியவற்றா லுண்டாகிய துன்பத்தை யாராயு மிடத்து அவற்றின் இயல்பும் இத்தன்மைத்தாகும், இறை வன் அறத்தது பெருமை தானும்-அருகபரமன் உரைத்த அறத்தின் பெருமையும், இனையது-இத்தன்மைத்தாகும்எ-று.

பிறவி மாலையும், வினைகள் இடர் செய்யும் முறைமையும் வெகுளி காமத்து இயல்பும் இதுகாறும் கூறியவாற்றால் விளக்கினமையின் ஒவ்வொன்றையும் தனித்தனியாக "இனையது" என்று முடித்தான். இவற்றின் சிறுமைபோல இறைவன் அருளிய அறத்தின் பெருமையும் நிலவுவதென்பான், "பெருமைதானும் இறைவனதறத்த"தென்றான். "தோன்றி மாய்ந்துலக மூன்றிற் றுய ரெய்து முயிர்கடம்மை, ஈன்றதாய்போல வோம்பி யின்பத்துளிருத்தி நாதன், மூன்றுலகிற்கு மாக்கி முடிவிலாத் தன்மை நல்கும், ஆன்ற நல்லறத்தைப் போலு மரியதொன் றில்லை யென்றான்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. "எண்ணின்" "நாடின்" என்றதனால் இவை காட்சியளவையானன்றிக் கருதல், உரையென்னும் அளவைகளால் உய்த்துணரப்படுவன என்றானாயிற்று.
    --------------------
    1. மேரு. 117.

வேறு

    செய்த வெந்தியக்* கொலையொரு துகள்தனிற்
          சென்றுறு பவந்தோறும்
    எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ
          திருநில முடிவேந்தே.
    மையல் கொண்டிவண் மன்னுயி ரெனைப்பல
          வதைசெய வருபாவத்
    தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுனைந்
          திரங்குகின் றனமென்றான்.         321
    ----
    (பாடம்) *வெந்திரியக், வந்தய,

உரை:- செய்த வெந்தியம்-வெந்தியச் சம்பா வரிசி மாவாற் செய்யப்பட்ட கோழியினது, கொலை-கொலை வினையானது, ஒரு துகள்தனில்-ஒரு குற்றமாய், சென்று உறுபவம் தோறும் எய்து மாயிடின்-சென்றடையும் பிறப்புத் தோறும் இடையறாது வந்து வருத்துமாயின், தீர்ந்திடாக் கொலை இஃது-எத்துணைப்பிறவி யெடுப்பினும் ஒழியாத உயிர்க்கொலையாகும் இத்தீவினை, இரு நில முடி வேந்தே- இந்தப் பெரிய நிலவுலகமாளும் அரசே, இவண்-இவ் விடத்தே, மையல்கொண்டு-மயக்கமுற்று, எனைப்பல எத்துணையோ பல உயிர்களை,வதைசெய வருபாவத்து எய்தும் வெந்துயர்-கொலைசெய்வதால் வரும் தீவினையால் விளையும் கொடிய துன்பம், எப்படித்து-எத்தன்மைத்தாம், என்று உளைந்து-என்று வருந்தி, இரங்குகின்றனம்-யாங்கள் இருவரும் துயர்கின்றோம், என்றான்-என்று அபயருசி கூறினான் எ-று

வெந்தியம், வெந்தியச்சம்பா என்னும் ஒருவகை நெல். "சாலியின் இடியின் கோழி" (146) என்று முன்பு பொதுப்படக் கூறினாராதலின், ஈண்டு அதன் வகையுள் இன்னதெனத் தெரித்தோதினார் யசோதரனாய்ப் பிறந்து வாழ்ந்த காலத்துத் தான் செய்த தீவினைப் பயனைத் தான் நுகர்ந்து துன்புற்றதற்குத் தானே கரியாதலின், அதனை யெடுத்தோதி, அதன் கொடுமையினை வற்பறுத்துவான் "தீர்ந்திடாக்கொலை இஃது" என்றான். எனவே, இப்போது தான் கொலையுண்டற்கம் அத்தீவினையே காரணம் என்றானாயிற்று. மாக் கோழியின் கொலையே இத்துணைத் தீவினையாய்த் தொடர்ந்து துன்புறுத்துமாயின், எண்ணிறந்த உயிர்களைக் கொலைபுரியும் நின் தீவினை நின்னை எத்துணைத் துயருறுக்குமோவென்று நின்பொருட்டு இரங்குகின்றனம் என்றானென வறிக. கொலைப்பாவம் மையலறிவு காரணமாக வருதல் பற்றி "மையல்கொண்டு" என்றார். பாவம், தீவினை. வதை, கொலை.

மாரிதத்தன் மனம்தெருண்டு கூறல்

    ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி
          லருவினை நரகத்தாழ்ந்
    தெய்தும் வெந்துய ரெனைப்பல கோடிகோ
          டியினுறு பழிதீர்ந்தேன்
    பொய்ய தன்றிது புரவல குமரநின்
          புகழ்மொழி புணையாக
    மையின் மாதவத் தொருகட லாடுதல்
          வலித்தன னினியென்றான்.         322

உரை:- ஐய-ஐயனே, புரவல குமர-அரச குமரனே, நின் அருளால்-நீ அருள்செய் தரைத்த உரையால், உயிர்க் கொலையினில் அருவினை-உயிர்களைக்கொல்வதாகிய அரிய தீவினையால் எய்தும், நரகத்து ஆழ்ந்து-நரகத்தில் வீழ்ந்து, எய்தும் வெந்துயர்-நுகரக்கடவ மிக்க துன்பங்கள், எனைப் பல கோடி கோடியின் உறுபழி-எத்துணையோ கோடிக் கணக்காய்ப் பொருந்தும் துன்பத்தினின்று, தீர்ந்தேன்- நீங்கினேனாயினேன், இது பொய்யது அன்று-இதுபொய் யன்று மெய்யே, நின் புகழ்மொழி புணையாக-நின் புகழை நிறுத்துதற்குக் காரணமாகிய நின் வாயிற் சொற்களையே புணையாகக்கொண்டு, மையில் மாதவத்து ஒருகடல்-குற்றமில்லாத பெரிய தவமாகிய ஒப்பற்ற கடலை, ஆடுதல்-நீந்திக் கரையேறுதற்கு, இனி வலித்தனன்-இப்பொழுது உறுதிசெய்துகொண்டேன், என்றான்-என்று மாரிதத்தன் கூறினானம் எ-று

ஐய, புரவல, குமர, என்பன மாரிதத்தற்கு அபயருசிபால் உள்ள ஆர்வத்தைப் புலப்படுத்து நின்றன. அபயருசி இத்துணையும் கூறுதற்குத் தன்பால்கொண்ட அருளே காரணமென்று கருதுதல் தோன்ற "அருளால்" என்றும், உயிர்க்கொலையால் வரும் தீவினை எத்துணையும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் நீங்குதலின்மையினைத் "தீர்ந்திடாக் கொலையிஃது"(321) என்றதனால் உணர்ந்தமையின், "அருவினை" யென்றும் அது கொண்டுய்க்கும் இடம் நரகமாதலின் "நரகத்தாழ்ந்தெய்தும் வெந்துயர்" என்றும், அதனினின்றும் உய்தற்கு மாதவம் மேற்கோடல் துணிந்தமை தோன்ற "உறு பழி தீர்ந்தேன்" என்றும், அதற்கு உறுதி கூறுவானாய் "நின்புகழ் மொழி புணையாக மாதவத்தொரு கடலாடுதல் வலித்தனன்" என்றும் கூறினான். இவனுரையினை அபயருசி யயிராமைப் பொருட்டு "பொய்யதன்றிது" என்றதனோடமையாது "புரவல" என்றும் "குமர" வென்றும் கூறுகின்றான். பொய்யது: அது பகுதிப்பொருட்டு. புகழ் உண்டாதற்கும் புகழுடைமை புலப்படுத் தற்கும் புகழும் மொழியும் ஏதுவாமாகலின் "புகழ்மொழி" எனப் பட்டது. தவத்தைக் கடலென்றது அதனது அருமையும் பெருமையு முணரநின்றது.

மாரிதத்தன் துறவு பூண்டு முனிவனாதல்

    இன்சொன் மாதரு மிளங்கிளைச் சுற்றமும் எரித்திர ளெனவஞ்சிப்
    பொன் செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந் தற்கிது பொறையென்றே
    மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல் விடுத்தவ ருடன்போகி
    முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற் றொழுதுநன் முனியானான்.         323

உரை:- இன்சொல் மாதரும் -இனிய சொற்களைப் பேசும் மகளிரையும், இளங்கிளைச் சுற்றமும்-இளையாரும் மைந்தரும் மைத்துனரும் பிறருமாகிய சுற்றத்தாரையும், எரித்திரள் என அஞ்சி-நெருப்பின் கூட்டமென்று கருதி யஞ்சி மனத்தால் நீங்கி, புதல்வருள் புட்பதந்தற்கு-தன் மக்களுள் மூத்தோனான புட்பதந்தன் என்பானுக்கு, இது பொறை என்ற-இவ்வரசியல் சுமையாகும் என்றெண்ணி, பொன்செய்மாமுடி-பொன்னாற்செய்த அழhsய முடியினைச் சூட்டி, அரசியல் வெறுத்தனன் விடுத்து-அரசியற் போகத்தைத் தான் விரும்பாது அவன்பால் ஒப்படைத்துவிட்டு, அவருடன்-அவ் வபயருசி அபயமதி யென்ற இருவருடன், போகி-சென்று, முன் சொல்-முன்னே "நகர்ப்புறத்தோர் வளமலர்ப் பொழில் (24) என்று சொல்லப்பட்ட, மாமலர்ப் பொழிலினுள்- அழகியபூக்கள் நிறைந்த சோலைக்குள்ளே எழுந்தருளியிருந்த, முனிவரன் தொழுது-முனி புங்கவனாகிய சுதத்தமுனிகளை வணங்கி அறங்கேட்டு, மின் செய் தாரவன் நன்முனியானான்-ஒளி விளங்கும் மாலை யணிந்தவனான மாரிதத்தன் நற்காட்சி முதலிய நன்மை பெற்ற முனிகளாயினான் எ-று

இளையராய உடன் பிறந்தார், மக்கள், முத்துனர் முதலாயினாரை, "இளங்கிளைச் சுற்றம்" என்றார்; "எழுமையும் பெறுக வின்ன விள்கிளைச் சுற்றம் என்றாள்"1 என்று தேவரும் கூறுதல் காண்க. புதல்வராகிய சுற்றத்தை "இளந்துணைப் புதல்வர்" "இளந் துணை மகாஅர்"2 என்பது பண்டையார் வழக்கு. நெருப்பு, தன்னைச் சேர்ந்தாரை வெதுப்புதல்போலத் இம்மாதர் முதலிய சுற்றமும் தன்னை வினைசெய்வித்து மறுமைக்கண் தீவாய் நரகத்து வீழ்வித்து வருத்துதலின் "எரித்திரள் என அஞ்சி" நீங்கினானென்றார். பொன்னாற் செய்யப்பட்டதாயினும், மணிமுடியும் விரும்பாவிடத்துப் பொறையாய் வருத்துமாதலின், "பொன்செய் மாமுடி" யென்றும் "இது பொறையென்றே மின் செய் தாரவன் வெறுத்தனன்" என்றும் முறை வழுவாமைச் செய்தல் அறமாதலின், "புதல்வருட் புட்பதந்தற்கு அரசியல் விடுத்து" என்றும், அபயருசியின் "புகழ்மொழி புணையாகச்" செல்கின்றமையின், "அவருடன் போகி" யென்றும், முனிவர்பால் அறங்கேட்டு சைன தீக்கைபெற்று நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் உணர்ந்து முனிவரனானா னென்பார், "நன் முனியானான்" என்றும் கூறினார். சைன தீக்கையாவது ஆடை யணிகளையும் தலை மயிர் முதலியவற்றையும் நீக்குதல்; "அறிவன தடிமுத லைம்ப தஞ் சொலா, நெறிமையின் நீக்கினார்"3 என வருதலானும் அதனுரையாலு மறிக.
    -----------
    1. சீவக. 1730. 2. பதிற். 70 71. 3..மேரு. 1203.

நன்முனியாகிய மாரிதத்தன் வானவனாதல்

    வெய்ய தீவினை வெருவுறு மாதவம் விதியினின் றுதிகொண்டான்
    ஐய தாமதி சயமுற வடங்கின னுடம்பினை யீவணிட்டே
    மையல் வானிடை யனசனர் குழாங்களில் வானவன் றானகித்
    தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியின் மகிழ்வுற்றான்.         324

உரை:-வெய்ய தீவினை வெருவுறும் மாதவம்-வெவ்விய துன்பத்தை விளைவிக்கும் வினைகள் அணுகுதற்கு அஞ்சி நீங்கும் பெரிய தவத்தை, விதியின் நின்று-தவத்திற் கோதிய நன்னெறிக் கண்ணே பிறழ்வின்றி நின்றொழுகி, உதிகொண்டான்-எய்தப்பெற்றவனான மாரிதத்த முனிவன், அதிசயமுற-கண்டோர் வியக்குமாறு, ஐயதாம் உடம்பினை இவண் அடங்கினன் இட்டு-மெல்லிதாகிய உடம்பினை இம்மண்ணுலகில் உயிர்ப்படங்கினனாய் விட்டொழித்து, மையல் வானிடை-முகிற் கூட்டம் சஞ்சரிப்ப தல்லாத மேல் நிலை வானமாகிய விண்ணுலகத்தில், அனசனர் குழாங்களில், அனசனத்தவம் பூண்டோரைப்போல, வானவன் தானாகி- தேவனாகி, தொய்யில் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியில்-தொய்யிலெழுதிய பெரிய முலையினையுடைய தேவ மகளிர் கூட்டத்தில், மகிழ்வுற்றான்-தேவபோகத்தில் திளைப் பானாயினன் எ-று

"அஞ்சொலார் நெறிமையை யறநெறி நினைப்ப நீக்கும்"1 என்பவாகலின், மாதவமாகிய அறநெறி வெவ்வினையஞ்சி நீங்குதற்கு ஏதுவாயிற்று, தவநெறியும் வழுவா தொழுகினன்றிப் பயன் தாராமையின் "விதியினின்று உதிகொண்டான்" என்றார். உதி கோடல், உதித்தல். அஃதாவது எய்துதல். "உதிதர வுணர்வல் யானும்"2 என்புழிப்போல. ஐயதாம் என்பதை உடம்பிற் கேற்றுக; தவ முதிர்ச்சிக்கண் உடம்பு வாடி மெலிவதாதலின், உடம்பு மெலிய சினம் முதலிய குற்றங்கள் அடங்கிக்கெடுதலின், முன்னை நிலையும் இப்போதைய நிலையும் கண்டார்க்கு வியப்புத்தோன்று தல் பற்றி "அதிசயமுற வடங்கின" னென்றார். "தவம் பெருக நாடொறும் காயமும் கசாயமும் கரிசமானவே"3 என்றார் பிறரும். மையல் வானம், விண்ணுலகிற்கு வெளிப்படை; செருப்பு,மலையை "மிதியல் செருப்பு"4 என்பதுபோல. தேவருலகிற் பெறும் பயன் அது வாதலின் "தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியின் மகிழ்வுற்றா" னென்றார்.
    ----------------------
    1. மேரு 1203 3. மேரு 543
    2. சீவக 1340 4. பதிற் 21

அபயருசியும் அபயமதியும் வானவராதல்

    அண்ண லாகிய வபயனுந் தங்கையு மாயுக மிகையின்மை
    நண்ணி நாயக முனிவனி லறிந்தனர் நவின்றனர் குணமெல்லாங்
    கண்ணி னார்தம துருவின துடலங்கள் கழிந்தன கழிபோகத்
    தெண்ணின் வானுல கத்திரண் டாவதி னிமையவர் தாமானார்.         325

உரை:- அண்ணலாகிய அபயனும்-பெரியவனாகிய அபயருசியும், தங்கையும்-அவன் தங்கையாகிய அபயமதியும், ஆயுகம் மிகை இன்மை-ஆயுள் மிகவும் இல்லாமையை, நாயக முனிவனில் நண்ணி யறிந்தனர்-தலைமை பொருந்திய சுதத்த முனிகளை யடைந்து அறிந்து கொண்டு, குண மெல்லாம் நவின்றனர்-ஞான வின்பத்துக்குரிய குணங்களை நல்கும் அறவொழுக்கங்களை மேற்கொண்டொழுகி, தமது உருவினது உடலங்கள் கழிந்தன கண்ணினார்-ஜீவபுற்கலமாகிய தமக்கு வந்து கழிந்துபோன பிறப்புக்கள் பலவற்றையும்தெரிந்து, எண்ணின் வானுலகத்து-எண்ணுதற் கினிய விண்ணுலகத்து, இரண்டாவதின்-இரண்டாவது பகுதியில், கழி போகத்து இமையவர்தாம் ஆனார்-மிக்க இன்ப நுகர்ச்சியினையுடைய தேவராயினர் எ-று

அபயன் மூத்தோனாதலின் "அண்ணலாகிய அபயனும்" என்றார். "ஆயுகம் மிகை இன்மை" யென்றதனால் ஏனைச் செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும் கொள்ளப்படும். அறிந்தனர், நவின்றனர், கண்ணினர் என்பன முற்றெச்சமாய் "தாமானார்" என்பதனோடு முடிந்தன. குணமாவது அறமாதலின், அதனைக், "குணமெல்லாம்" என்றார்; இனி இதற்குக் குணவிரதம் முதலாயின என்றுரைப்பினுமாம். கழியென்னும் உரிச்சொல் மிகுதிப்பொருட்டு. வானுலகத்து இரண்டாவது சாசார கற்பமென்னும் தேவலோகம்.

வானவராகிய இவர்தம் உருவநலம் கூறல்

    அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரம்
    செம்பொன் மாமணி தோள்வளை கடகங்கள் செறிகழன் முதலாய
    நம்பு நாளொளி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
    வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.         326

உரை:- அம்பொன் மாமுடி-அழகிய பொன்னாலியன்ற பெரிய முடியும்,அலர்கதிர்க் குண்டலம்-விரிந்த ஒளிக் கதிர்களையுடைய குண்டலங்களும், அருமணி திகழ் ஆரம்- கிடைத்தற்கரிய மணிகளின் ஒளி விளங்கும் அரதன மாலையும், செம்பொன் மாமணி தோள்வளை-செவ்விய பொன்னாலும் அழகிய மணியாலும் இயன்ற வாகு வலயங்களும், கடகங்கள்-கடகங்களும், செறி கழல் முதலாய-கட்டுகின்ற வீரகண்டையும் முதலிய, நம்பும்-விரும்புகின்ற, நாள் ஒளி நகு கதிர்க் கலங்களின்-இளஞாயிறுபோல ஒளிவிடும் ஒளிக் கதிர்களையுடைய அணிகலன்களால், நலம் பொலிந்து-நலம் மிகுந்து, அழகு ஆர்ந்த-அழகு நிறைந்த, வம்புவான் இடு தனுவென-வானம் இடுகின்ற புதிய வில்லைப்போன்ற, வடிவுடை வானவரானார்-உருவத்தையுடைய தேவராயினர் எ-று

முடிமுதல் அடிகாறும் அணியும் அணிகளை நிரலே தொடுத் தோதுவார் "அம்பொன் மாமுடி" என்றும் "செறிகழல்" என்றும் கூறி, ஒவ்வோருறுப்புக்கும் இக்கூறிய இவையே யன்றி, இவற்றிற் கினமாயவை பல வுள்ளன என்றற்கு "முதலாய" என்று மிகுத்தும் ஓதினார். "நம்பு நாள் ஒளி" என்றதனால் இளஞாயிற்றின் பேரொளி கொள்ளப்பட்டது. பொலிதல், மிகுதல்.வம்பு, புதுமை. "வெம்பும் சுடரிற் சுடரும் திருமூர்த்தி"1 என்றார்.
    --------------
    1சீவக 2

தேவரும், இவ்வாறு இத்தேவர் பல்வகை ய‌ணிகலனுடையராதலை,
"கனை கதிரா" "செழுந்திரட்பூந்" என்று திடங்கும் செய்யுட்களில் தோலாமொழித் தேவரும்1 கூறுதல் காண்க.
    -----------
    1.சூளா.துறவு. 219,220.

தேவமகளிரது இன்பம் துய்த்த‌ல்

    வந்து வானவர் திசைதொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்மாரி
    மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மறுகெங்கும்
    அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
    வந்து தேவியர் மன்மத வாளியின் புடைசூழ்நதார்.         327

உரை:-திசைதொறும் வானவர் வந்து வணங்கினர் வாழ்த்தினர்- எட்டுத் திக்கிலும் உறையும் தேவரனைவரும் வந்து வணங்கி வாழ்த்தினார்கள், மந்த மாருதம் மலர் மாரி துந்துபி வளரிசை மருங்கெங்கும் மலிந்தன - பக்கமெங்கணும் தென்றலும் பூமழையும் துந்துபியின் மிகுகின்ற இசையோசையும் நிரம்பின, அருகு எல்லாம் - அருகிடமெல்லாம், விரும்பிய அரம்பையர்- இவர்களை விரும்பிய தேவரம்பையர், ஆடினர் பாடினர் - ஆடியும் பாடியும் மகிழ்வித்தார்கள், மன்மத வாளியின் மகிழ்ந்து - மன்மதன் எய்த அம்பினால் மோக முற்று, தேவியர் வந்து புடைசூழ்நதார்.- தேவ‌ராய இவர்க்கு மனைவியராவார் வந்து பக்கத்தே சூழ்ந்து கொண்டார்கள் எ-று.

அப‌யருசியும், அபயமதியும் தேவருலகத்தை யடைந்த காலையில், இவ‌ரைத் தேவர்கள் வரவேற்று இன்புறுத்த திறம் கூறுவார், "வானவர் திசைதொறும் வணங்கினர் வாழ்த்தினர்" என்றும், தெருக்கள் புனையப்பெற்றிருந்த சிறப்பை, "மலர் மாரி மந்த மாருதம் துந்துபி வளரிசை மலிந்தன மறுகெங்கும்" என்றும், அருகே அரம்பையர் ஆடலும் பாடலும் செய்தனரென்றும் கூறினார். மன்மத‌ வாளியால் காமவேட்கையுற்று வந்த தேவியர், மெய்யுறு புணர்ச்சியின்மையின் காட்சியின்பம் குறித்து அருகே சூழ்ந்து கொண்டாராதலின், "தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந்தார்" என்றார். முன்செய்ந‌ல் வினையினால் முகிலின் மின்ன‌னார், இன்செய் வாயவ ரேந்து கொங்கையர், வந்திடைச் சூழ்ந்திட‌ வணங்க வானவர், அந்தமி லின்பத்து ளமரன் மேயினான்"1 என்று பிறரும் கூறுதல் கான்க.
    --------------
    1.மேரு.511.

இணையில் இன்பத்துள் இருவரும் இருத்தல்

    மாசின் மாமணி மேனியின் வாசமோ ரோசனை மணநாறத்
    தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்
    ஆசி லெண்குண னவதியொ டமைந்தன ரலைகட லளவெல்லாம்
    ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்றார்.         328

உரை:- மாசில் மாமணி மேனியின் வாசம் - குற்ற‌மில்லா அழகிய மாணிக்க மணிபோலும் நிறமமைந்த அவ‌ருடம்பின்கண் எழும் மணமானது, ஓர் ஓசனை மணம் நாற- ஒரு யோசனை தூரம் தன் மணத்தைப் பரப்ப, தேசு - உடம்பினொளியானது, ஓர் ஓசனை திளைத்திட - ஓர் யோசனை தூரம் ஒளியினைச் செய்ய, முளைத்தெழு தினகரன் அனையார்கள் - கீழ்த்திசையில் முளைத்து எழுகின்ற இளஞாயிற்றை யொக்கும் இருவரும், ஆசு இல் எண்குணன்- கடையிலா அறிவு முதலிய எண்குணங்களும், அவதியொடு- அவதி ஞானம் முதலிய பல்வகை ஞானவுணர்வும், அமைந்தனர்- பொருந்தி, அலைகடல் அள‌வெல்லாம்- அலைகளையுடைய கடலென்னும் காலவளவையாலாகிய வாழ் நாட்கால முற்றும், ஏசு இல் - பழிப்பில்லாத, வானுலகு - விண்ணுலத்தில், இணையில் இன்பத்து இனிது இசைந்து- நிகரற்ற பேரின்பத்தில் இனிது தோய்ந்து, உடன் இயல்கின்றார்- பிரியாதிருக்கின்றார்கள் எ-று.

"முளைத்தெழு தினகரன் அனையார்" என்றமையின், மாமணி யென்றது மாணிக்க மாயிற்று. இவர்தம் மேனி நலத்தை, "வாசமோ ரோசனை நின்று நாறிடும், தேசுமோ ரோசனை சென்றெ றித்திடும், தூசணி மாசெய்தா மேனி யின்குணம், பேசலாம் படியதன்று பீடினால்"1 என்பதனாலு மறிக. மாணிக்க மணிக்குப் பதினாறுவகைக் குற்றம் உண்டென்ப வாகலின் "மாசில் மாமணி" என்றார். ஆசில் எண்குணமெனவே, அவை கடையிலா அறிவு முதலிய எட்டாதல் பெற்றாம், அவதி ஞானத்தை "பவப்பிரத்திய அவதி ஞானம்" என்பர்; இதனால் பண்டைப்பிறப்பு முற்றும் தெளியவுணரப்படும். இத்தேவர்கட்குக் காலவெல்லை பதினெட்டுக் கடற்காலம் என்பர்.
    ----------------
    1. மேரு 510

நூற்பயன்

    வெருவரு வினைவலி விலக்கு கிற்பது
    தருவது சுரகதி தந்து பின்னரும்
    பொருவரு சிவகதி புணர நிற்பது
    திருவற நெறியது செவ்வி காண்மினே.         329

உரை:-திருவற நெறியது-அருகபரமேட்டி யுரைத்த சைன தருமத்தின், செவ்வி-இயல்பினை யுணர்த்தும் இந் நூல், வெருவரு வினைவலி விலக்குகிற்பது-அறிவுடையோர் யாவரும் அஞ்சத்தக்க வினையினது வன்மையால் விளையும் துன்பத்தைப் போக்குமாற்றலுடையது, சுரகதி தருவது- தேவகதியினைத் தருவது, தந்து-அவ்வாறு தந்தும் அமையாது, பின்னரும்-அதன்மேலும், பொருவரு சிவகதி-ஒப்பற்ற கேவல ஞானவின்பம், புணர நிற்பது-பொருந்தச் செய்வதாகும், காண்மின்-இவ்வியல்பை இந்நூற் கண்ணே காண்பீர்களாக எ-று

யசோதரன், சந்திரமதி, அமிர்தமதி என்போர் வரலாற்றால் வினையின் வலியையுணர்த்தி, யசோமதி, சண்டகருமன், மாரிதத் தன் முதலாயினார் தாம் செய்த வினைகள் தம்மைத் தொடராவாறு நோற்றுயர்ந்ததனால் "வினைவலி விலக்குநிற்பது" என்றதும், யசோமதி முதலிய அரசர்களும் அபயருசி அபயமதி யென்பாரும் தேவகதி யெய்திய வரலாற்றால், "தருவது சுரகதி" யென்றதும், அபயருசியும் அபயமதியும் தேவகதி பெற்றும் அமையாது எண்குணமும் அவதி ஞானமும் பெற்றதனால் சிவகதி பெறச் சமைந்திருத்தலின், "பொருவரு சிவகதி புணர நிற்பது" என்றதும் இனிது விளங்குதலின், "காண்மினே" என்றார்.

ஆசிரியர் அறங்கூறல்

    ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக‌
    போக்குவ தேதெனில் வெகுளி போக்குக‌
    நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக‌
    காக்குவ தேதெனில் விரதம் காக்கவே.         330

உரை:-- ஆக்குவது ஏது எனில் - மேலிற் செய்யுளிற் கூறியவாறு கண்டோர் இனி யாம் செய்யத்தகுவது யாதென்றால்,அறத்தை ஆக்குக - அறத்தைச் செய்வாராக, போக்குவது ஏது எனில் - நீக்கத் தகுவது யாதென்றால், வெகுளி போக்குக - சினத்தை அறவே நீக்குவாராக, நோக்குவது ஏதெனில் - ஆராயத்தக்கது யாதென்றால், ஞானம் நோக்குக - ஞான நூல்களை நன்கு ஆராய்வார்களாக, காக்குவது ஏதெனில் - நீங்காமற் காக்கக்கடவது யாதெனில், விரதம் காக்க - பல் வகை விரதங்களையும் காப்பாராக எ - று.

இருவினையும் துன்பவிளைவின வாதலின் எவ்வினையைச் செய்யக்கடவோம் என்றார்க்கு அறவினையே செய்க என்பார், "அறத்தை யாக்குக" என்றார்; ஔவையாரும் "அறஞ் செய‌ விரும்பு" என்றல் காண்க. அறவினையைச் செய்யுமிடத்து, முற்றவும் கடியலாகாத வெகுளி ஒரோவழித் தோன்றலு முண்மையாலும், அவ்வெகுளி, தீவினை பிறப்பதற்கு வாயிலாதலாலும், "வெகுளி போக்குக" என்றார். முற்றத் துறந்த முனிவர்பாலும் "வெகுளி கணமேயும் காத்தலரிது"1 என்பதனால் உண்மை யறியப்படுதலும், "தீயபிறத்தல் அதனால் வரும்"2 என்பதனால் வெகுளி தீவினைக்கு வாயிலாதலும் அறியலாம். துறவோறும் அறவோராதலின், அவர்பாலும் அஃதிருத்தல் கூடாதென்பார், "வெகுளி போக்குக" என்றார்; ஔவையார், "ஆறுவது சினம்" என அறச்செயலை அடுத்துக் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு அறச்செய்கையும் வெகுளியின்மையு முடையார் தம் அறிவால் ஆயக்கடவன இவை யென்பார் "ஞானம் நோக்குக" என்றார்; பிறவெல்லம் அறிவுமயக்கமும் வினைத்தொடர்பும் பயக்குமென்பது கருத்து. வீடுபெற விரும்பினோர் செய்யத்த‌குவ‌திது வென்பார் "வித்தை விரும்பு" என்ற ஔவையார், பிறாண்டுக்"காப்பது விரதம்" என்றத‌னையுட்கொண்டே இவரும் "விரதம் காக்கவே" யென்றார் போலும். இனி அறத்தையென்றதற்குச் சைன தருமத்தையே யென்றும், ஞானமென்றதற்குச் சம்மிய ஞானமென்றும். விரதம் என்றதற்குச் சம்மிய சாரித்திரம் என்றும் கூறுப.
    ----------------
    1. குறள், 29. 2. குறள், 303.

ய‌சோதர காவியம் மூலமும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை யவர்கள் இய‌ற்றிய‌ உரையும் முற்றும்.


யசோதர காவியம் : செய்யுள் முதற்குறிப்பு அகராதி.
வார்த்தை -செய்யுள் எண் வார்த்தை -செய்யுள் எண்
அங்கநூலாதி - 55 அருவினை முனைகொ 230
அங்கவளகத்து - 99அருவினை விளையு 46
அங்குலியயங்கம் -38 அருள்புரி மனத்த 309
அசையதாகி - 202 அருளுடை மனத்த 66
அஞ்சிலோதியர் - 167 அருளொடு படர்தல் 306
அஞ்சினமெனினும் - 33 அரைசநின் னகத்து 69
அஞ்சுதலிலாது - 87 அல்லது மன்னை 34
அடைந்தவர்கள் -270 அழுகிநைந்துட 216
அண்டல ரெனினுங் - 29 அற்றமிலறிவு 240
அண்ணலாகிய -325 அறப்பெருமை 266
அண்ணனீ யருளிற் -45 அறப்பொருள் நுகர்தல் 156
அணிகொள் மாமுடி - 209 அறப்பொருள் விளைக்குங் 73
அத்தலத்தக - 197 அறிவரன் சரண 256
அந்தரத்தொரு - 181 அறிவிலராய 308
அப்பிறப்பி - 172 அறிவொடா 50
அம்பின் வாயுமி- 163 அறுத்த மீனி 185
அம்பொன் மாமுடி - 328 அன்றியுமின்றென் 146
அம்முனி யவர்கள்- 26 அன்னணம் அண்ணல் 67
அரசவைவிடுத்து - 117அன்னவர் தம்முள் 260
அரசன் மற்றவன்- 9 அனங்கனான 214
அரசனாணை - 210 அனசன மமர்ந்த 319
அரசுநீதுறத்தி - 150 அனந்த மாமறிவு 233
அருங்கல மும்மை - 318அன்றியு மின்றென் 141
அருமணியி 285

ஆக்குவ தேதெனி 330 ஆதகாதன்னை 148
ஆகமத் தடிக 239 ஆதபத்தி 193
ஆகவெனின் 269 ஆயிடைக்கொடி 212
ஆங்கபய 302 ஆயிடைச் சுதத்த 23
ஆங்வளகத்து 151 ஆயிடை யத்தி 94
ஆங்கவ ளணைந்த 91 ஆயிடை யரச 132
ஆங்கவ ளருளொன் 138 ஆரருள் புரிந்த 232
ஆங்குமுனி 284 ஆருயிர் வருத்தங் 247
ஆடவரன்றி 110 ஆழ்ந்தகுழி 289
ஆடைமுன்னசைஇய 44 ஆற்றல தமைய 317

இங்குலகு 274 இறந்தநாளென்னு 248
இஞ்சி மஞ்சினை 7 இன்சொன் மாதரு 323
இடுக்கண்வந்துறவும் 62 இன்றிவண் ஐய 48
இணர்தகைப்பொழிலி 227 இன்றெறிந்த 192
இதத்தினையுயிர்க்கினி 263 இன்னண மரச 259
இது நுமர்கள் 300 இன்னது நினைந்த 281
இதுவென் மாநக 198 இன்னரிச் சிலம்புந் 93
இந்திரர்கள் 271 இன்னவகை 301
இந்துவோ ரிளம்பிறை 76 இன்னு மாசை 213
இருமுழ மாதி 40 இன்னுமீதைய 250
இருளினாலடர்க்க 120 இனையது பிறவி 310
இருளினிரு 287 இனைய வாகிய 204
இவ்வகை மொழிவோன் 114 இளையன நினைவின் 57
இவ்வகை யாகுஞ் 238 இனையன நினைவு தம் 149
இவ்வுலகி 272 இனையன நினைவுறீஇ 83
இவர்களென் கடை 200 இனையன பலவுஞ் 125
இளங்களிற் றுழுவை 77 இனையன வினையி 160
இளமையினியல்பிது 81 இனையன வுழையர் 157
இளையவள் எழில்நலம் 78 இனையனீ தனியை 158

ஈங்குநம் இடர்கள் 52 உருவினொடழகு 127
ஈடின் முனி 279 உலகமூன்றும் 1
உம்மைவல்வினை 217 உள்விரிந்த 3
உயர்ந்த சோலைகள் 13 உளங்கொள மலிந்த 25
உயிர்ப்பொருள் வடிவு 144 உறுதியைப் பெரிது 51
உயிரவணில்லை 252 உறுபொருள் நிலைமை 241

எண்களுக்கிசைவி 154 என்று கண்டு 222
எண்ணமதலாமை 126 என்று கூறலும் 17
எண்ணமிலி 297 என்றுதன்புறத் 219
எந்தையும் எந்தை 305 என்றும் இப்பரு 15
எரிமணி யிமைக்கும் 85 என்னுயிர்க்கரணம் 102
எவ்வள விதனை 70 என்னுயிர் நீத்த 139
என் மனத்திவரு 100 என்னைகொல்மாவின் 147
எனமனத் தெண்ணி 30 என்னை நஞ்சு 201
என்றடி பணிந்து 246 எனமனத்தெண்ணி 29
என்றலும் மிணர் 195 ஐப்பசிமதிய 136
என்றலு மடிகள் 310 ஐயநின்னரு 322
என்றலுமிவற்றி 107 ஐவகையொழுக்க 54
என்றலு மெனது 142 ஒருபதினொ 295
என்றலு மேய 123 ஒன்றியஉடம்பின் 49
என்றவனுளங்கொள 280 ஓரினோர்முழங்கை 39
என்றினிது 273 ஓருயிர்த்தோழ 312

கடையனக்கமல 119 கானுலாவியும் 14
கண்டுமன்னவன் 224 குட்டமாகிய 215
கண்ணினுக்கினிய 64 குரைகழலசோகன் 84
கந்தடு களிமத 75 கூற்றமென 264
கரவினிற்றேவி 135 கேட்டலு மஞ்சு 112
கருகருகரிந்தனள் 291 கேட்டலுமடிகள் 254
கருமனுமிறைவ 234 கொந்தெரி 265
கறங்கெனவினையி 35 கொலைக்களங்குறுதி 59
காரநீரினிற் 211 கொலையின தின்மை 243
காரியம் முடிந்த 108 கோங்குபொற்குடை 11
காளைதகு 267

சண்டகோபி 18 சிலம்பொடுசிலம்பி 90
சந்திரம்மதிநாய்...முந்து 180 சிலைபயில்வயிரத் 245
சந்திரம்மதிநாய்...வந்தி 205 சுரைய பாலடி 168
சந்திரம்மதிநாய்...வந்து 183 செந்தசைகள் 290
சந்திரம்மதிநாயு 177 செந்தளிர்புனைந்த 226
சந்திரம்மதியாகிய 164 செய்த வெந்திய 321
சந்திரமுன்மதி 299 சென்றுநல்லமிர் 196
சிக்கெனவாயு 237 சொல்லறிகணையை 257

தந்தையுத்தந்த 304 தீதகல்கடவு 155
தங்கைநீ யஞ்சல் 32 தீதிதென்ற 193
தரளமாகிய 225 துயிலினையொருவி 118
தவளவாள்நகை 98 துன்பகாரண 41
தணிவயினிகுளை 120 துன்னிய இரவு 97
தாதைதன்றுறவு 314 தூரபாரஞ் 207
தாய்கொல்பன்றி 178 தெருளுடைமனத்திற் 244
தாய்முன்னாகி 174 தேவிநீகமலை 109
தாய்வயிற்கரு 189 தேவியென்னை 220
தாயினன்னலந் 188 தையலாள்மெல்ல 121
திசையுலாமிசை 6 தொல்லைவினை 296
திருத்தகு குமரன் 86 தோடலர்கோதை 88
திலப்பொறியி 294

நகைவிளையாடன் 130 நாயின்வாயில் 175
நங்கைநீயஞ்சல் 31 நாவழுகி 292
நஞ்சதுபரந்த 153 நிலையிலாவுடம்பின் 249
நஞ்சிலன்னை 221 நின்றகண்டத்து 186
நஞ்சொடுகலந்த 152 நின்றவர்தம்மை 61
நரம்புகள்விசித்த 105 நூற்படுவலைப்பொறி 262
நல்வதத்தொட 170 நெரிந்த நுண்குழல் 10
நாடுநகரங்களு 276 நோயினாசைகொல் 218
நாதன்நம்முனி 2 நோவுசெய்திடும் 16

பட்டது நலங்க 115 புரைபுரைதோறு 131
பண்ணினுக்கொழுக 95 பூதிகந்தத்தின் 106
பண்பெற்றமொழி 113 பெண்ணுயிரளிய 47
பரிமிசைப்படை 261 பெருகியகொலையும் 242
பாடகமிலங்க 228 பெருமலையனைய 53
பாரிதத்தினை 8 பேதுறுபிறவி 56
பாவமூர்த்தி 19 பேதைமாதர் 203
பிறந்தநாம்பிறவி 36 பைம்பொன் 5
பிறந்தவர்முயற்சி 72 பையவே 236
பிறவிகளனைத்து 255 பொற்பகங்கழுமி 122

மக்களிற்பிறவி 43 மன்னன்மாதேவி 104
மக்களுளிரட்டை 303 மன்னன்......சூகரம் 179
மடங்கனிந்தினிய 92 மன்னன்......சூகரமா 187
மண்டமர்தொலைத்த 137 மன்னன்....வந்து 176
மண்ணியன்மடந்தை 128 மன்னனாகிய 166
மணிமருளுருவம் 133 மன்னனும் அதனை 65
மணிமுடிமகனுக் 313 மனம்விரியல்குன் 143
மயிலுஞாயும் 165 மாசின்மாமணி 328
மருவுவெவ்வினை 4 மாதராரெனைய 124
மலமலிகுரம்பை 71 மாதவன் மலர்ந்த 315
மலர்ந்தபூஞ்சிகை 12 மாளவப்பஞ்ச 101
மழுகிருளிரவின் 103 மாவியல்வடிவு 307
மற்றம்மாநக 223 மாவினின்வனைந்த 145
மற்ற மன்னன் 161 மின்னினுநிலையின் 96
மற்றவன் இனைய 253 மின்னொடுதொடர்ந்து 68
மற்றைநாள்மன்னன் 129 முடைப்படுநாற்ற 111
மற்றைமீனுமோர் 184 முத்தவாள்நகை 173
மற்றொர்நாள்மணி 171 முந்துசெய் நல்வினை 82
மற்றொர்நாள்மற 191 முழமொருமூன்றிற் 37
மற்றொர்நாள் மன்னவன் 79 முன்னமுரை 282
மற்றொர்நாள் மன்னர் 89 முன்னுயிருருவிற் 63
மற்றொருகள்வன் 235 முன்னைநுமர் 293
மறவியின்மயங்கி 60 முனைத்திறமுறுக்கு 58
மன்னவன் மனத்ததை 283 மேகமென 275
மன்னன் ஆணையின் 20 மேருகிரி 288
மன்னன் மயிலாய் 298 மேலியல்தெய்வங் 146

யான்படைத்த 199வளையவர்சூழ 229
யானிவ்வாளினின் 21 வன்சொல்வாய்மறவர் 31
யானுமல 278 வாடலொன்றிலர் 22
யானுயிர்வாழ்த 140 வாரணிமுரச 159
வஞ்சனையி 286 வாளியின்விழும் 190
வடிநுனைப்பகழி 231 வானவரு 277
வண்டளிர்புரைதிரு 80 விண்ணிடைவிளங்குங் 134
வணிகர்தம்முடன் 206 விந்தநாம 162
வந்துகுப்பையின் 169 விரைசெறிபொழிலி 258
வந்துடன்வணங்கும் 42 வில்லினதெல்லை 28
வந்துமாநகர் 24 வினைகளும் வினைகள் 316
வந்துவானவர் 327 வீங்கியவினைகள் 251
வரைசெய்தோண் 208 வெய்யதீவினை 324
வலையின்வாழ்நரின் 182 வெருவருவினை 329
வள்ளியமலருஞ் 27 வெருள்செயும் வினை 311
வள‌வயல்வாரி 74 வெறுத்துடன் 268


This file was last updated on 5 May 2015.
Feel free to Webmaster.